சுஜாதாவின் “கொலை அரங்கம்”

இது ஒரு கணேஷ் வசந்த் நாவல், அது ஒன்றே போதும் இதை விரும்பி படிக்க. நண்பர் ஸ்ரீனிவாசின் அறிமுகத்தைப் படித்தபோது இது இலங்கைத் தமிழர்களைப் பற்றிய புத்தகமா என்று இன்னும் ஆவலாக இருந்தது.

ஆனால் முப்பது பக்கத்திலேயே நமக்கு கதையின் மர்மம் புரிந்த பிறகும், கணேஷுக்கு புரிய இன்னும் நூறு பக்கம் பிடிக்கிறது. அதுவும் வசந்த் கொஞ்சம் தத்தியாக இருக்கிறார். அவர் அங்கங்கே செந்தமிழில் ஒரு கவிதை எடுத்து விடுவது ஜாலியாக இருக்கிறது – என்ன, அது மொத்த புத்தகத்திலேயே நாலைந்து முறைதான் வருகிறது, அதுதான் குறை.

உத்தமும் பீனாவும் பெரிய சொத்துக்கு வாரிசுகள். கோர்ட் கேசை செட்டில் செய்து இப்போது மேலோட்டமாக சமாதானமாக இருக்கிறார்கள். அவர்களின் ஒரு அரங்கத் திறப்பு விழாவில் ஈழத் தமிழர்களின் ஒரு அமைப்பு அங்கே தமிழன் சாகும்போது இங்கே என்ன விழா வேண்டிக்கிடக்கிறது என்று குண்டு வைக்கிறது. அதற்கப்புறம் உத்தமின் காரில் ஒரு குண்டு. உத்தம் மயிரிழையில் தப்பிக்கிறார். பீனாவுக்கு துணையாகப் போகும் வசந்துக்கு மரண அடி விழுகிறது; கணேஷுக்கும் அடி. அவர்கள் பீனா ஈழத் தமிழர்களை வைத்து நாடகம் ஆடி உத்தமை கொலை செய்து எல்லா சொத்தையும் அபகரிக்கப் பார்க்கிறாரோ என்று சந்தேகப்படுகிறார்கள். ஆனால் பீனாவுக்கு கத்திக்குத்து, இன்டென்சிவ் கேர் யூனிட். அடுத்த வாரிசு ராஜசந்திரன் அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார், உத்தமை கொல்ல ஆஸ்பத்திரியில் கத்தியோடு நிற்கும்போது மாட்டிக் கொள்கிறார். சந்தேகம் அவர் மேல் திரும்புகிறது, ஆனால் அன்றிரவு அவர் கொல்லப்படுகிறார். கணேஷுக்கு மூளையில் லைட் எரிந்து அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறார். அங்கே மீண்டும் கொலை முயற்சி. அப்புறம் குற்றவாளியை பிடிக்கிறார்கள்.

குங்குமத்தில் தொடர்கதையாக வந்தது.

ஈழத் தமிழர்கள் பற்றி எல்லாம் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் சுஜாதாவுக்கு அவர்கள் மேல் அனுதாபம் இருப்பதும், ஈழம் பிரிவது சரியே என்று நினைப்பதும் தெரிகிறது. கதை 83-84-இல் எழுதப்பட்டது. அப்போதெல்லாம் தமிழகத்தில் அத்தனை பேரும் ஈழத்துக்கு ஆதரவுதான்.

கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் கணேஷ்-வசந்த் என்ற அனுபவத்தில் ஒரு பகுதி. அதை பூரணமாக அனுபவிக்க விரும்புவர்கள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, கணேஷ்-வசந்த்

தொடர்புடைய பதிவுகள்: ஸ்ரீனிவாசின் புத்தக அறிமுகம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.