Skip to content

வைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”

by மேல் ஒக்ரோபர் 6, 2010

ரொம்ப சுஜாதா பதிவு ஆகிவிட்டது. முற்றுப்புள்ளி வைக்காவிட்டாலும் ஒரு கமாவாவது போட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு கொஞ்சம் கேரளா பக்கம் மூக்கை நீட்டுகிறேன்.

பஷீரை வகைப்படுத்துவது கஷ்டம். அவரும் சரி, அவருடைய கதைகளும் சரி, வரையறைகளை மீறுபவை. அவருடைய கதைகளை எல்லாம் அனுபவிக்கணும், ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது. அவர் எழுதுவது பின்நவீனத்துவமா, நவீனத்துவமா, சர்ரியலிசமா, எதார்த்தமா மாதிரி கேள்விகளை எல்லாம் நான் அறிஞர்களுக்கு விட்டுவிடுகிறேன். எனக்கு பஷீர் அனேகமாக புரிகிறது, பிடிக்கிறது, அவ்வளவுதான்.

உலகப் புகழ் பெற்ற மூக்கு என்ற இந்த தொகுதியில் கதை மாதிரி சில கட்டுரைகள் இருக்கின்றன. கட்டுரை மாதிரி சில கதைகளும் இருக்கின்றன. சர்ரியலிசம் மாதிரியும் தெரிகிறது. யதார்த்தம் மாதிரியும் தெரிகிறது. பல கதைகள் கச்சிதமான வடிவத்தை – ஒரு இலக்கு, கடைசி வரி, கதையின் க்ளைமாக்ஸ் நோக்கி மட்டுமே பயணிக்கவில்லை. இவை எல்லாம் குறைகளாகவே தெரியவில்லை. மேதைகளுக்கு வேறு விதிகள்தான்! பஷீர் விதிகளுக்கு உட்படுபவர் இல்லை, விதிகளை உருவாக்குபவர்.

பஷீரின் பலம் படிப்பவர்கள் முகத்தில் ஒரு புன்னகையை விடாமல் தொடரச் செய்வது. மிக சிம்பிளான கதைகள். நாட்டுப்புற கதைகளின் வாசனை, உண்மையான மனிதர்கள், மனிதர்களின் ஸ்மால் ஸ்கேல் அகம், ஈகோ, பந்தா, கயமை, அன்பு எல்லாவற்றையும் இரண்டு மூன்று வரிகளில் கொண்டு வந்துவிடுவார். அவர் கதைகள் சில சமயம் ramble ஆகின்றன. ஆனால் அது ஒரு குறையாகத் தெரிவதே இல்லை. அவருக்கு ஈடாக வேண்டாம், அவர் பாணியில் எழுதக்கூடிய யாரும் எனக்கு தமிழில் தெரியவே இல்லை. கி.ரா. ஒரு வேளை கொஞ்சம் கிட்ட வரலாம்.

ஜென்ம தினம், ஐசுக்குட்டி, அம்மா, மூடர்களின் சொர்க்கம், பூவன் பழம், தங்கம், எட்டுக்காலி மம்மூஞூ போன்றவை யதார்த்தக் கதைகள். இதில் மனித இயல்பு மிக தத்ரூபமாக ஒரு ஃபோட்டோ மாதிரி காட்டப்படுகிறது. ஜென்ம தினத்தில் நாயகனுக்கு பிறந்த நாள், சாப்பாடு இல்லை, பசி கொல்கிறது. பசியில் தவிக்கும் ஒருவனிடம் கம்யூனிச பேச்சு எவ்வளவு அர்த்தமற்றது என்று காட்டுகிறார். ஆனால் சுயப் பரிதாபமோ, ஓ இழிந்த சமூகமே என்ற புலம்பல்களோ இல்லை. ஐசுக்குட்டியில் தன் ஓரகத்திக்கு பிரசவம் பார்க்க டாக்டர் வீட்டுக்கு வந்தது போல தனக்கும் வந்தால்தான் பிரசவிப்பேன் என்று அடம் பிடிக்கும் நாயகி. அம்மாவில் விடுதலைப் போராட்டத்தில் ஜெயிலுக்கு போன மகன் எப்போது வருவான் என்று தெரியாது – ஆனால் தினமும் இரவு சோறு சமைத்து வைத்து காத்திருக்கும் அம்மா. மூடர்களின் சொர்க்கம் கொஞ்சம் சுமார்தான். ஒரு ஏழைப் பெண்ணால் கவரப்படும் ஒருவன், அவளே இவனை படுக்கைக்கு கூப்பிடுகிறாள், அவள் குடும்பத்தின் வறுமையைக் கண்டு இவன் பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பிவிடுகிறான். இதை சீர்திருத்த நெடி இல்லாமல் எழுதும் கஷ்டமான காரியத்தை செய்திருக்கிறார். இவை அனைத்திலும் irony, நகைச்சுவை புகுந்து விளையாடுகிறது. தங்கம் ஒரு காதல் கதை. நன்றாக இருக்கிறது. எட்டுக்காலி மம்மூஞூவில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த கதை பூவன் பழம்தான். வாய்விட்டு சிரித்தேன். கணவனை துரத்தி அடித்து பூவன் பழம் வாங்கி வர சொல்கிறாள். எங்கும் கிடைக்கவில்லை, ஆரஞ்சுதான் கிடைக்கிறது. அப்புறம்? அதை சொல்லி வாசிப்பு அனுபவத்தை கெடுக்க முடியாது, நீங்களே லிங்கை க்ளிக்கி படித்துக் கொள்ளுங்கள்! சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு.

நீல வெளிச்சம் ஒரு பேய்க்கதை. பேயோடு நட்பு! உலகப் புகழ் பெற்ற மூக்கு ஒரு சர்ரியலிச கதை. எனக்கு ஒன்றும் பிரமாதமாகத் தெரியவில்லை. ஒரு வேளை பிடிபடவில்லையோ என்னவோ. சிங்கிடி முங்கன், சிரிக்கும் மரப்பாச்சி இரண்டும் எனக்கு ஒரு ஸ்பெஷல் நிறைவைத் தந்தன. சிம்பிளான, கொஞ்சம் fantasy கலந்த கதைகள்.

பகவத் கீதையும் சில முலைகளும் மிக அருமையான memoir. பாயிண்டே இல்லை, அதனால் என்ன? ஆனை முடி கதையா, நிஜமா என்று சொல்ல முடியவில்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். புனித ரோமம் ஒரு யதார்த்தக் கட்டுரை. முகமது நபியின் ஒரு முடி காஷ்மீரில் ஒரு மசூதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அதைப் பார்த்த அனுபவம். பூமியின் வாரிசுதாரர்களும் நிஜமா கதையா என்று சொல்ல முடியவில்லை. நன்றாக இருக்கிறது.

பூவன் பழத்துக்கு அடுத்தபடி எனக்கு பிடித்த கதை பர்ர்... அங்காடித் தெரு பார்த்தீர்களா? அதில் நாயகனின் முதல் காதலை நினைவுபடுத்துகிறது. ஜெயமோகனுக்கு இதுதான் இன்ஸ்பிரேஷனோ என்னவோ.

குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்த்திருக்கிறார். நான் ஒரிஜினலைப் படித்ததில்லை என்றாலும் என்னவோ மொழிபெயர்ப்பு பஷீரின் மொழியை கொண்டு வந்திருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. எனக்கு தோழி அருணா இரவல் கொடுத்தார். வாங்கிவிடலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பஷீர் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
பூவன் பழம் சிறுகதை
பாவண்ணன் ஐஷுக்குட்டி கதையை அலசுகிறார்

Advertisements

From → Basheer

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: