ஸ்டெல்லா ப்ரூஸ்

ஒரு காலத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் வாரப் பத்திரிகைகளில் பெரிய ஹிட். பொதுவாக காதலை, ஆண்-பெண் உறவை வைத்து தொடர்கதை எழுதுவார். ஆண் எப்போதும் கொஞ்சம் கெத்தாக, திமிராக இருப்பான். அதே நேரத்தில் உண்மையான பிரியத்துக்கு ஏங்குவான். பெண்ணுக்கு அந்த கெத்து பிடித்திருக்கும். கதை அந்த ஆணின் பார்வையில்தான் இருக்கும். அவன் சூரியன், மற்ற எல்லாரும் அவனை சுற்றி வரும் கிரகங்கள், அவ்வளவுதான். இதே framework-ஐ வைத்து நிறைய எழுதினார். அவர் எழுதிய எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கியம் இல்லை. ஆனால் வாரப் பத்திரிகை தொடர்கதைகளை விட பல சமயம் பெட்டர் ஆக இருக்கும். ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கதை homosexuality பற்றி. இலைமறை காய் விஷயம் எல்லாம் இல்லை, நேரடியாக எழுதி இருந்தார். கமர்ஷியல் பத்திரிகைகளில் அப்படி ஒரு கதை வந்தது அப்போது ஷாக்கிங் ஆக இருந்தது.

அவருடைய புத்தகங்கள் நாலைந்து சமீபத்தில் கிடைத்தன. அவற்றைப் பற்றி:

அது ஒரு நிலாக்காலம்: இதுதான் ஸ்டெல்லா ப்ரூசின் மிகப் பிரபலமான நாவல் என்று நினைக்கிறேன். விகடனில் தொடர்கதையாக வந்தபோது பலரும் – குறிப்பாக பெண்கள் – விரும்பிப் படித்தார்கள். அதே பந்தா காட்டும் ஆண், அதே பந்தாவால் கவரப்படும் பெண் என்று போகும். ஆனால் ராம்குமார், சுகந்தா ஜோடி சுவாரசியமான ஒன்றுதான்.
ஜெயமோகன் தமிழின் சிறந்த 50 சமூக ரொமான்ஸ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார். (ரொமான்ஸ் நாவலுக்கான அவர் வரையறை: கறாரான இலக்கணப்படி இவை நாவல்கள் அல்ல, மிகு கற்பனை அல்லது உணர்ச்சிக் கற்பனை படைப்புகள்.)

காதல் சிகரங்கள்: சிறுகதைத் தொகுப்பு. “காதல் சிகரங்கள்” கதை “அது ஒரு நிலாக்காலம்” ராம்குமார்-சுகந்தா பற்றி. “ஒரே ஒரு வித்தியாசம்” கதையில் பக்கத்து வீட்டில் குளிக்கும் பெண்ணை எட்டிப் பார்த்த விடலைப் பையனை விட்டுவிடும்படி அப்பா சொல்கிறார். அவருக்கும் அப்படி ஒரு ஃபிளாஷ்பாக் இருக்கிறது. இந்த மாதிரி கதைதான் என்னால் எழுத முடிகிறது, ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் அளவுக்கு நன்றாக இன்னும் எழுத வரவில்லை. “காணாமல் போகாத குறிப்புகள்“தான் முதல் பாராவில் குறிப்பிட்டிருக்கும் ஓரினச் சேர்க்கை கதை. படித்த காலத்தில் ஓரினச் சேர்க்கைதான் கண்ணில் பட்டது, இன்றுதான் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே தெரிகிறது. “கண்ணம்மா” சிறுகதையில் அப்போதுதான் சந்தித்த பெண்ணை கண்ணம்மா என்று அழைத்துவிடுகிறார் ஹீரோ. அவளுக்கு பொத்துக்கொண்டு வருகிறது. பல வருஷங்களுக்குப் பின் சந்திக்கும்போது அவள் என் கணவர் என்னை கண்ணம்மா என்று கூப்பிட்டதே இல்லை என்று சொல்கிறாள். “பிற்பகல் மூன்று மணி” சிறுகதையில் மனைவிக்கும் நண்பனுக்கு உறவு இருப்பது புரியாமல் ஏமாறும் ஒரு கணவன். “புதிய கல்வெட்டுகள்” சிறுகதையில் புருஷனுக்கு தன் தங்கையை கட்டி வைக்கும் அக்கா – அவளுக்கு தங்கைக்கு தன்னை விட உயர்ந்த இடம் அமைந்துவிடக் கூடாது என்ற பொறாமையால் கணவனை பங்கு போட்டுக் கொள்ள சம்மதிக்கிறாள். மூன்றுமே நல்ல சிறுகதைகள்.

