Skip to content

பட்டுக்கோட்டை பிரபாகர்

by மேல் செப்ரெம்பர் 21, 2010

எனக்கு பொதுவாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், மற்றும் சுபா ஆகியோரைப் பற்றி கொஞ்சம் இளக்காரம்தான். உப்பு சப்பில்லாத கதைகள் எழுதுகிறார்கள் என்று ஒரு நினைப்பு. அந்தக் காலத்து ராஜேந்திரகுமார், சவீதா, புஷ்பா தங்கதுரை மாதிரி. ஆனால் எழுத முயற்சி செய்யும்போதுதான் இந்த லெவலில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது.

மூவரில் பிரபாகரே சிறந்த எழுத்தாளர் என்று நினைக்கிறேன். இவரது ஆதர்சம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸாக இருக்க வேண்டும். அவரைப் போலவே த்ரில்லர்கள் எழுத முயற்சிக்கிறார். சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பரத்-சுசீலா என்று ஒரு ஜோடி துப்பறிகிறது. சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படித்தால்:

என்னைக் காணவில்லை: கல்கியில் தொடர்கதையாக வந்திருக்கிறது. டைம் பாஸ் த்ரில்லர். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் பணக்கார அப்பா, வயது வந்த மகன், அவன் காதலி; இரண்டாவது மனைவியும், அவள் அண்ணனும் வில்லன்கள். வில்லன் கோஷ்டி போடும் திட்டங்களை எல்லாம் யாரோ ஒரு மர்ம மனிதர்(கள்) அவர்களுக்கு ஐந்து நிமிஷம் முன்னால் செய்கிறார்கள். பரத்-சுசீலா துப்பறியும் கதை. முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.

இனி இல்லை இடைவேளை: இன்னொரு டைம் பாஸ் த்ரில்லர். கம்ப்யூட்டரால் வேலை போகும் இருவர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் இடங்களில் குண்டு வைக்கிறார்கள்.

சொல்லாதே செய்: “என்னைக் காணவில்லை”யை நினைவுபடுத்துகிறது. நடிகர் பிரகாஷை கொல்ல ஒருவன் திட்டம் போடுகிறான். கொல்லப் போகும்போது அவனை வேறு யாரோ கொன்றிருக்கிறார்கள். கல்கண்டில் தொடர்கதையாக வந்ததாம்.

ஜாக்பாட் ராத்திரி: பணம் நிறைந்த சூட்கேஸ், அதைக் கைப்பற்ற துடிக்கும் மூன்று கோஷ்டிகள். சுவாரசியமான த்ரில்லர்.

ஆகாயத்தில் ஆரம்பம்: ஒரு விஞ்ஞானியை கடத்தும் முயற்சி. கொஞ்சம் தற்செயல், ஒரு சின்ன விஷயத்தால் பிடிபடுகிறார்கள். சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.

இமைக்காத இரவுகள்: சில நீண்ட கதைகள். போர்.

பின்னிரவில் நதியருகில்: காதல், அப்பா சதி செய்து பெண்ணை வேறு இடத்தில் கட்டிக் கொடுக்கிறார். கணவன் இறக்க, அப்பா கதற, காதலன் மணக்கத் தயாராக இருந்தும், காதலி அவனை நிராகரிக்கிறாள். அவள் மனம் கணவனிடம் போய்விட்டது. ப்ராக்டிகலாக எல்லாரும் இருக்கிறார்கள், அதுவே ஆச்சரியம்.

பிறகு நான் வருவேன்: காதல், அம்மாவின் பிரஷரால் காதலனுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. காதலி பிரிய, கடைசியில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

அந்தி மந்திரம்: மாமன் மச்சானுக்குள் விரோதம். மாமன் பெண் பழி தீர்க்க சின்ன மச்சானை மணக்கிறாள். வேஸ்ட்.

இது நடக்கக் கூடாது: போர். மறைந்த தயாரிப்பாளர் ஜீவி மைக்கேல் ஜாக்சனை இந்தியாவுக்கு வரவழைக்க முயன்று கடைசியில் ஜாக்சன் கழற்றிக் கொண்டார். அதை வைத்து எழுதி இருக்கிறார். ஜீவிக்கு கதையில் பெயர் ஜீவபாலன்!

