சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) II

முதல் பகுதி இங்கே.

ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி ஒரு அபாரமான விளக்கம் எழுதி இருக்கிறார். இந்த நாவலை எப்படி எப்படி எல்லாம் வாசிக்கலாம் என்று எழுதி இருப்பது அருமை! அவர் சொல்வது போல நாம் இந்த கதையை கங்காவின் கண்களின் ஊடாகவே பார்க்கிறோம். கங்காவின் பார்வையிலும் ஒரு bias இருக்கும் என்பதை நினைவு கொள்ளும்போது கதை வேறு தளத்துக்கே போய்விடுகிறது. அப்படி நினைவு வைத்துக்கொள்வது ஜெயகாந்தனின் எழுத்துத் திறமையால் கஷ்டமாக இருக்கிறது என்பது வேறு விஷயம். கங்கா சீதையின் மறுவடிவம் என்பதும் எனக்கு சரியாகத்தான் இருக்கிறது. கங்கா கற்பிழந்தவளாயிற்றே, சீதை கற்புக்கரசி ஆயிற்றே என்று யோசிக்காதீர்கள், அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை ஆண்களிடம் என்ன உறவு என்பதை நினைத்துப் பாருங்கள். சமூகத்தின் பார்வையில் – ஹனுமான், லக்ஷ்மணன் உட்பட – சீதை இல்லாத ராமனுக்கு ஆளுமை உண்டு, ராமன் இல்லாத சீதை இல்லை. கங்காவுக்கும் அப்படித்தான் ஆகிறது – பிரபு இல்லாத கங்காவாக அவள் வாழ்வது கஷ்டம், வெறுமைதான் மிஞ்சும், அதை அவளும் உணர்ந்துதான் “கான்குபைனாக” இருக்கவும் தயாராகிறாள். அந்த வெறுமையைத் தாண்ட அவளால் முடியவில்லை.

ஜெயமோகனின் வார்த்தைகளில்: (திண்ணை தளத்துக்கு நன்றி!)

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மிதமிஞ்சிப் பிரபலமானதனாலேயே அந்தரங்கமான கூரிய வாசிப்புக்கு ஆளாகாமல் போன நாவல் என்பது என் எண்ணம். அப்படி பிரபலமாகும்போது ‘தீவிர’ வாச்கர்கள் என தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அது உதாசீனத்தை பெறுகிறது. மேலோட்டமாக படிக்கும் பெரும்பான்மை வாசகர்கள் அதை அங்கீகரிக்கப்பட்ட பொதுவான வாசிப்புத்தடத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறார்கள். ஆகவே நல்ல இலக்கியப்படைப்புக்கு அளிக்கப்படவேண்டிய – அப்படி ஒன்றை கோருவது அதன் உரிமையும் கூட – பன்முக வாசிப்பை பெறாமலேயே எளிய முத்திரைகளுடன் அப்படைப்பு நம் முன் நின்று கொண்டிருக்கிறது. இக்கட்டுரையில் ஜெயகாந்தனின் நாவல்களைப் பற்றிய விரிவான வாசிப்பை நிகழ்த்த முற்படவில்லை . இக்கருத்துக்கள் என் நாவல் போன்ற நூல்களில் நான் சொல்லிச் சென்றவையே. இங்கு சில வாசிப்புச் சாத்தியக் கூறுகளை மட்டும் சொல்ல விழைகிறேன். ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ல் வரும் வெங்கு மாமா ஆசிரியரால் தோலுரிக்கப்படும்’ ஒரு கதாபாத்திரமாகவே இன்று வரை படிக்கப்பட்டுள்ளது. அவரை அப்படி சித்திரப்படுத்தும் திரைப்பட வடிவம் அக்கோணத்தை ஆழமாக நிறுவியும் விட்டது. திரைப்படம் என்ற கலையின் எல்லை அது. ஆனால் நாவலில் வெங்குமாமா கங்காவின் கண் வழியாகவே அப்படி காட்டப்படுகிறார். அவரது சித்திரத்தில் கங்காவின் மனத் திரிபுக்கும் இடமுள்ளது , நாவலில் அவ்வாசிப்புக்குரிய எண்ணற்ற இடங்கள் உள்ளன.

