ஒரு காலத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் வாரப் பத்திரிகைகளில் பெரிய ஹிட். பொதுவாக காதலை, ஆண்-பெண் உறவை வைத்து தொடர்கதை எழுதுவார். ஆண் எப்போதும் கொஞ்சம் கெத்தாக, திமிராக இருப்பான். அதே நேரத்தில் உண்மையான பிரியத்துக்கு ஏங்குவான். பெண்ணுக்கு அந்த கெத்து பிடித்திருக்கும். கதை அந்த ஆணின் பார்வையில்தான் இருக்கும். அவன் சூரியன், மற்ற எல்லாரும் அவனை சுற்றி வரும் கிரகங்கள், அவ்வளவுதான். இதே framework-ஐ வைத்து நிறைய எழுதினார். அவர் எழுதிய எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கியம் இல்லை. ஆனால் வாரப் பத்திரிகை தொடர்கதைகளை விட பல சமயம் பெட்டர் ஆக இருக்கும். ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கதை homosexuality பற்றி. இலைமறை காய் விஷயம் எல்லாம் இல்லை, நேரடியாக எழுதி இருந்தார். கமர்ஷியல் பத்திரிகைகளில் அப்படி ஒரு கதை வந்தது அப்போது ஷாக்கிங் ஆக இருந்தது.
அவருடைய புத்தகங்கள் நாலைந்து சமீபத்தில் கிடைத்தன. அவற்றைப் பற்றி:
அது ஒரு நிலாக்காலம்: இதுதான் ஸ்டெல்லா ப்ரூசின் மிகப் பிரபலமான நாவல் என்று நினைக்கிறேன். விகடனில் தொடர்கதையாக வந்தபோது பலரும் – குறிப்பாக பெண்கள் – விரும்பிப் படித்தார்கள். அதே பந்தா காட்டும் ஆண், அதே பந்தாவால் கவரப்படும் பெண் என்று போகும். ஆனால் ராம்குமார், சுகந்தா ஜோடி சுவாரசியமான ஒன்றுதான்.
ஜெயமோகன் தமிழின் சிறந்த 50 சமூக ரொமான்ஸ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார். (ரொமான்ஸ் நாவலுக்கான அவர் வரையறை: கறாரான இலக்கணப்படி இவை நாவல்கள் அல்ல, மிகு கற்பனை அல்லது உணர்ச்சிக் கற்பனை படைப்புகள்.)
காதல் சிகரங்கள்: சிறுகதைத் தொகுப்பு. “காதல் சிகரங்கள்” கதை “அது ஒரு நிலாக்காலம்” ராம்குமார்-சுகந்தா பற்றி. “ஒரே ஒரு வித்தியாசம்” கதையில் பக்கத்து வீட்டில் குளிக்கும் பெண்ணை எட்டிப் பார்த்த விடலைப் பையனை விட்டுவிடும்படி அப்பா சொல்கிறார். அவருக்கும் அப்படி ஒரு ஃபிளாஷ்பாக் இருக்கிறது. இந்த மாதிரி கதைதான் என்னால் எழுத முடிகிறது, ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் அளவுக்கு நன்றாக இன்னும் எழுத வரவில்லை. “காணாமல் போகாத குறிப்புகள்“தான் முதல் பாராவில் குறிப்பிட்டிருக்கும் ஓரினச் சேர்க்கை கதை. படித்த காலத்தில் ஓரினச் சேர்க்கைதான் கண்ணில் பட்டது, இன்றுதான் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே தெரிகிறது. “கண்ணம்மா” சிறுகதையில் அப்போதுதான் சந்தித்த பெண்ணை கண்ணம்மா என்று அழைத்துவிடுகிறார் ஹீரோ. அவளுக்கு பொத்துக்கொண்டு வருகிறது. பல வருஷங்களுக்குப் பின் சந்திக்கும்போது அவள் என் கணவர் என்னை கண்ணம்மா என்று கூப்பிட்டதே இல்லை என்று சொல்கிறாள். “பிற்பகல் மூன்று மணி” சிறுகதையில் மனைவிக்கும் நண்பனுக்கு உறவு இருப்பது புரியாமல் ஏமாறும் ஒரு கணவன். “புதிய கல்வெட்டுகள்” சிறுகதையில் புருஷனுக்கு தன் தங்கையை கட்டி வைக்கும் அக்கா – அவளுக்கு தங்கைக்கு தன்னை விட உயர்ந்த இடம் அமைந்துவிடக் கூடாது என்ற பொறாமையால் கணவனை பங்கு போட்டுக் கொள்ள சம்மதிக்கிறாள். மூன்றுமே நல்ல சிறுகதைகள்.
