பி.எஸ். ராமையா

எனக்கு ராமையா பற்றி அவ்வளவு உயர்வான அபிப்ராயம் இல்லை. மணிக்கொடி எழுத்தாளர்களில் அவர்தான் இரண்டாம் தரத்தவர் என்று ஒரு நினைப்பு. அவருடைய சிறுகதைகள் பலவற்றை படித்திருக்கிறேன், எதுவும் நினைவில் நிற்கவில்லை. சிறு வயதில் படித்த குங்குமப்பொட்டு குமாரசாமி கதைகள் மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை – அதுவும் நாஸ்டால்ஜியாவால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ தெரியவில்லை.

1905-இல் பிறந்திருக்கிறார். 78 வயதில், 1983 -இல் மறைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறார்.இன்னும் விவரங்களுக்கு நண்பர் ஜீவி அவரைப் பற்றி எழுதி இருக்கும் அறிமுகம் இங்கே.

சினிமாவில் ஈடுபட்டிருக்கிறார். சந்திரபாபுவை அறிமுகப்படுத்தியது இவர்தான். (தன அமராவதி திரைப்படம்) சந்திரபாபு பற்றி ஒரு துணுக்கு இங்கே. புகழ் பெற்ற படம் என்றால் போலீஸ்காரன் மகள்-தான். எம்ஜிஆரின் பணத்தோட்டம் படத்தின் கதையும் இவருடையதுதான்.

இப்போதைக்கு பேசக் கூடியது பாக்யத்தின் பாக்கியம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. பல கதைகள் கல்கி பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன. அமிஞ்சிக்கரை சோமு ஒரு முன்னாள் பிக்பாக்கெட்டைப் பற்றியது. சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் படிக்கலாம். கார்னிவல்தான் ராமையாவுக்கு மிகவும் பிடித்த கதையாம். ஒரு வேசியின் மன அலைச்சல். எனக்கு தேறவில்லை. கானல் நீர் ஏழை காதலன் – பணக்கார காதலி கதை. படிக்கலாம், ஆனால் கிளிஷேக்கள் உள்ள கதை. கூப்பாடிட்டான் கோயில் கதையில் ஒரு மலைக் குகையில் ஒரு வினோத சத்தம் வருகிறது. அதனால் ஒரு கோவில் கட்டப்படுகிறது. அந்த சத்தம் என்ன? பாக்யத்தின் பாக்கியம் இன்னொரு காதல் கதை, படிக்கலாம். தழும்பு நன்றாக வந்திருக்கக் கூடிய கதை, ஆனால் ஏதோ குறைகிறது.

அவருடைய ஒரு கதை – பணம் பிழைத்தது – அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைக்கிறது. படிக்கலாம்.

ராமையா நல்ல நாடக ஆசிரியர் என்று சொல்பவர்கள் உண்டு. அவருடைய பூவிலங்கு என்ற நாடகத்தை படித்தபோது எனக்கு அப்படி தோன்றவில்லை. cliche-க்கள் நிறைந்த நாடகம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட விரும்பும் ஒருவன் ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதலால் காதலா லட்சியமா என்று தடுமாறுகிறான். ஆனால் பாத்திரங்கள் யதார்த்தமாக பேசினார்கள் என்று கவனித்தேன். அறுபதுகளில் எழுதப்பட்ட நாடகம் – கருணாநிதி full form-இல் இருந்தார், அப்போது யதார்த்தமான பாத்திரங்களே பெரிய விஷயம். பூவிலங்கின் பாத்திரங்கள் சில அசாதாரணமான செயல்களை செய்தாலும் அன்றைக்கு நாடகமாக பார்க்கும்போது நாயகனின் லட்சியத்தை கை விடாத குணம், அவனோடு அந்த லட்சியத்தை கைவிட்டு தன்னை கைப்பிடிக்க வேண்டும் என்று அவனிடம் கடைசி வரைக்கும் விடாது போராடும் நாயகி கடைசி சீனில் அந்த லட்சியத்தை கை விடாத தன்மையே தன்னை ஈர்க்கிறது என்று ஒத்துக் கொள்ளும் தருணம், நாயகி மேல் ஆசை வைத்திருக்கும் இன்ஸ்பெக்டர் நாயகியின் காதலைத் தெரிந்துகொள்ளும்போது அவன் ஜெயிலுக்கு போவது நிச்சயம், ஆனால் அவன் சித்திரவதை அனுபவிக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வது, நாயகியின் அப்பாவின் இருதலைக்கொள்ளி நிலைமை எல்லாமே நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. பற்றாக்குறைக்கு சிறந்த நடிகரான எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகமாக அரங்கேற்றி இருக்கிறார்கள். முத்துராமன், வி. கோபாலகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள்.

