ஆர். சூடாமணி

நண்பர் விஜயன் பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணியைப் பற்றி எழுதலாமே என்று கேட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக நான் சூடாமணியின் இரண்டு கதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஒன்று இணைப்பறவை (நல்ல சிறுகதை), இன்னொன்று பூமாலை. அந்தக் கதைகளை வைத்து அவர் கொஞ்சம் பழைய காலத்து எழுத்தாளர், கலைமகள், பழைய கல்கி, விகடன் பத்திரிகைகளில் எழுதக் கூடியவர், குமுதத்தில் கூட அவர் கதைகள் வராது என்று யூகிக்க முடிந்தது. பெரிதாக ஒன்றும் எழுத முடியவில்லை.

ஜெயமோகன் அவரது டாக்டரம்மா அறை சிறுகதையையும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா. அவரது அன்னியர்கள் சிறுகதையை தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். சரி இது இரண்டும் நெட்டில் கிடைக்குமா என்று தேடினேன். பத்து நாளைக்கு முன்தான் அவர் இறந்து போனார் என்று தெரிய வந்தது. வருத்தமாக இருக்கிறது.

எழுத்தாளர் பா. ராகவன் அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி எழுதி இருக்கிறார். அம்பை சூடாமணியைப் பற்றி இங்கே நினைவு கூர்கிறார். எழுத்தாளர் அனுத்தமா தன் தோழி சூடாமணியைப் பற்றி இங்கே எழுதுகிறார். பேராசிரியை எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி இங்கே. நண்பர் ஜீவி சூடாமணியைப் பற்றி ஒரு அருமையான அறிமுகத்தை எழுதி இருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணன் அவரது ரயில் என்ற சிறுகதையை இங்கே அலசுகிறார்.

சூடாமணி 10.01.1931-இல் சென்னையில் பிறந்தாராம். கிட்டத்தட்ட எண்பது வயதில் இறந்திருக்கிறார். பாட்டி ரங்கநாயகி அம்மாள், சகோதரி ருக்மணி பார்த்தசாரதி ஆகியோரும் எழுத்தாளர்களாம். இளம் வயதிலேயே அம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றியதாம். பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை. 1954 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறாராம். 1957-இல் அவரது முதல் சிறுகதையான காவேரி கலைமகள் வெள்ளி விழாப் பரிசை வென்றது. 1959-இல் மனதுக்கு இனியவள் என்ற நாவலுக்கு கலைமகள் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஐயர் விருது கிடைத்திருக்கிறது. 1961-இல் இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றிருக்கிறது. இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது நான்காவது ஆசிரமம் என்ற சிறுகதைக்காகப் பெற்றார். 2001-இல் வெளியான ஆர். சூடாமணி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது. 2009-இல் கலைஞர் பொற்கிழி விருது வென்றிருக்கிறார். அது பற்றி திண்ணை தளத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் –

ஐந்தாம் விருது ஆர். சூடாமணி அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து எழுதி வருகிறார். பெண்கள் உலகம். அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர் கதைகளிலும் நாவல்களிலும் விரியும். சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன உளைச்சல்கள். நான் படித்த வரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள் அறியார்கள் என்று நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும் இருந்தன. அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய பெண்ணியம் ஆட்சி செய்யும் காலத்தில் ஆர். சூடாமணியைப் பற்றி என்ன கவலை? அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம்தான்.

பிற்சேர்க்கை: நண்பர் விஜயன் எழுத்தாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான திலகவதி குமுதத்தில் எழுதி இருக்கும் அஞ்சலியைப் பற்றி சொல்லி இருக்கிறார். அங்கே அவரது ஃபோட்டோ ஒன்றும் கிடைத்தது. திலகவதியின் வார்த்தைகளில்:

ஆர்.சூடாமணி அமைதியானவர். அவரது அப்பா ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர். இவரது வீடும் பிரிட்டீஷ் காலத்தில் உறைந்துவிட்ட வீடு மாதிரி இருக்கும். வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்தக் காலத்து மர அலமாரிகள். அதில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள். சமீப காலங்களில் வந்த ஒரு புத்தகத்தைக்கூட அதில் பார்க்க முடியாது. அவர் வைத்திருந்த கார் கூட அந்தக் காலத்து மாடல்.

அவரது இயல்புகளில் மறக்கமுடியாதது, பார்வையற்றவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி தான் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கும் படித்துக் காட்டுவார்.

வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்.

நன்றி, குமுதம்!

யாரிடமாவது ஏதாவது புஸ்தகம் இருந்தால் இரவல் கொடுங்கப்பு!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
சூடாமணி பற்றி ஜெயமோகன்
விக்கி குறிப்பு
பா.ரா.வின் அஞ்சலி
சூடாமணியைப் பற்றி அம்பை
சூடாமணியைப் பற்றி அனுத்தமா
எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி
சூடாமணி பற்றி பிரபஞ்சன்
ஜீவியின் அறிமுகம்
விமலா ரமணியின் அஞ்சலி
பாவண்ணன் ரயில் சிறுகதையை அலசுகிறார்
சூடாமணி கதைகளைப் பற்றி கோபி ராமமூர்த்தி
அழியாச்சுடர்கள் தளத்தில் இரண்டு சிறுகதைகள் – இணைப்பறவை, பூமாலை

21 thoughts on “ஆர். சூடாமணி

 1. குமுதம் இதழுக்கு என்னவோ ஆகிவிட்டது.இன்று வந்த குமுதத்தில் திருமதி சூடாமணி அவர்களுக்கு திருமதி திலகவதி எழுதிய ஒரு அற்புதமான அஞ்சலியை வெளியிட்டுள்ளது.நன்றி திலகவதி அம்மா,நன்றி குமுதம்.

  Like

 2. ஆர். சூடாமணி
  =============
  எப்படி ஆரம்பிக்கிறார், எப்படி முடிக்கிறார் என்று தெரியாது. கதையின் முதல் வரியிலேயே அந்த சுவாரஸ்யம் நம்மைப் பற்றிக் கொண்டு விடும். அப்புறம் அவர் கூட்டிச் செல்கிற வழியில் அவர் கைப்பிடித்து போவது போலத்தான் இருக்கும். கதை முடிந்த பொழுது, மனத்தில் தைக்கிற மாதிரி அழகாக, அற்புதமாக ஒரு கருத்தைச்சொல்லி, பற்றிய கையை விட்டு விட்டுப் போய்விடுவார். நமக்கு அவர் சொன்ன விதமும், சொன்ன கருத்தும் லேசில் மறக்காது. அவர் சொல்கிற மாதிரி நாமும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் எழும். அதைத் தொடர்ந்து அடுத்த தடவை அவர் கைப்பற்றல் எப்பொழுது கிடைக்கும் என்கிற ஏக்கம் மனசில் எழும். அந்த அடுத்த தடவை வாய்க்கும் பொழுது, இன்னொரு அனுபவம் அழகாகக் கிடைத்து மனசை மயக்கும். தேடித் தேடி வாழ்க்கையில் தான் கண்ட செய்தியை ஒவ்வொரு கதையிலும் அழகாக நம் நெஞ்சில் பதித்தவர் எழுத்தாளர் சூடாமணி அவர்கள். ஒவ்வொரு கதையும் மனசின் நுண்ணிய உணர்வொன்றைத் தூண்டிவிட்டுப் போனது தான் ஆச்சரியம். சில உணர்வுகள் கூட இவர் சொன்னதும் தான் புரிப்பட்டது என்பதும் உண்மை.