மீண்டும் அந்த ஞாபகங்கள்: அது ஒரு நிலாக் காலத்தின் prequel. ராம்குமாரும் சுகந்தாவும் எப்படி காதலிக்க ஆரம்பித்தார்கள் என்று போகிறது.

சூரியன் மிக அருகில்: அம்மா வேறு ஒருவனோடு ஓடிப் போய்விடுகிறாள். அந்த நினைவிலேயே உழலும் ஒரு வாலிபன். படிக்க வேண்டியதில்லை.

அது வேறு மழைக் காலம்: பணக்கார வீட்டுப் பையன் ஹிந்தி சினிமா ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு பம்பாய்க்கு ஓடிப் போகிறான். அங்கே ஒரு பெண், கெத்து இத்தியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் நடப்பது போல எழுதப்பட்ட புத்தகம். ஹிந்தி சினிமா பற்றி வருபவை சுவையாக இருக்கும்.

கடல் ஆழத்து தாவரங்கள்: தன் சித்தி முறை உள்ள, ஒரே வயதுப் பெண்ணால் கவரப்படும் பையன். டைம் பாஸ்.

ஒரு முறைதான் பூக்கும்: முக்கோணக் காதல், தியாகம் என்று போரடிக்கும் ஒரு குறுநாவல்.

என் வீட்டுப் பூக்கள்: அதே கெத்தான ஆண், பெண். மாற்றம் என்னவென்றால் ஆணின் தாய்க்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. அவளுக்கு சேவை செய்து வாழ்க்கையை கடத்த வேண்டுமா என்று தயங்கி பெண் ஜாதியை காரணமாக காட்டி காதலை முறித்துக் கொள்கிறாள். முறித்த உடனே தாய் அவுட்!

தெருவில் ஒருவன்: சிறுகதை தொகுப்பு. எந்த கதையும் என் மனதில் நிற்கவில்லை.

மூன்றாம் பிறைகள்: சந்துரு காலேஜ் நாட்களில் நந்தாவை சைட் அடிக்கிறான். நந்தா அவனை கண்டுகொள்ளவில்லை. இப்போது நந்தாவின் அக்கா அமுதாவுடன் கல்யாணம் ஆகிறது. அவனுக்கு இன்னும் நந்தாவின் மேல் ஒரு கண். இப்படி நீண்டுகொண்டே போகிறது கதை. டைம் பாஸ் என்று கூட சொல்லமாட்டேன்.

மாய நதிகள்: மனைவியை இழந்த 55 வயதுக்காரர். கிராமத்தில் பெரிய பணக்காரர் அவர்தான். அடுத்தவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். திடீரென்று ஒரு ஏழை, இளம் அழகியை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறார். இதனால் தன்னை எல்லாரும் பொறாமையோடு பார்ப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். ஆனால் அவருக்கு எல்லாரும் மனைவியை சைட் அடிக்கிறார்கள் என்ற உணர்வு உறுத்த ஆரம்பிக்கிறது. அவளை மன ரீதியாக கொடுமைப்படுத்துகிறார். பக்கத்து வீட்டு இளம் பையனுக்கும் அவளுக்கும் உறவு உருவாகிறது. இவருடைய மன அழுத்தம் அதிகரித்து அவன் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கிறார். விஷயம் போலீஸ் வரை போக, இவருக்கு பைத்தியமே பிடித்துவிடுகிறது. சுமாராக இருக்கிறது.

பனங்காட்டு அண்ணாச்சி: சிறு நகரம் ஒன்றில் ஒரு வணிகரின் வாழ்க்கை. என்ன பாயிண்ட் என்றே தெரியவில்லை.