‘கற்பை’ இழந்த ஒரு பெண்ணின் சிக்கலாகவே தொடர்ந்து அந்நாவல் படிக்கப்படுகிறது. ஆனால் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம்’ போலன்றி அதன் முதல் தளமே கூட சிக்கலானதுதான். கங்காவின் பல விதமான உளவியல் சிக்கல்கள் ஆன்மீகமான அலைபாய்தல்கள் அந்நாவலில் பல கோணங்களில் முன்வைக்கப்படுகின்றன. மற்ற நாவல்களைப் போலன்றி இந்நாவலில் விவாத அம்சம் குறைவே. பெரும்பாலான விஷயங்கள் வாசகனின் ஊகத்துக்கும் கற்பனைக்குமே விடப்படுகின்றன. கங்காவுக்கும் அவள் அம்மாவுக்கும் இடையேயான உறவின் முரண்பட்ட தன்மையை உணர்த்தும் வரிகளை மட்டும் ஓர் வாசகன் தொகுத்துக் கொண்டானானால் அவனுக்கு கிடைப்பது வேறு ஒரு நாவல். நாவலின் ஆண் கதாபாத்திரங்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதை விட அவர்கள் கங்காவுக்கு ஏன் அப்படி படுகிறார்கள் என்ற வினாவை வாசகன் எழுப்பிக் கொண்டால் கிடைப்பது வேறு ஒரு படைப்பு. பெண்ணை உரிமைகொண்டாடக் கூடியவர்களாக, ஆக்ரமிக்கக் கூடியவர்களாக மட்டுமே இந்நாவலில் ஆண்கள் வருகிறார்கள் என்பது என் வாசிப்பு. வெங்குமாமாவும் பிரபுவும் கணேசனும் எல்லாம் ஒரு நாணயத்தின் மாறுபட்ட பக்கங்களே. மீண்டும் மீண்டும் கங்கா ஆணிடம் ஏதோ ஒன்றை தேடி ஏமாந்து ஆங்காரமும் கண்ணீருமாக வெளியேறிக் கொண்டிருக்கிறாள். ஆண்களே இல்லாமல் அவள் உலகம் இயங்க முடியவில்லை. பெண்ணின் இயல்பான மறு முனையை, முழுமைப்படுத்தும் எதிர்நிலையை ஆண்களிடம் அவள் தேடியிருக்கலாம். அவள் கண்டதெல்லாம் விழுங்கத் திறந்த வாய்களையே. அஞ்சி அருவருத்து அவமானம் கொண்டு அவள் திரும்பி வந்து தன் தனிமையின் கூட்டுக்குள் அடைகிறாள்.

‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ நம் கலாச்சாரத்தில் பெண்ணுக்கு உருவாகும் உக்கிரமான தனிமையைப் பற்றி பேசும் நாவல். என்னுடைய பார்வையில் ஆஷாபூர்ணாதேவியின் [வங்காளி] தொடர்நாவல்களான ‘பிரதம பிரதிசுருதி’, ‘ஸ்வர்ண லதா’ ஆகியவற்றுடன் ஒப்பிடத் தக்க நாவல் இது. தமிழில் பெண் எழுத்தாளர்கள் எவருமே இந்த தளத்தைச் சார்ந்த ஒரு படைப்பை உருவாக்கவில்லை. மீண்டும் மீண்டும் நமது பேரிலக்கியங்களும், நவீன படைப்புகளும் பேசும் கருதான் இது. சீதை இந்த தனிமையின் மிகப்பெரிய ஆழ்படிமம். ஒருபோதும் புரிந்து கொள்ளப்படாதவள். ஆண்களின் உலகில் சதுரங்கக் காயாக அலைக்கழிக்கப்பட்டவள். மண்ணின் பொறுமையும் ஆழமும் அமைதியும் கொண்டவள். கங்காவை ஜெயகாந்தன் அவள் தன் மனதில் உருவான கணத்திலேயே சீதையுடன் அடையாளம் கண்டுகொண்டாயிற்று. பல இந்திய நாவல்களின் கதாபாத்திரங்கள் அப்படி சீதையிலிருந்து பிறப்பு கொண்டவை என்பதை ஆஷாபூர்ணாதேவியின் நாவல்களை ஆய்வு செய்யும்போது பல விமரிசகர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கங்காவின் தனிமையையும் தேடலையும் ‘கங்கை எங்கே போகிறாள்?’, ‘சுந்தர காண்டம்’ ஆகிய இரு நாவல்களாக நீட்டி அவளை கங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கிறார் ஜெயகாந்தன். வேறு முடிவே இந்திய சூழலில் இந்நாவலுக்கு இருக்க முடியாது. சீதை மண்ணுக்கு திரும்பியது போலத்தான் கங்கா கங்கைக்கு மீள்வதும்.

