பொருளடக்கத்திற்கு தாவுக

சுஜாதாவின் “திசைகண்டேன் வான்கண்டேன்”

by

சுஜாதாவின் SF (Science Fiction) முயற்சிகளில் அடிக்கடி பார்க்கக் கூடிய தீம் ஒரு ரோபாட் – எந்திரன் – உயிர் பெறுவது, பிறகு எஜமானனை எதிர்ப்பது. மீண்டும் ஜீனோவில் இந்த தீம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் இது ஜீனோ எழுதப்பட்ட காலத்திலேயே cliche-தான். ஃப்ராங்கன்ஸ்டைனிலிருந்து பல கதைகளில், ஷார்ட் சர்க்யூட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வந்த தீம்தான்.

சுஜாதாவின் எந்திரங்கள் பொதுவாக கவிதையை – அதுவும் புதுக் கவிதையை – ரசிப்பார்கள். நாட்டுப்புறப் பாட்டு பாடுவார்கள். இந்த மாதிரி எந்திரன் கதைகளில் அவருடைய touch என்பது இதுதான்.

திசைகண்டேன் வான்கண்டேன் நாவலிலும் அப்படித்தான் ஒரு எந்திரன் – 121 – வருகிறது. அண்ட்ரோமீடா galaxy-இலிருந்து வரும் பாரிக்கு உதவியாளன். பாரியின் வேலை பூமியின் தலைவர்களுக்கு ஒரு நோட்டீஸ் கொடுப்பது, பிறகு பூமியை அழிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது. எதற்காக? பாலம் கட்டும் இடத்தில் பூமி இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளால் பாரியும் எந்திரனும் சில பல பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சினை எந்திரன் செங்கமலம் என்ற பெண்ணிடம் மோகவசப்படுவதுதான். அதனால் அது எஜமானன் பாரியையே எதிர்க்கிறது. பிறகு பூமி அழிகிறதா, மோகத்தின் விளைவு என்ன என்று கதை போகிறது.

கதையின் சிறந்த பகுதி அண்ட்ரோமீடா galaxy-யில் பாரி கிளம்புவதற்கு முன் செய்யும் ஏற்பாடுகள்தான். கடவுள்கள் அங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கீலை எதுவும் கிடையாது. அங்கத்திய “மனிதர்கள்”தான் கடவுள்களுக்கு எஜமானர்கள்.

கதையின் வீக் பாயின்ட் என்றால் இதில் SF-க்கு உண்டான கேள்விகளோ, இப்படி நடந்தால் என்னாகும் என்ற சித்திரங்களோ இல்லாததுதான். இது மந்திரவாதியின் பூதம் இளவரசியைக் கண்டு காதல் கொள்ளும் கதைதான், வேறு துணி போட்டுக் கொண்டு வந்திருக்கிறது. பேசாமல் கடவுள் கான்செப்டை டெவலப் செய்திருந்தால் அருமையான SF உருவாகி இருக்கும்.

இது நல்ல SF இல்லை. டைம் பாஸ்…

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை 75 ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

‘அண்மைய புனைவுகள் – நவீன வாசிப்புகள்’ பற்றி நாஞ்சில்நாடன்

by

அண்மைய புனைவுகள் – நவீன வாசிப்புகள்’ என்ற புத்தகம் பற்றி – மொ. இளம்பரிதி என்பவர் தொகுத்தது – நாஞ்சில்நாடன் சில மாதங்கள் முன்பு ஒரு பதிவு எழுதி இருக்கிறார். பொதுவாக வெளிநாட்டில் இருக்கும் என் போன்றவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினை – ஊரை விட்டு வந்த பிறகு என்ன நல்ல புத்தகம் வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வது சுலபமில்லை. இணையம் வந்த பிறகு எவ்வளவோ பரவாயில்லை, இருந்தாலும் பிரச்சினை முழுதாகத் தீர்ந்துவிடவில்லை.

ஒரு excerpt.