ஸ்டெல்லா ப்ரூசின் பலம் அறுபது, எழுபதுகளின் நகர்ப்புற இளைஞர் கூட்ட ambience-ஐ ஓரளவு தத்ரூபமாக சித்தரிப்பது. ஐம்பது, அறுபதுகளின் கிராமப்புற, கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களின் வாழ்க்கையை ஒரு சிறுவனின் கண்ணிலிருந்து நல்ல முறையில் சித்தரிப்பது. அவரது பலவீனம் வேறு எதுவும் இல்லாதது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் “அது ஒரு நிலாக்காலம்” படியுங்கள். ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் “காணாமல் போன ஞாபகங்கள்” படியுங்கள். காதல் சிகரங்கள் சிறுகதைத் தொகுதியே ரசிக்கும்படி இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

16 thoughts on “ஸ்டெல்லா ப்ரூஸ்

 1. நீங்கள் சொன்னதுபோல ‘அது ஒரு நிலாக்காலம்’ஐ நேசித்து வாசித்த பெண்களில் நானும் ஒருத்தி. ஆண் கம்பீரன், அவனது கம்பீரத்தில் மாய்ந்துபோகிற மென்மைப் பெண் சுகந்தாவாக வாசித்த பெரும்பாலானோர் தம்மைக் கற்பனை செய்திருப்பார்கள். சின்னவயதுக்காரர்கள் இப்போது வாசித்தாலும் கனவுக்குள் இழுத்துவிடக்கூடிய நாவல்தான் என்று நினைக்கிறேன். நாம் காண்பது கனவு என்று புரிந்துகொள்கிற வயதை நாம் வந்தடைந்துவிட்டபடியாலும், தீவிர தீவிர தீவிர (?) இலக்கியவாசிப்புக்குப் பழக்கப்பட்டுவிட்டதாலும் இனி ‘அது ஒரு நிலாக்காலம்’நம்மை ஒன்றுஞ் செய்யாது:)

  Like

 2. ஸ்டெல்லா ப்ரூஸின் மற்றொரு நாவல் ”ஒரு முறைதான் பூக்கும்”.
  80களின் ஆரம்பத்தில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளி வந்தது.

  Like

 3. கார்த்திகேயன், ஸ்டெல்லா ப்ரூஸ் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி!

  தமிழ்நதி, // நீங்கள் சொன்னதுபோல ‘அது ஒரு நிலாக்காலம்’ஐ நேசித்து வாசித்த பெண்களில் நானும் ஒருத்தி… நாம் காண்பது கனவு என்று புரிந்துகொள்கிற வயதை நாம் வந்தடைந்துவிட்டபடியாலும், தீவிர தீவிர தீவிர (?) இலக்கியவாசிப்புக்குப் பழக்கப்பட்டுவிட்டதாலும் இனி ‘அது ஒரு நிலாக்காலம்’நம்மை ஒன்றுஞ் செய்யாது:) // அது அவரது பலம். தி.ஜா., பாலகுமாரன், சுஜாதா, ஸ்டெல்லா ப்ரூஸ் போன்றவர்கள் சுலபமாக கனவு காண வைக்கிறார்கள். எனக்கு தலை வழுக்கை ஆன பிறகும் அவ்வப்போது கனவு வருகிறது. 🙂

  ரவிச்சந்திரன், இங்கே நான் படித்த புத்தகங்களைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். பனங்காட்டு அண்ணாச்சி உங்களுக்கு நினைவிருந்தால் இன்னும் விவரமாக எழுதுங்களேன்! மணி, நீங்களும் ஒரு முறைதான் பூக்கும் பற்றி இன்னும் விவரமாக எழுதுங்களேன்!

  ஸ்ரீனிவாஸ், சுட்டிக்கு நன்றி! ஊரிலிருந்து திரும்பிவிட்டீர்களா?

  Like

 4. ஸ்டெல்லா ப்ரூஸின் ”ஒரு முறைதான் பூக்கும்”
  ==========================================
  சிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகிறது. நான் ஒரு பொண்ணைக் காப்பாத்தற மாதிரி இல்லாமே என்னை ஒரு பொண்ணு காப்பாத்தற மாதிரி வாழ்க்கை அமையணும்! என்று விரும்புகிறான். அறிவிலும் அந்தஸ்திலும் அழகிலும் சிறந்த ஒரு பெண்ணை _ நூலாசிரியரின் வார்த்தைப்படி, நிகரற்ற ஒரு பெண்ணை _ திருமணம் செய்யவேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரான குற்றாலத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறான். அப்படிப்பட்ட நிகரற்ற ஒரு பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வாய்க்கிறார். நண்பர்களின் துணையுடன் வைத்யநாதன், சூர்யாவைத் தன்வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் இளமைத்துடிப்புடன் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன. வாய் பேச முடியாத ஒரு பெண் (ஆனந்தி) கதாநாயகன் பணிபுரியும் அலுவலகத்திலேயே பணிபுரிகிறாள். அவளுக்கு வைத்யநாதன் மேல் காதல் ஏற்படுகிறது. இந்த முக்கோணக் காதல் சுழலில் யாருடைய காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதை விவரித்துள்ள விதம்தான் இந்த நாவலின் வெற்றிக்கு அடித்தளம். இது ஸ்டெல்லா புரூஸின் முதல் நாவலும் கூட. ஆனால், கன்னி முயற்சியின் சாதகமான அம்சங்களும் விரிவான வாசிப்பு அனுபவத்தின் சாதகமான அம்சங்களும் சேர்ந்து இந்த நாவலை குறிப்பிடத் தகுந்த ஒன்றாக மாற்றியுள்ளன. திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இந்த கதையை திரைக்கதையாக எழுத ஆரம்பித்ததாகவும் ஸ்டெல்லா புரூஸ் கூறியுள்ளார். கதையில் இடம் பெறும் பாத்திரங்களும் அந்தக் கோணத்தில் உரையாடவும் செய்கின்றன. ஒரு நல்ல திரைப்படமாக வடிவம் பெற வாய்ப்புள்ள நாவல்.