பெரும் வாசகர் வட்டத்தையும் அங்கீகாரத்தையும் அடைந்தாலும் விமரிசகர்கள் விஷயத்தில் ஜெயகாந்தன் துரதிருஷ்டசாலிதான். மோகமுள்ளையும் இம்மூன்று நாவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதை நாம் காண முடியும். மோகமுள் தொடர்ந்து விமரிசகர்களால் பேசப்பட்டு, முக்கியப்படுத்தப்பட்டு , எப்போதுமே ஆழ்ந்த வாசிப்பை பெறும் நிலையில் உள்ளது. ஜெயகாந்தன் நாவல்கள் தற்செயலாக அவ்வாசிப்பை பெற்றால்தான் உண்டு. மோகமுள்ளின் யமுனா முழுக்க முழுக்க ஆண்காமம் மூலமே சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம். அந்நாவலின் சரளம் கொண்ட அழகிய மொழி அதை நம் மனதில் வலுவாக நிறுவி விடுகிறது. அதை விட யமுனாவின் அழகு, நாசுக்கும் கூர்மையும் கொண்ட பேச்சு ஆகியவை வாசக மனதின் உள்ளார்ந்த காமத்தை தூண்டுகின்றன. எல்லா இளம் வாசகர்களும் ஒரு வயதில் யமுனாவை காதலித்திருப்பார்கள் என்று ஒரு இலக்கிய வழக்காறு உண்டு. அந்நவலை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் அந்த மயக்கத்தைத் தாண்டி யமுனாவைப் பார்த்தால் உட்சிக்கல்கள் இல்லாத எளிய கதாபாத்திரமாகவே அவள் தெரிகிறாள். சீரான அமைதியான நதி. மாறாக கங்கா ஓடையாக உருவெடுத்து பாறைகளில் முட்டி மோதி கிளைகள் பிரிந்து தேங்கி வேகம் பெற்று ஆழ்நதியாகி அமைதிகொண்டு கடலை அடைகிறாள்.

ஜெயமோகன் சுந்தர காண்டம் என்ற ஒரு நாவலைக் குறிப்பிடுகிறார். நான் கேள்விப்பட்டதே இல்லை. யாராவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், ஜெயகாந்தன், திரைப்படம் ஆன எழுத்துக்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 • ஆர்வியின் அலசல்
 • ஜெயகாந்தனைப் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2
 • சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்

  ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி சாரதா

 • ஜெயகாந்தனின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”
 • ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர – பகுதி 1 , பகுதி 2, ஈஸ்வர அல்லா தேரோ நாம்
 • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
 • ஜெயகாந்தனின் “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்
 • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து
 • “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்

  ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்

  7 thoughts on “சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) II

  1. >>ஜெயமோகன் சுந்தர காண்டம் என்ற ஒரு நாவலைக் >>குறிப்பிடுகிறார். நான் கேள்விப்பட்டதே இல்லை. யாராவது >>படித்திருக்கிறீர்களா?

   ஜெயகாந்தன் எழுதிய சுந்தரகாண்டம்
   =================================
   “ஓ சீதே “
   ஒரு அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல்.
   ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும்
   எழுத்தாளன் கால வெள்ளத்தில் நீந்தி வந்து மாறிவரும் சூழலில் எழுதிய ஓர்
   நவீனம் இந்த சுந்தர காண்டம்.!