அண்மைக்காலத்திய நாவல்கள் – ஜெயமோகனின் “கொற்றவை”, எஸ்.பொ.வின் “மாயினி”, கரிகாலனின் “நிலாவை வரைபவன்”, கீரனூர் ஜாகிர் ராஜாவின் “கறுத்த லெப்பை”, அழகியநாயகி அம்மாளின் “கவலை”, இமயத்தின் “செடல்”, கோணங்கியின் “பிதிரா”, “பாழி”, பெருமாள் முருகனின் “கங்கணம்”, சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”, நீல. பத்மநாபனின் “இலையுதிர் காலம்”, ஜனகப்ரியாவின் “சூரனைத் தேடும் ஊர்”…

கொற்றவை தவிர வேறு எதையும் பற்றி தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்களேன்! ஊருக்கு விரைவில் போவேன், எதை வாங்கலாம் என்ற சிபாரிசுகள் பயனுள்ளவையாக இருக்கும்.

ஆனால் இன்றும் ஒரு புத்தகத்தைப் பற்றி படிப்பது, ஊருக்குப் போகும்போது வாங்கலாம் என்று நினைப்பது, பிறகு மறந்துபோவது அல்லது எடுத்து வர வேண்டிய ப்ரெஷர் குக்கர், இட்லித் தட்டு, முறுக்கு, தட்டை, லட்டு, மைசூர்பாகு, ஊறுகாயின் கனம் அதிகமாகி புத்தகத்தை குறைத்துக் கொள்வது சர்வசாதாரணம். (தின்றது நீங்கதானே என்ற குரல் எழும்புகிறது) அதனால் எத்தனை புத்தகம் கொண்டு வருவேன் என்று சொல்வதற்கில்லை. :-)

இந்தப் புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நானூறு ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்

பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”

by

பாலகுமாரனின் கச்சிதமான குறுநாவல்.

மகா சிம்பிள் கதை. பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸில் வேலை செய்யும் பெரியவர் அய்யாசாமி. இளைஞன் திருநா என்ற திருநாவுக்கரசு. இருவருக்கும் நடுவில் கொஞ்சம் அன்பு. ஒரே ஊர்க்காரர்கள், செங்கல்பட்டிலிருந்து வந்து போவார்கள். அய்யாசாமி ஜாக்கிரதையானவர். இரண்டு வயது வந்த பெண்கள் உண்டு. என்னதான் அன்பு என்றாலும் திருநாவை வீட்டுக்குள் அழைத்தது இல்லை. அவர் ரிடையர் ஆகும் அன்றுதான் அவன் வீட்டுக்குள் வருகிறான். சின்னவள் வெண்ணிலாவை சைட் அடிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்கும் ஈர்ப்பு இருக்கிறது. அண்ணியை தாஜா செய்து பெண் கேட்க அனுப்புகிறான். ஏதோ குழப்பத்தில் பெரியவள் மனோன்மணியோடு நிச்சயம் ஆகிவிடுகிறது. நிச்சயம் ஆன பிறகு மாற்ற முடியாது என்று அண்ணன், அண்ணி, காதலித்த வெண்ணிலா எல்லாரும் உறுதியாகச் சொல்லிவிடுகிறார்கள். பிறகு?

சிம்பிள் முடிச்சு, சிம்பிளாக அவிழ்கிறது. கதையை உயர்த்துவது உண்மையான மனிதர்களின் சித்திரம். இந்த மாதிரி உறவு, இந்த மாதிரி காதல் எல்லாம் நானும் பார்த்திருக்கிறேன். இதற்கு மேல் ஒன்றும் விலாவாரியாக எழுதப் போவதில்லை.

பாலகுமாரனின் ஒரு பலம் கதைகளை பல ஊர்களில் – குறிப்பாக சிறு நகரங்கள், கிராமங்களில் – அமைத்து அங்குள்ள மனிதர்களை உண்மையாகக் காட்டியது. எல்லா முறையும் அவர் வெற்றி பெறவில்லை, ஆனால் முக்கியமான முயற்சி. இந்தக் குறுநாவலைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விசா பப்ளிகேஷன்ஸில் கிடைக்கிறது. விலை 65 ரூபாய்.

