ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – திரைப்படம்

சாரதாவின் விமர்சனத்தை இங்கே அவார்டா கொடுக்கறாங்க தளத்திலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறேன். அந்த தளத்திலேயே அது மீள்பதிவுதான். என்னவோ இங்கேயும் பதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி, சாரதா!

இந்த படம் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. சாரதாவின் விமர்சனத்தை படிக்கும்போது இன்னும் ஆவலாக இருக்கிறது. கோகுல் போன்றவர்கள் பயமுறுத்தினாலும் பிரின்ட் இருக்கும் என்று நினைக்கிறேன்…

ஓவர் டு சாரதா!

ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன்+பீம்சிங்+எம்எஸ்வி+ஸ்ரீகாந்த்+லட்சுமி) மீண்டும் ஒரு கறுப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. ‘பா’வன்னா பிரியரான அவரது இறுதிப் படம் ‘பாதபூஜை’ என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்‘ என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச் சொல்கிறது என்பது படம் பார்க்கும்போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.

நாடகக்குழு நடத்தும் அண்ணாசாமியின் (ஒய்.ஜி.பார்த்தசாரதி) நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக் குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப, குழம்பிப் போகும் ரங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரங்கா அவள் வீட்டுக்குப் போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்க, ‘ஐந்து வயதில் ஒரே பெண் குழந்தை’யென ரங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறு நாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப் பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

ஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப் போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊறியவர்கள். அதுபோல ரங்காவின் மறுமணம், ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரங்காவின் கொழுந்தியாளுக்கும் பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரங்காவிடம் தர மறுத்து அனுப்பி விடுகின்றனர்.

ஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று தன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டு வீட்டில் குடி வைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதைவிட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு? சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலை தூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக் கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச் செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு…

கண்ணுக்கு அழகான ரோஜாச் செடியல்ல மனிதனின் தேவை, அதை விட பசியைப் போக்கும் காய்கறிச் செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக் கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப் போய்விடுகிறான். சண்டைபோட்டுக் கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக் கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காதது போல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.

இடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப் போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற் குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக் கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.

இதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனது கேட்காத அண்ணாசாமி, ரங்காவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக் காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக் காண வரும் வக்கீல் நாகேஷ் ரங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல, ரங்கா வெகுண்டெழுகிறான்.

‘என்ன சார் உங்க சட்டம்? இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழ முடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு உடலில் குறை வந்த பிறகு அந்தக் குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்குமிடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது. அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடக மேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டது போல அவள் உணர்ந்து மகிழ்வது போல படம் நிறைவடைகிறது.

ஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலை காட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்தமாக படத்தை மிக அருமையாகக் கொண்டு சென்றிருப்பதன் மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப் படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத் தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண் முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனை பேரும்.

ஒவ்வொருவருடைய நடிப்பைப் பற்றியும் தனித் தனியாகச் சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்… சான்ஸே இல்லை. பிரமாதமாக நடிக்கவில்லை. மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.

வசனங்கள் எல்லாம் வாள் பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளையெல்லாம் மீறி, படம் எங்கோ உயரத்துக்குப் போய்விடுகிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த்-லட்சுமி ரெஜிஸ்டர் திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் ‘எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள் திருமணங்கள்‘ (டிஎம்எஸ்+வாணி ஜெயராம் ) மற்றும், படத்தின் நிறைவுப் பகுதியில் ஜாலி ஆப்ரஹாம் பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்‘ ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.

படத்தின் தொண்ணூறு சதவீத கதைக் களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும் கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்த போதிலும் போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.

பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத் தூண்டும் படம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படமான எழுத்துக்கள்

தொடர்புடைய பதிவுகள்:
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – நாவல்
சில நேரங்களில் சில மனிதர்கள் – பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்