  இணைப்பறவை என்றொரு கதை. இன்னும் நினைவில் இருக்கிறது. வயசான தாத்தா. மனைவியைப் பறிகொடுத்தவரின் துக்கத்தை சம்பிரதாயமாக விசாரிக்க வருவோரிடம் இவர் அவர்களைப் பற்றி குசலம் விசாரித்து பேச்சை மாற்றுகிறார். பாட்டி இறந்த பொழுது ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை இந்தத் தாத்தா. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் உணர்வை வெளிப்படுத்துகிற மாதிரி தாத்தாவைப் பார்க்கிற பார்வை தான் கதை. ‘வாய்விட்டு அழுதுவிட்டார் என்றால் துக்கச்சுமை குறைந்து விடும், பாவம், அப்பா’ என்பார் பிள்ளை. அவர் மனைவி, ‘அது என்ன துக்கமோ? ரொம்ப அழுத்தந்தான்.. இப்படிக்கூட இருப்பார்களா? ஆயுசுயெல்லாம் கூடவே இருந்தவள் போய்விட்டாளே என்று துளிக்கூட இல்லை; இந்த ஆண்களை நம்பவே கூடாது’ என்று தான் போய்விட்டாலும் தன் புருஷன் இப்படித்தான் இருப்பான் போலும் என்கிற தோரணையில் பேசுகிறாள். சந்தர்ப்பம் கிடைத்த பொழுது, இறந்து போன மாமியாருக்கும் தனக்கும் சில விஷயங்களில் ஒத்துப்போகாதது, மாமியாரின் குணத்தினாலேயே’ என்கிற மாதிரியும் புருஷனிடம் அவள் சுட்டிக்காட்ட, அவர் இவளை சமாதானப்படுத்துகிறார். தாத்தாவின் பேரனுக்கு திருமணம் ஆகி ஒருமாதம் தான் ஆகிறது. அவன் மனைவி பிறந்தகத்தில் இருக்கிறாள். அவளும் இறந்து போன பாட்டி-தன் மாமியார் உறவின் அடிப்படையில், தனக்கும் தன் மாமியாருக்குமான உறவு இருக்குமோ என்று தன் உணர்வில் இந்தக் குடும்பத்தைப் பார்க்கிறாள். தாத்தாவின் வயது வந்த பேத்திக்கு மட்டும், தாத்தாவின் ஆழ்மன துக்கம் புரிகிறது. பாட்டியை மனத்திற்குள்ளேயே வைத்து தாத்தா எப்படி துக்கிக்கிறார் என்று அவளுக்குத் தெரிகிறது. மனைவி இறந்த சில நாட்களில் ஏற்படும் தாத்தாவின் இறப்பு அவருக்கும் அவர் மனைவிக்குமான உறவின் ஆழத்தை எல்லோருக்கும் புரிய வைக்கிறது. மனிதர்கள் பிறரைப் பற்றியதான உணர்வுகளில் கூட தங்களையே பிரதானப்படுத்திக் கொள்ளும் போக்கை மெல்லிய இழை போலவான நெசவில் சொல்ல வந்த கதை இது.

  சூடாமணி அவர்களின் முதல் நாவல் ‘மனதுக்கு இனியவள்’. அதைத் தொடர்ந்து நிறைய எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதினார். ஆக, இன்ன பத்திரிகை என்று இல்லாமல், இவர் எழுத்துதான் நமக்கு அடையாளமாயிற்று. புரட்டியதும், பெயர் கண்ணுக்குத் தட்டுப்பட்ட மாத்திரத்தில், ‘இப்பொழுது என்ன எழுதியிருக்கிறாரோ’ என்று தெரிந்து கொள்ளத் துடிக்கிற துடிப்பை ஏற்படுத்துகிற எழுத்து அவரது. எந்த நேரத்திலும் அவர் நம்மை ஏமாற்றியதில்லை.

  துள்ளித் தெறிக்கும் படாடோபமில்லாத அமைதியான ஆனால் ஆழமான எழுத்து நடை அவரது. மனித மனத்தின் மெல்லிய உணர்வுகளை மயிலிறகால் வருடி காட்டுற மாதிரி காட்டுகிற தருணத்தில் பளிச்சென்று நமக்கு அவர் சொல்ல வந்தது புரியம். தான் பேசாமல், சம்பவங்களின் மூலமும், கதை மாந்தரின் உரையாடல் மூலமாகவும் சொல்லக் கூடிய சாதுர்ய எழுத்தாற்றல் படைத்தவர் அவர். அதனால் தான் நினைப்பதைச் சொல்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட ‘கதைரூபம்’, கதைகளுக்கென்றான இலக்கணத்தைக் காப்பாற்றிக் கொண்டு சோடைபோகாமல் மிளிரும்.

  நான் இரயிலில் பயணிக்கிற காலங்களில் கிடைக்கின்ற ரயில் சிநேகங்களில் சூடாமணியின் ‘ரயில்’ என்னும் சிறுகதை நினைவுக்கு வராமல் இருக்காது. ரயில் பெட்டியொன்றில் பயணிக்கும் நாலைந்து குடும்பத்தினருக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய அவரவருக்கான வாழ்க்கையைப் பற்றியதானதும், குடும்ப உறவுகளைப் பற்றியதுமான பிரத்யேக பிரச்னைகள். ரயில் கிளம்புகிறது. கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் தங்கள் தங்கள் உணர்வுகளில் இன்னொருவர் படும் மன உளைச்சலுக்கு தாம் எவ்வளவோ பரவாயில்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது. அவரவருக்குத் தெரிந்த அல்லது அனுபவப்பட்ட அளவு தான் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் அமைகின்றன என்றும் இன்னொருவரின் ஆலோசனைகள் அவரவர் கொண்டிருக்கிற தீர்வுகளின் எல்லைகளைத் தாண்டி சிந்திக்க உதவிடும் என்றும் தெரிகிறது. மனம் விட்டுப் பேசிக் கலக்கையில் சிலருக்கு பளுவேறிய சுமை இறங்கி இலேசான உணர்வு கிடைக்கிறது. இன்னொருவரின் அலசலில் கிடைத்த சாத்தியங்களும், சமாளித்து விடலாம் என்கிற உற்சாகமும் அசாதரணமாகத் தெரிகிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படுவது போலவே மனப்பயணமும் ஒரு முடிவிலிருந்து இன்னொன்றிற்கு என்று ஆகிறது. ஆயிரம் துன்பங்கள் அண்டியும், உண்மையைக் கைவிடாத அரிச்சந்திரனின் முகத்தில் அவன் அடைந்த துன்பங்களின் சாயலே இல்லாத சத்தியப்பிரகாசம் ஒளிவிடுமாம. இந்தக் கதையில் அரிச்சந்திரனின் அந்த உண்மை முகத்தைத் தரிசித்த விதத்தை அழகாகச் சொல்வார் சூடாமணி.

  சூடாமணி தம் கதைகள் மூலம் யதார்த்த வாழ்க்கையின்
  மனச்சிக்கல்களிலிருந்து விடுவித்து சுலபத்திற்கு வழிகாட்டுகிறார் என்று தாராளமாய்ச் சொல்லலாம். ‘பூமாலை’ என்றொரு சிறுகதை. இளம் வயதில் சித்தியின் கொடுமைகளுக்கு ஆளானவள், வளர்ந்து மணமாகி நல்ல நிலைக்கு வந்த பின்பும் சித்தியின் மேல் மாறாத வெறுப்பு கொண்டிருக்கிறாள். சித்திக்கு இருதய கோளாறு; வால்வு மாற்று சிகித்சைக்காக பொருளாதார உதவிகோரி சித்தியின் மகனிடமிருந்து கடிதம் வருகிறது. மனப்போராட்டம். ஏழு வயதில்
  நடந்த கொடுமைகளை ஐம்பது வயதிலும் நினைவு வைத்துக் கொண்டு மருகுவது நியாயமில்லை என்கிறது அவளது இன்னொரு மனது; வெறுப்பு–கசப்பு என்பதெல்லாம் மனத்தில் மண்டும் குப்பை கூளங்கள். அவற்றை ஒரே வீச்சில் பெருக்கித்தள்ளித் துப்புறவாக்கி, சுத்தமான இடத்தில் நினைவுகளாகிய பூக்களை வை; மக்கிய நாற்றம் நீங்கி பூமணம் கமழும் பார்!’ என்கிற அவளின் அந்த நல்ல மனத்தின் குரலுக்கு செவிசாய்த்து அதை அனுபவித்துப் பார்க்கிறாள் அவள். மனவியாகூலங்களைச் சுமந்து கொண்டு புழுங்குவதும் ஒரே மனம்; அந்தப் புழுங்கலுக்குத் தீர்வு சொல்லி புழுங்கலைத் தீர்த்து வைத்து மகிழ வைப்பதும் அதே மனம் என்று மனத்தின் விருப்பு வெறுப்புகளை மனமே மனத்திற்குச் சொல்கிற மாதிரி, தானே தனக்கு எழுதிக் கொள்ளும் கடிதபாணியில் இந்தக் கதையை வார்த்தெடுத்திருப்பார் சூடாமணி.