அவருடைய ரேடியோ நாடகங்கள் சில உள்ள பதச்சோறு என்ற தொகுப்பைப் படித்தபோதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ராமையா எழுதிய நாடகங்கள் பாய்ஸ் நாடகங்களுக்கு அடுத்த படியில் உள்ளவை. பாய்ஸ் நாடகம் பார்க்க வருபவர்களுக்கு அந்த கதைகள் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவை. நல்லதங்காள் கதை தெரியாமலா மக்கள் அந்த கூத்தையும் நாடகத்தையும் பார்க்கப் போகிறார்கள்? இல்லை அரவான் கதைதான் தெரியாதா? அங்கே காட்சிகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன, எவ்வளவு உணர்ச்சிகரமாக நடிக்கிறார்கள், வசனங்கள் புது மாதிரியாக இருக்கின்றனவா போன்றவைதான் முக்கியம். புது கதையோ, அதன் மூலம் திடீரென்று பார்ப்பவர்களுக்கு ஒரு தரிசனத்தை ஏற்படுத்துவதோ இந்த நாடகங்களின் நோக்கம் இல்லை. ராமையாவின் நாடகங்கள் பலவற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. பாத்திரங்கள் நாம் பார்க்கக் கூடியவர்கள், அது நல்ல முன்னேற்றம் இல்லையா? ஒரு விதத்தில் பார்த்தால் இன்றைய எஸ்.வி. சேகர் நாடகங்களுக்கு அவை எவ்வளவோ தேவலாம்.

இங்கே ரேடியோ நாடகங்களைப் பற்றி ஒரு tangent. ஒரு காலத்தில் ரேடியோ நாடகங்கள் மிக பிரபலம். சிறு வயதில் அவற்றை ஆவலுடன் கேட்ட நினைவு இருக்கிறது. ஒலிச்சித்திரம் என்று சினிமாவின் ஒலி வடிவையும் போடுவார்கள். அவையும் பிரபலம்!

பதச்சோறு நாடகத்தின் நாயகி சிறு வயதில் காந்தியைப் பார்க்கிறாள். காந்தியிடம் அவள் போட்டிருந்த நகைகளை கழற்றி கொடுத்துவிடுகிறாள். காந்தி அவளிடம் இனி மேல் நகை போடமாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். நகை போட மாட்டேன் என்று சொல்லும் பெண்ணை தன் மருமகள் ஆக்கிக்கொள்ள பலரும் தயங்குகிறார்கள். கடைசியில் ஒரு வியாபாரி அவளை மணக்கிறார். அவரிடம் கறுப்புப் பணம் சேர்கிறது, அதை வெள்ளையாக்க நகை வாங்குகிறேன் என்கிறார். இவள் மறுக்கிறாள். அடுத்தது என்ன?

அரவான் நாடகத்தின் நாயகி அரவானை காதலிக்கிறாள். அரவான் களப்பலி ஆகப் போகிறான் என்று தெரிந்தும் அவனையே விடாப்பிடியாக மணக்கிறாள்.

சாகத் துணிந்தவன் நாடகத்தில் ஒரு ஏமாந்த சோணகிரி குடும்பத்தலைவன். அப்பா, தங்கை, மனைவி, நண்பர்கள் எல்லாரும் அவனை பணம் பணம் என்று பிடுங்குகிறார்கள். ஆஃபீஸில் ஒரு தவறு செய்து வேலை போய்விடுகிறது. விஷத்தைக் குடித்துவிடுகிறான், தைரியமாக எல்லாரையும் கேள்வி கேட்கிறான். கடைசியில் அவன் குடித்தது விஷம் இல்லை என்று தெரிய வரும்போது…

வேதவதி நாடகத்தில் வேதவதி கதை – வேதவதியை ராவணன் அடைய முயற்சித்ததாகவும், வேதவதி உனக்கு மகளாக வந்து உன்னை அழிப்பேன் என்று சபதம் இட்டதாகவும் பிறகு சீதையாக பிறந்ததாகவும் ஒரு ஐதீகம் உண்டு.

தங்கச் சங்கிலி நாடகத்தில் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். அவர்கள் பெண்ணுக்கு நட்சத்திரேயன் மாதிரி ஒரு மாப்பிள்ளை. பணம் பணம் என்று மாமனாரைப் பிடுங்குகிறான். சங்கிலி இல்லாமல் வராதே என்று மனைவியை துரத்திவிடுகிறான். பெண்ணின் அண்ணன்காரன் பிசினசில் வெற்றி அடையும்போது என்னை சேர்த்துக்கொள் என்று கெஞ்சுகிறான். அவன் மனைவி அவனுக்கு ஒரு சங்கிலியைக் கொடுக்கிறாள். அத்துடன் முடித்திருக்கலாம், அதற்கப்புறம் மாப்பிள்ளை திருந்தி, கண்ணீர் விட்டு…

பிரசிடென்ட் பஞ்சாட்சரம்: நிகோலாய் கோகோலின்இன்ஸ்பெக்டர் ஜெனரல்” நாடகத்தை தழுவி எழுதப்பட்டது. ஜில்லா பிரசிடென்ட் பஞ்சாட்சரத்தின் ஒரே பெண்ணை இரண்டு சைட் முறைப்பையன்களும் விரட்டுகிறார்கள். அவளோ வேறு வீட்டை எதிர்த்துக்கொண்டு வந்துவிட்ட வேறு ஒருவனை விரும்புகிறாள். ஜில்லா போர்டுகள் எப்படி நடக்கின்றன என்று ரிப்போர்ட் செய்ய மேலதிகாரி மாறுவேஷத்தில் வருகிறார் என்று கேள்விப்பட்ட பஞ்சாட்சரம் இந்தப் பையனைத்தான் அந்த அதிகாரி என்று நினைத்து ஏக சோப்பு போடுகிறார். திறமையாக எழுதப்பட்டிருக்கிறது. இது திரைப்படமாகவும் வந்ததாம்.

ஜெயமோகன் இவரது பிரேமஹாரம் என்ற நாவலை சிறந்த social romanceகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா. இவரது நட்சத்திரக் குழந்தைகள் சிறுகதையை நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா. அந்தக் கதையை பற்றி இங்கே கொஞ்சம் விரிவாக பேசுகிறார். இரண்டையும் நான் படித்ததில்லை. நட்சத்திரக் குழந்தைகள் பற்றிய பாவண்ணனின் விரிவான அலசலை இங்கே காணலாம்.

ராமையாவின் பெரும் சேவை என்றால் அது அவர் மணிக்கொடி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்ததுதான் என்று நினைக்கிறேன். மணிக்கொடி இதழ் தொகுப்பில் சிட்டி சுந்தரராஜன் எழுதி இருக்கும் முன்னுரையிலிருந்து தெரிந்து கொண்டது – ராமையா முதல் ஆசிரியரான வ.ரா.வுக்கு துணையாக இருந்திருக்கிறார். சில பல காரணங்களால் நின்று போன மணிக்கொடி மீண்டும் ஆரம்பித்தபோது அதன் ஆசிரியர் ஆனார். இன்று மணிக்கொடி என்றால் சிறுகதை என்று நமக்கு இருக்கும் நினைப்புக்கு இவர்தான் மூல காரணம் என்று தெரிகிறது. மணிக்கொடியை ஒரு சிறுகதை பத்திரிகையாக – புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி ஆகியோரை முதலீடாக வைத்து – மாற்றியவர் இவர்தான். அவர் ஒரு சிறந்த எடிட்டர் என்றும் மௌனி கதைகள் அவர் இல்லாவிட்டால் சரியாக வந்திருக்காது என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியன், லா.ச.ரா போன்றவர்களின் எழுத்து மணிக்கொடி மூலம் எல்லாருக்கும் சுலபமாக கிடைத்தது. இதைப் பற்றி புதுமைப்பித்தன் கூறுகிறார்:

மணிக்கொடி பொருளாதார நிர்பந்தம் என்ற நண்பரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற குப்பைத் தொட்டியில் எறியப்பட்டு மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தஅந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி.எஸ் ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் .அது இரண்டு மூன்று வருஷம் கன்னிப் பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் (ப.ராமசாமி) பெற்றோம் , அவர் அவளை ஒருவருக்கு விற்றார் .விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது , இதுதான் மணிக்கொடியின் கதை.

ராமையா இந்த நாட்களைப் பற்றி மணிக்கொடி காலம் என்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

சி.சு. செல்லப்பா இவரை பெரிதும் சிலாகிப்பவர் என்று தெரிகிறது. ராமையாவின் சிறுகதை பாணி என்று ஒரு புஸ்தகமே போட்டிருக்கிறார். ராமையாவின் மலரும் மணமும் சிறுகதை (1933 விகடன் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதாம்) முக்கியமான திருப்புமுனை என்று சொல்வாராம். இதைப் பற்றிய மேல் விவரங்களை ஜெயமோகனின் இந்த பதிவில் காணலாம்.

படிக்க விரும்பும் நாடகங்கள் தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள் (அருமையான பாட்டுகள் உள்ள சினிமாவாக வந்தது), நாவல் பிரேமஹாரம், சிறுகதைகள் நட்சத்திரக் குழந்தைகள், மலரும் மணமும், non-fiction மணிக்கொடி காலம். நாஸ்டால்ஜியாவுக்காக குங்குமப்பொட்டு குமாரசாமி. யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்! (இல்லை சுட்டி தெரிந்தாலும் கொடுங்கள்)

ராமையா எனக்கு நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய ஆசிரியராகத் தெரியவில்லை. அவருடைய பெரும் சேவை மணிக்கொடி ஆசிரியராக இருந்து நல்ல எழுத்தாளர்களுக்கு ஒரு ரூட் போட்டுக்கொடுத்ததுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் ஒரு முன்னோடி நாடக ஆசிரியர் என்று கருதுகிறேன். படிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் நாடகங்களை படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 • ஜீவி ராமையா பற்றி எழுதி இருக்கும் அறிமுகம்
 • நட்சத்திரக் குழந்தைகள் சிறுகதையை பற்றி எஸ்.ரா., பாவண்ணன்
 • 1933 விகடன் சிறுகதைப் போட்டி
 • அழியாச்சுடர்கள் தளத்தில் பணம் பிழைத்தது சிறுகதை
 • சந்திரபாபு, ராமையா, புதுமைப்பித்தன்
 • பிரசிடென்ட் பஞ்சாட்சரம் திரைப்படம் பற்றி ராண்டார்கை
 • டான் பிரவுனின் லாஸ்ட் சிம்பல் (Lost Symbol)

  எத்தனை நாள்தான் சீரியஸ் புத்தகங்களைப் பற்றி எழுதுவது? இன்றைக்கு ஒரு ஆங்கில த்ரில்லர்.

  டான் பிரவுனின் டாவின்சி கோட் (Da Vinci Code) பெரிய ஹிட். லாஸ்ட் சிம்பல் அவருடைய அடுத்த புத்தகம்.

  பொதுவாக டான் பிரவுனைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் தரம் நம்மூர் ராஜேஷ் குமாருக்கு இணையானது. தடிதடியான புத்தகங்கள். கொஞ்சம் historical references. இது மாதிரி எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். (இப்போதைக்கு ஸ்டீவ் பெர்ரி (Steve Berry) மட்டும்தான் நினைவு வருகிறது.) டாவின்சி கோட் ஏசுவுக்கு வாரிசுகள் உண்டு என்று எழுதியதால்தான் பிரபலம் ஆகிற்று என்று நினைக்கிறேன்.

  இதில் அதே ஆர்க்கியாலஜிஸ்ட் ராபர்ட் லாங்டன். இந்த முறை ஃப்ரீமேசன் சங்கத்தைப் பற்றி references. 12 மணி நேரத்துக்குள் நடக்கும் கதை. ஒரு பிரமிடின் அடிப்பாகமும் மேல் பாகமும் ஒன்று சேர்க்கப்பட்டால் மர்மங்கள் வெளியாகும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறதாம். மேல் பாகத்தை வசதியாக ஃப்ரீமேசன் சங்கத்தின் தலைவர் லாங்டனிடம் கொடுத்து வைத்திருக்கிறார். அடிப்பாகத்தை அவர் எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார். அது எங்கே என்று கண்டுபிடிக்க லாங்டன் மாதிரி ஒரு ஆர்க்கியாலஜிஸ்டால்தான் முடியும். சித்திரவதை செய்து, வில்லன் கண்டுபிடிக்கிறான். லாங்டனும், தலைவரின் தங்கையும் இன்னொரு புறம் அந்த க்ளூக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். நடுவில் எஃப்.பி.ஐ. வேறு. இதற்கு நடுவே தங்கை அறிவியல் பூர்வமாக ஆத்மாவின் எடையை கண்டுபிடிக்கிறாள் – அதாவது ஆத்மா என்பது ஒரு பருப்பொருள் (material object) என்று நிரூபிக்கிறாள், வில்லன் யாரென்று சுலபமாக யூகிக்கக் கூடிய ஒரு ட்விஸ்ட், வில்லன் சூப்பர்மான் ஆக செய்யும் முயற்சி என்று கதை போகிறது.

  வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் வாராவாரம் ஒரு சஸ்பென்ஸ் வைப்பார்கள், அடுத்த வாரம் அது புஸ் என்று போகும். இதில் அப்படித்தான் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர் வைக்கும் சஸ்பென்சைப் பார்க்கும்போது அட போய்யா நீயும் உன் சஸ்பென்சும் என்று ஒரு கடுப்பு வருகிறது. ஏற்கனவே டாவின்சி கோட், மற்றும் சில புத்தகங்களைப் படித்திருந்ததால் பெரிதாக எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. உட்டாலக்கடி கிரிகிரி கதைதான் என்று தெரியும். ஆனால் உ. கிரிகிரி கதையை சுவாரசியமாக சொல்லலாம், அங்கேதான் டான் பிரவுன் கோட்டை விட்டுவிட்டார். (டாவின்சி கோட் புத்தகத்தில் லாஸ்ட் சப்பர் ஓவியத்தை விவரிப்பது, மேரி மக்தலீன் ஏசுவின் மனைவி என்ற ஒரு தியரி ஆகியவை இப்படியும் இருக்கலாமோ என்று யோசிக்க வைத்தன) இதில் அப்படி எதுவும் இல்லை. ஃப்ரீமேசன்கள் ஏசு அளவுக்கு சுவாரசியமானவர்கள் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  பயணத்தின்போது படிப்பதே கஷ்டம். தவிர்த்துவிடுங்கள்.