சுஜாதாவின் “நிறமற்ற வானவில்” நாவல்

தனியாக பதிவு போடும் அளவுக்கு குறிப்பிட வேண்டிய புத்தகம் இல்லைதான். ஆனால் கூட்டாஞ்சோறு தளத்தில் ஏற்கனவே இதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருப்பதால் இதைப் பற்றி இங்கே தனியாக எழுதுகிறேன்.

விகடனில் தொடர்கதையாக வந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சியோடு முடிக்க வேண்டும் என்று முயன்றது தெரிகிறது. சிம்பிளான கதை. கிருஷ்ணமூர்த்தியின் மனைவியும் மூன்று வயது மகளும் விபத்தில் இறந்துவிடுகிறார்கள். எப்படி எதிர்கொள்வது? பித்துப் பிடித்து அலையும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் இளம் விதவை சுப்ரியாயை சந்திக்கும்போது கொஞ்சம் வாழ்க்கைக்கு மீள்கிறான். சுப்ரியாயை தற்செயலாக சந்தித்தது எல்லாம் தற்செயல் இல்லை, தன் பாஸ் மணவாளன் செட்டப் என்று அறியும்போது வாழ்க்கை இன்னும் வெறுத்துவிடுகிறது. அழுக்கும் பிசுக்குமாக இருக்கும் ஒரு அநாதை சிறு பெண்ணை சந்தித்து அவளை தன் பெண்ணாக வளர்க்க முடிவு செய்கிறான், அப்போதுதான் அவனால் மீண்டும் வாழ முடிகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் துக்கம் நன்றாக வந்திருக்கிறது. மூர்த்தியை மயக்க முயற்சிக்கும் சுப்ரியா, பாஸ் மணவாளன் கொஞ்சம் செயற்கையாகத்தான் இருக்கிறது. முடிவும் அப்படித்தான், ஆனால் uplifting!

பதின்ம வயதில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கல்யாணி (படுக்கையில்) பேசும் ஒரு வசனம் – இதையெல்லாம் மோந்து பாப்பாளா? – படித்து அதிர்ந்தது நினைவிருக்கிறது.

சில இடங்கள் நன்றாக இருந்தாலும், நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், சுஜாதா

தொடர்புடைய பதிவுகள்:

 • நிறமற்ற வானவில் – உப்பிலி ஸ்ரீனிவாசின் பதிவு
 • சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்”
 • சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம்
 • சுஜாதாவின் “மத்யமர்”
 • சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”
 • சுஜாதாவின் “கொலை அரங்கம்”
 • சுஜாதாவின் “அப்பா அன்புள்ள அப்பா”
 • சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்”
 • சுஜாதாவின் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”
 • சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்”

  கச்சிதமான கதை.

  எங்கோ ஒரு மலையடிவாரத்தில் வைரங்கள் இருக்கின்றன. தற்செயலாக தெரிந்து கொள்ளும் ஒரு பணக்கார சேட்டுப் பையன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறான். இதில் ஒரு கிளீனர் சிறுவன், ஒரு ஊமைச் சிறுமி என்று பாத்திரங்கள்.

  கிளீனராக வரும் சிறுவன் கலக்கலான பாத்திரப் படைப்பு. சுஜாதாவுக்கு எப்போதும் இந்த மாதிரி உழைக்கும் வர்க்க சிறுவர்களை படைப்பது பைன் ஹாத் கா கேல். அவர்கள் மேல் அழுத்தும் வறுமையும், அதே நேரத்தில் அந்த வயதுக்கே உரிய ததும்பி நிற்கும் உற்சாகமும் நன்றாக சித்தரிப்பார். அவன் ஊமைச்சிறுமியுடன் விளையாடுவதும், அக்காவை காப்பாற்றுவதும் எல்லாமே நன்றாக வந்திருக்கும். சேட்டு பையனின் பணத்திமிர், ஜியாலஜி ஃப்ரொஃபசரின் ஜம்பம், டீக்கடைக்காரனின் தோற்கப்போகும் தன்னம்பிக்கை என்று ஒரு கை தேர்ந்த ஓவியனின் லாகவத்தோடு ஓரிரண்டு வரிகளில் ஒரு நல்ல சித்திரத்தை நமக்கு காட்டுகிறார்.

  சுஜாதாவின் பலங்களில் ஒன்று அவர் உபதேசங்களை கவனமாகத் தவிர்ப்பது. இதெல்லாம் ஒரு பலமா, எந்த நல்ல எழுத்தாளனும் உபதேசம் செய்வதில்லையே, அசோகமித்திரன் உபதேசம் செய்வாரா என்ன என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் நா.பா., அகிலன் மாதிரி எழுத்தாளர்களைப் படித்ததில்லை என்று பொருள். அப்படி கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து வளர்ந்த ஒரு கூட்டத்துக்கு சுஜாதா ஒரு revelation என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு சமூக அவலத்தை, அறச்சீற்றம் உருவாக்கும் ஒரு நிகழ்ச்சியை, வெகு கவனமாக ஃபோட்டோ பிடிப்பது போல எடுத்துக் காட்டுவார். அறச்சீற்றம் என்பது அவர் எழுத்தில் இருக்கவே இருக்காது. இந்தப் புத்தகமும் அப்படித்தான். நகரம், ஒரு லட்சம் புத்தகங்கள், ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், ஒரு மெக்கானிக் செட்டில் இரு சிறுவர்கள் ஒரு நடிகையின் மகளுக்கு நண்பர்களாவது (கதை பேர் நினைவு வரவில்லை) என்று பல புனைவுகளை சொல்லலாம்.

  சுஜாதாவின் சிறந்த புனைவுகளில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, தமிழ் நாவல்கள்

  தொடர்புடைய சுட்டிகள்:

 • சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம்
 • சுஜாதாவின் “மத்யமர்”
 • சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”
 • சுஜாதாவின் “கொலை அரங்கம்”
 • சுஜாதாவின் “அப்பா அன்புள்ள அப்பா”
 • சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்”
 • சுஜாதாவின் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”