இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”
இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பாப்புலரானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு.
இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை.
குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று கோர்ட்டில் தீர்ப்பு!
இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின் “செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.
குருதிப்புனல் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான்.
நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள்.
புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம்.
ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் - பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.
குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்:
ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமற் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது.
குருதிப்புனல் முன்னுரையில் இ.பா.
தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.
இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.
‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.
ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.
காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.
அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம்
.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்
தொடர்புடைய பதிவுகள்:
இந்திராபார்தசாரதிக்கு வர்க்கபோராட்டம் புரியாது. விளங்காது. அதனால்தான் ஆண்மைக்குரையே அடிப்படை காரணம் என்பதுபோல அந்த கதையை திருத்திவிட்டார். நாவலில் வரும் கோபால் போல, இந்திராபர்த்தசாரதியும் டில்லியில் இருந்து வெண்மணியை பார்த்தவர். இவர்களால் நல்லது செய் முடியாவிட்டாலும் சும்மா இருக்கலாம். ஒருமோரி இதேகேள்வியை அந்த எழுத்தாளரிடம் நேரில் கூறி சண்டை போட ஆரம்பித்தேன் கவிஞர் இன்குலாப் தடுத்துவிட்டார்.——–மணி
ராமன் மற்றும் மணி,
குருதிப்புனல் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் // He attempted to glorify or reduce arrogance of the devil by name gopalakrishna Naidu //, // he Honesty in his
book was totally missing in Kuruthipunal // மற்றும் // இவர்களால் நல்லது செய் முடியாவிட்டாலும் சும்மா இருக்கலாம் // போன்ற விமர்சனங்களில் எனக்கு இசைவில்லை. அவர் நாயுடுவை எந்த விதத்திலும் உயர்த்திப் பேச முயற்சி செய்யவில்லை. நேர்மையாகத்தான் எழுதி இருக்கிறார் – உதாரணமாக டெல்லி அறிவு ஜீவிகளின் குறைகளை தெளிவாக காட்டுகிறார். இந்த அநியாயத்தைப் பற்றி வேறு யாரும் எழுத முன்வரவில்லை. (சோலை சுந்தரப் பெருமாளின் புத்தகம் காலத்தால் மிகவும் பின்பட்டது.) இவர் ஒருவராவது எழுதினாரே!
செந்நெல் ஒரு நல்ல ஆவணம். ஆனால் இலக்கியத் தரம் என்பது குருதிப்புனலில்தான் அதிகம் என்றே நான் கருதுகிறேன். முடிந்தால் இந்த பதிவையும் பாருங்கள் – http://koottanchoru.wordpress.com/2009/09/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/
Indhira Parthasarathy diluted or even defamed the
Venmani Martyrs. He attempted to glorify or reduce arrogance of the devil by name gopalakrishna Naidu.
He did not attempt to expose the class charactor of
the feudal lords. The book Sennel by Solai Sundaraperumal
had portrayed the Original Issue. The Honesty in his
book was totally missing in Kuruthipunal
இ. பாவின் எழுத்து பாணி கொஞ்சம் நெருடலாய் இருந்தாலும் எனக்கு படிக்க பிடித்தது. அவ்வட்டாரத்து மனிதனாய் இருந்தவன் என்ற முறையில் கதையுடன் உடன் சேர்ந்து கொள்ள முடிந்தது.
நாயுடுவை கண்டம் துண்டமாய் வெட்டி மரத்தில் தொங்கவிட்டார்கள் என சிறுவனாய் இருந்த போது கேட்டது, ஆர்வத்துடன் படிக்க வைத்தது.
நாவலில் வரும் கோபால் போல, இந்திராபர்த்தசாரதியும் டில்லியில் இருந்து வெண்மணியை பார்த்தவர்
இ.பா நாச்சியார் கோவில் காரர். கீழ் வெண்மணிக்கு
தென்வடமேற்கில் மிஞ்சி போனால் 20 + மைல் தொலைவில். வேலை பார்த்ததுதானே டெல்லி, போலண்ட்.நன்றி.
வாசன், இ.பா. தஞ்சாவூர்க்காரர் என்று பொதுவாகத்தான் தெரியும். நாச்சியார்கோவில் என்று குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி!
இதை ஜெமினியின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர்ராஜன் கண்சிவந்தால் மண்சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து 80 களில் எடுத்தார். கதாநாயகி இல்லாமற் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது
குருதிப்புனல் (நாவல்) — முன்னுரை – இந்திரா பார்த்தசாரதி
தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.
இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.
‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.
ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப் படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.
காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.
அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் கநா சுப்ரமணியன்.
குருதிப்புனல் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஸ்ரீனிவாஸ்! இப்போது பதிவுலும் சேர்த்துவிட்டேன்.