  Like

 5. ஸ்டெல்லா ப்ரூஸின் ”அது ஒரு நிலாக்காலம்”
  ========================================
  ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். மூவருமே அவனை விரும்புகிறார்கள். ஒருத்தியை (சுகந்தா) அவன் மனதாரக் காதலிக்கிறான்; ஒருத்தி (லிஸா) மேல் அவனுக்கு லேசாக சபலம் ஏற்படுகிறது, ஒருத்தியை (ரோஸி) அவன் தன் மகளாக பாவிக்கிறான். மூவருடனான தனது உறவுநிலையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் ராம்குமார், அந்த எல்லைக்குள்ளேயே அவர்களுடன் பழகி வருகிறான். அதை மீறுவதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் அவன் தனது நிலைப்பாடில் தெளிவாக & உறுதியாக நிற்கிறான். ராம்குமாருக்கு இன்னொரு முகமும் உண்டு. அவன் சின்னச் சின்ன பொய்கள் சொல்லக் கூடியவன். திட்டமிட்டெல்லாம் அதை அவன் சொல்வதில்லை என்றாலும், வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக்கொள்ள அவனுக்கு அந்தப் பொய்கள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் பொய்யே அவனுடைய வாழ்க்கையை நிலைகுலையவும் வைக்கிறது. அதற்குப் பிந்தைய இந்த நிகழ்வுகளை ராம்குமார் நினைத்துப் பார்ப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. விகடன் மூலம் பரந்துபட்ட தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஸ்டெல்லா ப்ரூஸின் சிறந்த நாவல் இது. சிறந்த எழுத்தாளர்கள் தங்களது நூல்களது மூலம், தங்களுக்குப் பிந்தைய எண்ணற்ற தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஸ்டெல்லா ப்ரூஸும் அத்தகைய ஓர் எழுத்தாளர்தான்; இந்த நூலும் அத்தகைய ஒரு நூல்தான்.

  Like

 6. RV

  ரவி சொன்னது போல் ‘பனங் காட்டு அண்ணாச்சி” ஒரு அருமையான கதை. முழு கதை விவரம் நினைவில் இல்லை .ரவி,ஹொவ் அபௌட் யு?

  கதை நாயகன் அண்ணாச்சிக்கு வாரிசு கிடையாது என்று ஜோசியர் சொல்கிறார் .கணக்கு பிள்ளை மூலம் மனைவிக்கு பிள்ளை பிறக்கிறது. ஜோசியர் அசராமல் “வாரிசு தான் கிடையாது என்றேன் …குழந்தை இல்லை என்றா சொனனேன்….”? என்பார்.

  நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்
  Raju -துபாய்

  Like

 7. மாய நதிகள் கதை சுமார் அல்ல….. மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்ட ஒரு நல்ல கதை…. 👌

  Like

  1. மஹாதேவன், மாய நதிகள் பற்றி இப்போது சரியாக நினைவில்லை. நீங்கள் விரும்பினால் உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன், இங்கேயே பதிக்கலாம். என் ஈமெயில் – rv dot subbu at gmail

   Like

 8. Hello Blog writer .You are totally wrong about his books. I pitty your ignorance. You must be the world’s stupidest reader in my humble opinion. You also must be an attention seeking psychopath who is in to conning people with borrowed content in my very strong opinion . You also must be a person with the lowest recored IQ. Get a life idiot. Get away from people. Dont show off with your illogiocal reviews without even reading books. Pople please dont trust his views. Read Stella Bruce’s books. He was an amzing writer . Dont miss great books.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.