Skip to content

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

by

2017-இலாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும்.

பரிந்துரைகள் (2017):

2016-இல் நான் படித்தவற்றில் பரிந்துரைப்பவை இந்த சுட்டியில். இந்த வருஷம் எத்தனை தேறுகிறது என்று பார்ப்போம்.


நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.

ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!

ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.

எங்கள் பிற தளங்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

விடுதலைப் போராட்ட நாவல் – கே.ஏ. அப்பாசின் இன்குலாப்

by

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 70 வருஷம். விடுதலைப் போராட்ட காலத்தில் லட்சியவாதமும், தியாக மனப்பான்மையும் இன்றை விட பல மடங்கு அதிகமாக இருந்தது (என்றுதான் நினைக்கிறேன்). இந்த பிம்பம் எப்படி உருவானது, ஆரம்பப் புள்ளி எது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாக பாடப் புத்தகங்கள் இப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது! நம்மூர் பள்ளிப் புத்தகங்களின் தரம் அப்படி.

எனக்கு நினைவு தெரிந்து அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிய முதல் புத்தகம்
கே.ஏ. அப்பாஸ் எழுதிய இன்குலாப்-தான். (1958) ரொம்ப சின்ன வயதில் – எட்டு ஒன்பது வயது இருக்கலாம் – படித்திருக்கிறேன். இன்றும் மனதில் பதிந்திருப்பது உப்பு சத்தியாக்கிரக காட்சிகள்தான். சத்தியாக்கிரகிகள் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு அமெரிக்க நிருபர் – பேர் மில்லர் என்று நினைக்கிறேன் – மற்றும் அவருக்கு உதவியாக நாயகன் ஊர்வலத்தை cover செய்கிறார்கள். போலீஸ் தடியடி ஆரம்பிக்கிறது. சத்தியாக்கிரகிகள் ஒருவர் பின் ஒருவராக போய் அடி வாங்கி விழுகிறார்கள். ஒருவர் கூட விலகவில்லை, திருப்பி கையோங்கவில்லை, ஓடவில்லை, ஒளியவில்லை. அமெரிக்க நிருபரே உணர்ச்சிவசப்படுகிறார். திருப்பி அடிப்பதை விட கொள்கைக்காக அடி வாங்க இன்னும் தைரியம் வேண்டும், இன்னும் வீரனாக இருக்க வேண்டும், சத்தியாகிரகம் என்பது எத்தனை புதுமையான கருத்தாக்கம், அதன் வலிமை என்ன என்று புரிந்த நாள் அது.

நாவல் ஒரு bildungsroman – அதாவது ஒரு இளைஞனின் வளர்ச்சியை விவரிக்கும் நாவல். அப்பாசின் வாழ்க்கையை அங்கங்கே பார்க்கலாம். முஸ்லிம் வாலிபன், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் படிக்கிறான், பத்திரிகையாளனாகிறான்… கதையின் முடிச்சு என்பது அவன் ஹிந்துவாகப் பிறந்தவன், முஸ்லிம் குடும்பத்தால் வளர்க்கப்படுகிறான், உண்மை தெரிந்ததும் என்ன செய்கிறான் என்று போகிறது.

கே.ஏ. அப்பாசை யாருக்கும் பெரிதாக நினைவிருக்காது. அப்படியே நினைவிருந்தாலும் அவரை ஒரு சினிமாக்காரராகத்தான் நினைவிருக்கும். அமிதாப் பச்சன் நடித்த முதல் படம் – சாத் ஹிந்துஸ்தானி (1969) – அவர் எழுதி இயக்கியதுதான். பல புகழ் பெற்ற ராஜ் கபூர் படங்களுக்கு – ஆவாரா, ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர், பாபி – ஆகியவற்றுக்கு அவர்தான் திரைக்கதை எழுதினார். முந்தைய இரண்டுக்கும் அவர் வசனம்தான். எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்றான ஜாக்தே ரஹோ (1957) அவரது திரைக்கதைதான். அவர் திரைக்கதை எழுதிய சில ‘முற்போக்கு’, சோஷலிச சாய்வு உள்ள திரைப்படங்கள் சர்வதேச விருதுகள் பெற்றிருக்கின்றன. நீச நகர் (1946), தர்தி கே லால் (1946), டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி (1946), தோ பூந்த் பானி (1971), ஆகியவற்றைப் பற்றி தீவிர சினிமா ரசிகர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்து லட்சியவாதக் கனவுகளை சோஷலிசமாக வெளிப்படுத்திய திரைக்கதைகள்.

ஆனால் எனக்கு அப்பாஸ் அறிமுகமானது எழுத்தாளராகத்தான். என் அம்மா சொன்னதால்தான் படித்தேன். நான் ஓரளவு பெரியவனான பிறகு அந்தப் புத்தகத்தை – குறிப்பாக தமிழ் மொழிபெயர்ப்பைத் – தேட ஆரம்பித்தேன், இன்னும் கிடைக்கவில்லை. 😦

பழைய ஞாபகம்தான், ஆனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுதந்திரப் போராட்ட நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: கே.ஏ. அப்பாஸுக்கு ஒரு தளம்

வக்காளி இந்தாளு மனுசந்தானா?

by

சமீபத்தில் படித்த கட்டுரை. மனதைக் கவர்ந்த ஒன்று.

டூஃபான் ரஃபாய் 1921-இல் ஏழை பக்கிரி குடும்பத்தில் பிறந்தவர். காந்தியை சிறு வயதில் சந்தித்திருக்கிறார். இரண்டு விரல்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டார். எப்படியோ கலை பயின்றிருக்கிறார். வேலைக்குப் போயிருக்கிறார், ஓய்வும் பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பின்னர், 1979 வாக்கில், அவருக்கு 58-59 வயது இருக்கும்போது ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் கண்ணில் தற்செயலாகப் பட்ட ஒரு சிறு புத்தகம் – வனஸ்பதியோன் நூ ரங் – அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. காந்தி எழுதிய புத்தகம்! எதைப் பற்றி? இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு, வேதிப் பொருட்கள் (chemicals) சேர்க்காமல் வண்ணங்களை உற்பத்தி செய்வது பற்றி! கதர் துணிகளுக்கு செயற்கைச் சாயங்களை வைத்து வண்ணம் தருவதை காந்தி விரும்பவில்லையாம், அதனால் இயற்கைச் சாயங்களைப் பற்றி யோசித்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். டூஃபானுக்கு இந்தப் புத்தகம்தான் கீதை, குரான், பைபிள் எல்லாமே.

