பட்டுக்கோட்டை பிரபாகர்

எனக்கு பொதுவாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், மற்றும் சுபா ஆகியோரைப் பற்றி கொஞ்சம் இளக்காரம்தான். உப்பு சப்பில்லாத கதைகள் எழுதுகிறார்கள் என்று ஒரு நினைப்பு. அந்தக் காலத்து ராஜேந்திரகுமார், சவீதா, புஷ்பா தங்கதுரை மாதிரி. ஆனால் எழுத முயற்சி செய்யும்போதுதான் இந்த லெவலில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது.

மூவரில் பிரபாகரே சிறந்த எழுத்தாளர் என்று நினைக்கிறேன். இவரது ஆதர்சம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸாக இருக்க வேண்டும். அவரைப் போலவே த்ரில்லர்கள் எழுத முயற்சிக்கிறார். சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பரத்-சுசீலா என்று ஒரு ஜோடி துப்பறிகிறது. சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படித்தால்:

என்னைக் காணவில்லை: கல்கியில் தொடர்கதையாக வந்திருக்கிறது. டைம் பாஸ் த்ரில்லர். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் பணக்கார அப்பா, வயது வந்த மகன், அவன் காதலி; இரண்டாவது மனைவியும், அவள் அண்ணனும் வில்லன்கள். வில்லன் கோஷ்டி போடும் திட்டங்களை எல்லாம் யாரோ ஒரு மர்ம மனிதர்(கள்) அவர்களுக்கு ஐந்து நிமிஷம் முன்னால் செய்கிறார்கள். பரத்-சுசீலா துப்பறியும் கதை. முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.

இனி இல்லை இடைவேளை: இன்னொரு டைம் பாஸ் த்ரில்லர். கம்ப்யூட்டரால் வேலை போகும் இருவர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் இடங்களில் குண்டு வைக்கிறார்கள்.

சொல்லாதே செய்: “என்னைக் காணவில்லை”யை நினைவுபடுத்துகிறது. நடிகர் பிரகாஷை கொல்ல ஒருவன் திட்டம் போடுகிறான். கொல்லப் போகும்போது அவனை வேறு யாரோ கொன்றிருக்கிறார்கள். கல்கண்டில் தொடர்கதையாக வந்ததாம்.

ஜாக்பாட் ராத்திரி: பணம் நிறைந்த சூட்கேஸ், அதைக் கைப்பற்ற துடிக்கும் மூன்று கோஷ்டிகள். சுவாரசியமான த்ரில்லர்.

ஆகாயத்தில் ஆரம்பம்: ஒரு விஞ்ஞானியை கடத்தும் முயற்சி. கொஞ்சம் தற்செயல், ஒரு சின்ன விஷயத்தால் பிடிபடுகிறார்கள். சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.

இமைக்காத இரவுகள்: சில நீண்ட கதைகள். போர்.

பின்னிரவில் நதியருகில்: காதல், அப்பா சதி செய்து பெண்ணை வேறு இடத்தில் கட்டிக் கொடுக்கிறார். கணவன் இறக்க, அப்பா கதற, காதலன் மணக்கத் தயாராக இருந்தும், காதலி அவனை நிராகரிக்கிறாள். அவள் மனம் கணவனிடம் போய்விட்டது. ப்ராக்டிகலாக எல்லாரும் இருக்கிறார்கள், அதுவே ஆச்சரியம்.

பிறகு நான் வருவேன்: காதல், அம்மாவின் பிரஷரால் காதலனுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. காதலி பிரிய, கடைசியில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

அந்தி மந்திரம்: மாமன் மச்சானுக்குள் விரோதம். மாமன் பெண் பழி தீர்க்க சின்ன மச்சானை மணக்கிறாள். வேஸ்ட்.

இது நடக்கக் கூடாது: போர். மறைந்த தயாரிப்பாளர் ஜீவி மைக்கேல் ஜாக்சனை இந்தியாவுக்கு வரவழைக்க முயன்று கடைசியில் ஜாக்சன் கழற்றிக் கொண்டார். அதை வைத்து எழுதி இருக்கிறார். ஜீவிக்கு கதையில் பெயர் ஜீவபாலன்!