இது வரை தோற்றதில்லை: ஒன்றுமே இல்லாத, பரத்-சுசீலா துப்பறியும் கதை.

நிலா சாட்சி: இன்னொரு க்ரைம் த்ரில்லர். மனைவியை கொலை செய்யும் பெரிய மனிதர், அவளை ஒரு சீரியல் கில்லர் கொலை செய்த மாதிரி காட்டுகிறார்.

இயந்திரப் புன்னகை: கற்பை பெரிதாக நினைக்காத NRI பெண், “எதிரியோடு” படுத்து கிராமத்தில் சண்டையை நிப்பாட்டுகிறாள்.

அழகிய பெண்ணே: நல்ல நிலையில் இருக்கும் எழுத்தாளன், நர்ஸ், எழுத்தாளனிடம் உதவி பெற்று முன்னேறி வரும் நண்பன் முக்கோணம். நண்பனும் நர்சும் சதி செய்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் வாசகனை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

இது ஒரு பொற்காலம்: வைரங்களை திருட முயற்சி. வேஸ்ட்.

மெல்லப் பொய் பேசு: பரத்-சுசீலா நாவல். புரட்சிகரமான மருந்து கண்டுபிடிக்கும் தாத்தாவை யாரோ கடத்திவிட பரத்தும் சுசீலாவும் கண்டுபிடிக்கிறார்கள். வேஸ்ட்.

நான் உன்னை சுவாசிக்கிறேன்: கல்கியில் தொடர்கதையாக வந்தது. அரவிந்த் மூன்றாவது பையன். அண்ணா, அக்கா நல்ல நிலையில் இருக்கிறார்கள். அரவிந்த் தொழில் செய்து நண்பனால் ஏமாற்றப்பட்டிருக்கிறான். அடுத்த தொழில் செய்ய பணம் தேவை, அப்பா சனி திசை முடியவும், தங்கை கல்யாணம் முடியவும் இரண்டு வருஷம் பொறுக்க சொல்கிறார். அக்கா அண்ணனுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் அரவிந்தால் பொறுக்க முடியவில்லை, கந்துவட்டிக்கு கடன் வாங்கி ஆரம்பிக்கிறான். நடுவில் பிருந்தா என்ற ஒரு balanced mentality உள்ள பெண்ணை விரும்புகிறான். தொழில் ஆரம்பித்தவுடனே அடி மேல் அடி. இழுத்து மூட வேண்டிய நிலை. பிருந்தா அவன் வீட்டாரிடம் எடுத்துச் சொல்லி நிலைமையை சீர் செய்கிறாள். அரவிந்த், பிருந்தா இரண்டு காரக்டர்களும் நன்றாக வந்திருக்கும். படிக்கலாம்.

கொஞ்சம் காதல் வேண்டும், எப்படியும் ஜெயிக்க வேண்டும்: சினிமாவில் போராடும் ஒரு துணை இயக்குனர் திரும்பி கிராமத்துக்கு போவது முதல் கதையில். அதே துணை இயக்குனர் ஒரு படத்தை இயக்க வருவது அடுத்த கதையில். படிக்கலாம். துணை இயக்குனரின் ஏமாற்றங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

உயிரோடு உறவாடு: காதல் முறிவு. அப்புறம் ஹீரோ எல்லா உண்மையையும் சொல்லி வேறு ஒருத்தியை மணக்கிறார். ஆனால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை. டைவர்ஸ் பேச்சு வரை போகிறது. மனைவி கணவனை குற்றம் சாட்டும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். கைது, விடுதலை, முன்னாள் காதலியோடு திருமணம். பிரபாகர் மனைவியை “குற்றவாளியாக” சித்தரிக்க நினைத்திருக்கிறார், ஆனால் கணவன் மேல்தான் அதிக தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. படிக்க வேண்டியதில்லை.

கனவு கரையும் நேரம்: ஒரு கொலையாளி விட்டுச் செல்லும் க்ளூக்களும் அவன் திட்டம் போட்டு விட்டுச் செல்வதே. டைம் பாஸ்.