புத்தகம் கண்ணில் பட்ட நாளிலிருந்து டூஃபான் இலை, வேர், மரப்பட்டை, பூ, வெங்காயச் சருகு, மாதுளம் விதை இன்ன பிறவற்றிலிருந்து சாயங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவற்றை வைத்து ஒரு புடவைக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார். அது இந்திரா காந்தியிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. டூஃபானுக்கும் அவரது சாயங்களுக்கும் கிராக்கி அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சாயம் தயாரிப்பது, துணிகளுக்கு வண்ணம் தருவது ஆகியவற்றை கற்றுத் தந்திருக்கிறார். முன்னூறுக்கும் மேற்பட்ட இயற்கைச் சாயங்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு சாயம் பசு மூத்திரத்திலிருந்து!

92 வயதில்தான் – மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்னால்தான் இறந்திருக்கிறார். அவரது பேட்டியை, குறிப்பாக பள்ளி மாணவனாக காந்தியை சந்தித்தது பற்றிய பகுதியைத் தவற விடாதீர்கள்! காந்தி ‘ஏண்டா என் உயிரை வாங்குகிறாய்’ என்று அலுத்துக் கொள்வதும், ஏழைச் சிறுவன் ஒரு தொப்பிக்கு மேல் ஒருவரிடம் எப்படி இருக்க முடியும் என்று குழம்புவதும் மிக அருமையாக விவரிக்கப்படுகின்றன.

காந்தியைப் பற்றிய வியப்பும் பிரமிப்பும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தலைக்கு மேலே வேலை, இந்தியா மாதிரி பெரிய நாட்டின் பெரிய பிரச்சினைகள் தோள் மேலே பாரமாகக் குவிந்திருக்கின்றன, இத்தனைக்கு நடுவில் இந்தாள் மலம் அள்ளுவது, துணிக்கு சாயம் போடுவது, இயற்கை வைத்தியம், கதர், ராட்டை என்றெல்லாம் யோசித்து அதை செயல்படுத்தியும் இருக்கிறார்! அவரது சிந்தனைகளின் தாக்கத்தால் எத்தனை பேர், எத்தனை துறைகளில் இப்படி மன நிறைவோடு சாதித்திருக்கிறார்கள்! வனஸ்பதியோன் நூ ரங் புத்தகத்தைப் படித்தேன், அதில் உள்ள கருத்துக்களை செயல்படுத்தினேன், அவ்வளவுதான் என் வாழ்க்கை, என் சாதனை என்று ரஃபாய் சாப் சொன்னதைப் படித்ததும் மனதில் ஆங்கிலத்தில் politicaly incorrect வாக்கியம் ஒன்றுதான் ஓடிற்று. அதைத்தான் ‘வக்காளி இந்தாளு மனுசந்தானா!’ என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறேன். 🙂

வாழ்க்கை மிக எளிமையானது, சுலபமானது, அற்புதமானது. அதை காந்தி முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். நம் போன்ற சராசரிகள்தான் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம், நம்மால் முடிந்தவற்றில் ஒரு சதவிகிதம் கூட செய்வதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி: டூஃபான் ரஃபாயின் பேட்டி

கால வெள்ளம் – இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல்

by

(திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

இந்திரா பார்த்தசாரதி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. அவர் புத்தகங்களில் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனத்தை வலிந்து புகுத்துகிறார், இதோ பார் என் கதாபாத்திரங்கள் எத்தனை அறிவிஜீவித்தனமாக, உண்மையைப் பேசுகிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று செயற்கையாகக் காட்டுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புகழ் பெற்ற அங்கத நடை பொதுவாக எனக்கு ஒரு புன்முறுவலை கூட வரவழைப்பதில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு, தன் மனைவியின் தோழியின் பிசினஸ் செய்யும் கணவனோடு ஒரு மாலை நேர சம்பாஷணையாக வரும் கதைக்கு – பெயர் மறந்துவிட்டது, ஒரு இனிய மாலைப் பொழுது – விழுந்து புரண்டு சிரித்திருக்கிறேன்.)

ஆனால் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். கருதப்படுகிறார் என்ன, என் கண்ணிலும் முக்கியமான எழுத்தாளர்தான். ஆனால் என் கண்ணில் அவரது முக்கியத்துவம் என்பது அவரது தாக்கம்தான், அவரது பாணிதான். அறிவுஜீவி கதைகள் என்ற sub-genre அவரால்தான் உருவாக்கப்பட்டது என்றே சொல்லுவேன். அவரது பாணியில் அவரை விஞ்சும் பல படைப்புகளை அவரது சீடர்கள் – குறிப்பாக ஆதவன் – எழுதிவிட்டார்கள். அவர் போட்ட கோட்டில்தான் அவர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள்.

குருதிப்புனல் சாக்திய அகாடமி விருது பெற்றது, அவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.

அவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது முதல் நாவலான காலவெள்ளம்தான். பிற்கால நாவல்களில் அவர் படைத்திருக்கும் பாத்திரங்கள் பொதுவாக தமிழனுக்கு கொஞ்சம் அன்னியமானவை போலவே இருக்கும். இந்த நாவலில் அப்படி கிடையாது. ஆனால் கதையோட்டத்தில், கதைப் பின்னலில் அனேக முதல் நாவல்களைப் போலவே சில rough edges இருக்கின்றன.

1920-40 வாக்கில் நடக்கும் கதை. ஸ்ரீரங்கத்து பணக்கார ஐயங்கார் பெண் குழந்தை வேண்டுமென்று ஏழைப் பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார். இரண்டு மனைவிக்கும் சேர்த்து நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிடுகிறாள். இரண்டாவது மனைவி பிரிந்து போய்விடுகிறாள். மூத்த பையன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இரண்டாவது பையன் அவ்வளவு உருப்படவில்லை. மூன்றாவது பையன் நன்றாக படிக்கிறான், நாற்பதுகளின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசி பெண் ஏதோ தகராறில் வாழாவெட்டியாக இருக்கிறாள். நன்கு படிக்கும் பையன் தலையெடுத்து தங்கையை கணவனோடு சேர்த்து வைக்கிறான், தன் அம்மாவை சந்திக்கிறான் என்று கதை போகிறது. அவருக்கு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமோ என்னவோ, கதை திடீரென்று முடிந்துவிடுகிறது.

பாத்திரங்கள் உண்மையாகத் தோன்றுகின்றன. நல்ல craft தெரிகிறது. மற்ற பல புத்தகங்களில் இருப்பது போல பேசிக்கொண்டே இருக்கவில்லை!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

குவிகம் சுந்தரராஜன்

by

இந்தத் தளத்தைப் படிப்பவர்களுக்கு கௌரி கிருபானந்தன் பரிச்சயமான பெயர். மூச்சு விடாமல் தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மாற்றி மாற்றி மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்புக்காக சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.

கௌரியின் மூலமாகத்தான் கிருபானந்தன் பழக்கமானார். கிருபானந்தன் மூலமாகத்தான் இப்போது சுந்தரராஜனும் அறிமுகம்.

