ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர II

முதல் பகுதியில் ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர நாவலைப் பற்றி என் கருத்தை – பாத்திரப் படைப்பும், இலட்சியவாதமும் இந்த நாவலை உயர்த்துகின்றன – என்று சொல்லி இருந்தேன். இப்போது பிறர் இந்த நாவலைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று.

நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய விமர்சகர் ஜெயமோகன். அவர் இந்த புத்தகத்தைப் பற்றி சொல்வது (திண்ணை தளத்தில் ஜெயகாந்தன் பற்றி அவர் எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்தது)

ஜெயகாந்தன் அதீத உணர்ச்சி வேகத்துடன் கருத்துக்களை எதிர்கொண்டதன் விபரீதமான விளைவு என நான் கருதுவது ‘ஜயஜய சங்கர‘ என்ற குறுநாவலை. சங்கர அத்வைதத்தின் உச்சகட்ட ஒருமைத் தரிசனத்திலும், அதில் உள்ளடங்கியுள்ள சமத்துவ அடிப்படையிலும் ஜெயகாந்தன் உத்வேகம் கொண்டது அவரது இயல்புக்கு ஏற்றதே. விவேகானந்தரிலும் நாராயண குருவிலும் செயல்பட்டது அந்த அத்வைதமே. அதை பண்டைய இந்திய முற்போக்கு தரிசனங்களில் முக்கியமானதென்றே இ.எம்.எஸ் போன்ற மார்க்ஸிய விமரிசகர்களும் கருதுகிறார்கள் என்று கண்டோம். ஆனால் ஜெயகாந்தன் அதை சங்கர மடங்களின் பழைமை வாதத்தில், சடங்கு வாதத்தில் அடையாளம் கண்டுகொண்டது பெரும் பிழை.

இது விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. விவேகானந்தரும் நாராயண குருவும் சங்கர மடங்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அவர்கள் முன் வைத்த கருத்தியல் மாற்றங்களுக்கு எதிரான பெரும் சக்தியாகவே அவர்கள் உயிர் வாழ்ந்தபோதும், இன்று வரையிலும் சங்கர மடங்கள் இருந்து வந்துள்ளன. ஒருமைக்கு எதிராக பன்மையை, தூய அறிவுக்கு எதிராக சடங்குகளை, சமத்துவத்துக்கு எதிராக சாதியத்தை முன் வைக்கும் சங்கர மடங்களின் கருத்தியல் அத்வைதத்துக்கு நேர் எதிரானது. இந்தியாவின் அனைத்து பிற்போக்கு எண்ணங்களும் உறைந்து கூடிய பழைமை வாத மையம் அது. தன் எழுத்துக் காலம் முழுக்க ஜெயகாந்தன் எதை எதிர்த்து வந்தாரோ அதன் குறியீடு. ஓங்கூர் சாமிக்கு சங்கர மடத்தில் என்ன இடமிருக்க முடியும்? ஓங்கூர் சாமி எதையெல்லாம் விட்டு விலகினாரோ அதையெல்லாம் குவித்து செய்யப்பட்டதல்லவா அது? அங்கே ஜெயகாந்தனுக்கு என்ன இடம் ?

