சிறை – விகடனின் திரைப்பட விமர்சனம்

சிறை திரைப்படத்துக்கு விகடன் 56 மார்க் கொடுத்திருக்கிறது. விகடனில் கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். 56 மார்க் என்றால் அவர்கள் அகராதியில் மிக நல்ல படம் என்று பொருள். இன்றைக்கு பார்த்தால் எப்படி இருக்குமோ, ஆனால் அன்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் – குறிப்பாக பெண்கள் பெரிதும் விரும்பிப் பார்த்த திரைப்படம். விகடனுக்கு நன்றி சொல்லி, இந்த விமர்சனத்தை இங்கே பதிக்கிறேன்.

கோவி. திருநாயகன், விருத்தாசலம்-3
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாகீரதி தாலியைக் கழற்றியெறிவது கதைக்குத் தேவையான புரட்சிகரமான கருத்துதான் என்றாலும்கூட, தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணாக உள்ளதை எண்ணும்போது உறுத்துகிறதே?
பாகீரதியின் இந்த முடிவை, அது எடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு முக்கியத்துவம் தந்து, யதார்த்தமான கண்ணோட்டத்தில் அந்தப் பிரச்னையை அணுகினால், உறுத்தல் இருக்காது!

தாலியின் புனிதத்தையோ, அதன் அவசியத்தையோ மறுப்பதோ, மறப்பதோ இங்கு கதாசிரியையின் எண்ணம் அல்ல. ஆனால், மனத்தால்கூடத் தவறிழைக்காத பெண் பாகீரதி. எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் ஒரு கயவனால் அவள் கற்பழிக்கப்பட்டுவிடும்போது, அதை ஜீரணிக்கமுடியாத கணவன், அவளுடன் தொடர்ந்து இல்வாழ்க்கை நடத்த விரும்பாவிட்டாலும், தன்னை நம்பி வந்த அந்த அபலைப் பெண்ணுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுக்க வேண்டியது அவனுடைய கடமையல்லவா? அந்தக் கடமையிலிருந்து நழுவி, அவளைப் பசியோடும் பட்டினியோடும் நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டுக் கோழையாய் ஓடிவிடும் அந்தக் கணவனின் தாலி அவள் கழுத்தில் இருப்பதும் ஒன்றுதான்; இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்!

எஸ்.கே.பாரி, திருச்சி.
பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் நடிகை என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார் லட்சுமி. சரிதானே?
ரொம்ப ரொம்பச் சரி! அப் பாவிப் பெண்ணாகக் கிராமத்தில் வந்து இறங்கும்போது, அருமை மனைவியாகக் கணவனுக்குப் பணிவிடை செய்யும்போது, அவருடன் சிணுங்கிக் கொஞ்சும்போது, எதிர்பாராதவிதமாக அந்தோணியால் கெடுக்கப்படும்போது, வார்த்தைகளால் அவனைச் சித்ரவதை செய்யும்போது, அவன் மரணத்துக்குப் பின் கதறித் துடிக்கும்போது – கற்பனையில் அனுராதாரமணன் கண்ட பாகீரதியைக் கண் முன் நிறுத்தியிருப்பதில் லட்சுமிக்கு 100% வெற்றி! அப்புறம், ராஜேஷை மறந்துவிட்டீர்களே? அந்தோணிசாமியாக அவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்!

எஸ்.சாய் கணேஷ், திருச்சி.
விகடனில் வெளியாகிப் பரிசு பெற்ற சிறுகதை, அதே அழுத்தத்துடன் திரையில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே?
கண்டிப்பாக! விகடனில் வெளியான கதை என்பதற்காக இல்லை. அச்சில் வந்த எந்தக் கதையுமே படமாகும்போது சீர் கெட்டுச் சின்னாபின்னமாவதையே அதிகம் பார்த்திருக்கிறோம்! அதனால்!

இந்தச் சிறுகதையை சினிமா மீடியத்துக்குக் கொண்டு வரும் போது, படிக்கும்போதிருந்த விறுவிறுப்பும் அழுத்தமும் சற்றும் குறையாமல், ஏன், அதைவிட ஒரு படி அதிகமாகவே இருக்கும் அளவுக்குத் திரைக்கதை அமைத்துள்ள டைரக்டர் ஆர்.சி. சக்தியின் திறமைக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் போனஸ் ஐந்து மார்க்கையும் சேர்த்து…

பெரும்பான்மை வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்: லட்சுமியின் நடிப்பு.

