லுயிஜி பிராண்டெல்லோ எழுதிய “Six Characters in Search of an Author

luigi_pirandelloபிராண்டெல்லோ எழுதியவற்றில் இதுதான் மிகப் பிரபலமானது என்று நினைக்கிறேன். ஆனால் நாடகம் முதல் முறை (1921) அரங்கேறியபோது பலரும் இதை பைத்தியக்காரக் கூத்து என்று விமர்சித்தார்களாம். அந்த விமர்சனத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது பைத்தியக்கார கூத்து, சிறந்த நாடகம் இரண்டும்தான். இதை நான் முதல் வரிசை நாடகங்களில் வைக்கமாட்டேன் என்றாலும் நல்ல எழுத்துதான்.

நாடகத்தை எழுதிய விதத்தில் பிராண்டெல்லோவின் எழுத்துத் திறமை (craft) நன்கு வெளிப்படுகிறது. நடிக்க ஏற்ற நாடகம்தான்.

நான் நாடகத்தை முழுதும் புரிந்து கொண்டுவிட்டேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் எனக்குப் புரிந்தது, என்னை யோசிக்க வைத்தது இதுதான் – எழுத்துக்கும் (கலைக்கும்) வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? தத்ரூபமாக வாழ்க்கையை எந்தக் கலையும் பிரதிபலிக்க முடியாது. வாழ்வின் போரடிக்கும் கணங்களை தவிர்த்துவிட்டுத்தான் யதார்த்தவாத எழுத்தாளர்கள் கூட எழுதுகிறார்கள். அதனால் எழுத்தின் உண்மை எத்தனை தூரம் குறைகிறது? அதைத்தான் பிராண்டெல்லோ இந்த நாடகத்தில் அணுகுவதாக நான் நினைக்கிறேன்.

six_characters_in_search_of_an_authorகதை என்ன? ஆறு கதாபாத்திரங்கள் ஒரு நாடக ஒத்திகையின்போது வருகிறார்கள். அவர்களை ஒரு எழுத்தாளன் பாதி எழுதி அம்போ என்று விட்டுவிட்டதாக புலம்புகிறார்கள். இயக்குனருக்கு இவர்கள் கதையும் சுவாரசியமாக் இருப்பதாகத் தெரிகிறது. இதையே நடித்தால் என்ன என்று யோசிக்கிறார். நடிக நடிகையர் ஒத்திகை பார்க்கும்போது பாத்திரங்கள் அங்கங்கே இது சரியாக இல்லை, இங்கே ஒன்று குறைகிறது என்று குறுக்கிடுகிறார்கள். எங்களுக்கு இருக்கும் ஒரே வாழ்வு இந்தப் பாத்திரங்கள்தான், நடிகர்களுக்கு பல வாழ்க்கைகள்/பாத்திரங்கள் இருக்கின்றன என்பதை சுட்டுகிறார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் பாத்திரங்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் பல பக்கங்களை ஆக்கிரமித்தாலும் அது இரண்டாம் பட்சம்தான். அவர்கள் நிஜத்துக்கும் நடிகர்களின் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசங்கள்தான் இந்த நாடகத்தை எனக்கு முக்கியமானதாக ஆக்குகிறது.

பிராண்டெல்லோ இத்தாலியர். 1934ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்றிருக்கிறார். நாடகம் மட்டுமே எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது.

நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள நாடகம். பார்த்தால் இன்னும் நல்லது. படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே செல்லலாம்

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.