ஏன் படிக்கிறேன்?

(மீள்பதிவு)

இந்தப் பதிவு 2010 செப்டம்பரில் முதல் முறையாக எழுதப்பட்டது. இந்தத் தளத்தின் முதல் பதிவு இதுதான். எழுதியபோது அப்போது வந்துகொண்டிருந்த யூத்ஃபுல் விகடனில் நல்ல பதிவாக குறிப்பிட்டிருந்தார்கள். பாஸ்கர், கிரி இரண்டு பேரும் தங்கள் காரணங்களை எழுதினார்கள். ஜெயமோகன் இதைப் பற்றிய என் கடிதத்தைப் பிரசுரித்திருந்தார்.

இன்று மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் சோகமாக இருக்கிறது. ஏனென்றால் இத்தனை வருஷங்கள் கடந்தும் எனக்கு வேறு காரணங்கள் இல்லை, இந்தப் பதிவு அப்படியே பொருந்துகிறது. தேக்க நிலையோ என்று தோன்றுகிறது.

இன்றும் அதே வேண்டுகோள்தான். இந்தப் பதிவைப் படிப்பவர்கள் தாங்கள் ஏன் படிக்கிறார்கள் – குறிப்பாக புனைவுகளை ஏன் படிக்கிறார்கள் – என்று சொல்லுங்களேன்!

எனக்கு கொஞ்ச நாளாகவே இந்த கேள்வி இருக்கிறது. எதற்காக படிக்கிறோம், குறிப்பாக புனைகதைகளை எதற்காக படிக்கிறோம்?

கதை கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் நம் ரத்தத்திலேயே ஊறி வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அம்மாவும் பாட்டியும் தூங்க வைக்க சொன்ன கதைகளும், காலட்சேபமும், தெருக்கூத்தும், சினிமாவும், படித்த புத்தகங்களும், தன்னை எம்ஜிஆராகவும் ஜெய்ஷங்கராகவும் நினைத்து கண்ட பகல் கனவுகளும் கதைதானே! அதில் ஒரு சந்தோஷம், நிறைவு! அந்த சந்தோஷத்தை என்னால் லாஜிகலாக விளக்க முடியவில்லை. ஆனால் எப்போது அந்த நிறைவு கிடைக்கிறது, அந்த நிறைவுக்கு என்ன அறிகுறி என்றாவது சொல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

அறிகுறி என்றால் இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று செக் செய்கிறேனா இல்லையா என்பதுதான். இன்று ஒரு கதையை கேட்கும்/பார்க்கும்/படிக்கும்போது அந்த கதையை நம்முடைய மன அலமாரியில் எங்கே பொருத்தலாம், சிறந்த புத்தக வரிசையிலா, டைம் பாஸ் வரிசையிலா, இல்லை குப்பையா என்று மனதில் எண்ணங்கள் ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. ஒரு புத்தகத்தை படிக்கும்போது இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று புரட்டி கடைசி பக்கத்தின் எண்ணைப பார்த்தால் எண்ண ஓட்டங்கள் மறையவில்லை என்று நிச்சயமாக சொல்லலாம். இப்படி எத்தனை பக்கம் இன்னும் இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு அனேகமாக எல்லா துப்பறியும் கதைகளிலும் நடக்கும், சில சமயம் க்ளைமாக்சை முதலில் படித்துவிடுவேன். 🙂 அப்படி எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் படிப்பதிலோ, பார்ப்பதிலோ மனம் முழுமையாக ஆழ்ந்தால் படிப்பது சிறந்த புத்தகம், பார்ப்பது சிறந்த சினிமா. அப்படி முழுமையாக மனம் ஆழ்வது என்பது மேலும் மேலும் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் புத்தகங்கள் படிக்கும்போது அப்படி நடந்தது. ஏழாவது உலகம், விஷ்ணுபுரம், பொய்த்தேவு மாதிரி புத்தகங்கள் படிக்கும்போது வேறு எண்ணம் வரவில்லை. ஆனால் இதய நாதம் மாதிரி ஒரு புத்தகம் படிக்கும்போது எண்ண ஓட்டங்கள் மறைவதில்லை. இப்போதெல்லாம் முக்கால்வாசி புத்தகங்களில் கடைசி பக்க எண்ணை பார்ப்பது நிகழ்கிறது.

மிச்ச கால்வாசி புத்தகங்களுக்காகத்தான் படிக்கிறேன். அந்த கால்வாசி புத்தகங்களின் குணாதிசயங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்தால்:

  • மனிதனின் உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை உண்மையாக காட்டும்போது

