பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்

எம்.வி. வெங்கட்ராமின் இந்த கதையை அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அற்புதமான, மிகவும் powerful கதை. நான் கதையைப் பற்றி எதையும் எழுதி உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. நேராக கதைக்கே போய்விடுங்கள்!

ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த கதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், எம்விவி பக்கம்

மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?”

இந்தப் புத்தகத்தை படிக்கும் முன் தி.மு.க. உருவானது ஏன் என்று என்னைக் கேட்டிருந்தால் ஈ.வெ.ரா.-மணியம்மை திருமணத்தால் ஏற்பட்ட மனக் கசப்பு அண்ணாவை தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வை உருவாக்கச் செய்தது என்று சொல்லி இருப்பேன். மலர்மன்னன் தி.மு.க.வின் தோற்றத்தின் பின்புலத்தை அருமையாக விளக்குகிறார். பல ஆதாரங்களை காட்டி இருக்கிறார். அவர் விஷயம் தெரிந்தவர் என்று தெளிவாகத் தெரிகிறது.

அண்ணாவை ஈ.வெ.ரா. தன் வாரிசு என்று அடையாளம் காட்டி இருக்கிறார். ஆனால் ஈ.வெ.ரா.வுக்கும் அண்ணாவுக்கும் இருந்த ஆளுமை, அணுகுமுறை வேறுபாடுகள் பல. அண்ணாவின் அனுசரித்துப் போகும் குணமே அவரை ஈ.வெ.ரா.வுடன் நீண்ட நாள் நிலைத்து நிற்கச் செய்தது. ஆனால் இந்த ஆளுமை வேறுபாடுகள் அவர்களை ஒன்றாக நீடித்திருக்க விட்டிருக்காது என்று மலர்மன்னன் நினைக்கிறார். அந்த வேறுபாடுகள் மூன்று விஷயங்களில் பெரிதாக வெடித்தனவாம். ஒன்று ஈ.வெ.ரா. தி.க. தொண்டர்கள் எல்லாரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது; இரண்டு ஈ.வெ.ரா. சுதந்திர தினத்தை – ஆகஸ்ட் 15, 1947-ஐ துக்க நாளாக அறிவித்தது; அண்ணா இதை ஏற்றுக் கொள்ளவில்லை, அதை கொண்டாட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கடைசியாக, ஒட்டகத்தின் முதுகில் மேல் கடைசி புல்லாக, மணியம்மை திருமணம்.

கறுப்புச் சட்டை விவகாரம் அற்ப விஷயமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. அண்ணா போன்ற ஒருவர் என்னய்யா வெட்டி வேலை என்று அலுத்துக் கொண்டே அதை ஏற்றிருக்கலாம். ஆனால் சுதந்திரத்தைப் பற்றி அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் சீரியசானவை. மணியம்மை திருமணத்திலோ, ஈ.வெ.ரா.வின் சிந்தனையை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவருக்கு தான் விரும்பிய பெண்ணை மணம் செய்ய எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் அவர் பாதுகாப்பில் ஒரு தி.க.காரர் விட்டுவிட்டுப் போன ஒரு பெண்ணை, அந்த தி.க.காரர் இறந்த பிறகு, எதற்காக மணந்து கொள்ள தீர்மானித்தார்? நாடோடி மன்னன் சினிமாவில் பி.எஸ். வீரப்பா சரோஜா தேவியைப் பார்த்து திடீரென்று “அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!” என்று சொல்வது போல இருக்கிறது! கழகத்துக்கு அடுத்த தலைவர் மணியம்மை என்று நினைத்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கழகத்தின் அடுத்த தலைவர் அண்ணா என்று ஏற்கனவே கை காட்டிவிட்டார். அண்ணாவுக்கு அவர் மேல் பக்தியே இருந்தது. தி.மு.க. உருவான பிறகு கூட தலைவர் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்திருந்தார். பெரியார் கண்டபடி திட்டினாலும் இவர் திருப்பி ஒன்றும் சொன்னதில்லை. அண்ணா தன்னைக் கவிழ்த்துவிட்டு தலைவர் ஆகிவிடுவாரோ என்ற பயம் பைத்தியக்காரத்தனம் என்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அப்படி அண்ணா மேல் ஏதோ அதிருப்தி என்றாலும் அண்ணன் மகன் ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், மூவலூர் ராமாமிர்தம் என்று ஒரு பெரிய படையே இருந்தது. அப்புறம் எதற்காக தனக்கு பணிவிடை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத மணியம்மையைக் கொண்டு வருகிறார்? வயதான காலத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து மயங்குவது நடக்காத விஷயம் இல்லை. மறைந்த என்.டி. ராமராவ் கூட குடும்பத்தையே எதிர்த்து 70+ வயதில் இன்னொரு திருமணம் செய்துகொண்டார். ஆனால் பெரியார் யாருக்கும் பயப்படுபவர் இல்லை, எதையும் மறைப்பவர் இல்லை. மணியம்மை மேல் ஆசைப்பட்டார் என்றால் அதை வெளிப்படையாக சொல்லி இருப்பார். பின் என்னதான் காரணம்? அப்படி அண்ணா, மற்ற இரண்டாம் நிலை தலைவர்கள் மேல் என்ன அதிருப்தி? அது இந்த புத்தகத்தில் தெளிவாக வராதது குறைதான். மலர்மன்னனுக்கு தெரியுமோ தெரியாதோ, நிச்சயமாக ஒரு யூகமாவது இருக்கும். அதை எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மலர்மன்னன் இந்த புத்தகத்தை அண்ணா நிலையில் நின்று எழுதி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா தவறும் பெரியாருடையது என்றும் அண்ணா எத்தனையோ பொறுமையாக இருந்தும் பிரிவை தவிர்க்க முடியவில்லை என்றும் பொருள்படும்படிதான் எழுதி இருக்கிறார். அது புரிந்து கொள்ளக் கூடியதே. அண்ணா மலர்மன்னனை பெரிதும் கவர்ந்த தலைவர் என்பது அவரது பிற எழுத்துகளை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

நல்ல ஆவணம். இது போன்ற புத்தகங்கள் – சார்பு நிலை இருந்தாலும் – இன்னும் வர வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் Non-Fiction