சுஜாதாவின் “கமிஷனருக்குக் கடிதம்”

by

சுஜாதா போலீஸ் துறையை – குறிப்பாக பெங்களூர் போலீஸ் அதிகாரிகளை வைத்து – சில கதைகள் எழுதி இருக்கிறார். வசந்த காலக் குற்றங்கள் என்ற இன்னொரு கதை நினைவு வருகிறது.

கமிஷனர் சுதாகர் முரட்டு ஆசாமி. அவரிடம் மாயா பயிற்சிக்காக வந்து சேர்கிறாள். வந்த முதல் நாளே அவளை ஒரு கோரமான விபத்து, தற்கொலை கேஸ் என்று பிணங்களைக் காட்டி கொஞ்சம் பயமுறுத்துகிறார். பிறகு நைட் லைஃப் காட்டுகிறேன் பேர்வழி என்று அவிழ்த்துப்போட்டு ஆடும் காபரே டான்ஸ், ட்ரக்ஸ் அடிக்கும் இளைஞர் கூட்டம், விபச்சாரிகள் என்று காட்டுகிறார். அவளால் கவரப்படும் இன்ஸ்பெக்டர் ரமேஷை அவளிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கிறார். சுதாகரின் சொந்த வாழ்க்கை சோகம். விவாகரத்து. மகளை தன்னுடன் ஒட்டவிட மாட்டேன் என்கிறாள் என்று முன்னாள் மனைவி மீது கோபம். ரமேஷ் மாயாவை எச்சரிக்கிறான். தன் காதலையும் சொல்கிறான். சுதாகரும் அப்ளிகேஷன் போடுகிறார். சுதாகரின் மகள் கடத்தப்படுகிறார். சுதாகருக்கு ஹார்ட் அட்டாக். முன்னாள் மனைவிக்கும் சுதாகருக்கும் சண்டை, ஆறுதல் சொல்லிக் கொள்வது எல்லாம் நடக்கிறது. மகள் கிடைத்தாளா, மாயா யாரைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை.

கதையின் பலம் மாயாவுக்கு சுதாகர் “பயிற்சி” தருவதுதான். போலீஸ் வாழ்க்கையை, நகரத்தின் சிறு குற்ற உலகை துல்லியமாகக் காட்டுகிறார். முடிச்சும் தீர்வும் யூகிக்கக் கூடியவைதான், ஆனால் நன்றாக வந்திருக்கிறது.

பலவீனம் பார்ப்பவர் எல்லாம் மாயாவை சைட் அடிப்பது; மாயா ஒரு விபச்சாரியின் தலை மயிரைக் கத்தரிப்பது துப்பாக்கி சூட்டில் போய் முடிவது நம்பும்படி இல்லை.

படிக்கலாம். ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நூறு ரூபாய்.

தெலுங்கு புத்தகங்கள்

by

கொல்லப்புடி மாருதி ராவ் – தெலுங்கு எழுத்தாளர், நடிகர் – படிக்க வேண்டிய தெலுங்கு புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு லிஸ்ட் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலாவின் தளத்தில் லிஸ்ட் இருக்கிறது.

சாதாரணமாக லிஸ்டுக்கு குறிப்புகள் எழுதுவேன். இந்த முறை படித்திருப்பது ரொம்ப கொஞ்சம், அதனால் குறிப்பு எல்லாம் இல்லை. படித்திருக்கும் இரண்டு புத்தகங்கள் பற்றி கீழே:

குருஜாதா அப்பாராவ் எழுதிய கன்யா சுல்கம் – செகந்தராபாதில் வாழ்ந்தபோது கேள்விப்பட்ட ஒரே தெலுங்கு புத்தகம் இதுதான் கன்யாசுல்கம் ஒரு க்ளாசிக். இப்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும்.

கொடவடிகண்டி குடும்பராவ் எழுதிய சதுவு தமிழ் மொழிபெயர்ப்பு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும். தமிழில் இதன் பெயர் படிப்பு. சாஹித்ய அகாடமி வெளியீடு. 1910-35 கால கட்டத்தில் ஒரு மத்திய தர குடும்பம், ஸ்கூல் படிப்பு, சுதந்திர போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது. பின்புலம் நன்றாக வந்திருக்கும், ஆனால் கதையில் என்ன பாயின்ட் என்று எனக்கு தெளிவாகவில்லை.