  சூடாமணி அவர்கள் ஆங்கிலப் புலமையும் மிக்கவர். ஆங்கிலத்தில் எழுதும் பொழுது ராகவன் சூடாமணி என்கிற பெயரில் எழுதுவார். அவரது நாவல் ஒன்று ‘யாமினி’ என்கிற பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளரே.

  ஆனந்த விகடனிலோ, அல்லது கல்கி தீபாவளி மலர் ஒன்றிலோ அவர் புகைப்படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. சூடாமணியின் எழுத்தைப் போலவே அவர் முகமும் மறக்கவில்லை. நல்ல சிந்தனைகளை மனசில் விதைக்கும் முயற்சியில் தம் எழுத்தை பயன்படுத்திய சூடாமணி அவர்கள் தமிழ் எழுத்துலகால் மறக்க முடியாதவர் என்பது காலமும் ஊர்ஜிதப்படுத்திய ஒன்று.

  ‘சூடாமணியின் கதைகள்’ என்கிற பெயரில் ராஜராஜன் பதிப்பகம் அவரது சிறுகதைகளின் தொகுப்பொன்றை வெளியிட்டிருக்கிறது. அவர்கள் முகவரி:
  19. கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை-17

  http://jeeveesblog.blogspot.com/2010/04/blog-post_22.html

  Like

  1. ஸ்ரீனிவாஸ், சூடாமணி பற்றி ஜீவி எழுதிய சுட்டியைத்தான் பதிவில் கொடுத்திருக்கிறேனே? எதற்காக அதை மீண்டும் தந்திருக்கிறீர்கள்?

   Like

 3. நான் ரசித்த உவமைகள்-வருணனைகள்
  ===================================
  ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து:

  1. வானத்தில் இரவின் கதவுகள் திறக்க ஆரம்பித்து உள்ளிருக்கும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல காட்சிக்கு வரலாயின. பிறகு நல்ல இருட்டில் விண்ணிலும், மண்ணிலும் விளக்குக் கற்றைகள் பளிச்சென்று பூத்தெழுந்தன.

  – ‘அரிசி விலையில் திருமணங்கள்’ கதையில்.

  2. வருஷங்கள் செல்கின்றன என்றால் இன்பங்கள் செல்கின்றன என்றுதானே அர்த்தமாகிறது? அன்பானவர்கள் மறைகிறார்கள். அழகானவை சிதைகின்றன. கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு துன்பத்தை, ஒவ்வொரு நிராசையை, ஒவ்வொரு நாசத்தை மனதில் பொருத்திவிட்டுச் செல்கிறது. வருஷங்களூடே நினைவுச்சுமை அதிகரிக்கிறது. நினைவு எல்லாம் கானல் நீர். ஆறுதலுக்காக அதை அணுகினால், துன்பமாகக் காட்சி அளிக்கிறது. போய்விட்ட இன்பங்களால் வறண்ட உள்ளத்தை வாட்டுவதுதான் நினைவு.