தயங்காதே: ஒரு நிருபரின் கொலை, ஒரு நடிகையின் தற்கொலை. வேஸ்ட்.

யாருக்கும் முகமில்லை: காதலை எதிர்க்கும் அப்பா. வேஸ்ட்.

மன்மதன் வந்தானடி: வாரப் பத்திரிகை தொடர்கதை மாதிரி இருக்கிறது. ஊதாரிக் கணவன் தன் மனைவி தன் மீது வைக்கும் நம்பிக்கையால் திருந்துகிறார்ன்.

டிசம்பர் பூ டீச்சர்: சிறுகதைத் தொகுப்பு. ஒரு சிறுகதை எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. நான்கு கல்லூரி நண்பர்கள். இருப்பவர்களில் ஏழையானவன் முன்னேற முயற்சி செய்கிறான். மிச்ச மூன்று பேரும் பேசி பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

வேட்டை: சிறுகதைத் தொகுப்பு. நடுவில் சில பக்கங்களை காணவில்லை, அதனால் எல்லா கதைகளையும் படிக்க முடியவில்லை. சில கதைகள் நன்றாக வந்திருக்கின்றன. “நலமில்லை… நலமா?” கதை ஒரு முறிந்த காதலைப் பற்றியது. பல வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும்போது முன்னாள் காதலி தன் சுகமான வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டே போகிறாள். கதை முடிவில் அவள் தனியாக பாத்ரூமில் அழுவதை முன்னாள் காதலன் கேட்கிறான். “பழகியாச்சு” கதையில் பல கனவுகள் கண்ட இரு கல்லூரித் தோழர்கள் வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள். அதை அருமையாக முடித்திருக்கிறார். பொதுவாக நல்ல craftsmanship தெரிகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்வேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகள்: சில கதைகள் டிசம்பர் பூ டீச்சரிலும் படித்தேன். ஒரு காந்தமும் இரும்புத் துண்டும் நல்ல தீம் – முதிர் கன்னி பஸ்ஸில் தடவுபவனுக்கு இடம் கொடுத்து… மரம் அவருக்கு பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன் – “சூழ்ச்சி” செய்து ஒரு மரம் வெட்டப்படுவதை தடுக்கிறான் ஹீரோ. வயசு டீனேஜ் வயசுக் கோளாறை நன்றாக சித்தரிக்கிறது. நேற்றைய இலைகள் கதையில் க்ளைமாக்ஸ் நன்றாக வந்திருக்கிறது. ரெண்டு இட்லி, ஒரு வடை கதையின் ஆப்டிமிஸ்டிக் முடிவு நிறைவாக இருக்கிறது.

பிரபாகரை படிக்க வேண்டுமென்றால் அவரது சிறுகதைகளைப் படியுங்கள். நல்ல டெக்னிக் இருக்கிறது. அவ்வப்போது சில மாணிக்கங்கள் கிடைக்கின்றன. பல வருஷங்களுக்கு முன் படித்த ஒரு பேய்க்கதை – ஏரிக்கரை ராஜாத்தி – இன்னும் நினைவிருக்கிறது. அது Lady or the Tiger? ரேஞ்சில் எழுதப்பட்ட ஒரு கச்சிதமான சிறுகதை. பேர்தான் நினைவு வரமாட்டேன் என்கிறது. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற நிலையில் நான் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். இவர் ஒரு மீடியம் நிலையில் இருக்கிறார், இவர் நிலைக்கு வரவே எத்தனை நாளாகுமோ? அவரது நாவல்கள், அதுவும் க்ரைம் நாவல்கள் அவ்வளவு சுகப்படவில்லை. அவை பொதுவாக வாரப் பத்திரிகை தொடர்கதை, மாத நாவல் ஃபார்முலாவை விட்டு வெளியே வரவில்லை. ஏதாவது பஸ் பயணத்தில் படித்துவிட்டு தூக்கிப் போடத்தான் லாயக்கு.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
சொக்கனின் பதிவு
பட்டுக்கோட்டை பிரபாகரின் ஒரு சிறுகதை – மாதவன் சார்

Advertisements
18 பின்னூட்டங்கள்
  1. சாரதா permalink

    டியர் ஆர்.வி.
    நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றுள் பல நாவல்கள் படித்துள்ளேன். சில படிக்கவில்லை. இதில் இடம்பெறாத சிலவற்றுள் ‘இந்திய நேரம் 2 A.M.’ நாவலும் ஒன்று. தன் அலுவலக்த்தில் பணிபுரியும் பெண்ணை அடைய நினைத்து, அதன் காரணமாக அவளது மரணத்தில் மாட்டிக்கொள்ளும் பாஸ், அவருக்கு உதவும் போலீஸ் அதிகாரி இருவரும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள் என்பது பற்றிய கதை. அவரது நாவல்கள சேர்ந்தாற்போல படிக்க முடியாது. ஒரே நாவலைப்படிப்பது போலிருக்கும். மற்ற நூல்களுக்கிடையில் இடைவெளிவிட்டுப் படிக்கலாம்.

    தனிப்பட்ட முறையில் ‘பிரபாகர்’ பற்றி:

    பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் தலையாரித்தெருவில் அவர் வீடு. ‘எழுத்து எப்போதும் சோறு போடாது’ என்ற பயத்திலோ என்னவோ, வீட்டு வாசலிலேயே ஒரு பெர்ஃப்யூம் கடை மற்றும் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். திருமணத்துக்கு முன்பிருந்தே அவரது பிரதான உதவியாளர் அவரது தங்கைதான்.

    Like

  2. பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றி குறிப்பிடும்போது அவர் வைக்கும் த்லைப்புக்களும் நினைவு வருகின்றன.

    லீனா மீனா ரீனா
    ஜனவரி பெப்ரவரி மார்ச்சுவரி
    யூன் யூலை யூலி
    என்று அவர் வைக்கின்ற தலைப்புகளே சுவாரசியமாக இருக்கும்

    Like

    • சாரதா permalink

      அருண்மொழி…
      இவை மட்டுமல்ல. இந்த கிரைம் கதை எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களுக்கு வைக்கும் பெயர்கள் சற்று வித்தியாசமாக கவரக்கூடியவை…

      கொலையுதிர் காலம்
      நிஷா… நிஷா…ஓடிவா
      நன்றி, கொன்றவனே
      மலர்க்கொடி, உன்னை மறப்பது எப்படி
      பொய்மையே வெல்லும்

      Like

    • அருண்மொழிவர்மன்/சாரதா, தலைப்புகளை ரசித்தேன். லீனா மீனா ரீனா மட்டும் புஷ்பா தங்கதுரை எழுதியது என்று நினைவு.
      அஹமது இர்ஷாத், மறுமொழிக்கு நன்றி!

      Like

  3. ப.பிரபாகரின் எழுத்துக்கள் மிகவும் சுவராஸ்யமானவை..நல்ல பகிர்வுங்க..

    Like

  4. உங்கள் பட்டியலில் விடுபட்டுப போன முக்கியமான ப.கோ.பிரபாகர் அவர்களின் படைப்பு “தொட்டால் தொடரும்”. பி.கே.பி.அவர்கள் பெயரைச் சொன்னாலே முதலில் நினைவிற்கு வரும் நாவல் அது. அதில் வரும் ஸ்ரீராம் கதாபாத்திரம் அட்டகாசமான ஒன்று.

    வசனங்களை மட்டுமே கொண்டு பலப் பல நாவல்களை பி.கே.பி. எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம் சூடத் தக்கது “மன்மதப்புதிர்”. அடலசன்ஸ் பிரச்னைகளை அலசிய அற்புதக் கதை.

    ஒரு நிஜமான பொய், பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் போன்றவை அவரது சிறப்பான நகைச்சுவை நாவல்கள்.

    அவர் பயணம் சினிமாப் பக்கம் திரும்பியது தமிழ் எழுத்துலகின் துரதிருஷ்டம்.

    Like

    • கிரி, நீங்கள் சொல்லும் ப. பிரபாகர் நாவல்களை படித்ததில்லை. தேடித் பார்க்கிறேன்.

      Like

  5. பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றி என். சொக்கன் கூறுகிறார்….
    ====================================================
    இரண்டு நாள்முன்னால் ‘மெகா டிவி’ என்ற தொலைக்காட்சியில் பட்டுக்கோட்டை பிரபாகரின் பேட்டி. அவரிடம் சமர்த்தாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பெண் தொகுப்பாளினி, திடுதிப்பென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், ‘உங்க கதை ஒன்றுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைச்சிருக்கே, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’

    பட்டுக்கோட்டை பிரபாகர் பதறிப்போய்விட்டார், ’சாஹித்ய அகாதமி விருது இல்லைங்க, சாஹித்ய அகாதமி அமைப்பு நடத்துகிற மாதப் பத்திரிகையில் என்னுடைய கதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது கிடைச்சிருக்கு’

    ஒரு பெரிய வரலாற்றுப் பிழை செய்துவிட்டோமே என்று அந்த அம்மணி பதறவில்லை, ‘சரி, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’ என்று அடுத்த கேள்விக்குப் போய்விட்டார்.

    அந்த ஒரு சின்னத் தடங்கலைத் தவிர்த்துப் பார்த்தால், பட்டுக்கோட்டை பிரபாகரின் அன்றைய பேட்டி மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரே குறை, அவர் எழுதுவதைப்பற்றியே பேசாமல் திரும்பத் திரும்ப விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா என்றே ஓடிக்கொண்டிருந்ததுதான்.

    கல்லூரிக் காலத்தில், நானெல்லாம் ‘பிகேபி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகரின் வெறித்தனமான ரசிகன். அவருடைய கண்ணாடி முகம் போட்ட துண்டு நோட்டீஸைக்கூட விட்டுவைக்காமல் வாங்கிப் படித்துப் பாதுகாத்துக்கொண்டிருந்தேன்.

    இவையெல்லாம் தடிமன் அட்டை போட்ட கௌரவமான ‘லைப்ரரி எடிஷன்’கள் கிடையாது, கச்சாமுச்சாவென்று புகைப்படங்களை அள்ளித் தெறித்த ரேப்பர்களுடன் சாணித்தாள் மாத நாவல்கள்தான், ஆனால் அவற்றைப் படித்துவிட்டுத் தூக்கி எறிய மனம் வந்ததே இல்லை.

    பலருக்குத் தெரியாத விஷயம், இந்தப் ‘பிசாத்து’ மாத நாவல்களில்தான் இப்போதைய பல பிரபலங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக்கொண்டிருந்தார்கள், உதாரணமாக, இன்றைய ‘நம்பர் 1’ ஓவியர் ஸ்யாம்தான் அன்றைக்குப் பெரும்பாலான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களுக்கு கோட்டோவியங்கள் வரைந்துகொண்டிருந்தார், அவற்றின் அட்டைப்படங்களுக்கு விதவிதமாக ’க்ரைம்’ புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியவர், இப்போது இந்தியாவின் மிகப் பெரிய ஒளிப்பதிவாளராகப் பெயர் வாங்கியிருக்கிற கே. வி. ஆனந்த், உள்ளே துண்டுத் துண்டுக் கவிதைகள் எழுதியவர்களில் ஒருவர், சென்ற ஆண்டு அதிகப் படங்களில் பாட்டெழுதி நிறைய பெயரும் புகழும் சம்பாதித்த நா. முத்துக்குமார்.

    இப்படி ஏகப்பட்ட ‘வருங்கால’ வித்தகர்களெல்லாம் உருவாகிக்கொண்டிருந்த அந்த மாத நாவல்களில், நான் கவனித்தது பட்டுக்கோட்டை பிரபாகரைமட்டும்தான். அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயம், அதே கொலை, துப்பறிதல், சுபம் கதைகளில்கூட, ஏதாவது புதுசாக முயன்றுகொண்டிருப்பார், வர்ணனைகளில் புதுமை செய்வார், கதாநாயகியின் பனியன் வாசகங்களில் குறும்பு காட்டுவார், வெறும் வசனங்களிலேயே முழுக் கதையையும் எழுதுவார், நகைச்சுவை பொங்க மாத நாவல் எழுதுவார், இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். அதற்காகவே அவருடைய புத்தகங்களை மறுபதிப்பில்கூட விடாமல் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன்.

    இந்தப் பத்தாண்டுகளில் பட்டுக்கோட்டை பிரபாகரைவிடப் பலமடங்கு சிறப்பான கதைசொல்லிகள், இலக்கிய நேர்த்தியாளர்கள், கொஞ்சும் நடைக்காரர்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டார்கள். கதை என்பது வெறுமனே 65 (அல்லது 84, அல்லது 96, அல்லது 128) பக்கங்களை நிரப்புவதற்காக வார்த்தைகளை, சம்பவங்களை, திடுக்கிடும் திருப்பங்களைக் கொட்டுவது அல்ல, அதற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.

    ஆனால் இப்போதும், பட்டுக்கோட்டை பிரபாகரின் பல கதைகள் எனக்கு மறக்கவில்லை. அவை உன்னத இலக்கியங்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய எழுத்து, கதை சொல்லும் பாணி இரண்டும் நீக்கமுடியாதபடி மனத்தில் பதிந்துவிட்டது.

    சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது சொன்னார், ‘தெரிந்தோ தெரியாமலோ Pulp Fiction படிக்காமல் வளர்ந்தவன், எந்த இலக்கியமும் படிக்க லாயக்கில்லை’

    நிஜம்தானே?

    http://nchokkan.wordpress.com/2009/01/03/pkp/

    Like

    • சுட்டிக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்! சொக்கன் சுட்டிக்கும் இப்போது ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறேன். “தொட்டால் தொடரும்” பற்றிய விவரங்களுக்கும் நன்றி.

      ஜெகதீஸ்வரன், // உங்களின் அதே நிலையை நானும் உணர்ந்திருக்கிறேன். // இன்னொரு எழுத்தாளர்! நல்ல விஷயம், ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்கள்…

      Like

  6. தொட்டால் தொடரும்
    ===================
    மனித உணர்வுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் உணர்வு காதலுணர்வு. ஓர் ஆணும் ஒரு பெண்ணும், நீ, உனக்கு நான்! என்று ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைக்கு காதல்தான் ஆதாரம். வெவ்வேறு மனித உறவுகள் பரிமளிப்பதும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலுணர்வால்தான். உயிருக்குள் உயிராய் வளர்ந்து நம்பிக்கையைப் பலப்படுத்தும் காதல் உன்னதமான காதல் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. காதலர்களுக்குள் நம்பிக்கை தகர்ந்து விட்டால் ?

    காதலைச் செதுக்கி, காதலர்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். விகடனில் வெளிவந்து சில ஆண்டுகளானாலும், இப்போதும் சூடும் சுவையும் குறையாமல் வாசகர்களின் நெஞ்சை அள்ளும் விதமாகத் திகழ்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பம்சம். தொட்டுப் படிக்கத் துவங்கிவிட்டால், நீங்களே தொடர்ந்து புரிந்து கொள்வீர்கள்.

    Like

  7. நாவல்களை படிக்கும் போது அந்த எழுத்திற்காக அவர்கள் எவ்வளவு உழைத்திருக்கின்றார்கள் என தெரியாது. எழுத முற்பட்டால்தான் புரியும். உங்களின் அதே நிலையை நானும் உணர்ந்திருக்கிறேன். ஒரு த்ரிலர் கதைக்காக துப்பாக்கி குண்டின் அளவு முதற்கொண்டு ஆராய்ந்து எழுதுபவர் பிரபாகரன்.

    அவருடைய நாவல்களுக்கும், இந்திரா சௌந்திராஜன் நாவல்களுக்கும் நான் ஒரு அடிமை!

    Like

  8. என். சொக்கன் permalink

    சுவாரஸ்யமான அலசலுக்கு நன்றி!

    பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவல்களைவிடச் சிறுகதைகள் அதிகச் சிறப்பானவை என்பது 100% உண்மை. அதேசமயம் அந்தக் காலகட்ட பல்ப் ஃபிக்‌ஷனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, ராஜேஷ்குமார்தான் டெம்ப்ளேட் ராஜா என்று எனக்குத் தோன்றுகிறது. அவரோடு ஒப்பிடுகையில் ப.கோ.பி. கொஞ்சமாவது தன் நாவல்களில் வித்தியாசம் காட்ட முயன்றார். அவரது பெரும்பாலான நாவல்களில் ஒரு புது ஐடியாவாவது இருக்கும் – மற்றது சுமாராக விழுந்துவிடும் – என்ன செய்ய? ஆனானப்பட்ட சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் மூன்றில் ஒரு மேட்சில்தானே அரைசெஞ்சுரி அடிக்கமுடிகிறது? 🙂

    பத்திரிகைகளுக்கு எழுதுவதில் இருக்கும் டெட்லைன் சிரமங்கள் மிகத் தீவிரமானவை. அவற்றுக்கு நடுவே எண்ணிக்கை / தர அளவில் ஓரளவேனும் சாதிப்பதே பெரிய விஷயம்தான். அந்தவிதத்தில் ராஜேஷ்குமார், ப.கோ.பி. இருவரையும் நான் மிகவும் மதிக்கிறேன்.

    – என். சொக்கன்,
    பெங்களூரு.

    Like

  9. வர்ணனைகள் இல்லாத ஒரு நாவல்
    முழுமையான நகைச்சுவை நாவல்
    சமூகப் பிரச்சினைகள் (பெரும்பாலும் பெண்கள் சம்பந்தப்பட்டது) நாவல்
    என்று சுவாரசியப்படுத்தியவர் பி.கே.பி.

    செடி சிறிது சிறிதாக வளர்ந்து பெரிய மரம் ஆன பிறகு, செடியை வியக்க முடிவதில்லை நம்மால். அதுபோலவே, இன்று பலரின் எழுத்துக்களைப் படித்தாலும், அந்தக் காலத்தில் எழுதியவர்களில், பி.கே.பி வித்தியாசப்பட்டே நிற்கிறார் என்று நினைக்கிறேன்.

    இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள். அருமையான நாவல்.

    ஒரு கதையில் படித்த சின்ன விஷயம் ஒன்று.

    ஒரு எழுத்தாளன் என்று நினைக்கிறேன். கதாநாயகி, அவனைப் பார்த்து, உங்களின் முதல், இரண்டாம் கதைகள் போல மற்றவை அவ்வளவாக நன்றாக அல்லது காலம் செலவளித்து எழுதப்படவில்லை என்று கூறுவாள். அதற்கு கதாநாயகன், அமர்ந்திருக்கும் மணலில், வட்டம் வரையச் சொல்லுவான். இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று பல வட்டங்களுக்குப் பிறகு, கடைசி வட்டத்தையும், முதல் மற்றும் இரண்டாம் வட்டங்களையும் கம்பேர் செய்து பார்க்க சொல்லுவான். நினைத்துப் பார்க்கையில், அது நல்ல ஒரு உதாரணமாக இன்றளவும் எனக்குத் தோன்றுகிறது. நான், ரா.கு, பி.கே.பி யில் இருந்து இப்பொழுது தான் சுஜாதாவை படிக்க ஆரம்பித்திருக்கிறேன் 🙂

    Like

  10. பட்டுக்கோட்டைப் பண்பாளர்!
    http://vikatandiary.blogspot.com/2011/01/blog-post_03.html

    மாதவன் சார் – பி.கே.பி.
    http://ungalrasigan.blogspot.com/2011/01/blog-post.html

    Like

  11. பின்னோக்கி, பட்டுக்கோட்டை பிரபாகர் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி!

    ஸ்ரீனிவாஸ், சுட்டிகளுக்கு நன்றி!

    Like

Trackbacks & Pingbacks

  1. இந்திரா சௌந்தரராஜன் « சிலிகான் ஷெல்ஃப்
  2. ஆர்தர் சி. க்ளார்க்கின் அறிவியல் சிறுகதை – ஸ்டார் | சிலிகான் ஷெல்ஃப்
  3. மாடஸ்டி ப்லைஸ் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: