அனுராதா ரமணன்

ஜெயகாந்தனைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருந்தாலும், வாரப் பத்திரிகையில் எழுதி புகழ் பெற்றவர்களைப் பற்றி கொஞ்ச நாளைக்கு ட்ராக்கை மாற்றப் போகிறேன்.

அனுராதா ரமணன் ஓரளவு பாப்புலரான, குறிப்பாக பெண்களிடம் பாப்புலரான எழுத்தாளர். சில மாதங்களுக்கு முன் அவரது மறைவு செய்தியை படித்தபோது அவருக்கு ஆபிச்சுவரி எழுத வேண்டுமென்று நினைத்தேன். என்னைப் பொறுத்த வரையில் ஒரு எழுத்தாளருக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி பேசுவதுதான். ஆனால் அனுராதா ரமணனை வாரப்பத்திரிகைகளில் இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஏதோ போகிற போக்கில் படித்ததுதான். எதுவும் சரியாக நினைவில்லை. அவரது புத்தகங்களை கொஞ்சமாவது படித்த பின்தான் அஞ்சலி என்று ஒன்று எழுதுவது என்று நினைத்திருந்தேன். என் அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சில புத்தகங்களும் கிடைத்தன.

அ. ரமணன் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, ரமணி சந்திரன் என்று பெண்களுக்காக பெண் எழுத்தாளர்கள் எழுதும் ஒரு நீண்ட பாரம்பரியத்தை சேர்ந்தவர். பொதுவாக இந்த மாதிரி எழுத்தாளர்களை நான் படிக்க விரும்புவதில்லை. 🙂 லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி ஆகியோரைத்தான் ஓரளவாவது படித்திருக்கிறேன். லக்ஷ்மியின் கதைகள் எல்லாம் பத்து பனிரண்டு வயதிலேயே அலுத்துவிட்டன. இந்துமதியின் எல்லா கதைகளிலும் வரும் வெள்ளை வெளேர், உயரமான, ரிம் இல்லாத கண்ணாடி ஹீரோவாக என்னை நினைத்துக் கொள்ள டீனேஜ் பருவத்தில் பிடித்திருந்தது. ஆனால் நானோ கறுப்பு, குள்ளம், டீனேஜில் கண்ணாடி தேவை இல்லை. எத்தனை நாள்தான் இந்த கனவை காணமுடியும்? தரையில் இறங்கும் விமானங்கள் என்ற ஒரு நாவல் மட்டும் மிகவும் பிடித்திருந்தது. வாசந்தியின் எல்லா நாவல்களிலும் ஓ என்று யாராவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கொஞ்ச நாளில் வாஸந்தி என்றால் “ஓ!” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட ஆரம்பித்தேன். அவர் மிஜோரத்தின் பின்னணியில் எழுதிய ஒரு கதை மட்டும் இன்னும் நினைவிருக்கிறது, நன்றாகவும் இருந்தது. பேர் நினைவு வரவில்லை. சிவசங்கரி என்றால் அப்போதே ஒரு aversion. சிவசங்கரியை விழுந்து விழுந்து படிக்கும் அக்கம்பக்கத்து பெண்களிடம் ஜொள்ளு விட மட்டுமே படித்தேன். அதுவும் விகடனில் ஒரு தொடர்கதை வந்தது. அதில் அருண் என்று “ரொம்ப நல்லவரு” ஒருவன் வருவான். இவன் காதலிக்கும் பெண்ணை இவன் உயிர் நண்பன் மணந்துகொள்வான். முன்னாள் காதலிக்கும் உயிர் நண்பனுக்கும் உதவி செய்துகொண்டே போவான். அவனை எங்காவது பார்த்தால் இரண்டு அறை விடவேண்டும் போல இருக்கும். ஆனால் அவனைத்தான் இந்த பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்ன செய்வது? இப்படி இந்த “பெண்” எழுத்தாளர்கள் வெறுத்துப் போய்க்கொண்டிருந்த காலத்தில்தான் அ. ரமணன் பிரபலமாகத் தொடங்கினார். அதனாலேயோ என்னவோதான் அவரை படிப்பதில் ஒரு ஆர்வமே ஏற்படவில்லை. ஆனால் இப்போது கூட படிக்காவிட்டால் எப்போதுமே படிக்கப் போவதில்லை. இந்தப் பதிவை எழுதவாவது அவரது நாலைந்து புத்தகங்களை படிக்க வேண்டுமே!