இது வரை தோற்றதில்லை: ஒன்றுமே இல்லாத, பரத்-சுசீலா துப்பறியும் கதை.

நிலா சாட்சி: இன்னொரு க்ரைம் த்ரில்லர். மனைவியை கொலை செய்யும் பெரிய மனிதர், அவளை ஒரு சீரியல் கில்லர் கொலை செய்த மாதிரி காட்டுகிறார்.

இயந்திரப் புன்னகை: கற்பை பெரிதாக நினைக்காத NRI பெண், “எதிரியோடு” படுத்து கிராமத்தில் சண்டையை நிப்பாட்டுகிறாள்.

அழகிய பெண்ணே: நல்ல நிலையில் இருக்கும் எழுத்தாளன், நர்ஸ், எழுத்தாளனிடம் உதவி பெற்று முன்னேறி வரும் நண்பன் முக்கோணம். நண்பனும் நர்சும் சதி செய்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் வாசகனை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

இது ஒரு பொற்காலம்: வைரங்களை திருட முயற்சி. வேஸ்ட்.

மெல்லப் பொய் பேசு: பரத்-சுசீலா நாவல். புரட்சிகரமான மருந்து கண்டுபிடிக்கும் தாத்தாவை யாரோ கடத்திவிட பரத்தும் சுசீலாவும் கண்டுபிடிக்கிறார்கள். வேஸ்ட்.

நான் உன்னை சுவாசிக்கிறேன்: கல்கியில் தொடர்கதையாக வந்தது. அரவிந்த் மூன்றாவது பையன். அண்ணா, அக்கா நல்ல நிலையில் இருக்கிறார்கள். அரவிந்த் தொழில் செய்து நண்பனால் ஏமாற்றப்பட்டிருக்கிறான். அடுத்த தொழில் செய்ய பணம் தேவை, அப்பா சனி திசை முடியவும், தங்கை கல்யாணம் முடியவும் இரண்டு வருஷம் பொறுக்க சொல்கிறார். அக்கா அண்ணனுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் அரவிந்தால் பொறுக்க முடியவில்லை, கந்துவட்டிக்கு கடன் வாங்கி ஆரம்பிக்கிறான். நடுவில் பிருந்தா என்ற ஒரு balanced mentality உள்ள பெண்ணை விரும்புகிறான். தொழில் ஆரம்பித்தவுடனே அடி மேல் அடி. இழுத்து மூட வேண்டிய நிலை. பிருந்தா அவன் வீட்டாரிடம் எடுத்துச் சொல்லி நிலைமையை சீர் செய்கிறாள். அரவிந்த், பிருந்தா இரண்டு காரக்டர்களும் நன்றாக வந்திருக்கும். படிக்கலாம்.

கொஞ்சம் காதல் வேண்டும், எப்படியும் ஜெயிக்க வேண்டும்: சினிமாவில் போராடும் ஒரு துணை இயக்குனர் திரும்பி கிராமத்துக்கு போவது முதல் கதையில். அதே துணை இயக்குனர் ஒரு படத்தை இயக்க வருவது அடுத்த கதையில். படிக்கலாம். துணை இயக்குனரின் ஏமாற்றங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

உயிரோடு உறவாடு: காதல் முறிவு. அப்புறம் ஹீரோ எல்லா உண்மையையும் சொல்லி வேறு ஒருத்தியை மணக்கிறார். ஆனால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை. டைவர்ஸ் பேச்சு வரை போகிறது. மனைவி கணவனை குற்றம் சாட்டும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். கைது, விடுதலை, முன்னாள் காதலியோடு திருமணம். பிரபாகர் மனைவியை “குற்றவாளியாக” சித்தரிக்க நினைத்திருக்கிறார், ஆனால் கணவன் மேல்தான் அதிக தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. படிக்க வேண்டியதில்லை.

கனவு கரையும் நேரம்: ஒரு கொலையாளி விட்டுச் செல்லும் க்ளூக்களும் அவன் திட்டம் போட்டு விட்டுச் செல்வதே. டைம் பாஸ்.

தயங்காதே: ஒரு நிருபரின் கொலை, ஒரு நடிகையின் தற்கொலை. வேஸ்ட்.

யாருக்கும் முகமில்லை: காதலை எதிர்க்கும் அப்பா. வேஸ்ட்.

மன்மதன் வந்தானடி: வாரப் பத்திரிகை தொடர்கதை மாதிரி இருக்கிறது. ஊதாரிக் கணவன் தன் மனைவி தன் மீது வைக்கும் நம்பிக்கையால் திருந்துகிறார்ன்.

டிசம்பர் பூ டீச்சர்: சிறுகதைத் தொகுப்பு. ஒரு சிறுகதை எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. நான்கு கல்லூரி நண்பர்கள். இருப்பவர்களில் ஏழையானவன் முன்னேற முயற்சி செய்கிறான். மிச்ச மூன்று பேரும் பேசி பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

வேட்டை: சிறுகதைத் தொகுப்பு. நடுவில் சில பக்கங்களை காணவில்லை, அதனால் எல்லா கதைகளையும் படிக்க முடியவில்லை. சில கதைகள் நன்றாக வந்திருக்கின்றன. “நலமில்லை… நலமா?” கதை ஒரு முறிந்த காதலைப் பற்றியது. பல வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும்போது முன்னாள் காதலி தன் சுகமான வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டே போகிறாள். கதை முடிவில் அவள் தனியாக பாத்ரூமில் அழுவதை முன்னாள் காதலன் கேட்கிறான். “பழகியாச்சு” கதையில் பல கனவுகள் கண்ட இரு கல்லூரித் தோழர்கள் வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள். அதை அருமையாக முடித்திருக்கிறார். பொதுவாக நல்ல craftsmanship தெரிகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்வேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகள்: சில கதைகள் டிசம்பர் பூ டீச்சரிலும் படித்தேன். ஒரு காந்தமும் இரும்புத் துண்டும் நல்ல தீம் – முதிர் கன்னி பஸ்ஸில் தடவுபவனுக்கு இடம் கொடுத்து… மரம் அவருக்கு பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன் – “சூழ்ச்சி” செய்து ஒரு மரம் வெட்டப்படுவதை தடுக்கிறான் ஹீரோ. வயசு டீனேஜ் வயசுக் கோளாறை நன்றாக சித்தரிக்கிறது. நேற்றைய இலைகள் கதையில் க்ளைமாக்ஸ் நன்றாக வந்திருக்கிறது. ரெண்டு இட்லி, ஒரு வடை கதையின் ஆப்டிமிஸ்டிக் முடிவு நிறைவாக இருக்கிறது.

பிரபாகரை படிக்க வேண்டுமென்றால் அவரது சிறுகதைகளைப் படியுங்கள். நல்ல டெக்னிக் இருக்கிறது. அவ்வப்போது சில மாணிக்கங்கள் கிடைக்கின்றன. பல வருஷங்களுக்கு முன் படித்த ஒரு பேய்க்கதை – ஏரிக்கரை ராஜாத்தி – இன்னும் நினைவிருக்கிறது. அது Lady or the Tiger? ரேஞ்சில் எழுதப்பட்ட ஒரு கச்சிதமான சிறுகதை. பேர்தான் நினைவு வரமாட்டேன் என்கிறது. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற நிலையில் நான் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். இவர் ஒரு மீடியம் நிலையில் இருக்கிறார், இவர் நிலைக்கு வரவே எத்தனை நாளாகுமோ? அவரது நாவல்கள், அதுவும் க்ரைம் நாவல்கள் அவ்வளவு சுகப்படவில்லை. அவை பொதுவாக வாரப் பத்திரிகை தொடர்கதை, மாத நாவல் ஃபார்முலாவை விட்டு வெளியே வரவில்லை. ஏதாவது பஸ் பயணத்தில் படித்துவிட்டு தூக்கிப் போடத்தான் லாயக்கு.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
சொக்கனின் பதிவு
பட்டுக்கோட்டை பிரபாகரின் ஒரு சிறுகதை – மாதவன் சார்