   குங்குமத்தில் தொடராக வந்த காலத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று ,
   பின்னர் அது முடிவடைந்த பின்னர் அதே வீச்சுடன் கேள்வி -பதில் மூலமாகப் பல
   வாரங்கள் விவாதிக்கப்பட்டு , அத்தனை கேள்விகளுக்கும் ஜெயகாந்தன்
   பதிலிறுத்தார்.பின்னர் இது புத்தகமாக வெளிவந்த பொழுது
   வழக்கம்போல் அவர் எழுதிய முன்னுரையைப் பார்ப்போம்.

   “இந்தக்கதையின் மூலம் நான் நமது பெண்களுக்கு என்னென்னனவோ
   சொல்ல முயல்கிறேன் .அவை புத்திமதிகளல்ல.அவற்றால் ஏதும் பயனிராது என்பதை
   நான் அறிவேன்.ஆயினும் நமது பெண்கள் அறிய வேண்டிய
   நம்மைப்பற்றிய உண்மைகள் நிறைய உள்ளன.

   அதாவது பெண் என்பவள் அவளே சில சமயங்களில் எண்ணி மயங்குவது போல அவள்
   தனிப்பிறவி அல்லள்.அவள் ஆணின் பாதி. அவள் காதல் வயப்பட்டிருந்தாலும்
   கல்யாணம் பண்ணிக் கொண்டிருந் தாலும் ,இந்தத் தளைகளில் தன்னைப் பிணைத்துக்
   கொள்ளாத சுதந்திரப் பறவையாக வாழ நேர்ந்தாலும் அவள் நமது சமூகப்
   பதுகாப்புக்கு உட்பட்டவள்தான். காதலும், கல்யாணமும் , குடும்ப
   வாழ்க்கையும் ஏதோ தான் சம்பந்தப்பட்ட தனி விவகாரம் என்று எண்ணுகிற
   பெண்தான் பேதை. அது சமூகம் சம்பந்தப்பட்டது என்று அறிவிப்பதே இந்தக்
   கதையின் முதல் நோக்கம்..

   பெண்களே !

   நீங்கள் உங்கள் தந்தையென்றும், காதலன் என்றும், கணவன் என்றும்
   நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார் ?
   அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள்.அவர்கள் கொடுமைக்காரர்கள்.
   பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள்.பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து
   உழுது மிதித்து அகழ்ந்து தூர்க்கிறவர்கள்.உங்களை அவர்கள் வேண்டாத சுமையாக
   எங்கேயேனும் தள்ளிப் போடவே விரும்புகிறார்கள். தலையில் வந்து
   விடிந்துவிட்டதாக இறக்கிப் போட்டு
   ஏற்றி எறிகிறவர்கள் . மாட்டை வணங்குகிற மரபு போல் உங்களை லட்சுமீகரமாக்கி
   அவர்கள் தொழுவார்கள்.நேரம் வரும் பொழுது தெரியும்,
   இந்த கசாப்புக் காரர்களின் காதல் லட்சணம் .

   மதிப்புக்கும் அன்புக்கும் உரிய உங்கள் இனிய பாதியான ஆண்மகன்
   இந்த வசை எய்து வாழ்வது எதனால் ?வசைக்குரிய ஒரு சமூகத்தின் அடிமையாக
   வாழ்கிறானே .அதுபற்றிய ப்ரக்ஞையற்று தான் ஒரு எசமானன் என்று உன்னிடம்
   வந்து ஒரு அடிமை அதிகாரியைப் போல்,
   சுரண்டல் வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறானே அதற்கெல்லாம் காரணம்
   அவனது சமூகத் தொடர்பேயாகும்.

   சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவது மட்டுமல்ல , அது
   தந்தையாய், சகோதரனாய்,சக்தி வாய்ந்த பெரிய மனிதனாய் , காதலனாய், கணவனாய்
   ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகணித்துச் செய்யும் அட்டகாசங்களைத்
   திமிர்ந்த ஞானச் செருக்குடைய பெண்களேயன்றி வேறு யார் அறிவார் ?

   இளம்பெண்களே ! காதல் என்ற பெயரிலும் கல்யாணம் என்ற பந்தத்திலும்
   இந்த சமூக மனிதனிடம் மோசம் போய்விடாதீர்கள் என்று எச்சரிக்கிறது
   இந்தக் கதை.அப்படிப்பட்ட பந்தங்கள், ஒரு சமூக விரோதியோடு
   ஏற்படுத்திவிடுகிற பட்சத்தில் அது உங்களைக் கட்டுப்படுத்தலாகாது என்று
   உங்கள் சார்பில் அனைவரையும் போராடச் சொல்கிறது இந்தக் கதை.
   உங்களை அந்த சமூக விரோதிகள் சிறையெடுப்பினும் , சீர் கெடுப்பினும்
   உங்களின் நிறையை அழிக்க அவர்களால் ஒண்ணாது என்று இக்கதை
   எடுத்து ஓதுகிறது.”

   ராவணன் என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் -பலவித உத்திகளுடன்
   சொல்லப் புகுந்த ஒரு கதை .. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னமே இந்த
   மாபெரும் எழுத்தாளனால் கையாளப்
   பட்டது என்பதே இதன் பெருமை. ஒரு வேளை என்றோ இக்கதை படிக்கப் பட்டு
   விழுந்த விதை அப்படி ஓர் மரமாகியும் வந்திருக்கலாம். சில நேரங்களீல்
   வெவ்வெறு மனிதர்களிடம் வெவ்வேறு காலங்களில் ஒத்த
   கருத்துள்ள படைப்புகளும் தோன்றலாம். ராஜ ராஜ சோழன் விருது
   இக்கதைக்குக் கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமை.

   இனி கதையினைப் பார்ப்போம்
   “நீ எங்கிருக்கிறாய்?”என்ற சோகமான அலறல் பூமியிலிருந்து கிளம்பி
   ஆகாசத்திலும் பூமியிலும் மோதி எதிரொலிக்க “மூர்ச்சையானான் “ என்று
   ஆரம்பமாயிற்று அந்தக் கதை.

   அவள் கண்களில் கொப்பளித்துச் சுரந்த கண்ணீர்த் திராவகத்தில் அந்த
   எழுத்துக்கள் மறைகின்றன. காவிய சோகம் திரையிடுகிறது.
   மீண்டும் தொடர்ந்து படிக்கின்றாள்

   அவன் மூர்ச்சை தெரியாமல் வெறித்த விழிகளுடன் திசைகளை அளந்த பார்வை நிலைக்
   குத்திப் போக, விழுந்து புலம்புகின்றான்.

   வைதேகி .. உன் அணிகலன்களெல்லாம் இந்த மண்ணில் விழுந்து கிடக்கின்றன. ..
   இரத்தினங்களும் முத்தும் வேண்டாமென்று உதறிப் பெண்மையின் அணிகலன்களை
   மட்டும் தரித்துக் கொண்டவளே, நீ எங்கிருக்கிறாய் ?

   துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும் கண்களில் தேங்க வானத்தை நோக்கித்
   தீனமாய், அவலமாய்ப் பெருமூச்செறியும்
   கோடானு கோடிப் பாரதப் பெண்களில் நீ யாராக, எந்த காராகிருகத்தில்,
   எவர் காவலில் எங்கு கட்டுண்டு கிடக்கிறாயோ ?

   ஏ,பூமியின் புதல்வியே, உனக்குத் தாயில்லை, தந்தையில்லை, உடன்பிறப்பில்லை,
   உற்றாருறவினர் இல்லை, உனக்கு சாதி இல்லை, மதம் இல்லை , குலம் இல்லை,
   கோத்திரம் இல்லை , நாடு இல்லை மொழி இல்லை , எல்லையற்ற துன்பமே !நீயே
   சீதை !இறுதி காணாச் சோகமே,
   நீயே சீதை !

   புலம்பல் தொடர்கின்றது. தாயின் குரல் கேட்கவும் அவள் சுய நிலை
   அடைகின்றாள். காவியக் காட்சிகள் மறைந்து கண்ணீர் கொட்டுகின்றது.
   இவள் தான் கதையின் நாயகி சீதா.

   ஒரு ஜன ரஞ்சகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியரின் பெண் சீதா.
   கல்லூரிப் படிப்பு படிக்கும் இவள் முற்போக்கான எண்ணம் கொண்டவள்.
   பெண்கள் ஏதோ ஆண்களின் போகப் பொருள் அல்லள் என்பதில் உறுதியாக இருப்பவள்.

