சுஜாதாவின் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”

சுஜாதாவின் புத்தகங்களைப் பற்றி எழுதும் முன் அவர் மீது ஒரு மதிப்பீடு எழுத வேண்டும் என்று நினைத்தேன், எப்போது முடியுமோ தெரியவில்லை. அதனால் புஸ்தகங்களிலிருந்தே ஆரம்பிக்கிறேன். முதலில் காந்தளூர் வசந்தகுமாரன் – அவர் எழுதிய அபூர்வமான சரித்திரக் கதைகளில் ஒன்று.

சுஜாதாவுக்கு கணேஷ்-வசந்த் காரக்டர்களை வைத்து ஒரு சரித்திரக் கதை எழுதும் ஆசை வந்திருக்கிறது. ராஜராஜன் கலமறுத்தருளிய காந்தளூர்ச் சாலையை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறார் – இல்லை இல்லை ஆரம்பித்திருக்கிறார். பாதியிலேயே கதையை அம்போ என்று விட்டுவிட்டார். காந்தளூர் வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் கூட போகவில்லை.

மேல் நாடுகளிலிருந்து வரும் குதிரைகள் திருட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன. மன்னர் நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைப்பதால் விவசாயிகளிடம் அதிருப்தி நிலவுகிறது. சோழ நாட்டின் வடக்கே அரசு புரியும் விமலாதித்தனின் ஈகோவை ராஜராஜன் சமாளிக்க வேண்டி இருக்கிறது. குதிரை கொண்டு வந்த ஒரு யவனன் இறந்துவிட, வசந்தகுமாரன் மேல் பழி. அவனை விடுவிக்க அவன் குரு கணேச பட்டர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவன் நாட்டில் இருக்கும் எக்கச்சக்க இளவரசிகளில் ஒருத்தியான அபிமதியை சந்திக்கிறான். பிறகு வழக்கம் போல காதல். வசந்தன் கைது, மன்னர் முன் விசாரணை, மன்னரைக் கொல்ல நடக்கும் சதியிலிருந்து வசந்தன் அவரைக் காப்பாற்றுதல், விமலாதித்தன் அபிமதியை கவர்ந்து போக முயற்சி என்று கதை நகர்கிறது. ராஜராஜன் கடைசியில் வசந்தனை சேர நாட்டுக்கு தூதனாக அனுப்புகிறார். அபிமதியை மறந்துவிடுமாறு எச்சரிக்கிறார். ஆனால் வசந்தன் அபிமதியையும் அழைத்துக்கொண்டு சேர நாடு கிளம்புவதோடு கதை abrupt ஆக முடிந்துவிட்டது.

கதையின் ஒரே பலம் மக்களின் அதிருப்தி என்று ராஜா ராணிகளையும் அரண்மனைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் வெளியே வருவது. பலவீனம் அரைகுறை கதை. தவிர்த்துவிடலாம். கணேஷ்-வசந்தின் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமே இந்த புஸ்தகம்.

கூட்டாஞ்சோறு பதிவிலிருந்து:

முதல் பதிப்பின் முன்னுரை – சுஜாதா (22-12-95)
தமிழில் சரித்திர நாவல்களுக்கு உண்டான சம்பிரதாயத்தை வகுத்தவர்கள் கல்கியும், சாண்டில்யனும். தற்போது எழுதப்படும் சரித்திர நாவல்கள் அனைத்தும் இவ்விருவர் பாணியில்தான் எழுதப்படுகின்றன. லேசான சரித்திர ஆதாரங்கள்; நிறைய சரடு; நீண்ட வாக்கியங்கள் – இவைகளின் உள்ளே ஒரு நவீனக் கதைதான் மறைந்திருக்கும். குஞ்சர மல்லர்கள், கத்திச் சண்டைகள், சல்லாத் துணித் திரைகளுக்குப் பின் கரிய கண்கள் கொண்ட பெண்கள் – இவைகள் எல்லாம் சரித்திர நாவலுக்கு உண்டான பார்முலாக்களாக இன்றும் இருக்கின்றன. இவைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆசையுடன் ‘கருப்பு, வெளுப்பு, சிவப்பு’ என்னும் நாவலை குமுதத்தில் துவங்கினேன். சாதிக் கலவரம் எழுந்து அதை நிறுத்த வேண்டியிருந்தது. ஒரு விதத்தில் சமரசம் பண்ணிக்கொண்டு, அதை ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று சில தினங்கள் விட்டு துவங்கி முடிக்க முடிந்தது. ’காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம் போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக்கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை. எந்தக் காலக் கட்டத்திலும் முதிர்ந்த அனுபவமுள்ள ஒருவரும், விளையாட்டுப் போக்கான ஒரு இளைஞனும் இருப்பார்கள். எந்தக் காலத்திலும் பொறாமை, சதி, அரசியல் ஆதாயங்களுக்காகத் திருமணங்கள் எல்லாம் இருக்கும். இந்த நாவலில் கணேச பட்டர் என்னும் பிரம்மதேயக்காரரும், வசந்தகுமாரன் என்னும் இளைஞனும், அந்தப் பெயரில் இல்லாவிட்டாலும் வேறு பெயரில் வாழ்ந்திருக்கலாம். அது போலத்தான் அபிமதி. அரசவையில் எத்தனையோ ராணிகளில் ஒருத்தியின் மகளாக இருந்திருக்கலாம். ’காந்தளூர்ச் சாலை’ என்னும் இடத்தில சோழர்களுக்கும் சேர-பாண்டிய மன்னர்களுக்கும் நடந்த நில-கடல் போரின் ஆதாரக் காரணம் தூதனை அவமதித்தது என்பதில் கருத்து வேறுபாடில்லை. அதனால் வசந்தகுமாரன் சோழ நாட்டுத் தூதுவனாகச் சென்றிருக்க முடியும். இந்தக் கதையின் தொடர்ச்சியாக, காந்தளூர்ச் சாலையில் நடந்த போரின் விவரங்களைக் கொஞ்சம் படித்து ஆராய்ந்துவிட்டு எழுத உத்தேசித்திருக்கிறேன்.

இக்கதைக்குப் பல புத்தகங்கள் எனக்குப் பயன்பட்டன. புரவலர் பொன். முகிலன் அவர்கள் எனக்குச் சில சோழர் காலத்துச் சொற்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு நன்றி. அந்தக் காலத்து நிகண்டுகளும் பயன்பட்டன.

லேசான சரித்திர ஆதாரங்கள்; நிறைய சரடு; நீண்ட வாக்கியங்கள் இவைகளிலிருந்து விலகிச் செல்ல சுஜாதா ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் நீண்ட வாக்கியங்களை தவிர்ப்பதில் மட்டுமே வெற்றி அடைந்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, சரித்திர நாவல்கள், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பக்கம்:
கூட்டாஞ்சோறு பதிவு
சுஜாதாவின் “மத்யமர்”
சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”
சுஜாதாவின் “கொலை அரங்கம்”
சுஜாதாவின் “அப்பா அன்புள்ள அப்பா”
சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்”