வெறும் உணர்ச்சிப் பாய்ச்சலினால் சங்கர மடத்தை அத்வைத விளைநிலமாக உருவகித்து ‘ஜயஜய சங்கர ‘ குறுநாவலை ஜெயகாந்தன் எழுதினார். அதில் அவரது புனைவின் திறன் முழுக்க குவிந்தமையினால் அசாதாரணமான இலட்சியவாதக் களமாக, வாசக மனதை கவர்வதாகவே அது அமைந்துள்ளது. ஆனால் அக்கதையின் உள்ளார்ந்த ஓட்டை ஜெயகாந்தனுக்கே உள்ளூரத் தெரியும் என்ற எண்ணம் ஏறபடுகிறது. தன் இலட்சிய வாதக் கதாபாத்திரங்கள் அனைத்தையுமே அக்களத்தில் குவித்து அதற்கு மேலும் வலுவேற்ற அவர் செய்த முயற்சியின் விளைவே அதை ஒரு நாவலாக வளர்த்தெடுத்தது. ஜெயகாந்தனின் புனைகதை உலகில் பிராமணிீயம் சார்ந்த ஒரு மோகம் எப்போதுமே உள்ளது. அவரால் வைதீக தரிசன மரபின் கவித்துவத்தையும் புரோகித மரபின் லெளகீகச் சிறுமையையும் கரணிய ரீதியாக பிரித்தறிய முடியவில்லை. ‘அசதோமா சத் கமய:’ ஆதி கோஷத்தின் கவித்துவத்துக்கும் அதைச் சொல்லி சந்தியாவந்தனம் செய்யும் புரோகிதனின் தொழிலுக்கும் இடையே இரு துருவங்களுக்கு இடையே உள்ள தூரம். பின்னதை நிராகரிக்காமல் முன்னதை அங்கீகரிக்க நம்மால் முடியாது. ஜெயகாந்தன் இப்பிரிவினையை நிகழ்த்திக் கொள்ளவில்லை.

((சிறு விளக்கம் – ஓங்கூர் சாமி ஜெயகாந்தனின் புகழ் பெற்ற விழுதுகள் என்ற ஆக்கத்தில் வரும் ஒரு துறவி.)

ஜெயமோகனின் இந்த விமர்சனம் எனக்கு ஏற்புடையதில்லை. அவர் புத்தகத்தைத் தாண்டி வெளி நிகழ்ச்சிகளுக்கு ஜெயகாந்தனை பொறுப்பாளி ஆக்குகிறார். ஜெயகாந்தன் சந்திரசேகரேந்திர சரஸ்வதியை தன inspiration ஆக வைத்து ஒரு உயர்ந்த துறவியை, ஒரு ஆன்மீக இலட்சியவாதியை உருவாக்குகிறார். எனக்கு அந்த லட்சியவாதிதான் முக்கியம், அது சந்திரசேகரேந்திரரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதா இல்லை சாய்பாபாவை வைத்து உருவாக்கப்பட்டதா என்பதெல்லாம் அனாவசியம். கதையில் வரும் துறவி சடங்கு சம்பிரதாயத்தை மீறாவிட்டாலும் அவை அர்த்தமற்றவை என்பதை உணர்ந்திருக்கிறார். அவர் தான் வணங்கும் கடவுளையே எப்போது தன் சிறு வயது நண்பன் ஆதி – ஒரு தலித் சிறுவன் – வடிவத்தில் பார்ப்பவர். இந்த சடங்கெல்லாம் எதற்காக என்று வெளிப்படையாக அலுத்துக் கொள்பவர். அந்த பாத்திரத்தின் inspiration இப்படிப்பட்டவராகவே இருந்திருக்கலாம். இல்லை இந்த ஜாதி, சடங்கு, சம்பிரதாயத்தை முழு மனதோடு நம்புபவராகவும் இருந்திருக்கலாம். அவர் எப்படி இருந்தால் எனக்கென்ன? பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தின் ராமமூர்த்தியின் inspiration யார் என்பதை வைத்தா புத்தகத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது? இல்லை இப்படி யோசித்துப் பாருங்களேன் – இந்த புத்தகத்தை இந்தியாவுக்கு வெளியே படிப்பவர்களுக்கு சங்கர மடமும் தெரியாது, சந்திரசேகரேந்திரரும் தெரியப் போவதில்லை. அவர்கள் சங்கர மடத்தின் அணுகுமுறையை வைத்துத்தான் இந்த புத்தகத்தின் தரத்தை நிர்ணயிக்க வேண்டுமா?

ஜெயமோகனின் கவலை இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு எந்த விதமான உணர்வைக் கொடுக்கும் என்பதைப் பற்றிதான் என்று நான் நினைக்கிறேன். சங்கர மடம், சந்திரசேகரேந்திரர் ஆகியோர் மீது உள்ள மரியாதை இந்த புத்தகத்தை படித்தால் அதிகரிக்கத்தான் செய்யும். எனக்கு புத்தகம் வந்தபோதும் சரி, அதை மீண்டும் சமீபத்தில் படித்தபோதும் சரி, அப்படித்தான் ஆயிற்று. அதை ஜெயமோகன் விரும்பவில்லை. ஆனால் அது இலக்கியத்தின் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது என்பது என் கருத்து. Birth of a Nation திரைப்படம் இன்றும் கொண்டாடப்படுகிறது. அதற்காக கூ க்ளக்ஸ் கிளான் நல்ல இயக்கம் என்று யாரும் சொல்வதில்லை.

சீதாம்மாவின் குறிப்பேடு என்ற தளத்தில் ஜெயகாந்தனைப் பற்றி தீவிரமான அலசல்களை காணலாம். அவர் ஜய ஜய சங்கர பற்றி அலசி இருப்பதை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். சாதாரணமாக விமர்சனங்கள் (ஜெயமோகன் உட்பட) முதல் பகுதியைத் தாண்டுவதில்லை. முதல் பகுதியில் மட்டும்தான் சுவாமிகளுக்கு பெரிய ரோல். பலருக்கும் அந்த துறவி characterization மட்டுமே பேசுபொருள். உண்மையில் இந்த நாவல் நான்கு பகுதிகள் கொண்டது. படிக்கும்போது மேலும் மேலும் உன்னத மனிதர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். சீதாம்மா எல்லா பகுதிகளையும் பற்றி பேசுகிறார். எனக்கு மகாலிங்க ஐயர் பாத்திரத்துக்கு மதுரை வைத்தியநாத ஐயர்தான் inspiration ஆக இருந்தாரோ என்று தோன்றுவதுண்டு. சீதாம்மா இதை வெளிப்படையாக எழுதாவிட்டாலும் அவருக்கும் அப்படித்தான் தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

9 thoughts on “ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர II

  1. நான் இந்த நாவல் பற்றிய சீதாம்மாவின் பகுதிகளைப் பார்த்தேன். முழுதும் படிக்க முடியலை. படிக்கணும்.

    ஜெ.மோ வைக்கும் விமர்சனங்கள் சில சமயம் எனக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரை, வாசகர்களை விமர்சிக்கலாம். ஆனால் தரம் பிரித்து தனது நிலையில் நின்று கொண்டு ஒரு branding கொடுப்பது சரியாகப் படவில்லை.

    எழுத்தாளர்கள் இப்படித் தான், இதைத் தான் எழுதலாம் என்பது மாதிரி ஒரு வரையறை கொடுப்பது மாதிரி இருக்கு. அதே மாதிரி வாசகர்கள் இதைப் படித்தால் நல்ல வாசகர்கள் இல்லை என்றால் என்பது மாதிரி..

    தனது புரிதல் மட்டுமே உயர்ந்தது என்ற நிலையில் ஒருவர் நின்று கொண்டு மற்றவர்களை விமர்சிக்கத் துவங்கினால் பின் கற்றது கை மண் அளவு என்ற அடிப்படைகளைக் கூட மறந்து போகிறார்கள். பாலகுமாரனை இவர் branding செய்ததும் இந்த வகை தான். நான் என் எண்ணங்களை இங்கே எழுதி இருக்கேன்

    http://wp.me/p12Xc3-Ww

    Like

    1. விருட்சம், // ஆனால் தரம் பிரித்து தனது நிலையில் நின்று கொண்டு ஒரு branding கொடுப்பது சரியாகப் படவில்லை. // எனக்கு புரியவில்லை.

      // தனது புரிதல் மட்டுமே உயர்ந்தது… // ஆனால் தனது புரிதல் மட்டுமே தனக்கு சரியானது இல்லையா? எனக்கு தோன்றுவதை நேர்மையாக வெளியே சொல்ல வேண்டும், அதே நேரத்தில் தனது புரிதல் மட்டுமே உயர்ந்தது என்ற impression வரக்கூடாது என்பதுகொஞ்சம் கஷ்டமான விஷயமாகத்தான் இருக்கிறது.

      விஜி, மறுமொழிக்கு நன்றி!

      Like

  2. நீ புரிந்து கொண்டது தவறு, இப்படி இப்படியான மன நிலை முதிர்ச்சி, முரண்பட்டு இத்யாதி காரணமாக நீ அப்படி நினைக்கிறாய். அப்படி நினைப்பதால் நீ இப்படிப்பட்டவன் என்றெல்லாம் சொல்லாமல் நமக்குப் புரிந்ததை சொல்லுவதோடு நிறுத்திக் கொண்டால் போதுமானது இல்லையா?
    அப்போ அது கஷ்டமும் இல்லை. நேர்மையாகவும் இருக்குமே

    Like

    1. விருட்சம், அது எனக்கு கஷ்டமாகத்தான் தெரிகிறது. தன்னடக்கம் vs நேர்மை என்ற சூழ்நிலை வந்தால் நான் நேர்மையையே விரும்புகிறேன்.

      Like

  3. இதுக்கு பெயர் தன்னடக்கமா?

    தன்னடக்கமும் நேர்மையும் எதிர் எதிர் நிலையிலா இருக்கு ?
    இப்போ இந்த விமர்சனத்திலேயே பார்த்தீங்கன்னா, நீங்க உங்களைக் கவர்ந்த விஷயங்களைத் தான் முக்கியமா சொல்லி இருக்கீங்க. எனக்கு இப்படி இப்படி இருப்பதால் ஏற்புடையதாய் இருக்கிறது என்பது மாதிரி தான் சொல்லி இருக்கீங்க. இது ஜெயகாந்தனின் இந்த கதை உங்களை ஏன் கவர்ந்தது என்பதை முதன்மைப் படுத்துகிறது. அது ஜே.மோ வை கவராது ஏன் என்பதை அல்ல.

    இதில் நேர்மை இருக்கு. அடக்கமும் தான் இருக்கு.
    அதே சமயம் ஜெ.மோ வின் விமர்சனம் பார்த்தால் இலக்கியத் தரத்தோடு எழுதப்படும் ஒரு படைப்பு மோகம், காமம் இன்ன பிறவற்றை வாசகனுக்கு தந்து விடுதலில் அவருக்கு சங்கடம் இல்லை. அனால் இலக்கிய தரத்தோடு சங்கர மடத்தை முன்னிறுத்தி விடுவதில் அவருக்கு நிறைய சங்கடங்கள். அதே மாதிரி ஆன்மிக விஷயத்தில் அவருக்கு எது ஏற்புடையதாய் இல்லையோ அதை இலக்கியமாகவோ இல்லாமலோ யாரும் சொல்லி விடுதலில் அவருக்கு உடன்பாடு இல்லை. இது முரண்பட்டு இல்லையா?
    இலக்கியத் தரம் முக்கியம் சொல்லப்படுவது எதுவானாலும் என்று ஒரு பக்கமும் அதற்கு நேர்மாறாக இன்னொரு பக்கமும் சொல்லுவது முரண் இல்லையா?
    இதை தான் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் அவர் ஒரு வரையறை கொடுக்கிறார். அதில் மாற்றம் இருந்தால் branding செய்கிறார் என்றேன்.

    Like

    1. விருட்சம்,

      // நீங்க உங்களைக் கவர்ந்த விஷயங்களைத் தான் முக்கியமா சொல்லி இருக்கீங்க. எனக்கு இப்படி இப்படி இருப்பதால் ஏற்புடையதாய் இருக்கிறது என்பது மாதிரி தான் சொல்லி இருக்கீங்க. // சில இடங்களில் கவராத விஷயங்களையும், இப்படி இப்படி இருப்பதால் எனக்கு ஏற்புடையதில்லை என்றும் சொல்லி இருக்கிறேன். 🙂

      // இலக்கியத் தரத்தோடு எழுதப்படும் ஒரு படைப்பு மோகம், காமம் இன்ன பிறவற்றை வாசகனுக்கு தந்து விடுதலில் அவருக்கு சங்கடம் இல்லை. அனால் இலக்கிய தரத்தோடு சங்கர மடத்தை முன்னிறுத்தி விடுவதில் அவருக்கு நிறைய சங்கடங்கள். அதே மாதிரி ஆன்மிக விஷயத்தில் அவருக்கு எது ஏற்புடையதாய் இல்லையோ அதை இலக்கியமாகவோ இல்லாமலோ யாரும் சொல்லி விடுதலில் அவருக்கு உடன்பாடு இல்லை. //
      காமம் இருப்பதால் ஒரு படைப்பு நிராகரிக்க வேண்டியது இல்லை என்று நானும் அவரைப் போலத்தான் நினைக்கிறேன். சங்கர மடத்தைப் பற்றி என் கருத்து உங்களோடு உடன்படுகிறது.

      Like

  4. எனக்குத் தான் உங்களுக்கு புரியற மாதிரி எழுதத் தெரியலியோ என்னமோ

    விமர்சனம் என்று வந்தால் கவர்ந்தது கவராதது எல்லாம் தானே சொல்லி ஆகணும்.
    எதை சொல்லுவதாக இருந்தாலும் விமர்சனம் படைப்பின் மீது தானே வைக்கப் பட வேண்டும். படைப்பாளியின் மீது அல்லவே.

    //ஜெயமோகனின் கவலை இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு எந்த விதமான உணர்வைக் கொடுக்கும் என்பதைப் பற்றிதான் என்று நான் நினைக்கிறேன்.//

    இதை நான் முழுவது ஏற்கிறேன். வாசிப்பவன் இதைப் படித்து influence ஆகிவிடுவானோ என்று கவலை. அப்போ சீரிய இலக்கியங்கள் மனித மன வக்கிரங்களோடு பயணித்து பல சமயங்களில் அதற்கு அந்த கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து நியாயமும் தந்து விடுகிறது. ஆனால் இலக்கிய தரம் இருந்தால் இது சரி ஆகி விடும் என்றால் இவருக்கு ஏற்பிலாத ஆன்மிக விஷயத்தை மட்டும் ஒருவர் தன படைப்பின் மூலம் வெளிப்படுத்தி விடுவது தவறாகுமா? ஆன்மிகமோ இல்லை வேறு எதுவானாலும் ஜெ.மோ வை பொறுத்த வரை இவருக்கு ஏற்புடையது இல்லாத அல்லது அந்த படைப்பாளியின் சுபாவத்துக்குப் பொருந்தாத விஷயங்களைப் படைப்பது பற்றி ரொம்ப கவலைப் படுகிறார்.

    அதனால தான் சொன்னேன் எழுதாளனுக்க் என்ன சுதந்திரமான கருத்துக்கள் இருக்கலாம் சொல்லலாம் அதுவும் அதை எப்படி எப்படி சொல்லாலாம் சீரிய இலக்கியமா சொல்லலாமா வணிக இலக்கியமா சொல்லலாமா என்பதற்கு இவர் அளவுகோல் வைக்கிறார். வாசிக்கும் வாசகனுக்கு அதை வைத்து ஒரு தரம் நிர்ணயிக்கிறார்.

    Like

    1. விருட்சம், இப்படி பிட்டு பிட்டாக வாதிடுவதை விட ஒரு நாள் பதிவாக எழுதுகிறேன், பிறகு பேசினால் பெட்டராக இருக்குமோ என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

      Like

  5. பாலகுமாரன் குறித்த பதிவுக்கு நீங்க இட்ட பின்னூட்டத்தை இப்போ தான் பார்த்து பதில் பின்னூட்டம் எழுதினேன் . எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியலை.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.