இன்றைக்கு கொஞ்சம் தமிழ் நாட்டை விட்டு வெளியே போய்ப் பார்க்கலாம்.
பைரப்பா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். பர்வா, தாட்டு, வம்ச விருட்சா போன்ற அற்புதமான புத்தகங்களை படித்திருக்கிறேன். கன்னட எழுத்தாளர்களில் இவர்தான் மிகவும் பாப்புலர் என்றும் இவரது புத்தகங்கள் விற்பனையில் டாப் என்றும் என் கன்னட நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.
ஆனால் க்ருஹபங்கா எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. அதில் நான் காணும் குறை அங்கே துன்பங்களும் துயரங்களும் ஒரு for loop மாதிரி போகின்றன.
for (பக்கம் = 1; பக்கம் < கடைசி பக்கம்; பக்கம்++) {
குடும்பம் முழம் சறுக்கும்
சாண் ஏறும்
}
ஒரு நூறு பக்கம் படித்த பிறகு கதை எப்படி போகும் என்ன ஆகும் என்று தெளிவாக தெரிந்துவிடுகிறது.
இப்படி இருக்கும்போது கதை சிம்பிளாகத்தானே இருக்க முடியும்? 1920-40-களில் மைசூர் சமஸ்தானத்தில் நடக்கும் கதை. மூர்க்கத்தனமும் முட்டாள்தனமும் நிறைந்த ஒரு பிராமண விதவை குடும்பம். இரண்டு பையன்கள். முதல் பையன் கிராம கணக்குப் பிள்ளை ஆகும் உரிமை உள்ளவன், ஆனால் படிப்பு கொஞ்சம் ஏனோதானோதான். கொஞ்சம் அசடு. இரண்டாமவன் வெறும் முரடன். நஞ்சம்மா முதல்வனை மணக்கிறாள். அவள் ஒரு கிளாசிகல் "இந்தியத் தாய்." கணவனுக்காக தானே கணக்கு வழக்குகளை பார்க்கிறாள். பிள்ளைகளை படிக்க வைக்கிறாள். குடும்பத்தை உயர்த்த அவள் செய்யும் எல்லா முயற்சிகளும் தோல்வியில்தான் முடிகின்றன. மாமியாரின் மூர்க்கத்தனத்தையும், புருஷனின் வேலை செய்யமாட்டேன், தனக்கு சாப்பாடு இருந்தால் போதும் என்ற சுயநலத்தையும் அவளால் வெல்ல முடியவில்லை.
நாவலின் பலம் பாத்திர சித்தரிப்பு. அந்த மூர்க்கமான அம்மாவும் சரி; அசமஞ்ச புருஷனும் சரி; நஞ்சம்மாவின் பிடிவாதக்கார, வீர தீர அப்பாவும் சரி; நஞ்சம்மாவும் சரி. மிக அருமையாக வந்திருக்கின்றன. சில காட்சிகள் – நஞ்சம்மாவின் அப்பா வினை வைக்கப்பட்டிருக்கும் சிலையை உடைத்து பணத்தை எடுப்பது, பஞ்ச காலத்தில் நஞ்சம்மாவின் மகன் காயை திருடி நஞ்சம்மாவிடம் கொடுப்பது, நஞ்சம்மாவின் மாமியார் மாவை கொண்டு வந்து அவள் மீது கொட்டுவது போன்றவை அபாரம். அந்த காலத்து கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பிளேக் நோயால் கிராமங்கள் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அவர் எழுதி இருப்பது வியப்பாக இருந்தது.
இது ஜெயமோகனுக்கு பிடித்த நாவல்களில் ஒன்று. அவர் எழுதிய விமர்சனம் இங்கே.
புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் எச்.வி. சுப்ரமணியன். பெயரை மறந்துவிட்டேன், நினைவிருப்பவர்கள் சொல்லலாம். தகவல் தந்த பாஸ்கருக்கு நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: பிற இந்திய மொழி நாவல்கள்
தொடர்புடைய சுட்டி:
பைரப்பா – விக்கி குறிப்பு
ஜெயமோகன் க்ருஹபங்காவை அலசுகிறார்