அந்த நிலையை – அன்பு, பாசம், நட்பு, நேர்மை, உண்மை என்ற உயர்ந்த நிலையாகட்டும், இல்லை குரூரம், சுயநலம், வெட்டி பந்தா, கயமைத்தனம், போலித்தனம் மாதிரி தாழ்ந்த நிலையாகட்டும் – அதை உண்மையாக சித்தரிக்கும்போது பெரும் மன எழுச்சியோ, இல்லை சீ, மனிதன் இவ்வளவுதானா என்ற வெறுப்போ எழுகிறது. அந்த அன்பும் பாசமும் குரூரமும் சுயநலமும் நம்முள்ளும் இருக்கிறது என்ற உண்மையும் தெரிகிறது. To Kill a Mockingbird படிக்கும்போது என் குழந்தைகளுக்கும் எனக்கும் அட்டிகசுக்கும் ஸ்கவுட்டுக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும் என்று தோன்றியது. (படித்து பத்து வருஷத்துக்கு பிறகுதான் என் முதல் பெண் பிறந்தாள்.) அப்போதெல்லாம் நண்பர்கள் யார் கர்ப்பமானாலும் அவர்களுக்கு இந்த புத்தகத்தை வாங்கி பரிசளிப்பேன். உதாரணமாக மோக முள், பின் தொடரும் நிழலின் குரல், Les Miserables போன்ற புத்தகங்களை படிக்கும்போது இப்படி உணர்ந்தேன்.

  • சிந்திக்க வைக்கும்போது

புனைகதைகளுக்கு சிந்திக்க வைக்கும் ஆற்றல் அதிகம். கற்பு, பெண்ணியம் என்று பக்கம் பக்கமாக எழுதலாம். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற ஒரு வரி கற்பு என்ற கருத்தில் இருக்கும் செயற்கைத்தன்மையை காட்டிவிடுகிறது. சீதையின் அக்னி பிரவேசத்தைப் பற்றி கேட்ட அகலிகை மீண்டும் கல்லானாள் என்ற நாலு பக்க கதை ஆயிரம் ஆயிரம் வருஷமாக வழிப்படப்படும் ராமனின் முரண்பாட்டை காட்டிவிடுகிறது. Atlas Shrugged-இல் ஃபிரான்சிஸ்கோ டன்கொனியா money is the root of all evil என்ற கருத்தைப் பற்றி ஆற்றும் ஒரு மூன்று பக்க “சொற்பொழிவு” பணக்காரன் என்றால் கெட்டவன் என்றே கேட்டு வளர்ந்த என்னை வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது. All Quite on the Western Front நாவல் போர் என்றால் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பங்களாதேஷ் கொண்டாள் மாதிரி ஹீரோக்களுக்கான, வீரம் செறிந்த ஒரு நிகழ்வு என்று நினைத்திருந்த எனக்கு போரின் dehumanization பற்றி புரிய வைத்தது.
ஆனால் இவற்றுக்கு ஒரு குறை உண்டு. பொன்னகரம் கதை கற்பைப் பற்றி பெரிதாக கவலைப்படாத ஒரு சமூகத்திடம் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்? அவர்களுக்கு நளாயினி கதையோ, சீதையின் கதையோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். (அப்படித்தான் இந்திய பழங்குடி சமூகங்களிடம் நடந்திருக்க வேண்டும் என்பது என் தியரி.) உங்களுக்கு போதிக்கப்பட்ட, நீங்கள் கற்ற சிந்தனைகளை தாண்டும் கதைகள் உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாரிடமும் ஏற்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
சில science fiction கதைகள் இந்த குறைபாட்டை தாண்டுகின்றன. அவற்றில் மனித இனத்தின் அடிப்படை கொஞ்சம் மாற்றப்படுகிறது. உதாரணமாக உர்சுலா லீ க்வினின் sexuality பற்றிய விஞ்ஞானக் கதைகள் – ஒரு கதையில் மனித இனத்துக்கும் ஒரு mating season உண்டு. அப்போது கிடைக்கும் stimuli-ஐ வைத்து நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ மாறலாம். சீசன் முடிந்த பிறகு நீங்கள் “பழைய நிலைக்கு” திரும்பிவிடுவீர்கள். இப்படி ஒன்று நடந்தால் மனித சமூகம் – குடும்பம், உறவுகள், காதல், கத்தரிக்காய் – எல்லாம் என்ன ஆகும்?

  • ஒரு புதிய உலகம் என் கண்ணால் முன்னால் விரியும்போது

மகாபாரதம், விஷ்ணுபுரம், ஹாரி பாட்டர், Lord  of  the  Rings, மோக முள், Atlas  Shrugged, One Hundred Years of Solitude, To Kill a Mockingbird மாதிரி புத்தகங்களை குறிப்பிடலாம். அந்த உலகத்தின் எழுதப்படாத விதிகள், அவர்கள் மனநிலை புரியும்போது, அதை ஒரு சித்திரமாக எழுத்தாளன் தீட்டும்போது, அதில் முழுமையாக ஆழ்ந்துவிடுகிறேன்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் – செயின்ட் எக்ஸுப்பரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த ஒரு tribal தலைவன் நீர்வீழ்ச்சி ஒன்றை பார்க்கும் அனுபவத்தை எழுதுகிறார் – அந்த தலைவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தானாம் – “I can’t understand this!” பாலைவனம், தண்ணீர் தட்டுப்பாடு என்பதை இதை விட அழகாக சொல்ல முடியாது. ஒரு வாக்கியத்தில் அந்த tribe-க்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துவிடுகிறது.
நுண்விவரங்கள் நிரம்பி இருந்தால் மீண்டும் மீண்டும் படிக்கவும் தோன்றுகிறது, ஒவ்வொரு முறை படிக்கும்போது மிஸ் செய்துவிட்ட நுண்விவரங்கள் தெரிகின்றன. ஹாரி பாட்டரில் கதையை விட, அதில் மாஜிகல் வாழ்க்கை முறையை காட்டும் விஷயங்கள் – நகரும் புகைப்படங்கள்+ஓவியங்கள், க்விட்டிச் விளையாட்டு, Marauder’s map, மாஜிக் செய்தித்தாள்கள், மாஜிக் tabloids – எல்லாம் சுவாரசியத்தை கூட்டுகின்றன.
இதில் ஒரு sub-category உண்டு. ஒரு தருணத்தை புகைப்படம் மாதிரி அருமையாக capture செய்யும் கதைகள். அசோகமித்ரன் இதில் நிபுணர். காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அந்த ஒரு நொடி பற்றிய ஒரு கதை என்று நிறைய சொல்லலாம்.