மீண்டும் அந்த ஞாபகங்கள்: அது ஒரு நிலாக் காலத்தின் prequel. ராம்குமாரும் சுகந்தாவும் எப்படி காதலிக்க ஆரம்பித்தார்கள் என்று போகிறது.
சூரியன் மிக அருகில்: அம்மா வேறு ஒருவனோடு ஓடிப் போய்விடுகிறாள். அந்த நினைவிலேயே உழலும் ஒரு வாலிபன். படிக்க வேண்டியதில்லை.
அது வேறு மழைக் காலம்: பணக்கார வீட்டுப் பையன் ஹிந்தி சினிமா ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு பம்பாய்க்கு ஓடிப் போகிறான். அங்கே ஒரு பெண், கெத்து இத்தியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் நடப்பது போல எழுதப்பட்ட புத்தகம். ஹிந்தி சினிமா பற்றி வருபவை சுவையாக இருக்கும்.
கடல் ஆழத்து தாவரங்கள்: தன் சித்தி முறை உள்ள, ஒரே வயதுப் பெண்ணால் கவரப்படும் பையன். டைம் பாஸ்.
ஒரு முறைதான் பூக்கும்: முக்கோணக் காதல், தியாகம் என்று போரடிக்கும் ஒரு குறுநாவல்.
என் வீட்டுப் பூக்கள்: அதே கெத்தான ஆண், பெண். மாற்றம் என்னவென்றால் ஆணின் தாய்க்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. அவளுக்கு சேவை செய்து வாழ்க்கையை கடத்த வேண்டுமா என்று தயங்கி பெண் ஜாதியை காரணமாக காட்டி காதலை முறித்துக் கொள்கிறாள். முறித்த உடனே தாய் அவுட்!
தெருவில் ஒருவன்: சிறுகதை தொகுப்பு. எந்த கதையும் என் மனதில் நிற்கவில்லை.
மூன்றாம் பிறைகள்: சந்துரு காலேஜ் நாட்களில் நந்தாவை சைட் அடிக்கிறான். நந்தா அவனை கண்டுகொள்ளவில்லை. இப்போது நந்தாவின் அக்கா அமுதாவுடன் கல்யாணம் ஆகிறது. அவனுக்கு இன்னும் நந்தாவின் மேல் ஒரு கண். இப்படி நீண்டுகொண்டே போகிறது கதை. டைம் பாஸ் என்று கூட சொல்லமாட்டேன்.
மாய நதிகள்: மனைவியை இழந்த 55 வயதுக்காரர். கிராமத்தில் பெரிய பணக்காரர் அவர்தான். அடுத்தவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். திடீரென்று ஒரு ஏழை, இளம் அழகியை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறார். இதனால் தன்னை எல்லாரும் பொறாமையோடு பார்ப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். ஆனால் அவருக்கு எல்லாரும் மனைவியை சைட் அடிக்கிறார்கள் என்ற உணர்வு உறுத்த ஆரம்பிக்கிறது. அவளை மன ரீதியாக கொடுமைப்படுத்துகிறார். பக்கத்து வீட்டு இளம் பையனுக்கும் அவளுக்கும் உறவு உருவாகிறது. இவருடைய மன அழுத்தம் அதிகரித்து அவன் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கிறார். விஷயம் போலீஸ் வரை போக, இவருக்கு பைத்தியமே பிடித்துவிடுகிறது. சுமாராக இருக்கிறது.
பனங்காட்டு அண்ணாச்சி: சிறு நகரம் ஒன்றில் ஒரு வணிகரின் வாழ்க்கை. என்ன பாயிண்ட் என்றே தெரியவில்லை.
எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, எங்கிருந்தோ ஒரு நிழல் இதையெல்லாம் விவரிப்பது நேர விரயம்.
ஸ்டெல்லா ப்ரூசின் பலம் அறுபது, எழுபதுகளின் நகர்ப்புற இளைஞர் கூட்ட ambience-ஐ ஓரளவு தத்ரூபமாக சித்தரிப்பது. ஐம்பது, அறுபதுகளின் கிராமப்புற, கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களின் வாழ்க்கையை ஒரு சிறுவனின் கண்ணிலிருந்து நல்ல முறையில் சித்தரிப்பது. அவரது பலவீனம் வேறு எதுவும் இல்லாதது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் “அது ஒரு நிலாக்காலம்” படியுங்கள். ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் “காணாமல் போன ஞாபகங்கள்” படியுங்கள். காதல் சிகரங்கள் சிறுகதைத் தொகுதியே ரசிக்கும்படி இருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்