சுந்தரராஜனும் கிருபானனந்தனும் இணைந்து குவிகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். சுந்தரராஜன் முன்னணியிலும் கிருபானந்தன் பக்கபலமாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை. பல வருஷங்களாக மாதாமாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்துகிறார்கள். அழகியசிங்கர், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி மாதிரி பெரிய தலைகளை எல்லாம் அழைத்து விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நன்றாக ஒத்துப் போகக் கூடிய ராஜன், சுந்தரேஷ், பாலாஜி, பக்ஸ், முகின், விசு, எங்களுக்கே மாதம் ஒரு முறை சந்தித்து புத்தகங்களைப் பற்றிப் பேசுவது என்பது பெரும்பாடாக இருக்கிறது. இவர் இதை எப்படி விடாமல் நடத்துகிறார் என்பது பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஒரு இணையப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறார். எல்லாவற்றையும் விட இன்னும் செய்ய வேண்டும், இலக்கிய வாசிப்பைப் பரவலாக்க வேண்டும், சுலபமாக்க வேண்டும் என்ற கனவுகளில்தான் இன்னும் இருக்கிறார். அவரது உற்சாகம் பேசும் நம்மிடமும் தொற்றிக் கொள்கிறது!

க.நா.சு.வின் ஒரு புத்தகம் உண்டு – இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்று நினைக்கிறேன். சாஹித்ய அகடமி விருதெல்லாம் கூட வென்றது. (விருதுக்குத் தகுதி இல்லாத புத்தகம் என்பது வேறு விஷயம்). அதில் அவர் ஊருக்கு நாலு பேர் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் போதும், இலக்கியம் தழைக்கும் என்று சொல்லி இருப்பார். சுந்தரராஜனைப் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

முதல் அப்புசாமி கதை

by

ஃபேஸ்புக்கில் பார்த்தது. வசதிக்காக கதையை கீழே கொடுத்திருக்கிறேன். பாக்கியம் ராமசாமிக்கு நன்றி!

1963’ம் ஆண்டு குமுதத்தில் முதல் அப்புசாமி கதை வெளியாயிற்று ஓவியர் ஜெயராஜின் படங்களுடன்.
இன்று 54 வருடங்களுக்குப் பிறகு அதே அப்புசாமி கதை மூன்று முகநூல் நண்பர்களுக்கு (ராஜசேகரன் வேதிஹா, கணேஷ் பாலா, சென்னை இந்திரா நகர் குப்புசாமி) நன்றி தெரிவிக்க இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் சீதாப்பாட்டி தலை காட்டியபோது அவள் பெயர் சீதாலட்சுமி. பாத்திரங்களும், சித்திரங்களும், சம்பவங்களும் காலத்துக்கேற்ப மாறி வருகின்றன. (ஓவிய நண்பர் ஜெயராஜுக்கு ஸ்பெஷல் நன்றி. என் கூடவே வரும் நிழல் அவர்.)

<hr /?

மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்!

பாக்கியம் ராமசாமி

அப்புசாமி சுற்றுமுற்றும் ஒரு தரம் பார்த்தார். மூன்று தரம் பார்த்தார். மனைவி சீதாலட்சுமியின் குறட்டை ஒலி உள்ளிருந்து வந்தது. ‘நல்ல காலம்’ என்று நினைத்துக்கொண்டு பொடிக் கடையை நோக்கி விரைந்தார். பொடிக் கடைக் கதவுகள், ஐயஹோ! அடைத்துக் கூடக்… இல்லை… இல்லை…
அப்புசாமிக்கு உயிர் வந்தது. சொர்க்கத்தின் கதவுகள் அப்போதுதான் மெதுவே மெதுவே அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதோ, கடைசிப் பலகையைச் சிப்பந்தி போடப் போகிறான். அனார்கலியின் சமாதியை அடைத்த கடைசிச் செங்கல்லைத் தடுக்க, அக்பரின் மகன் ஓடிய ஓட்டத்தைப் போலப் பத்து மடங்கு வேகத்துடன் அப்புசாமி ஓடி, “பொடி, பொடி,” என்றார். மூக்குப் பொடிக் கடைக் கடையின் கடைசிப் பலகை விழுமுன் கடைக்குள் தன்னை ஆஜர் செய்து கொண்டு விட்டார்.

“பெரிய டப்பாப் பொடிங்களா? இதோ தர்ரேங்க,” என்று மீண்டும் கடை திறந்து கடைக்காரர் ஒரு டப்பா தந்தார். ‘லூஸ்’ பொடி கொஞ்சம் அங்கேயிருந்த ஜாடியிலிருந்து எடுத்துத் தற்காலிக சாந்தி செய்து கொண்டு சஞ்சீவி பர்வதம் கிடைத்த மகிழ்ச்சியுடன், டப்பாவும் கையுமாக வீட்டுக்குள் நழைந்தார் அப்புசாமி.

அம்மாடி! இன்னும் சீதாலட்சுமி எழுந்திருக்கவில்லை. ஆனால் லேசாகப் புரண்டு படுத்தாள். அப்புசாமி, ஜிகினாக் காகிதம் சுற்றிய ‘இனிய சுகந்த’ இத்யாதி பொடியை அலமாரியில் வைத்து அழகு பார்த்தார். கையில் எடுத்து எடுத்துக் குழந்தையைக் கொஞ்சுவது போல் பார்த்தார். தூரத்தில் வைத்து ரசித்தார். டப்பாவைப் பிரிக்காமலேயே உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்.

ஒரு வாய் வெற்றிலைச் சீவல் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து மேஜை மீதிருநத பொடி டப்பாவைப் பார்த்து மகிழ்ந்தார். அப்புசாமிக்குப் பொடிதான் உயிர் என்றாலும் வெற்றிலைச் செல்லமும் எப்போதும் கையிலிருக்கும். கால் மணிக்கொரு தரம் வெற்றிலை போடுவார். ஐந்து நிமிடத்துக்கொரு தரம் பொடி போடுவார்.

மூக்கு தன் அடுத்த தவணையை ஞாபகப்படுத்தியது. அப்புசாமி ஜிகினாக் காகிதத்தை மெதுவே உரித்தார். டப்பாவின் இறுகலான மூடியைத் திறந்தார். ஒரு சிட்டிகை எடுத்து மூக்கருகே கொண்டு போனார். மிஸஸ் அப்புசாமியின் கிழக்கரம் அவர் கையைத் தடுத்தாட்கொண்டு பொடியைத் தட்டி விட்டது.

“ஏ, மஞ்சள் பிசாசு! சும்மா இருக்க மாட்டாய்?” என்று அப்புசாமி மனைவியைக் கோபித்துக் கொண்டார்.

ஸீஸன் மாம்பழம்போல ‘மஞ்ச மஞ்சேர்’ என்று திருமதி அப்புசாமி விளங்கினார். மிஸஸ் அப்புசாமியை எல்லோரும் சுமங்கலிப் பாட்டி என்று கூப்பிடுவார்கள். இயற்பெயர் சீதாலட்சுமி. 72 வயதாகியும் கணவனை இழக்காமல் சுமங்கலியாக இருக்கிறோமே என்பதில் சீதாலட்சுமிப் பாட்டிக்கு வெகு பெருமை.