பிடிக்காத அம்சம்: அனுராதாவின் கவர்ச்சி நடனம்.

மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபானந்தன் தரும் தகவல்கள்: அனுராதா ரமணன் அவர்களின் சிறை கதையை தெலுங்கில் மொழிபெயர்த்து “Ilanaati Ahalya” என்ற தலைப்பில் ஆந்த்ர ஜ்யோதி என்ற பத்திரிகையில் வெளி வந்து தெலுங்கு வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு மன நிறைவு கொடுத்த படைப்பு. மூல கதையில் உள்ள வாசத்தை மொழிபெயர்ப்பிலும் வாசகர்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய அவா. சிறை சினிமா தெலுங்கில் “Siksha” என்ற தலைப்பில் மறு ஆக்கம்(1985) செய்யப்பட்டுள்ளது. பாகீரதியாக சுகாசினி, அந்தோனியாக சரத்பாபு நடித்துள்ளார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சினிமா ஆன எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்: அனுராதா ரமணன்

6 thoughts on “சிறை – விகடனின் திரைப்பட விமர்சனம்

 1. ‘சிறை’ திரைப்படத்தில் ராஜேஷ், லட்சுமியை நிர்மூலப்படுத்த வரும் காட்சி, மனதில் அப்படியே நிற்கிறது. (கொடூரமான அந்த ரோலுக்கு, ராஜேஷ் பொருத்தமானவர்தானா என்பதில் இன்னமும் எனக்கு ஐயம் உண்டு. ஏனெனில் ராஜேஷ் கரடுமுரடான முகம் கொண்ட மென்மையான மனிதர்).

  கோகுலாஷ்டமி கொண்டாடிய களைப்பிலும், மனநிறைவிலும் லட்சுமி அரைத்தூக்கத்தில் இருக்கிறார். குருக்கள் மாமா (பிரசன்னா) வீட்டில் இல்லை. மதியம் சுமார் இரண்டு மணி. வீடு திறந்து இருக்க கோகுலாஷ்டமிக்கு வரைந்த குழந்தை கிருஷ்ணனின் காலடிகள் கூடமெங்கும் பரவியிருக்க, அதன் பக்கத்தில் ஒருக்களித்து படுத்தபடி அரைத்தூக்கத்தில் கால்களால் தாளம் போட்டபடி குழந்தை முகத்துடன் லட்சுமி பாடலை ரசிக்க, தலைமாட்டில் இருக்கும் ட்ரான்சிஸ்டர் ரேடியோவில் வெண்ணெயாக குழைந்து வரும் எஸ்.பி.பி.யின் குரலில்…
  ‘ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கண்ணயர்ந்து
  மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ….’
  அப்போது குழந்தைக்கண்ணனின் காலடிகளை தன் கால்களால் அழித்தவாறு குடிமயக்கத்துடன் அந்த வீட்டினுள் நுழையும் அந்தோணி….. (இப்போது நினைத்தாலும் அந்த காட்சி சிலிர்க்க வைக்கிறது).

  கிளைமாக்ஸில், லட்சுமி தன் தாலியை கழற்றி வீச அது இறந்துபோன அந்தோணியால் சுவரில் மாட்டிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியில் போய் தொங்கி நிற்பதாக காண்பித்திருப்பார் ஆர்.சி.சக்தி. தனக்கு காவலாக இல்லாத தாலியை கழற்றி அவள் சாக்கடையில் கூட எறிந்திருக்கலாம். தப்பேயில்லை.

  Like

 2. அனுராதா ரமணன் அவர்களின் சிறை கதையை தெலுங்கில் மொழிபெயர்த்து “Ilanaati Ahalya” என்ற தலைப்பில் ஆந்த்ர ஜ்யோதி என்ற பத்திரிகையில் வெளி வந்து தெலுங்கு வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு மன நிறைவு கொடுத்த படைப்பு. மூல கதையில் உள்ள வாசத்தை மொழிபெயர்ப்பிலும் வாசகர்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய அவா.
  சிறை சினிமா தெலுங்கில் “Siksha” என்ற தலைப்பில் ரீமேக் (1985)செய்யப்பட்டுள்ளது. பாகீரதியாக சுகாசினி, ஆந்தோனியாக சரத்பாபு நடித்துள்ளார்கள்


  Gowri Kirubanandan

  Like

  1. அன்புள்ள கௌரி, நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் தந்த தகவல்களையும் இப்போது பதிவில் சேர்த்துவிட்டேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.