என் விமர்சன methodology

வாசிப்பு அனுபவம், ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறு என்பது என் விமர்சன methodology-யின் அடிப்படை. உங்களுக்கு பிடிப்பது எனக்கு பிடிக்க வேண்டியதில்லை and vice versa. உலகம் புகழும் Metamorphosis என்ற காஃப்காவின் படைப்பு எனக்கு பிடிக்கவில்லை. முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவே இல்லை. (ஆனால் அந்த புத்தகம் சிலருக்கு மிகவும் பிடித்துப் போகலாம் என்று நிச்சயமாக தெரிந்தது.) உங்களுக்கும் எனக்கும் ஒரே புத்தகம் பிடித்தாலும் அது ஒரே காரணத்துக்காகப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எனக்கு To Kill A Mockingbird புத்தகம் படிக்கும்போது ஏற்பட்ட மன எழுச்சி வேறு எந்த புத்தகம் படிக்கும்போதும் ஏற்பட்டதில்லை. அந்த புத்தகத்தை உலகின் தலை சிறந்த புத்தகம் என்ற எந்த தேர்ந்த விமர்சகரும் சொல்வதில்லை. அதனால் என்ன? எனக்கு எது சரிப்படுகிறதோ, அதுதான் எனக்கு தலை சிறந்த புத்தகம்!

அப்படி என்றால் எதற்காக இந்த விமர்சனம், புத்தக அறிமுகம், வணிக எழுத்தா/சீரிய எழுத்தா என்ற சச்சரவு எல்லாம்? எனக்கு இரண்டு காரணங்கள் தெரிகின்றன.

உங்கள் தர வரிசையும் என் தர வரிசையும் ஒத்துப் போகாவிட்டாலும், சிறந்த புத்தகங்கள் என்று சொல்வதில் நிறைய பேர் ஒத்துப் போகிறோம். அதாவது நீங்கள் வார் அண்ட் பீஸ் புத்தகத்துக்கு 99 மார்க்கும், விஷ்ணுபுரம் புத்தகத்துக்கு 93 மார்க்கும் போடலாம். எனக்கு விஷ்ணுபுரத்துக்கு 99 மார்க், வார் அண்ட் பீசுக்கு 91 மார்க் என்று தோன்றலாம். ஆனால் A க்ரேட் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் இருவருமே அந்த இரண்டு புத்தகங்களையும் சிபாரிசு செய்வோம். இதை பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்வார்கள். அதாவது இது சிறந்த புத்தகங்கள் க்ரூப், இது அடுத்த லெவல், இது அதற்கும் அடுத்த லெவல் என்று தரவரிசைப்படுத்தும்போது பலரும் ஒரு இசைவுக்கு வருகிறார்கள். அதை வைத்து நீங்கள் அடுத்தபடி என்ன புத்தகம் படிக்கலாம் என்று தீர்மானிப்பது எளிது.

இரண்டாவதாக புத்தக அறிமுகம். என் இலக்கியத் தேடல் என்பது ஆங்கிலப் புத்தகங்களில்தான் ஆரம்பித்தது. ஒரு இருபது வயது வரைக்கும் தமிழில் இலக்கியம் என்றால் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஒத்த பதித்துப்பற்று, ஓங்கு பரிபாடல் என்றுதான் எனக்கு சொல்லப்பட்டிருந்தது. எனக்கு பொதுவாக கவிதை என்றால் அலர்ஜி. அதனால் நான் ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் நகர்ந்துவிட்டேன். க.நா. சுப்ரமணியத்தின் படித்திருக்கிறீர்களா? புத்தகம்தான் எனக்கு சுஜாதா, சாண்டில்யன் தாண்டியும் தமிழில் ஒரு புனைகதை உலகம் இருக்கிறது என்று காட்டியது. அதில் சொல்லப்பட்ட சில புத்தகங்கள் இன்னும் கூட கிடைக்கவில்லை. அதற்கப்புறம் ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட் உதவியாக இருந்தது. தெரியாத குறைதான் தமிழின் “சீரிய” புனைகதை உலகை எல்லாராலும் அணுக முடியாததற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். பாலகுமாரனை விரும்பிப் படிப்பவர்களுக்கு தி.ஜானகிராமன், கு.ப.ரா. போன்றவர்கள் உலகத்துக்கு சுலபமாக போக முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அப்படி ஒரு உலகம் இருக்கிறது என்று தெரிந்தால்தானே போக முடியும்? என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் – கிராமங்களில் வளர்ந்த, இருபது வயதில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியவன் நான். கணையாழி என்று ஒரு பத்திரிகை இருப்பதே எனக்கு ஒரு இருபது வயது வாக்கில்தான் தெரியும். சுபமங்களா என்று ஒரு பத்திரிகை வராவிட்டால், அது ஹைதராபாத்தில் கிடைக்காவிட்டால், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஹைதராபாத்தில் புத்தக கண்காட்சிகள் நடத்தாவிட்டால் எனக்கு தமிழின் “சீரிய” புனைகதை உலகைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் பத்து வருஷம் ஆகி இருக்கும். இந்த இணைய யுகத்திலும் என் போன்று இன்னும் கொஞ்சம் பேராவது இருக்கமாட்டார்களா? அவர்களுக்குத்தான் இந்த புத்தக அறிமுகங்கள், விமர்சனங்கள் உதவியாக இருக்கும்.

மூன்றாவதாக ஒரு காரணமும் உண்டு. ஒத்த ரசனை உள்ளவர்களை கண்டுபிடிக்கத்தான்! புத்தகங்களைப் பற்றி பேசுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அந்த மகிழ்ச்சி ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ளவர்களிடம் பேசும்போது இன்னும் அதிகமாகிறது. மார்க் போட்டால் கூட ஓரளவு ஒத்துப் போகிறது. அப்படி யாராவது கிடைத்தால் விடாதீர்கள்! உங்களுக்கு அவரும் அவருக்கு நீங்களும் செய்யும் சிபாரிசுகள் அனேகமாக ஒர்க் அவுட் ஆகும்!

சுருக்கமாக சொன்னால் (இதை முதலிலேயே சொல்லி இருக்கலாம்!) என் ரசனையை நேர்மையாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்பதுதான் என் மெதடாலாஜி. எனக்கு டால்ஸ்டாயை விட ரமணி சந்திரன்தான் பிடித்திருக்கிறது என்றால் அதை அடுத்தவர் நம்மை தாழ்வாக நினைப்பாரோ என்று அஞ்சாமல் சொல்ல வேண்டும். அது ஒன்றே உங்களுக்கு ஒத்த ரசனை உள்ளவர்களை காட்டும்; உங்கள் சிபாரிசுகளை அர்த்தமுள்ளதாக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்டிக்கி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?