தினமும் குளிக்கும்போது அரை வீசை மஞ்சள் கிழங்கைத் தேய்த்துத் தேய்த்துத் தீர்த்துவிடுவாள். அப்புசாமிக்குச் சந்தேகம். ‘ஒருகால் குளிக்கும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு மஞ்சள் கிழங்கைத் தின்கிறாளோ?’ என்று.

அது போதாதென்று டிரஸ்ஸிங் மேஜைமுன் ஒரு டாய்லெட் பவுடர் டப்பாவில் மஞ்சள் தூள் இருக்கும். சீதா லட்சுமிப் பாட்டி முகப் பவுடருக்குப் பதில் மஞ்சள் பவுடரைத்தான் உபயோகிப்பாள்.

இப்படியாக எல்லா வகையிலும் தன் சுமங்கல்யத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வாள். ஆனால் சுமங்கலனான அப்புசாமி, “உனக்கென்ன பெருமை வாழ்கிறது? நான் சாகாமல் இருக்கிறேன். அதற்காக நான் அல்லவோ பொருமைப்பட வேண்டும்?” என்று கொக்கரிப்பார்.

சீதாப்பாட்டி அப்புசாமியின் பதுக்கப்பட்ட பொடி மட்டையைப் பறித்துக்கொண்டு, “உங்கள் மனத்தில் என்ன எண்ணம்? பொடி போடக் கூடாது, கூடாது என்று ஹௌ மெனி டைம்ஸ் உங்களுக்கு ‘வார்ன்’ செய்வது?” என்றாள்.

பாட்டிக்குத் தங்குதடையின்றி இங்கிலீஷ் வராவிட்டாலும், இங்குமங்குமாக நல்ல சங்கீதத்தில் அபஸ்வரம் தலை காட்டுகிற மாதிரி ஆங்கில வார்த்தைகள் வந்து விழும்.

‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’டில் வந்த கட்டுரை ஒன்றைப் பாட்டி சில காலத்துக்கு முன் படித்தாலும் படித்தாள், அப்புசாமி பாடு திண்டாட்டமாகிவிட்டது.

‘புகையிலையை எந்த விதத்தில் உபயோகித்தாலும் அது இருதயத்தைப் பலவீனப்படுத்துகிறது’ என்று அதில் ஒரு கட்டுரை கூறியது.

“நீ பொடி போட்டால் உனக்கு அதன் அருமை தெரியும்!” என்று முணுமுணுத்தார் அப்புசாமி. “நான்தான் உனக்குத் தாலி கட்டிவிட்டு அவதிப்படுகிறேன். என் மூக்குமா உனக்கு வாழ்க்கைப்பட்டது?”

சீதாப்பாட்டி பொடி டப்பாவை மாடியிலிருந்தவாறே, எதிரே இருந்த மைதானத்தை நோக்கி வீசிப் போட்டாள்.

அப்புசாமி அடுத்த நிமிடம் மாடியிலிருந்து தடதடவென்று இறங்கினார்.

வழி மறித்த சீதாப்பாட்டி, “எங்கே? போகிறீர்கள்? மைதானத்துக்கு ஒடுகிறீர்களோ, நான் வீசிப் போட்டதைத் தூக்கி வர? மண்ணில் கொட்டிப் போயிருக்குமே எல்லாம்!” என்றாள்.

“பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும்! பொடியுடன் சேர்ந்த மண்ணும் மணம் பெறும்! அந்த மைதானத்து மண்ணையாவது ஒரு சிட்டிகை போட்டுக் கொள்ளாவிட்டால் இரண்டு நிமிடத்தில் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்!” அப்புசாமி மைதானத்து மண்ணைத் தழுவ ஓடினார்.

சீதாப்பாட்டி, “ஆ, ஐயோ, கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதே,. மண்ணை மூக்கில் போட்டுக் கொண்டால் உயிர் எதற்காகும்? அசல் பொடியை விட ஒருகால் அதுவே நன்றாயிருந்து, மண்ணையே போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், என்ன செய்வேன்?” என்று பின்னாலேயே ஓடினாள்.

மைதானத்தை அடைந்த அப்புசாமியிடம் பின்தொடர்ந்து வந்த சீதாப்பாட்டி, “அதோ! அதோ! அந்த மாட்டைப் பாருங்கள்! நான் போட்ட பொடி டப்பாவை, என்னவோ ஏதோ என்று ஆசைப்பட்டு விழுங்கிவிட்டு அவதிப்படுகிறது பாருங்கள்!” என்று காட்டினாள்.

சிறிது தூரத்தில் ஒரு தெருப் பொறுக்கி மாடு “அக்சூ! அக்சூ!” என்று துள்ளித் துள்ளி சுமார் இருபது தும்மல் போட்டு விட்டு, மடேல் என்று தரையில் விழுந்துவிட்டது.

“பார்த்தீர்களா இந்தக் கோரக் காட்சியை? இனி மேலாவது திருந்துங்கள்,” என்று அப்புசாமியின் கரதலம் பற்றிக் கரகரவென்று வீட்டுக்கு இழுத்து வந்தாள்.

“கண்டவன் எழுதியதை நம்பி எனக்கு நீ தடை போடலாமா? உன் அறியாமையை ஆதாரபூர்வமாக அகற்றுவதற்கு இதோ இப்போதே கிளம்புகிறேன்?”

“என் இக்னரன்ஸா?”

“சந்தேகமென்ன? உனக்குத் தெரியும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாகரீகமிருப்பதுபோல ஒவ்வொரு சீதோஷ்ண ஸ்திதிக்குத் தகுந்த மாதிரி ஆரோக்யமும் உடல்நிலைகளும் மாறுபடுகிறது என்று. ஆரோக்கியத்துக்குத் தகுந்தபடி டாக்டர் யோசனை வெளியிடுகிறார்கள். ஒரு நோயாளிக்கு முட்டை கூடாது என்பார்கள்; இன்னொருத்தருக்கு முட்டை நிறையச் சாப்பிட வேண்டும் என்பார்கள். தமிழ்நாட்டில் தினமும் மூன்று வேளை குளிக்க வேண்டும். நல்லது. எஸ்கிமோவிடம் போய் இதையே கட்டாயப்படுத்தினால் எவ்வளவு மடத்தனம்?”

“ஐ கான்ட் காட்ச் யூ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏதோ ‘ரீஸனபிள்’ ஆகப்பேசுவது மாதிரி நடிக்கிறீர்களே!”