  • முடிச்சுகள் பர்ஃபெக்டாக அவிழும்போது

இது ஒரு கலை. பொன்னியின் செல்வன் மிக சிறந்த உதாரணம். பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில அகதா கிறிஸ்டி நாவல்களை சொல்லலாம்.

  • வாய் விட்டு சிரிக்கும்போது

வாய்விட்டு சிரிப்பது அபூர்வமாகிக் கொண்டே போகிறது. சாகியின் Open Window நினைவு வருகிறது. ஒரு காலத்தில் வுட்ஹவுஸ் எழுத்துகளைப் படித்துவிட்டு ரயிலிலும் பஸ் ஸ்டாண்டிலும் சிரித்துவிட்டு பிறகு எல்லாரும் என்னை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்து தலை குனிந்து படித்திருக்கிறேன். இப்போது வுட்ஹவுசைப் படித்தால் புன்முறுவல் வருவதே அபூர்வமாக இருக்கிறது.

  • சிறு வயதில் இருந்த ஒரு காரணம் இப்போது இல்லை. பகல் கனவு!

பகல் கனவு சந்தோஷம் தர காரணம் சிம்பிள். It strokes the ego. செயற்கரிய செயல் செய்வதாக fantasize செய்யும்போது ஒரு அற்ப பெருமை. ஆனால் பகல் கனவு என்பதெல்லாம் சின்ன வயதிலேயே போய்விட்டது. அதாவது சின்ன வயதில் இருந்த ஒரு காரணம் காலி.

உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். படிப்பதற்கு இன்னொரு prosaic காரணமும் இருக்கிறது. நிறைவு/சந்தோஷம் மட்டுமில்லை, பழக்கமும் மிக முக்கியமான காரணம் மனதும் கையும் பல சமயங்களில் அனிச்சையாக புத்தகத்தை நாடுகின்றன. சின்ன வயதில் வேர்க்கடலை சுற்றி வந்த பேப்பரை எல்லாம் கூட படிப்பேன். அப்போது எல்லா புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்ற ஒரு வெறி இருந்தது. பதின்ம வயதில் கணிசமான நேரத்தை என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்று லிஸ்ட் போடுவதில் செலவழித்தேன். முதல் முறையாக எங்கள் கிராம நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் கூட படிக்க முடியாது என்று ஒன்பது, பத்து வயதில் உணர்ந்தபோது ரொம்ப துக்கமாக இருந்தது. அப்போது ஆரம்பித்த பழக்கம் – சிலருக்கு சிகரெட் மாதிரி எனக்கு இது ஒரு addiction-தானோ என்று சில சமயம் தோன்றுகிறது.

எனக்கு இருக்கும் காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன காரணங்கள், என்னுடைய காரணிகளில் ஏதாவது உங்களுக்கும் பொருந்துமா என்று எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வாசிப்பு அனுபவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
யூத்ஃபுல் விகடனில் “ஏன் படிக்கிறேன்” பதிவு குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
ஏன் படிக்கிறேன்? – பாஸ்கர், பாஸ்கரின் பதிவு பற்றி நான்

பிரத்யேக

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

சில பல வருஷங்களாகவே அதிகமாக இருந்த மனச்சோர்வு ஒரு வழியாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது.. மூக்கின் அருகில் இருந்த நீர் இப்போது கழுத்து மட்டத்துக்குப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் நூலகங்களில் தவம் கிடந்தவன்தான்; ஆனால் வீட்டிலிருந்து ஒரு மைல் கூட இருக்காத நூலகத்துக்கு இரண்டு மூன்று மாதம் முன்னால்தான் போனேன் – ஐந்து வருஷம் கழித்து!  படிப்பதே குறைந்துவிட்டது. சின்ன எழுத்துக்களைப் படிக்க முடியாதது ஒரு மனத்தடையாக இருக்கிறது. பார்ப்போம், இந்த வருஷமாவது கொஞ்சம் படிக்க முடிகிறதா என்று!



நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.

ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!

ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.

எங்கள் பிற தளங்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்