அற்பஜீவி புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனும்கண்ணீரைப் பின்தொடர்தல்” புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மற்ற இந்திய மொழி எழுத்தாளர்களை பற்றி நாம் அவ்வளவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது, அப்படியே படித்தாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமே தெரிந்து கொள்வது நம் துரதிருஷ்டம். இது போன்ற லிஸ்டுகள் கொஞ்சம் உதவுகின்றன, பாஸ்டன் பாலாவுக்கு அதற்காக நன்றி!

கொல்லப்புடி குறிப்பிடும் மற்ற புத்தகங்கள்:

 1. விஸ்வநாத சத்யநாராயணாவின் ஏகவீரா
 2. புச்சிபாபுவின் சிவரகு மிகிலேதி
 3. ரா. விஸ்வநாத சாஸ்திரியின் அல்பஜீவி
 4. ஸ்ரீ ஸ்ரீயின் மஹா ப்ரஸ்தானம்
 5. ஸ்ரீபாதா சுப்பிரமணிய சாஸ்திரியின் அனுபவாலு-ஞாபகாலு
 6. கல்லகூரி நாராயணராவின் வரவிக்ரயம்
 7. கொல்லப்புடி மாருதிராவின் கள்ளு, சாயங்காலாமாயிந்தி
 8. வத்தேரா சண்டிதாசின் ஹிமஜ்வாலா
 9. த்ரிபுரனேனி கோபிசந்தின் கதைகள்
 10. தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் கிருஷ்ண பக்ஷம்

(மீள்பதிவு)

எஸ். ராமகிருஷ்ணன் சிபாரிசு செய்யும் இன்றைய அயல்நாட்டு எழுத்தாளர்கள்

by

வசதிக்காக அந்த எழுத்தாளர்கள் பேர், சில முக்கியப் படைப்புகளை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன். எஸ்.ரா.வின் முழு கட்டுரையையும் படிக்க இங்கே போகலாம்.

 1. Yann Martel (Life of Pi)
 2. Rana Dasgupta (Solo, Tokyo Cancelled)
 3. Carlos Ruiz Zafon (Shadow of the Wind)
 4. Khaled Hosseini (Kite Runner, A Thousand Splendid Suns)
 5. Haruka Murakami (Kafka on the Shore, Wind-up Bird Chronicle)
 6. Roberto Bolano (By Night in Chile)
 7. Kazuo Ishiguro (Remains of the Day)
 8. Jean Echenoz (I Am Gone)
 9. Etgar Keret (Bus Driver Who Wanted to be God)
 10. Shyam Selvadurai (Cinnamon Gardens)

எஸ்.ரா.வின் இந்த லிஸ்டில் நான் யாரையும் படித்ததில்லை. கலித் ஹோசெனியின் கைட் ரன்னர் திரைப்படமாகப் பார்த்திருக்கிறேன், பிடித்திருந்தது. நீங்கள் ஏதாவது படித்திருந்தால் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

புதுமைப்பித்தன் நினைவு நாள்

by

விகடனில் எப்போதோ படித்தது. நன்றி, விகடன்!

ஜூன் 30-ம் தேதி, புதுமைப்பித்தனின் நினைவு நாள்.

சிறுகதையுலகில் இட்டு நிரப்ப முடியாத ஓர் இடத்தைப் பெற்றவர் சொ.விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன். வேளூர் வெ.கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில், கவிதையுலகிலும் காலடி எடுத்து வைத்தவர் அவர்.

புதுமைப்பித்தனுக்கு கணேச சர்மா என்று ஒரு நண்பர் உண்டு. அவருக்குச் சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு.