அனுராதா ரமணனின் “சிறை” அவரை புகழ் பெற வைத்தது. சிறை லக்ஷ்மி, ராஜேஷ் நடித்து பெரிய ஹிட்டான திரைப்படம். சினிமாவாக பார்த்ததால் கதை ஓரளவு நினைவிருக்கிறது. சினிமாவுக்கு எங்களை வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போன ஸ்ரீதரை நாங்கள் எல்லாரும் அழுமூஞ்சி படத்துக்கு கூட்டிக் கொண்டு வந்தாயே என்று திட்டியதும் நினைவிருக்கிறது. ஆச்சாரமான பிராமண மனைவியை ஊர் ரவுடி கற்பழித்துவிடுகிறான். கணவன் கைவிட்டுவிடுகிறான். போக்கிடம் தெரியாமல் அந்த ரவுடியின் வீட்டுக்கு போய் அவனுடனேயே தங்குகிறாள். ரவுடிக்கு குற்ற உணர்வு, அவளுக்கு பாதுகாப்பாக (மட்டும்) இருக்கிறான். வருஷங்கள் போய் ரவுடியும் இறந்த பிறகு கணவன் மீண்டும் தன்னுடன் வாழ அழைக்க மனைவி மறுத்துவிடுகிறாள்.

அ. ரமணனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கணவனை இழந்தவர், இரண்டு குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்தார், பெண்கள் வயதாகிவிட்டது என்று தன் தோற்றத்தில் அக்கறை இல்லாமல் இருக்கக் கூடாது என்று சொல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெயேந்திரர் தன்னுடன் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அது உண்மையோ, பொய்யோ, ஜெயேந்திரரின் இமேஜ் கெட்டதற்கு, நெருப்பில்லாமல் புகையாது என்று பலரும் நினைப்பதற்கு இவரும் ஒரு காரணம்.

விகடன் உதவி ஆசிரியர் ரவி பிரகாஷ் அவரை நன்கு அறிந்தவர் போலத் தெரிகிறது. அவரது அஞ்சலி இங்கே.

சில புத்தகங்களும், அவற்றைப் பற்றிய என் சிறு விமர்சனங்களும்:

முதல் காதல்: இதுதான் பெஸ்ட். கொஞ்சம் செயற்கையான மெலோட்ராமாதான். ஆனால் மெலோட்ராமாவைத் தாண்டி ஏதோ இருக்கிறது. ஆச்சாரமான சங்கீதக் குடும்பத்தில் பிறக்கும் ஹரி தன் வீட்டு “புழக்கடையை” சுத்தம் செய்யும் தோட்டிப் பெண் சின்னியின் சங்கீத ஞானத்தை கண்டு வியக்கிறான். அவளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறான். விஷயம் தெரிந்த ஆசாரசீலரான அப்பா அவனை அடிக்கிறார். சின்னியின் இசை முயற்சி அதோடு நின்றுவிடுகிறது. ஆனால் ஹரியின் பரம ரசிகையாக இருக்கிறாள். கடைசியில் இறந்தும் போகிறாள். ஹரியால் வருத்தப்படுவதைத் தவிர ப்ராக்டிகலாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் இறந்த நாளில் வருஷா வருஷம் அஞ்சலி செலுத்துகிறான்.

இன்னமும் படிக்கலாம்: வழக்கம் போல செயற்கையான சம்பவங்கள். ஆனால் படித்ததில் கொஞ்சம் சுமாரான நாவல். இரண்டு நண்பர்கள். ஒருவன் வீட்டுக்கு தெரியாமல் ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று நண்பனை மனைவுக்கு காவல் வைத்துவிட்டு ஊருக்குப் போகிறான். அங்கே அவனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. இவன் நழுவ முடியாமல் பேசாமல் இருக்கிறான். இதில் காவல்கார நண்பனுக்கு காதல் என்று கதை போகிறது.

ரகசிய ராகங்கள்: அவரது “பத்தினிக்கு இன்னல் வரும்” ஃபார்முலாவிளிருந்து கொஞ்சம் தள்ளி வந்திருக்கிறார். வாழ்ந்து கெட்ட குடும்பம். சின்னத் தங்கைக்காக கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் இரண்டு அக்காக்கள். தங்கை பெரியவளாகி அக்காக்களை அவர்கள் விரும்புபவர்களோடு சேர்த்து வைக்கிறாள். டைம் பாஸ்.

ஓவியம்: மிராசுதார் மகன் நந்து இன்பாவை விரும்புகிறான். திருமணத்துக்கு முன் இன்பா மிராசுதார் வீட்டுக்கு வந்து சில நாள் தங்குகிறாள். அங்கே மிராசுதாரின் “ஓடிப் போன” முதல் மனைவியின் ஆவி, அந்த முதல் மனைவியின் மரணம் பற்றிய ரகசியம் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறாள். தவிர்க்கலாம்.

புருஷ சிகாமணிகள்: புருஷனைக் குறை சொல்லும் பெண்டாட்டிகள். வேஸ்ட்.

கனவு பிரதேசங்கள்: கல்லூரி மாணவிகளுக்கு போதை மருந்து பழகிக் கொடுத்து பணக்கார இளைஞர்களிடம் கூட்டிக் கொடுக்கும் ஒரு பெண். வேஸ்ட்.

சொந்தமென்று நீ இருந்தால்: சின்னப் பெண்ணை பார்த்து ஒரு டாக்டர் ஆசைப்படுகிறார். ஜாதி வேறுபாட்டால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். கல்யாணம் ஆனா பிறகு குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் டாக்டரை அந்த பெண் தன கணவனோடு பார்க்கிறாள். நல்ல கணவனும் டாக்டரை அவர் வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறான். கணவன், மனைவி, டாக்டருக்குள் நல்ல நட்பு உருவாகிறது. கணவன் குடும்பம் இந்த நட்பை தவறாக பேச டாக்டரை வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். டாக்டர் இன்னும் குடிக்க ஆரம்பிக்கிறார். வேஸ்ட்.

நாளைக்கு நேரமில்லை: இன்னும் ஒரு தண்டம். கேடு கெட்ட கணவன், உத்தம பத்தினி. இருவரையும் அவர்கள் வளர்ப்பு மகள் இணைக்கிறாள்.

தொட்டதெல்லாம் பெண்: பக்கத்து வீட்டு நர்மதா-செல்வம் காதல். இதில் அனந்து என்ற ஆன்மீகவாதி நுழைந்து நர்மதாவை அடையப் பார்க்கிறார். நர்மதாவின் முறைப்பையன் ராஜாராமன், அனந்துவின் தம்பி மனைவி ருக்கு என்று பாத்திரங்கள். வேஸ்ட்.

தென்றலே ஓடி வா: தன் சுயநலக் குடும்பத்துக்காக உழைக்கும் பெண். மனைவியால் உதாசீனப்படுத்தப்படும் மேலதிகாரியை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறாள். முதல் மனைவி பயந்துபோய் “திருந்திவிடுகிறாள்”. இவள் அம்போ! வேஸ்ட்.

காதல் கைதி: கல்யாணத்துக்கு முன் புருஷன் ஸ்திரீலோலன் என்று தெரிந்ததும் மனைவி டைவர்ஸ் செய்துவிடுகிறாள். கணவன் தான் திருந்திவிட்டேன் என்று எத்தனை சொன்னாலும் கேட்கவில்லை. எட்டு வருஷம் கழித்து தற்செயலாக சந்திக்கும்போது உறவு கொண்டு பிள்ளையும் உண்டாகிறாள். இன்று தான் திருந்திவிட்டேன் என்று சொன்னதை கேட்பவள் அன்று ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு அ. ரமணனின் கதை உலகம் இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். அப்புறம் புருஷன் பழி வாங்க, பெண்டாட்டி பழி வாங்க என்று கதை போகிறது. வேஸ்ட்.

கனவுக் கணவன்: பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலாதான். இந்த முறை இன்னல் NRI கணவன் மூலம் வருகிறது. வேஸ்ட்.

மதிப்பீடு:

புத்தகங்களைப் படித்த பிறகு இதுதான் தோன்றுகிறது. பாரதிதாசன் ஒரு கவிதையில் அன்றைய தமிழ் சினிமாவை இப்படி விவரித்திருப்பார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்“. அ. ரமணன் இந்த ஒன் லைனர் நமக்கு கதை எழுதப் போதும், ஆனால் எதற்கு இவ்வளவு நீளக் கதை என்று அதில் “பத்தினிக்கு இன்னல் வரும்” என்பதை மட்டும் தன் ஸ்டாண்டர்ட் ஃபார்முலாவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் பத்தினி மட்டும் எதற்கு, கல்யாணம் ஆன, ஆகாத பெண்கள் எல்லாருக்கும் இன்னல் வரும் என்று தன் ஃபார்முலாவை கொஞ்சம் தாண்டியும் இருக்கிறார். எல்லாவற்றிலும் ஒரே கதைதான் – ஒரு பெண், அவளை எல்லாரும் தெரிந்தோ தெரியாமலோ கொடுமைப்படுத்துவார்கள், சில சமயம் தீரும், பல சமயம் தீராது. எனக்கு நான் படித்தவற்றில் ஒரு கதை கூட தேறவில்லை. இதற்கு மேல் படிப்பதாகவும் இல்லை. (“கூட்டுப் புழுக்கள்” என்று ஒரு தொடர்கதையில் சில பகுதிகள் என்னை இம்ப்ரஸ் செய்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலும், சிறை சிறுகதையும் கிடைத்தால் படிப்பேன் என்று நினைக்கிறேன்.)

அ. ரமணனின் பலம் அவரது சுலபமான, சரளமான நடை. பிராமணக் குடும்ப பின்புலங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன. அவர் தன் ஃபார்முலாவை விட்டு வெளியே வந்திருந்தால் இந்த நடை அவரை கொஞ்சம் மேலே கொண்டு போயிருக்கலாம்.

ஒரு வாசகன் என்ற முறையில் அ. ரமணனை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். ஆனால் ஒரு (ஆரம்ப நிலை) எழுத்தாளன் என்ற நிலையில் அவரது output என்னை வியக்கவைக்கிறது. எனக்கு நாலு பக்கம் எழுதவே ததிங்கிணத்தோம், இவர் நாற்பதாயிரம் பக்கம் எழுதி இருப்பார் போலிருக்கிறது! இப்படி எழுத திறமை வேண்டும். இந்த திறமை வீணாகப் போனது வருந்த வைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்