   பகலில் ஆசாரம், மாலையில் மது, என இரட்டை வாழ்க்கை வாழும்
   தந்தையின் பணத்தாசைக்குப் பலியாகி மனைவியை இழந்த ஒரு தொழில் அதிபருக்கு
   மணமுடிக்கப்படுகிறாள் சீதா. முதலிரவன்றே “ என் அனுமதியின்றி என்னைத்
   தீண்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் “எனச் சொல்லிய அவள் முடிவை
   நாட்பட நாட்படச் சரியாகும் எனச் சிரித்துக் கொண்டே அனுமதித்து விட்டு மது
   அருந்திவிட்டு , தன் வயதானத் தாய்க்கு நர்ஸாகப் பணிபுரியும்
   இளம் விதவையுடன் வழக்கம் போலப் படுக்கச் சென்று விடுகின்றான்.
   சீதாவுக்கு ஒரு சில மாதங்கள் கழித்தே இது தெரிய வருகிறது.
   கணவனுடன் விவாதங்கள், அதன் பின்னர் அப்பா ஏற்று நடத்திய பத்திரிகையின்
   ஆசிரியராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்த ஆரம்பித்துவிடுகின்றாள்.

   கதைக்குள் கதையாக இன்னொரு கதை வேறு.
   ருஷ்ய நாட்டில் ஒரு கிராமத்துப் பெண் காதலனால் வஞ்சிக்கப் பட்டு ஓடி
   ஓடிக் களைத்து உயிரைவிடுவதும் வருகின்றது. சோகப் புலம்பல்.

   கதையில் சில பகுதிகள்

   “பொதுவாகவே நமது பெண்களை அசோக வனத்துச் சீதைகள் என்றுதான் நினைக்கிறான்
   கிரிதரன் . அதிலும் உங்களைக் குறிப்பாக இராமனில்லாத
   சீதை என்று இன்றைக்குக் கூடப் பேசும் பொழுது சொன்னான்” என்றான்
   ரரமதாஸ்.

   ராமன் யார் என்று கேட்ட சீதையே தொடர்ந்து ராமனைப்பற்றிப் பேசுகின்றாள்
   “ஆயிரம் பிரதாபங்கள் இராமனுக்கு உண்டு ஆயினும் சீதைச் சிறை மீட்பவனே
   இராமன் .. அது ஏதோ ஒரு தனி மனித சாதனையல்ல.
   இக்காலச் சமூகப் பொருளில் “சீதை சிறை மீட்சி “ என்பது பெண்விடுதலையே
   ஆகும். “

   ராமதாஸுடன் அடிக்கடி விவாதிக்கிறாள். ராமதாஸ் கிரிதரனைப் பற்றி
   ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான்.
   இராமாயணத்தில் இராமனின் குணம் என்ன என்ற புதிர்க் கேள்விகளைக்
   கேட்டுக் கொண்டே வந்த சீதை தனக்கான இராமன் யார் என்பதை உணரவும் அவனை
   நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறாள். .. அது என்னவாயிற்று என்று
   சொல்லாமலேயே கதையை முடித்து விடுகின்றார். வாசகர்களின் முடிவிற்கு விட்டு
   விடுகின்றார்.

   என்றோ எழுதப்பட்ட கதை.
   கொடிய கணவன் அமையுமானால், காலில்,கற்பு என்ற கயிறு கட்டப்பட்டு
   வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண் ,விடுதலைப் பயணம் தொடங்கி விட்டாள்
   என்பதற்கு அடையாளம். இந்தக் கதை. தாலிக்ககயிற்றின் மதிப்பு, அதைக்
   கட்டியவன் வாழும் ஒழுக்கத்தைச் சார்ந்தது. அவன் சரியில்லையென்றால் தாலி
   வெறும் கயிறுதான். அந்த பந்தம் பலஹீனமாகி
   அறுந்து வீழும்.

   தந்தை பெரியாரின் கடுமையான சாடல், ஜெயகாந்தன் எழுத்திலே காட்டும்
   தீவிரம் , பல ஆண்களின் மனங்களை வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள
   முடிகின்றது.

   Like

   1. ஸ்ரீனிவாஸ், மதன் பற்றிய விவரங்களுக்கு நன்றி!

    ஜெயமோகன் எழுதியதிலிருந்து சுந்தர காண்டம் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் தொடர்ச்சி என்று தோன்றியது. நீங்கள் தரும் விவரங்களைப் பார்த்தால் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

    Like

  2. ஆர். வி.

   சுந்தர காண்டம் எங்கிட்ட இருக்கு. வேணுமானா எடுத்துக்கொள்ளுங்கள். ஜெ. மோ சொல்வது போல் அதை சி.னே. சி.ம, தொடர்ச்சியா பார்க்க முடியும்னு தான் நான் நினைக்கிறேன்.

   Like

   1. அருணா, “சுந்தர காண்டம்” இரவல் வாங்குவதில் தடை என்ன? வேண்டுமானால் என் பெற்றோரிடமே கொடுத்து அனுப்புங்கள். 🙂

    Like

  3. ஆர். வி.

   சு.கா புத்தகம் குடுத்து அனுப்புகிறேன்.

   சி.னே.சி.ம களில் கங்கா திரும்ப திரும்ப ஆண்களிடம் எதையோ எதிர் பார்த்து அதில் தோற்று பின் ஒரு சுய அழிவை நோக்கியே போகிறாள். பிரபு தன் பெண்ணின் காரணமாகவோ இல்லை இப்பொழுது கங்காவின் நட்பால் திருந்திய காரணத்தாலோ ஒரு நல்லவனாக தன்னை மாற்றி கொள்கிறான். கங்காவின் அண்ணாவும், அம்மாவும் கூட இந்த நல்லதனத்தை சிலாகிக்கிறார்கள். ஆனால் அப்பொழுதும் கூட கங்காவின் விருப்பத்தில் அவனுக்கு ஆர்வம் இல்லை. He chooses on her behalf what he thinks is best for her. இவ்வளவு ஆன பிறகும் கங்கா ஏன் தன் வாழுக்கையை சுய அழிவை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றும். ஆண் இல்லாத, அந்த உறவு இல்லாத போதும் மனதிற்கு பிடித்த வாழ்வு ஏன் சாத்தியமாகாது? இந்த உறவிற்கு இவ்வளவு முக்கியத்துவமும், pressure ம் தேவையா என இதை படிக்கும் போது னினைத்ததுண்டு. எவ்வளவோ உறவுகள் நம்மை வாழ்க்கையில் ஏமாற்றுகிறது. நாம் அதற்காகவெல்லாம் அவ்வளவு கசந்து போவதில்லை. இந்த ஒரு ரொமாண்டிக் ஐடியாவாலயே ஒரு ஆணின் நட்போ, காதல் போன்ற உறவுகளோ கூட சிக்கலாகிறது என னினைத்திருக்கிறேன்.

   கங்காவிற்கு பிந்தைய காலத்தில் வந்த பெண் என்ன முடிவை எடுத்து இருப்பாள் என சுந்தர காண்டம் சொல்கிறது என நினைக்கிறேன். தன் தந்தையையோ, கணவனையோ வெறுக்காமல் அதை கடந்து போகிறாள் சீதா. அவள் மனதிற்கு பிடித்த ஆணை ச்ந்திக்கும் போது கூட காதல் இல்லாத வேறு ஒரு உறவு சாத்தியப்படும் என எண்ணுகிறாள்.

   மரியம் கதாபாத்திரம் மகா கிளீஷே. ஜெயகாந்தனின் பெண் சித்திரங்கள் non-sexual காரைக்கால் அம்மையார்கள் என எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா?

   Like

   1. அருணா, கங்கா பற்றி நீங்கள் சொல்வதை நானும் வழிமொழிகிறேன். கங்கா அறுபதுகளின் mores-ஐ பிரதிபலிக்கும், தாண்ட முயலும் ஒரு பாத்திரம் என்றே நினைக்கிறேன்.
    ஜெயகாந்தனின் பெண்கள் என்ன, ஆண்களும் கூட ஏறக்குறைய காரைக்கால் அம்மையார்தான். 🙂

    Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.