ஒரு தடவை, திருவீழிமிழலை சகோதரர்களான நாதசுர வித்வான்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். கணேச சர்மா அந்த வித்வத் சிரோன்மணிகளைப் பார்த்து, “உங்கள் வாசிப்பை யாராரோ கேட்டு ரசித்துத் தலையை ஆட்டினால் போதுமா? இங்கு ஒரு பெரிய ஞானஸ்தர் இருக்கிறார். அவர் சபாஷ் போட்டு விட்டால் அப்புறம் உங்களுக்கு வேறு பட்டயமே தேவையில்லை” என்று கூறினார். அவர்களும் அதிசயித்து, “அப்படியா? அவரைப் பார்க்க வேண்டுமே” என்று கூற, கணேச சர்மா, அவர்களைப் புதுமைப்பித்தன் குடியிருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

“என்ன சோவி, திருவீழிமிழலை பிரதர்ஸ் உங்களிடம் நாதசுரம் வாசித்துக் காட்ட வேண்டுமாம்!” என்றார் சர்மா பணிவோடு.

“நாதசுரமா? சரி, வாசிக்கட்டும்” என்றார் புதுமைப்பித்தன்.

வித்வான்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். புதுமைப்பித்தன் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து வெற்றிலை போட்டபடி, ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார். வித்வான்கள் இருவரும் வெகுநேரம் ராக ஆலாபனை எல்லாம் பண்ணி முத்தாய்ச் சொரிந்து தள்ளினார்கள். ஆனால், புதுமைப்பித்தனின் முகத்தில் எந்த மாறுதலையும் காணோம்.

இதற்குள் அறைக்கு வெளியே இருந்த சர்மா கடகடவென்று சிரித்தபடி உள்ளே வந்தார். “இவ்வளவுதானா உங்கள் சங்கீதம்? இவரை மயக்க முடியவில்லையே!” என்று வித்வான்களைக் கேலி செய்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது. எல்லாம் சர்மாவின் கலாட்டா!

உண்மை என்ன தெரியுமா? புதுமைப்பித்தனுக்குச் சங்கீதத்தில் அட்சரம்கூடத் தெரியாது. சங்கீத விஷயத்தில் அவர் ஒரு ஒளரங்கசீப். எனவேதான், அந்த வித்வத் சிரோன்மணிகளின் சங்கீதம் புதுமைப் பித்தனைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.

புதுமைப்பித்தன் தினமணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், எவ்வளவுதான் கவனமாகப் புரூப் பார்த்துக் கொடுத்தாலும், சமயங்களில் கம்பாஸிடர்கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டு விடுவதைக் கண்டு எரிச்சலாகி, ஒருமுறை கடைசியில், ‘கடவுள் துணை!’ என்று எழுதி வைத்தார். கம்பாஸிடர் வந்து “ஸார், இதையும் கம்போஸ் செய்யவா?” என்று கேட்க, “இல்லையப்பா! நான் என்னால் ஆன மட்டும் பார்த்து விட்டேன். இனியும் தவறு விழுந்தால், ‘கடவுள்தான் எனக்குத் துணை. நீ அல்ல’ என்பதற்குத்தான் அப்படிப் போட்டேன்” என்றார்.

வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது முதல் பாட்டு ‘ஓடாதீர்!’ என்பது. இது கிராம ஊழியன் பத்திரிகையில் வெளிவந்த காலத்துக்கு முன்னர்தான் கு.ப.ரா. காலமாகியிருந்தார். அவரைச் செத்த பிறகு கவனிக்க முனைந்த, நிதி சேர்க்க முனைந்த தமிழர்களின் நிலையைக் கண்டு புழுங்கிப் பாடிய பாட்டு அது!

-தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலிலிருந்து…

சுஜாதாவின் “எதையும் ஒரு முறை”

by

கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்தா என்று போக விரும்பினாலும் நிருபமாவின் பிடிவாதத்தால் இந்தப் பிணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் ஒரு லோ கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரனைப் பிடிக்கிறார்கள். அவன் பெரிய பணக்காரன். வாழ்க்கையில் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். அவன்தான் கொலை செய்தவன் என்று சந்தேகித்தாலும் எந்த ஆதாரமும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்? “எதையும் ஒரு முறை” செய்து பார்ப்பான் என்று கணேஷ் தன் டீமை சமாதானப்படுத்துவதோடு கதை முடிகிறது.

கதையில் ஒன்றுமே இல்லை. விபசாரி, நீலப்பட references அந்தக் கால வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி இருக்கலாம். அதற்காக வலிந்து புகுத்தி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கடைசி வரி நல்ல impact உடையதுதான். ஆனால் கதையோடு முழுதாக ஒட்டவில்லை.

இதே போல கரு உள்ள இன்னொரு கதை – பேர் பாலமோ என்னவோ சரியாக நினைவில்லை – எழுதி இருக்கிறார் என்று நினைவு.

தவிர்க்கலாம். கணேஷ்-வசந்த் என்ற பேர் இல்லாவிட்டால் யாரும் இதை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை எழுபது ரூபாய்.

நட்பாஸ் தன் எண்ணங்களை இங்கே பதித்திருக்கிறார்.

லூயிஸ் சச்சாரின் “ஹோல்ஸ்”

by

லூயிஸ் சச்சார் (Louis Sachar) எழுதிய ஹோல்ஸ் (Holes) பெரிய அளவில் வெற்றி பெற்ற சிறுவர் புனைவு. நியூபெர்ரி விருது வென்றிருக்கிறது. இந்த விருதை சிறுவர் புனைவுகளுக்கான ஆஸ்கார் என்று சொல்லலாம். ஷியா லெபஃப், சிகர்னி வீவர் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

ஸ்டான்லி யெல்நாட்ஸ் IV (ஸ்டான்லி என்ற பேரைத் திருப்பிப் போட்டால் யெல்நாட்ஸ் என்று வரும்) செய்யாத குற்றத்துக்காக ஒரு சிறுவர் “ஜெயிலுக்குப்” போகிறான். ஸ்டான்லியின் குடும்பத்துக்கு ஒரு சாபம் உண்டு. அவர்கள் பரம்பரையை துரதிருஷ்டம் துரத்துகிறது. நிறைய பணத்தோடு கலிஃபோர்னியா நோக்கி வரும் ஸ்டான்லியின் தாத்தாவிடமிருக்கும் அத்தனை பணத்தையும் ஒரு திருட்டுக் கும்பல் பறித்துக் கொள்கிறது. அவர்கள் குடும்பம் எப்போதும் கஷ்டத்தில் இருக்கிறது.

ஸ்டான்லியின் ஜெயில் ஒரு காம்ப். வறண்டு போன ஒரு ஏரியில் இருக்கிறது. அங்கே இருக்கும் எல்லா சிறுவர்களும் தினமும் ஒரு குழியைத் தோண்ட வேண்டும். காம்ப் வார்டன் ஒரு கிஸ்ஸிங் கேட் பார்லோ புதைத்துவிட்டுப் போன பொக்கிஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கேட் பார்லோவுக்கும் வார்டனின் தாத்தாவுக்கும் history உண்டு. பார்லோ ஒரு கறுப்பனை விரும்புவதால் அந்த கறுப்பன் கொல்லப்படுகிறான். அதனால் பார்லோ கொள்ளைக்காரி ஆகிறாள். பார்லோவின் புதையலைத் தேடுவது வார்டனின் தாத்தாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. மேலும் பார்லோ இட்ட சாபத்தால்தான் அந்த ஊரில் மழை சுத்தமாக நின்று போய் ஏரியும் வறண்டு விடுகிறது.

வார்டனின் கொடுமைகளை தட்டிக் கேட்க ஆளில்லை. நண்பன் ஜெரோனி தண்ணீர் இல்லாத பாலைவனத்துக்கு ஓடுகிறான். அவனைக் காப்பாற்ற ஸ்டான்லியும் பாலைவனத்துக்குப் போகிறான். சாபங்கள் தீர்ந்தனவா, ஸ்டான்லி விடுதலை அடைந்தானா என்பதுதான் கதை.

சிறுவர்களின் லெவலில் நன்றாக எழுதப்பட்டிருக்கும் கதை. பத்து பனிரண்டு வயது வாக்கில் நிச்சயம் த்ரில்லிங் ஆக இருக்கும். முடிச்சுகளை கொஞ்சம் சாமர்த்தியமாக அவிழ்க்கிறார்.

உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

இதற்கு ஒரு sequel-உம் உண்டு – Small Steps. ஜெயிலில் இருந்த இன்னொரு டீனேஜரான ஆர்ம்பிட் இப்போது ஸ்கூல், வேலை என்று சாதாரண வாழ்க்கை வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஒரு பழைய நண்பனின் வற்புறுத்தலால் ஒரு டீனேஜ் பாப் பாடகியின் concert-க்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்க முயற்சி செய்கிறான். சில பல நிகழ்ச்சிகளால் அந்த பாடகியை சந்திக்கிறான், இருவருக்கும் நடுவில் ஈர்ப்பு ஏற்படுகிறது. பாடகியின் மாற்றாந்தந்தை (stepfather) அவள் பணத்தை அபகரிக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறான். என்ன ஆகிறது என்று கதை. படிக்கலாம், ஆனால் பிரமாதம் இல்லை.

“மாடர்ன் லைப்ரரி” சிபாரிசுகள்

by

இன்னும் ஒரு லிஸ்ட் – மாடர்ன் லைப்ரரிக்காரர்கள் சிறந்த நூறு நாவல்கள் என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களது நிபுணர் குழு நூறு நாவல்களைத் தேர்ந்தெடுத்திருகிறது, வாசகர்கள் ஓட்டுப் போட்டு இன்னொரு நூறு நாவல்களை.

வசதிக்காக இங்கே டாப் டென் நாவல்களை கொடுத்திருக்கிறேன். இவற்றில் நான் படித்தது கேட்ச்-22, மற்றும் டார்க்நெஸ் அட் நூன்.

 1. Ulysses by James Joyce
 2. Great Gatsby by F. Scott Fitzgerald
 3. A Portrait of the Artist as a Young Manby James Joyce
 4. Lolita by Vladimir Nabokov
 5. Brave New World by Aldous Huxley
 6. Sound and the Fury by William Faulkner
 7. Catch-22 by Joseph Heller
 8. Darkness at Noon by Arthur Koestler
 9. Sons and Lovers by D.H. Lawrence
 10. Grapes of Wrath by John Steinbeck

கேட்ச்-22-வில் ஒரே ஒரு பாராதான் படிக்க முடியும் -

There was only one catch and that was Catch-22, which specified that a concern for one’s safety in the face of dangers that were real and immediate was the process of a rational mind. Orr was crazy and could be grounded. All he had to do was ask; and as soon as he did, he would no longer be crazy and would have to fly more missions. Orr would be crazy to fly more missions and sane if he didn’t, but if he were sane he had to fly them. If he flew them he was crazy and didn’t have to; but if he didn’t want to he was sane and had to.

டார்க்நெஸ் அட் நூன் சிறந்த புத்தகம். அதன் புத்திசாலித்தனம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அது என் டாப் டென்னில் வருமா என்பது சந்தேகம்தான்.

இந்த லிஸ்ட் என் ரசனைக்கேற்றது இல்லை. பல புத்தகங்கள் – ஐ, கிளாடியஸ், ஸ்லாட்டர்ஹவுஸ் ஃபைவ், பிரிட்ஜ் ஆஃப் சான் லூயிஸ் ரே, கிம் – போன்றவை இந்த மாதிரி ஒரு லிஸ்டில் இடம் பெறக் கூடாது. வாசகர்கள் தேர்வோ அதை விட மோசம். ரான் ஹப்பார்ட் போன்றவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வது முட்டாள்தனம், அவரது Scientology cult உறுப்பினர்கள் வாசகர்கள் தேர்வை ஹைஜாக் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இந்த மாதிரி லிஸ்ட்கள் உபயோகமானவை, அதனால்தான் இங்கே இணைப்பு கொடுத்திருக்கிறேன். இப்போது இருக்கும் மனநிலை தொடர்ந்தால் யார் லிஸ்ட் போட்டு கண்ணில் பட்டாலும் இணைப்பு கொடுத்துவிடுவேன் என்று நினைக்கிறேன். :-)

மாடர்ன் லைப்ரரிக்காரர்களின் non-fiction தேர்வுகளை இங்கே காணலாம்.

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

butterfliesinspacetime

Just another WordPress.com weblog

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: