சுஜாதாவின் “மேலும் ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)
இதை மாத நாவலாக வந்தபோதும் படித்திருக்கிறேன். பதின்ம வயது நண்பர் கூட்டத்தை பிரமிக்க வைத்த க்ளைமாக்ஸ். இப்போது பிரமிப்பு எல்லாம் இல்லை என்றாலும் விறுவிறுப்பான, சுவாரசியமான கதை.
கணேஷ்-வசந்த் இருவரையும் கூர்க் காஃபி எஸ்டேட் அதிபர் தாமோதரன் ஓய்வுக்காக தன் எஸ்டேட்டுக்கு வருமாறு அழைக்கிறார். கொஞ்சம் எக்சென்ட்ரிக்கான மனிதராக இருக்கிறார். மெதுமெதுவாக அவரது காணாமல் போய்விட்ட மனைவி ஆஷாவைப் பற்றி இருவருக்கும் தெரிய வருகிறது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான், கொஞ்சம் வயது அதிகமான தாமோதரனோடு அவள் சந்தோஷமாக இல்லை, அவளைப் பற்றி சாதாரணமாகப் பேசக் கூட எஸ்டேட் மனிதர்கள் எல்லாரும் தயங்குகிறார்கள் என்றெல்லாம் தெரிகிறது. ஒரு கட்டத்தில் தாமோதரனே அவள் எங்கே போனாள் என்று கண்டுபிடியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார். மெர்க்காரா டவுனில் அவள் போலவே உருவம் உள்ள ஒருத்தியை தற்செயலாக சந்தித்து அது களேபரம் ஆகிவிடுகிறது. தாமோதரனே அவளை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுவிட்டார் என்று அவரால் வேலை நீக்கம் செய்யப்பட ஒரு மேஸ்திரி சொல்கிறான். கணேஷ்-வசந்த் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை.
கதையை இன்று படிக்கும்போது என் தங்கையின் மாமனாரும், வரலாற்று நிபுணரும் ஆன டாக்டர் நாகசாமியைப் பற்றி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது கண்ணில் பட்டது. அதில் ஒரு சின்ன சந்தோஷம்.
பல துப்பறியும் கதைகள் படித்துப் படித்து பழகிவிட்ட இன்று புதிதாக இந்தக் கதையைப் படித்தால் முடிவை யூகித்துவிடலாம். ஆனால் முதன்முதலாகப் படிக்கும்போது மகா த்ரில்லிங் ஆக இருந்தது. இன்றும் இதை புதிதாகப் படித்தால் மர்மம் விலகும் நேரம் சபாஷ் என்று சொல்லத் தோன்றும்.
NHM தளத்தில் கிடைக்கிறது. விலை அறுபது ரூபாய்.
படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். சிறந்த கணேஷ்-வசந்த் கதைகளில் ஒன்று.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, கணேஷ்-வசந்த்
//இன்று புதிதாக இந்தக் கதையைப் படித்தால் முடிவை யூகித்துவிடலாம்.//
நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாது. நான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் படித்த போதும் என்னால் முடிவை ஊகிக்க முடியவில்லை. செம ட்விஸ்ட். ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் கேமில் தோற்று வசந்த் பொருமுவதும் தாமோதரன் கிண்டல் செய்வதும் கணேஷின் சீண்டல்களும் இயல்பாக வந்திருக்கும்.
சுஜாதாவின் சவால் மிகுந்த குறுநாவல்களில் இதுவும் ஒன்று.