  – ‘ஒன்றே வாழ்வு’.

  3. அப் பெண் மாநிறம். விசிறி போன்ற விரிந்த ரப்பை மயிரின் பின்னால் இரு கருவிழிகள். எண்ணெய் அறியாத வறண்ட கூந்தல்.அதிக உயரமோ சதையோ இல்லாத மென்மையான இளம் தேகம். வயதிற்குரிய ஒரு இயற்கையான பொலிவு. ஆனால் நீளமும், அகலமும் அற்ற அச் சிறு வடிவம் ஆழத்தினால் ஆக்கப்பட்டது போன்ற பிரமையை உண்டாக்கியது.

  – ‘பாசமும் பயனும்’.

  4. தன்னைச் சுற்றித் தெறித்த முரணின் பொறிகளிலிருந்து நீலாவுக்கு, இந்த நெருப்பு எப்படி இத்தனை வருஷங்களான பின்னும் ஆறவில்லை என்று வியப்பாக இருந்தது. கிழவர்களின் அமைதியான பரஸ்பர அலட்சியத்தைப் பார்த்து, ஆழமான அன்பைப் போலவே ஆழமான வெறுப்பும் நிலையானதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.

  – ‘சந்திப்பு’.

  5. ஒரு கணம் முகுந்தன் அவள் முகத்தை மனதில் பதித்துக் கொள்பவன் போல் மௌனமாய் உற்று நோக்கினான். பார்வையும் குரலும் பூக்களாய் அவன் மேல் உதிர்ந்தன.

  – ‘அடிக்கடி வருகிறான்’.

  6. அவள் அழகியா இல்லையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த அழகு அது. ஒவ்வொருவரும் தம்தம் மனோபாவத்துக் கேற்ப அர்த்தமிட்டுக் கொள்ளத் தக்க பலமுகக் கவிதை போன்ற அழகு.

  – ‘நான்காம் ஆசிரமம்’.

  7. காட்டராக்ட் கண்ணாடிக்குப் பின்னேயும் குளிர்ச்சி மாறாத பார்வை. சாப்பாட்டு நேரம் போக மற்ற சமயங்களில் பொய்ப் பற்களைக் கழற்றி வைத்து விட்டுப் பொக்கை வாயோடு சிரிக்கும் சிரிப்பு. இன்னும் அடர்த்தி குன்றாத நரை முடியில் சாம்பல் ‘பிரமிட்’. மாநிற……. – வர்ணிப்பானேன்? இவற்றிலா மாமா அறியப்படுகிறார்? இவை மாமாவுடையவையாதலால் இவை அழகுடையவை; பொருடையவை.

  – ‘ரோஜா பதியன்’.

  8. அன்பு மகா பயங்கரமான ஒரு நெருப்புக்குச்சி. அது இரண்டு ஆத்மாக்களைக் கொளுத்தி உருக்கி ஒன்றாக இணைத்து வார்த்து விடும்.

  – ‘அத்தை’.

  9. வண்டி ஓட்டத்தினால் உள்ளே வீசிய காற்றையும் மீறி அவர் முகத்தில் வேர்வை மின்னியது. ஒவ்வொரு வேர்வைத் துளியும் ‘பெண்ணின் தந்தை’ என்று பறை சாற்றுவது போல இருந்தது.

  – ‘புவனாவும் வியாழக் கிரகமும்’.

  10. ஈட்டிகளாய்ப் பார்வைகள் அவளைத் துளை செய்தன. பெண் பார்வைகள், ஆண் பார்வைகள்- அவளைப் பார்த்த யாவருமே, அவளது முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று சொல்லி விட முடியாது. கண்ணாலேயே கற்பழிக்கும் கிழங்கள்.

  – ‘பன்மை’.

  – வே.சபாநாயகம்.
  http://ninaivu.blogspot.com/2005/06/41.html

  Like

 4. சூடாமணி – ந.வினோத்குமார், படம் : எம்.உசேன்

  ”அவள் விரிவு, அவள் முழுமை, அவள் பெருக்கம் – அவற் றைப் பிறப்பு உரிமைகளா கக் கேட்கும் முதிர்ச்சியல்லவா அவளுடை யது? அவளை எதிலும் அடைக்க முடியாது. தளைப்படுத்த முடியாது. அவள் ஒரு சுதந்திர ஜீவன். சிறையும் விடுதலையும் நாமாக ஆக்கிக்கொள்வதுதானே? அவள் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஜீவன்!’

  – எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ கதையின் வரிகள் இவை. கிட்டத்தட்ட அவரும் இப்படியாகத்தான் வாழ்ந்தவர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் எழுத்துலகில் தனக்கென அழுத்தமான தடம் பதித்தவர் சூடாமணி. சிறு வயதில் தாக்கிய அம்மை நோயின் பாதிப்பு, கை, கால்களின் எலும்பு வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பு குறித்த கேள்விகளையும் பார்வைகளையும் எதிர்கொள்ளத் தயங்கி, வீடெனும் கூட்டுக்கு உள்ளேயே தன் உலகை அமைத்துக் கொண்டவர் சூடாமணி. ஆனால், அவர் படைத்த சிறுகதைகள் மனித மனத்தின் விசித்திரங்கள் மீது எல்லை கடந்து ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சின!
  img: சூடாமணி பாரதி
  சிறுகதை, ஓவியம் மீது ஆர்வம்கொண்டு இருந்த சூடாமணி, தான் இறப்பதற்கு முன் 10 கோடி மதிப்பு உள்ள சொத்துகளைத் தானமாக வழங்கி இருக்கிறார். அவருடைய 4.5 கோடி மதிப்பு உள்ள வீடு மற்றும்வம்சா வழியாக வந்த சுமார் 6 கோடி மதிப்பு உள்ள சொத்துகளை, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி, ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனை, வி.ஹெச்.எஸ். ஆகிய அமைப்புகளுக்குத் தானமாகக் கொடுக்கச் சொல்லி உயில் எழுதிவைத்து இருக்கிறார். இந்தச் சொத்துக்களின் விற்பனை மற்றும் விநியோகத்தின் பொறுப்புகளை நீதிபதி சந்துருவின் மனைவி பேராசிரியர் பாரதியிடம் ஒப்படைத்திருந்தார் சூடாமணி. 2010-ல் சூடாமணி இறந்த பிறகு, வீட்டை விற்றுக் கிடைத்த 4.5 கோடியை 2011-ல் மூன்று அமைப்புகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கிய பாரதி, 6 கோடியை கடந்த வாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங் களுக்கு வழங்கினார்.

  சூடாமணியுடன் தனக்கு இருந்த நெருக்கம்பற்றி மனம் திறந்து பேசினார் பாரதி. ”25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ‘கல்கி’யில் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, சூடாமணியம்மா கதைகள் எழுதி அனுப்பு வாங்க. கதைக் கட்டுக்குள்ளேயே ஒரு கவரும் வெச்சு அனுப்புவாங்க. ஒருவேளை கதை நல்லா இல்லைன்னா திருப்பி அனுப்பும் சிரமத்தை நமக்கு கொடுக்கக் கூடாதுனு அப்படிப் பண்ணுவாங்க. அவங்களோட ஒவ்வொரு கதை வந்ததும் படிச்சிட்டு, ‘ரொம்ப நல்லா இருந்தது’னு உடனே நான் தொலைபேசியில் பாராட்டுவேன். அப்படித்தான் சூடாமணியம்மா எனக்குப் பழக்கம்!

  வீட்ல வெச்சே சூடாமணியம்மாவுக்கு அவங்க அம்மா கனகவல்லி, படிப்பு, ஓவியம் சொல்லிக் கொடுத்தாங்க. வீடே பள்ளி என ஆன பிறகு, எப்பவும் வாசிச் சுட்டே இருப்பாங்க சூடாமணியம்மா. நிறைய எழுத ஆரம்பிச்சாங்க. அவங்க முதல் கதை ‘பரிசு விமர்சனம்’ 1954-ல் வெளியாச்சு. விகடனில் முத்திரைக் கதை கள்ல அவங்க கதை வந்திருக்கு.

  நல்ல செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்தாலும், காந்திய வழியில் வாழ்ந்தாங்க சூடாமணியம்மா. சகோதரிகள் மூணு பேர் இறந்த பிறகு, அவங்க தனி மனுஷியாகிட்டாங்க. எழுத்து, புத்தகங் கள்தான் அவங்களுக்குத் துணையா இருந்துச்சு. அவங்க அம்மா கனகவல்லியிடம் இருந்த நெட்டிலிங்கம் மர சரஸ்வதி சிலைதான் எப்பவும் அவங்களுக்குத் துணை. வீட்டில் இருந்து மெரினாவுக்கு காரில் பயணம்… காருக்குள் உட்கார்ந்துக்கிட்டே கடற்கரையை ரசிப்பது… இதுதான் அவங்களோட ஒரே பொழுதுபோக்கு.

  2006-ல் இந்த உயிலை எழுதினாங்க சூடாமணியம்மா. அப்பவே எனக்கு இந்த சரஸ்வதி சிலையையும் பரிசாக் கொடுத்துட்டாங்க!

  அம்மா என்னை நம்பி ஒப்படைச்ச பொறுப்பை முடிச்சிட்டேன். ஆனா, இதோடு என் வேலை முடியலை. அவங்ககிட்ட இருந்த புத்தகங்களை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்குக் கொடுத்துட்டோம். அவங்களைப்பத்தி ஓர் ஆவணப் படம் எடுத்திருக்கேன். அவங்க எழுதின மொத்தக் கதைகளையும் ஒரே தொகுப்பாக் கொண்டுவரும் எண்ணம் இருக்கு.

  சூடாமணியம்மா வரைஞ்ச ஓவியங்களை சில மாதங்களுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்தோம். அந்த ஓவியங்களின் விற்பனை மூலம் வரும் தொகையையும் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, ‘1950-60கள் காலகட்டத்தில் பெண்கள் வரைந்த ஓவியங்கள்னு எதுவுமே இல்லை. இவங்க வரைந்த ஓவியங்கள் எல்லாம் ‘ஆர்க்கியாலஜிக்கல் வேல்யூ’ கொண்டவை. இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை. வித்துடாதீங்க’னு சொன்னாங்க ஆர்ட் கேலரியைச் சேர்ந்த ஓவிய ரசிகர்கள். அதனால, இப்போ அவங்க ஓவியங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கோம்.

  சூடாமணியம்மா தானம் கொடுத்த தொகை, மாணவர்களின் படிப்பு, தொழு நோயாளிகளுக்கான சிகிச்சை, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அறைனு நல்ல காரியங்களுக்குப் பயன்படுது. இன்னும் பல நல்ல விஷயங்களுக்குப் பயன்படும். ‘நீயே என் உலகம்’னு ஒரு கதை எழுதினாங்க சூடாமணியம்மா. அதில் நாயகன், ‘நான் சமர்த்தனான வியாபாரி. பெரும் செல்வத்தைக் கொடுத்து ஏழைகளின் புன்னகையை வாங்கி இருக்கிறேன்’னு ஒரு இடத்தில் சொல்வான். சூடாமணியம்மாவும் அப்படித்தான்!”

  Like

 5. Beyond her writing, she has proved she is good human by donating Rs.2 Cr to VHS, chennai, 2 Cr. to Ramakrsihna Home another 2 Cr to Sri Ramakrishna Free dispensary, Mylapore (Total Rs. 6 Crs.). This is her second trench. This was handed over recently to respective Institution. I belive nearly equal amount was donated earlier.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.