“பார்த்தாயா? நீ இப்படி அவசர முடிவுக்கு வந்து விடுவாய் என்றுதான் நான் ஆதாரம் தேடிக்கொண்டு வரப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மேல்நாட்டு பத்திரிகையை ஆதாரம் காட்டி உன் கட்சியை நீ சொன்னாய். சரி, நான் நம் தமிழ்நாட்டு டாக்டர் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் கொண்டு வந்து காட்டுகிறேன் பார். பொடி போடுகிறதிலுள்ள நாற்பது நன்மைகளையும் அது போடாவிட்டால் விளையும் எண்பது தீமைகளையும் ஆணித்தரமாகப் பாரா பாராவாக எழுதியிருக்கிறார். ‘சஞ்சாரி’ என்ற மாதப் பத்திரிகையில் அது கட்டுரையாக வந்திருக்கிறது. எந்த இதழ் ஞாபகமில்லை. நேரே இப்போது மூர்மார்க்கெட் போகிறேன். பொடி எனக்குத் திரண மாத்திரம். நான் பொடியை என்ன, பெண்டாட்டியையே கூடத் துறக்கத் தயார். ஆனால் நீ இப்படி அறியாமை காரணமாக வழிவழி வந்த நமது முன்னோரின் ஞானத்தைப் பழிப்பதை நான் சகிக்க மாட்டேன். வருவதற்குச் சிறிது நேரமானாலும் கவலைப்படாதே, பத்திரமாகப் போய்விட்டு ஆதாரத்துடன் வந்து சேர்கிறேன்.
அப்புசாமி வாக்கிங் ஸ்டிக்கையும் வெற்றிலைச் செல்லத்தையும் எடுத்துக் கொண்டு விறுவிறென்று நடக்கத் தொடங்கி விட்டார்.

“கொண்டு வரட்டும். அதையும் பார்த்து விடுவோம்” என்று சீதாப்பாட்டி, கறுவிக் கொண்டே சோபாவில் வந்து உட்கார்ந்து ‘ஸ்பெக்ஸை’ மாட்டிக்கொண்டு ‘டைஜஸ்ட் ‘கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தாள்.

‘எந்தச் சீதோஷ்ண நாடாக இருந்தாலும். பொடி, கெடுதல், கெடுதல், கெடுதல்,’ என்று பன்னிரண்டாம் வாக்கியம் பேசுகிறதே, இது பொய்யா? கணவர் சொல்லும் விவரம் வந்த பத்திரிகை வரட்டுமே, பார்ப்போம் என்று காத்திருந்தாள்.

இரவு எட்டு மணிக்கு அப்புசாமி டாக்ஸியில் வந்து இறங்கினார்.

“ஸோ லேட்?” என்று கணவனை வரவேற்பதற்காக சீதாப்பாட்டி வாசல் விளக்கைப் போட்டாள்.

அப்புசாமி, “உஸ்ஸ்…” என்று மாடிப் படி ஏறினார்.

சீதாப்பாட்டி, “எங்கே உங்க மாகஸின்? கிடைக்கவில்லையா?” என்றாள்.
“கிடைக்கப்பட்ட பாடு போதும் என்றாகிவிட்டது,” என்றார் இன்னமும் எதையும் கொடுக்காமல்.

சீதாப்பாட்டி, சோபாவில் உட்கார்ந்த கணவனை இப்போதுதான் நன்றாகப் பார்த்தாள். திடுக்கிட்டாள் : “இதென்ன வேட்டி ஜிப்பா எல்லாம் கன்னங்கரேலென்று மை? எங்கேயாவது போய்த் தார்ப் பீப்பாய் மேல் விழுந்து விட்டீர்களா என்ன? இதற்குத்தான் தனியாக உங்களைப் போக நான் ‘அலௌ’ செய்வதில்லை. சொன்னால் கேட்கிறீர்களா?”

அப்புசாமி திகைத்தார். “மையா? மை.. ஏது மை? நான் எங்கே விழுந்தேன் தார்ப் பீப்பாய் மேல்?”

“அதுவாக வந்து விழுந்ததோ? முதலில் வேறு வேட்டி சட்டை போட்டுக் கொள்ளுங்கள். சேசே! சாமான்னியமாக இந்த மை போகாது போலிருக்கிறதே?” என்று பக்கத்தில் வந்து சீதாப்பாட்டி பார்த்த பிறகுதான் அப்புசாமியும் கவனித்தார். “ஆமாம். மை.. ஓ! ப்ரஸ்..” என்றவர் கப்பென்று நிறுத்திக் கொண்டார்.

“ப்ரஸ்ஸா? என்ன ப்ரஸ்?” என்றாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி சிறிது தடுமாறி, “ஒன்றுமில்லை. ஏதோ ஒரு பிரஸ்ஸுக்கு டிரம் நிறைய அச்சு மை ஏற்றிக்கொண்டு ஒரு வண்டி போனது. ஒருகால் அது உரசி விட்டுப் போனதோ என்னவோ? அதைப் பற்றி என்ன? நீ பத்திரிகையைப் படித்துப் பார். கொண்டு வந்திருக்கிறேன்,” என்று மடியில் வைத்திருந்த ஒரு மாதப் பத்திரிகையை வெளியே எடுத்து அதில் ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டினார்.

“ஓ! ஸஞ்சாரியா? மன்த்லியா? எந்த டாக்டர் எழுதியிருக்கிறான்?” சீதாப்பாட்டி பத்திரிகையை வாங்கி ஆராய்ந்தாள்.

“டாக்டரை, ‘அவன் இவன்’ என்று சொல்லாதே. உன் ‘டைஜஸ்ட்’ டாக்டரை வேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்,” என்று ஆட்சேபித்தார் அப்புசாமி.

சீதாப்பாட்டி கட்டுரையை வாய் விட்டே படிக்க ஆரம்பித்தாள்.

‘பொடியின் மகிமை
டாக்டர் காமாட்சிநாதன்.
எம்.பி.பி.எஸ். பெடி போடுவதைப் பலா…’

அப்புசாமி முகத்தைச் சுளித்தார். “சரியாகப் படி. பெடி போடுவதை என்றா கம்போஸ் பண்ணியிருக்கிறான்! மடையன்ஸ்!”

சீதாப்பாட்டி அப்புசாமியை ஏற இறங்கப் பார்த்தாள். “இருக்கிறதைத்தான் படிக்கிறேன். டோன்ட் டைவர்ட் மை அட்டன்ஷன்!”

சீதாப்பாட்டி தொடர்ந்து படித்தாள் :

‘பெடி போடுவதைப் பலர் முட்டாள்தனமாகத் தப்பாக எண்ணுகிறார்கள். பொடி, நமது இந்திய நாட்டுக்கு முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கு மிக மிக இன்றி அமைத்ததுதுதுப. மகாராஜ ராஜ ஸ்ரீ சுபயோக சுப தினத்தினத்தில் எனது மகன்…’

அப்புசாமி பதறிப் போனார் : “என்ன, என்ன பேத்தலாகப் படிக்கிறாய்?”

சீதாப்பாட்டி ஒருமுறை முறைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள் :

…முக்கியமானனது. அது மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது. பொடி போடுவதால் ஆயுல் நீடிக்கிறது. ஜலதோகம் பிடிக்காது. போடி போட்டி கிழவர்கள் பொடி போடாதா கிழவர்களை விட நீண்டநால் வாழ்கினார்கள். இது மிக மிக உண்மை. இதைத் தெரியாதவர்கள் சொல்லும் வார்த்தையோ, சில மேல் நாட்டுக்காரர்கள், பத்திரிகைகள் ஊலறுவதை நாம் செவி மடிக்க வேண்டியதிள்ளை….”

“நாசமாய்ப் போக!” அப்புசாமி தலை தலையாய் அடித்துக்கொண்டார்.

சீதாப்பாட்டி பத்திரிகையை மேலும் சிறிது புரட்டிவிட்டுத் தூக்கி எறிந்தாள். “டெரிபிள்! என் கண்ணே வலியெடுத்துப் போய்விட்டது. ஒரே ஒரு பாரா படிப்பதற்குள்! சகிக்க முடியாத பிரிண்ட்டிங் மிஸ்டேக்ஸ்! நான் படித்த இந்த ஒரு பக்கத்தில்தான் அதுவும் இப்படி!”

அப்புசாமிக்குக் கால்கள் கைகள் நெஞ்சுகள் லேசாக நடுங்கி வியர்க்கத் தொடங்கின.

‘தெரிந்து கொண்டு விட்டாளோ? நாசமாய்ப் போகிற குஜிலி பிரஸ்காரன்! ஆனால் அப்போதே சொன்னான், ‘அவசரப்படுத்தினீங்கன்னா, தப்புத் தவறு வந்துடும், அப்புறம் நான் பொறுப்பில்லை’ என்று. ஆனால் அதற்காக இப்படியா கண்ணராவி! ஏதோ கல்யாணப் பத்திரிகை மேட்டரையெல்லாம் கலந்து ஒரு பக்கம் அடித்துத் தொலைத்திருக்கிறான். இந்த வரைக்கும் பசை போட்டு அந்தத் தனிக் காகிதத்தை ஒட்டாமல், பின்னைக் கழற்றிச் செருகியிருக்கிறான். தொலைகிறது. நானாவது புரூஃப் சுத்தமாகப் படித்திருக்கலாம். அச்சாபீஸில் விளக்கு வெளிச்சம் இல்லை. என் கண்ணும் தெரியவில்லையே? எல்லாம் சோதனை! கடவுளே! அவளுக்கு மந்த புத்தி கொடு! அவள் என் மோசடியைத் தெரிந்து கொள்ளாதிருக்க வேண்டும். என் மூக்கு பிழைக்க வேண்டும்’ என்று மனத்துக்குள் அப்புசாமி பதறினார்.

சீதாப்பாட்டி சொன்னாள் : “முதல் வேலையாக அந்த டாக்டரை நாளை காலையில் ‘மீட்’ செய்வோம். நேரிலேயே கேட்கிறேன். ஐ டௌட் ஹிஸ் ஆதன்ட்டிஸிடி.”

“எதற்கு வீண் சிரமம்? ஒரு டாக்டரை அப்படிக் கேட்பது தவறு. நாகரீகக் குறைவு,” என்று அப்புசாமி வீணாக அணை போட முயன்றார்.

படுக்கையில் படுத்தபடி அப்புசாமி தவித்தார். ‘முந்த்ரா’ ஊழலை விடக் கேவலமான ஓர் ஊழலில் மாட்டிக்கொண்டு தவித்தார்.
நடு ராத்திரி.

அப்புசாமி மெதுவே மாடியிலிருந்து இறங்கினார்.

இரவு பன்னிரண்டுக்கு நழுவிய அப்புசாமி ஒரு மணி நேரம் கழித்து வந்து ஓசைப்படாமல் படுத்துக்கொண்டார்.

மறுநாள் மாலை. சீதாப்பாட்டி அப்புசாமியையும் அழைத்துக் கொண்டு டாக்டர் வீட்டை அடைந்தாள்.

டாக்டர் காமாட்சிநாதன் பொறுமையாக எல்லாத் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு பிறகு, “என் கருத்து தவறு என்று நீங்கள் சொன்ன மாதிரியே பலர் தெரிவித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்கு என்னுடைய புரஃபசருக்கு இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். பதில் வரவேண்டும்,” என்றார்.

“அது வரை?” என்றாள் சீதாப்பாட்டி. “இவர் அதற்குள் அரை டன் பொடி தீர்த்து விடுவாரே?”

அப்புசாமியை டாக்டர், “சோதனை ரூமுக்கு ஒரு நிமிடம் வாருங்கள். உங்கள் தேக நிலையைப் பரிசோதித்து, உங்களுக்குப் பொடி நல்லதா கெட்டதா பார்க்கிறேன்,” என்று அழைத்துக் கொண்டு தனி அறைக்குப் போனார்.

சோதனை அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டதும் அப்புசாமி, டாக்டரின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு, “டாக்டர்! நேற்று நடுநிசியில் வந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்காக என்னைக் காப்பாற்றினீர்களே? உங்களுக்கு எப்படி நன்றியும் பீஸும் செலுத்துவேன்?” என்றார்.

டாக்டர் காமாட்சிநாதன், “அதெல்லாம் சரி. பெஞ்சியில் ஏறிப் படும்,” என்றார். “சோதனை நடத்த வேண்டும்.”

அப்புசாமி நடுங்கிப் போனார். ‘பாவி மனுஷா! நடு ராத்திரியில் வந்து உண்மையைச் சொல்லிக் கேட்டுக் கொண்டதற்கு இதுதானா பலன்?’ என்று எண்ணிக் கொண்டார்.

ஒரு மணி நேரம் டாக்டர் காமாட்சிநாதன் சோதனை நடத்திவிட்டு, வெளியே வந்தார் அப்புசாமியுடன்.

சீதாப்பாட்டி ஆவலுடன், “என்ன டாக்டர்? ஐ ஆம் வெரி ஆங்க்‌ஷஸ்…” என்றாள்.

டாக்டர் காமாட்சிநாதன் அப்புசாமி பக்கம் திரும்பி, “மிஸ்டர் அப்புசாமி! நீங்கள் பொடி போடக்கூடாது . அது மகாமகா கெடுதல் உங்கள் உடம்புக்கு. அத்தோடு, வெற்றிலை பாக்கும் போடக் கூடாது.வெற்றிலையை மெல்லாமல் இடித்துப் போட்டுக் கொள்வதால் அது சரியாக ஜீரணமாகாமல் உங்களுக்கு ஏதேனும் வயிற்றுக் கோளாறு ஏற்படலாம்.”

சீதாப்பாட்டி, “டாக்டர்! உங்களிடம் வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! ஓ மை காட்! சேவ் மை ஹஸ்பெண்ட்!” என்று தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டவள் மறு நிமிடம் அப்புசாமியின் கையிலிருந்து ஓலை வெற்றிலைச் செல்லத்தைப் பறித்து வெளியே எறிந்தாள்.

அப்புசாமி ஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தார். ‘உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்றது அந்தப் பார்வை.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

படிக்க விரும்பும் புத்தகம் – ஜார்ஜ் ஜோசஃபின் வாழ்க்கை வரலாறு

by

தமிழகத்தின் விடுதலைப் போராட்டத் தலைவர்கள், வீரர்கள் என்று ஒரு நாலைந்து பேர்தான் பொதுப் பிரக்ஞையில் இருக்கிறார்கள். வ.உ.சி., பாரதியார், ராஜாஜி, காமராஜ். மிஞ்சிப் போனால் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், சத்யமூர்த்தி, ஈ.வெ.ரா. (பின்னாளில் ஈ.வெ.ரா. வெள்ளைக்காரன் ஆட்சிதான் பெஸ்ட் என்று அழிச்சாட்டியம் செய்தது வேறு விஷயம்.)

ஆனால் குறைந்த பட்சம் இரண்டாம் நிலையிலாவது வைக்கப்பட வேண்டிய இன்னொரு தலைவர் ஜார்ஜ் ஜோசஃப். அது எப்படி அவரைப் போன்ற ஒரு ஆளுமை இன்று முழுவதுமே மறக்கப்பட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. என் சிறு வயதில் நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. எந்தப் பாடப் புத்தகத்திலும் அவரைப் பற்றி ஒரு வரி கூட வந்ததில்லை. வைக்கம் வீரர் என்று ஈ.வெ.ரா.தான் பேசப்பட்டாரே தவிர ஜார்ஜ் ஜோசஃபின் பங்களிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்பட்டு நான் கேட்டதில்லை. ஒரு வேளை அவர் மலையாளி என்பதாலா? குறைந்த பட்சம் கேரளத்திலாவது அவர் நினைவு கூரப்படுகிறாரா? இல்லை அவர் மலையாளிகளுக்கு பாண்டியா?

ஜார்ஜ் ஜோசஃப் பற்றி அவருடைய பேரனான ஜார்ஜ் ஜோசஃப் எழுதி இருக்கிறாராம். (George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist) அதைப் படிக்க வேண்டும் என்று ஆவல். புத்தகம் அச்சில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. சில பகுதிகளை இந்தத் தளத்தில் படிக்கலாம். படித்த வரை சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

யாராவது படித்திருக்கிறீர்களா? மதுரைக்காரர்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் கட்டாயம் பதில் எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலை இயக்கம்

இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

by

மீள்பதிப்பு, முதல் பதிப்பு செப்டம்பர் 2010-இல்.

இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பிரபலமானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு.

இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை.

குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது!

இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின்செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.

குருதிப்புனலில் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான்.

நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள்.

புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம். 🙂

ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.

பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்:

ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமல் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது.

குருதிப்புனல் முன்னுரையில் இ.பா.

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம்

.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:

 • கீழ்வெண்மணி நாவல்கள்
 • ஜெயமோகன் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு

  by

  இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் எழுதிய பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு Asymptote என்ற இலக்கிய இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்று தெரிந்தது. மொழிபெயர்த்த சுசித்ரா ராமச்சந்திரனுக்கு ஒரு ஜே!

  விருதுக்கான சிறுகதையைத் தேர்ந்தெடுத்த பிரின்சடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் பெல்லோசின் வார்த்தைகளில்:

  I have absolutely no doubt that the prize itself must go to the charming, wonderful, unusual story of “Periyamma’s Words” by the Tamil writer B. Jeyamohan in Suchitra Ramachandran’s translation. It tells of how an illiterate old lady from South India was taught some basic English before being sent to live in the USA—with word definitions being given out of traditional Indian stories in contrast and conjunction with classical stories from the West. By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed.

  என் கண்ணோட்டத்தில் பெரியம்மாவின் சொற்களை விட பல சிறப்பான சிறுகதைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். (இதுவும் நல்ல சிறுகதைதான்) அவையும் மொழிபெயர்க்கப்பட்டால் ஜெயமோகனின் வீச்சு இன்னும் பெருக வாய்ப்பிருக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது.

  எனக்கு பல வருஷங்களாகவே ஒரு மனக்குறை உண்டு. தமிழின் நல்ல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாததாலேயே பிற மொழி வாசகர்களை அடைவதில்லை, அதனால் தமிழ் எழுத்தாளர்களின் சாதனைகள் வெளியே தெரிவதில்லை. இதிலே சாஹித்ய அகாடமி விருது தந்தால் வாங்கமாட்டேன், பத்மஸ்ரீ விருது தந்தால் மறுத்துவிடுவேன் என்று குழந்தை மாதிரி அசட்டுப் பிடிவாதம் பிடிக்கும் ஆளுமைகள் வேறு. விருதுகள் எழுத்தாளரை பிற மொழி வாசகரிடம் கொண்டு சேர்க்கும் என்ற அற்ப விஷயத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை என்று கொஞ்சம் மனவருத்தம் உண்டு. அப்படி வருத்தப்பவடுதோடு நிறுத்திக் கொள்ளாமல் முனைந்து மொழிபெயர்த்திருக்கும் சுசித்ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் மேலும் மேலும் நல்ல மொழிபெயர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

  ஒரிஜினல் சிறுகதை இங்கே. சுசித்ராவின் மொழிபெயர்ப்பு இங்கே.

  பின்குறிப்பு: தைவான் சென்றிருக்கும் என் நண்பன் ஒருவனிடம் Asymptote பத்திரிகை கிடைத்தால் இரண்டு வாங்கி வா என்று சொல்லி இருந்தேன். இது அச்சுப் பத்திரிகையே இல்லையாம், இணையத்தில் மட்டும்தான் வருகிறதாம். 😦

  தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

  ஆர்.பி. சாரதி – அஞ்சலி

  by

  அனேகமாக எல்லாரும் ஆர்.பி. சாரதியா, எழுத்தாளர் பா.ரா.வின் அப்பா ஆயிற்றே என்றுதான் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எனக்கோ பா.ரா. ஆர்.பி. சாரதி ‘மாமாவின்’ மகன்.  ஆர்.பி. சாரதி தலைமை ஆசிரியராக இருந்தவர். என் அப்பாவும் தலைமை ஆசிரியர். இரண்டு பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றி மாற்றி மாறுதல் நடக்கும். ஓரிரு வருஷங்களுக்கு ஒரு முறை குடும்பங்கள் சந்தித்துக் கொள்ளும். பா.ரா. முதல் முறையாக “எழுதிய” கதையை என் அப்பாவை கிணற்றடியில் பிடித்து வைத்துக் கொண்டு சொன்னதை இன்னும் நினைவு கூர்கிறார். அவ்வப்போது சாரதி மாமா எழுதிய கவிதைகள் கோகுலம் மாதிரி பத்திரிகைகளில் வரும். அது அவரை இன்னும் கவர்ச்சிகரமானவராக ஆக்கியது. அவரது அண்ணா சுராஜ் பாரதி மன்றம் என்ற ஒரு அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார். சைதாப்பேட்டையில் சில ஒண்டுக் குடித்தன வீட்டு முற்றங்களில் பாரதியைப் பற்றிய அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இவை எல்லாம் சேர்ந்து அவரை ஒரு மறக்க முடியாத ஆளுமையாக ஆக்கிவிட்டன.

  ஆனால் அவரை நான் கடைசியாகப் பார்த்தபோது நான் சிறுவன். இப்போது வழுக்கை. போன வருஷம் இந்தியா போயிருந்தபோது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் கடைசியில் முடியாமல் போய்விட்டது. இப்போது அது ஒரு மாறாத வருத்தமாகவே நின்றுவிடப் போகிறது.

  அவர் மொழிபெயர்த்த பாபர்நாமா, மஹாவம்சம் ஆகியவற்றைப் படிப்பதுதான் இனிமேல் செய்யக் கூடியது. இவற்றைத் தவிர ராமச்சந்திர குஹா எழுதிய India After Gandhi புத்தகத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார். இத்தகைய மெகா-ப்ராஜெக்டுகளை முன்னின்று சிறப்பாக மொழிபெயர்த்ததற்காக அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

  பா.ரா., மற்றும் குடும்பத்தினரோடு என் ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

  ஜெயமோகன் எழுதிய ‘இந்திய ஞானம்’

  by

  ஜெயமோகன் தமிழின் சிறந்த கட்டுரையாளர்களின் முதல் வரிசையில் இருப்பவர். இந்திய தத்துவ நூல்களை நன்றாகப் படித்து உணர்ந்தவர். விஷ்ணுபுரம் எழுதுவதென்றால் சும்மாவா? அவர் இந்திய தத்துவ மரபு, இந்திய, தமிழ் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகள் பற்றி எழுதிய அறிமுகப் புத்தகம் இது. பல சமயங்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் புத்தகத்தில் கொஞ்சம் coherence குறைவு.

  வேதாந்தத்தில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வம் கிடையாது. சிறு வயதிலேயே சடங்குகள், வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்களை ஓட்டிவிடு முருகா என்ற மாதிரி துதிப் பாடல்கள் மீது இளக்காரப் பார்வை தோன்றி இருந்தது. ஓரளவு வயது வந்த பிறகு பாரம்பரியம், வேர்கள் என்ற அளவில் மட்டுமே வேதம், உபநிஷதம், கீதை ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டு படிக்க முயற்சித்தேன். ஆனால் சரியான புத்தகங்களோ, விளக்கக் கூடிய ஆசிரியர்களோ கிடைக்காததால் என்னால் பெரிதாக முன்னகர முடியவில்லை.

  புத்தகத்திலிருந்து என்னுடைய takeaways:

  • இந்து மெய்ஞான மரபின் syllabus – நான்கு வேதங்கள், மூன்று தத்துவங்கள் (உபநிஷதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம்), ஆறு மதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம்)
  • இவை ஒன்று இன்னொன்றை மறுத்து விவாதித்து வளர்ந்த பெரிய ஞானத் தொகுப்பு
  • வேதங்கள் இந்திய ஞான மரபின் அடிப்படைகள் அல்ல. ஆறு தரிசனங்களில் நான்கு வேதங்களை நிராகரிப்பவை – சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம்.
  • வேதங்களிலேயே கூட கர்மம்/ஞானம் மற்றும் கருத்து/பொருள் முதல்வாதம் என்ற இரண்டு தரப்பையும் பார்க்கலாம். வேதங்களின் கர்ம காண்டத்தை உபநிஷதங்கள் நிராகரிக்கின்றன.
  • ஆனால் இந்த மாறுபட்ட தரப்புகள் ஒன்றாகப் பின்னி பிணைந்திருக்கின்றன. புளியும் உப்பும் கலந்து சுவையான ரசமாவது போல இவை ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன.
  • இப்படி மாறுபட்ட தரப்புகளை விவாதித்து வளர்ந்து உள்வாங்கி இணைந்து செயல்படுவதுதான் வேத மரபின் தனிப்பட்ட குணாதிசயம்.
  • மகாபாரதம் போன்றவற்றை அப்படிப்பட்ட பண்பாடுகள் கலக்கும் காலமாகப் பார்த்தால் இன்னும் நல்ல insights கிடைக்கின்றன. மீன்காரிக்குப் பிறந்தவரால் வேத வியாசர் ஆக முடிகிறது. ஆனால் கர்ணன் சூதனாகத்தான் வாழ்ந்து முடிகிறான். குலத் தூய்மை முக்கியம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்று உணரலாம்.
  • வேத மரபு மற்ற பண்பாடுகளுடன் அப்படி கலந்து உரையாடிய காலகட்டத்திலேயே தமிழ்ப் பண்பாடு செவ்வியல் தளத்துக்கு சென்றிருக்கிறது. கல்வி, அகம்/புறம் என்ற பிரிவு, கவிதை என்று இருந்திருக்கிறது. ஆனால் பிற பண்பாடுகளுடன் கலக்கும் சூழல் இல்லை.
  • களப்பிரர் காலத்தில் தமிழில் குறள் உட்பட்ட நீதி நூல்கள் உருவாகின. களப்பிரர் தமிழ் நிலத்தின் மீது கருத்தியல் ஆதிக்கம் செலுத்த அப்படிப்பட்ட நீதி நூல்கள் தேவைப்பட்டிருக்க வேண்டும். குறள் நீதி நூல் மட்டுமல்ல, கவித்துவம் மிளிரும் நூல்.
  • தமிழ்ப் பண்பாட்டின் மீது வைதிக மரபு, ஆசீவகம், சமணம், பௌத்தம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • வேதாந்தத்தின் அடுத்த பெரும் பரிணாமம் சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • சித்தர் பாடல்கள் இன்றும் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படவில்லை.

  ஆறு தரிசனங்கள், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆசீவக/சமணக் கூறுகள் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கங்களோடு எழுதி இருக்கிறார்.

  இந்தப் புத்தகத்தின் பயன் (என்னைப் பொறுத்த வரையில்) இதுதான். இந்தியத் தத்துவ மரபில் என்ன இருக்கிறது, என்ன எதிர்பார்க்கலாம் என்ற அறிமுகம் கிடைக்கிறது. அது முழுதானதோ இல்லையோ, முதல் சில படிகளை எடுத்து வைக்கப் போதுமானது.

  மிகச் சிறப்பான அறிமுகம்.  படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

  %d bloggers like this: