சுஜாதாவின் “மத்யமர்”

மத்திய தர மக்களின் ஆசைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சிறுகதைகள் மூலம் சொல்ல ஒரு முயற்சி. பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல முயற்சி. கல்கியில் தொடராக வந்தது.

ஒரு கல்யாண ஏற்பாடு என்ற சிறுகதையில் ஒரு NRI ஆணின் முதல் திருமணத்தை மறைத்து அவனுக்கு பெண் பார்க்கிறார்கள். பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் சம்மதமே. என்ன ட்விஸ்ட் என்று சுலபமாக யூகிக்கலாம்.

புது மோதிரம் என்ற கதையில் எப்படியாவது பெண்ணை சினிமா ஸ்டார் ஆக்க வேண்டும் என்று துடிக்கும் தாய். கடைசி வரிகளில் மோதிரம் புதுசு என்று சொல்வது பிரமாதமாக வந்திருக்கிறது. ஆனால் கதை சுமார்தான். சினிமா வாய்ப்புக்காக சோரம் போகும் தாய் என்பது அந்தக் காலத்தில் மிகவும் controversial ஆக இருந்தது. நல்ல வேளையாக, சுஜாதா சாணாரை எல்லாம் விட்டுவிட்டு இங்கே பிராமணரை கதாபாத்திரமாக காட்டி இருக்கிறார். 🙂 இல்லாவிட்டால் பெரும் பிரச்சினையாக முடிந்திருக்கும். 🙂 (ராஜன், ராம் எங்கே?)

தர்ட்டி ஃபார்ட்டி வீடு வாங்கும் ஆசையில் மோசம் போகும் ஒரு குடும்பம். பரவாயில்லை.

அறிவுரை மாறி வரும் சமுதாய விழுமியங்களை காட்டுகிறது. லஞ்சம் வாங்குவது இழிசெயல் என்றிருந்த நிலை போய் இன்று லஞ்சம் வாங்காதவன் அதிசயப் பிறவி என்றாகிவிட்டது. நல்ல தீம், ஆனால் கதை சுமார்தான்.

ஜாதி இரண்டொழிய இன்று ஒரு cliche ஆகிவிட்டது. தகுதி உள்ள ஏழை ஃபார்வர்ட் கம்யூனிட்டி பையனை நிராகரித்து நல்ல நிலையில் இருக்கும், தகுதி இல்லாத தலித் பெண்ணுக்கு வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.

சாட்சி ஒரு நல்ல சிறுகதை. கொலையைப் பார்க்கும் மருமகள் சரளா. வழக்கமான மத்திய தர வர்க்க மனோநிலையில் வீட்டில் இருக்கும் எல்லாரும் எதையும் பார்க்கவில்லை என்று சொல் என்று உரு ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரளா சாட்சி சொல்ல ரெடி!

நீலப் புடவை ரோஜாப்பூ சுமார். மண வாழ்க்கை அலுத்துப் போன ஒரு தம்பதியர் ஒருவருக்கொருவர் தெரியாமல் கடிதம் மூலம் மற்றொரு ஆண்/பெண்ணைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த ஆண்/பெண் யார்?

மற்றொருத்தி தேவை மத்திய தர குடும்பத்து பெண்கள் கணவர்களின் துரோகத்தை கையாலாகாத் தன்மையோடு சகித்து கொள்வதை காட்டுகிறது. ஆனால் கதை சுமார்தான்.

பரிசு இந்த தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஏதோ பரிசு விழ, எங்கே டூர் போகலாம் என்று திட்டம் போடும் குடும்பம், கடைசியில் பணத்தை வாங்கிக்கொண்டு அதை வேறு செலவுகளுக்கு பயன்படுத்துகிறது.

தாய்-1, திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகி இருக்கும் பெண்ணுக்கு அபார்ஷன் செய்ய கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தை செலவழிக்கும் தாயை காட்டுகிறது. தாய்-2, கூட்டுக் குடும்பங்களின் சிதைவை, அம்மாவை எந்தப் பையன் வைத்துக் கொள்வது என்பது அம்மாவுக்கு இருக்கும் சொத்தை வைத்து என்று ஆகிக் கொண்டிருக்கும் சோகத்தை காட்டுகிறது.

தியாகம் இன்றைய பெண்கள் குடும்பத்தில் அதிகமாக சுமப்பவர்கள் என்பதை காட்டுகிறது. வேலைக்கும் போய்க்கொண்டு, வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தைகளை வளர்ப்பதில் பெரும்பங்கு ஏற்றுக்கொண்டு அல்லாடும் பெண்களுக்கு ஒரு சலாம் வைக்கலாம். ஆனால் கதை சுமார்தான்.

சுஜாதா இலக்கியம் படைக்க முயன்றிருக்கிறார். ஆனால் வெற்றி பெறவில்லை. சாட்சி, மற்றும் பரிசு இந்த தொகுப்பின் நல்ல சிறுகதைகள். ஆனால் சுஜாதாவே இதை விட பல நல்ல சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பரிசு சிறுகதை