கி. ராஜநாராயணனுக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்தபோது

கி.ரா.வுக்கு எழுபது வயதில், 1991-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது. (அப்படி என்றால் இப்போது அவருக்கு கிட்டத்தட்ட தொண்ணூறு வயதா! சீக்கிரம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஏதாவது கொடுங்கப்பா!) அப்போது அவர் விகடனுக்கு அளித்த பேட்டி. நன்றி, விகடன்!

ரசிகமணி டி.கே.சி.யின் கடைசி காலத்து சீடரான கி.ரா.வின் முழுப் பெயர் ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை பல்கலைக்கழகம் நாட்டுப் புறக்கதைகளைத் தொகுத்துக் கொடுக்கச் சொல்லி அழைக்க, அதற்காகப் புதுவை வந்தவர் அப்படியே தங்கிவிட்டார். 70 வயதிலும், தனது 60 வயது மனைவி கணவதி அம்மாளுடன் புதுவை நேரு வீதியில் கலகலப்பான மூடில் ஷாப்பிங் வருவார் கி.ரா.!

முந்தா நாள் (18.12.91) ராத்திரி ஏழரைக்கு டி.வி. தமிழ் நியூஸ்லே எனக்குச் சாகித்ய அகாடமி பரிசு கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனே, பெரிய குதூகலம் ஏதும் இல்லே. மாறா, அவ்ளோ தூரம் டெல்லிக்குப் போய் பரிசை வாங்கணுமேங்கிற மலைப்புதான் ஏற்பட்டுச்சு! ஏன்னா, பயணம்னாலே எனக்கு ஒரு பயம், தயக்கம், அலுப்பு, சலிப்பு!

இந்தப் பரிசு, விகடனில் நான் எழுதின கோபல்லபுரத்து மக்களுக்காகக் கிடைச்சதுலே எனக்குத் திருப்திதான் என்றாலும், 1976-லே சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட என்னோட நாவலான கோபல்ல கிராமத்துக்கே இது கெடைச்சிருக்கணும்.

ஆனா, இப்போ கிடைச்சதிலே ஒரு சந்தோஷம் என்னன்னா, அப்போ சாகித்ய அகாடமி பரிசுத் தொகை 5,000 ரூபாய்; இப்போ 25,000 ரூபாய்ங்கறதுதான்!

ஆந்திராவிலிருந்து இருநூறு வருஷங்களுக்கு முன்னாலே எங்களோட கரிசல் பாலைவனத்துலே தங்கி, அதை ஊராக்கிய கம்மா நாயுடு பரம்பரையினரைப் பத்தின இந்த நாவல்ல, அந்த மக்களின் பிரச்னைகள், வாழ்க்கை முறைகளைச் சொன்னாலும், எனக்கும் முந்தி இப்படிக் கரிசல் சொன்னவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான்.

அழகிரிசாமி கரிசல் இலக்கியம் தொடங்கினார். ‘இதோ, இதுதான் கரிசல் இலக்கியம்’ என அதற்கு ஒரு முழுமை கொடுத்தவன் நான். மேலும், அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல், எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன்; சொல்கிறேன்; சொல்வேன்!

கணையாழி காலம்கிற மாதிரி அப்போ சரஸ்வதி (இதழ்) காலம். விஜயபாஸ்கரன் அதோட ஆசிரியர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமியெல்லாம் அதிலேயிருந்துதான் பொறந் தாங்க. நானும் அப்போ கம்யூனிஸ்ட்டா? அதால, ஜெயகாந்தன் மூலமா ‘சரஸ்வதி’க்கு நான் அறிமுகம் ஆனேன். அதுலே எழுதத் தொடங்கினேன். நானும் அங்கேதான் பொறந்தேன். முன்னே, 1971-ல் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு எனக்குக் கிடைச்சுது. அதற்கு அப்புறமும் தமிழக அரசோட மற்ற பரிசுகளும் கிடைச்சிருக்கு.

ஆனா, இப்போ – அப்போன்னு எப்பவுமே, எந்தக் காலத்திலுமே எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் என்கிறதெல்லாம் கொஞ்சமும் கிடை யாது. பார்க்கிறேன்; கேட்கிறேன்; சிந்திக்கிறேன்; எழுதறேன். அவ்ளோதான்! அப்படி என் மக்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்; எழுதுகிறேன். அவை பிரசுரமாகின்றன. அவ்ளோதான்! இதற்குப் பணமும் கிடைக்கிறதே, அப்புறம் என்ன!

– மகிழ்ச்சியாய்க் கூறிய ராஜநாராயணன், தொடர்ந்தார்…

பணத்துக்காகச் சும்மாவேனும் எழுதிக் குவிப்பது, கொட்டுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. நிதானமா எழுதணும்; அதனால அது சிறப்பா இருக்கணும்னு விரும்பறேன்.

முதல்ல நிறைய நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி, சேகரிச்சுப் பின்னால எழுதப்போறேன். அதுலயே இனிமே முழுசா கவனம் பண்ணணும்னு நெனச்சிட்டிருக்கேன். இந்த நிதானத்துக்குக் காரணம் சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையிலே ஏராள ஈடுபாடு; அதுதான் பாட்டு கத்துக்கிட்டேன்; தொண்டையிலே கட்டி வந்து நின்னுபோச்சு. பின்னாலே வயலின் கத்துக்கப் போனேன்; அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை!

சின்ன வயசிலே இடைசெவலில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் காருகுறிச்சி அருணாசலம் மாப்பிளெ ஆனார். அவர் நாதஸ்வர வித்வான் என்கிறதைவிட, ரொம்பவும் சிறந்த பாடகர். மாமனார் வீட்டுக்கு வந்து அங்கே சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு நேரே எங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்து விடுவார். நான் அவரோட பாட்டின் பரம ரசிகன்.

எனக்குள் ஒரு வேடிக்கை உண்டு. ஒரு தச்சு ஆசாரி அழகா நாற்காலி செஞ்சா, அதைச் செய்யணும்னு எனக்கும் தோணும். சவத்துக்கு அடிக்கிற மோளத்திலே லயிச்சு, அப்படி வாசிக்க நினைப்பேன். எட்டாவது வரை ஸ்கூலுக்குப் போனேன்; ஆனா படிக்கல; ஸ்கூல்ல எதுவுமே படிக்கல. நான் படிச்சதெல்லாம் வெளியிலே இந்தப் பரந்த உலகத்திலேதான். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேன்; எல்லாத்திலேயும் லயிச்சேன்; கடைசியிலே எதுவுமே நிக்கலே. அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன்!

என்று குற்றால அருவி போலக் கலகலவென பொழிகிறார் கி.ரா.

இரா. முருகன் சிபாரிசுகள்

இரா. முருகன் பிரபல தமிழ் எழுத்தாளர். அவரைப் பற்றி கேள்விப்படாதவர்களுக்கும் அவர் கமலின் “உன்னைப் போல் ஒருவன்” படத்துக்கு வசனம் எழுதினார் என்று தெரிந்திருக்கலாம். அவர் தனக்குப் பிடித்த 81 படைப்புகள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். (பாஸ்டன் பாலாவுக்கு நன்றி!) அந்த லிஸ்டில் எல்லாவற்றையும் நான் படித்ததில்லை – படித்தவை பற்றி ட்விட்டர் ஸ்டைலில் சிறு குறிப்புகள்.

லிஸ்டின் வரிசையை நான் கன்னாபின்னாவென்று மாற்றி நாலு சின்ன லிஸ்ட்களாக போட்டிருக்கிறேன். இந்த சிபாரிசுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், படித்தவை, படிக்காதவை பற்றி எழுதுங்களேன்!

நாங்கள் பதிவு எழுதி இருப்பவை:

 1. சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ – தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று. பக்சின் பதிவு இங்கே.
 2. க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ – எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. இதைப் பற்றிய பதிவு இங்கே.
 3. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – அற்புதமான புத்தகம்! பதிவு இங்கே.
 4. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ – பதிவை இங்கே காணலாம்.
 5. லா.ச.ராவின் ‘அபிதா’ – பதிவு இங்கே.
 6. அண்ணாவின் ‘ஓர் இரவு’ – நான் படித்ததில்லை. ஆனால் திரைப்படமாக பார்த்திருக்கிறேன். திரைப்பட விமர்சனம் இங்கே. இந்த நாடகத்தைப் பற்றி கல்கி சொன்னது இங்கே.
 7. சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ – நல்ல நாடகம். பதிவு இங்கே.
 8. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’ – சாரதாவின் பதிவை இங்கே காணலாம்.

ஆர்வி படித்திருப்பவை:

 1. கு.ப.ராவின் ‘விடியுமா’ – இந்த சிறுகதையை புரிந்து கொள்ள நான் கஷ்டப்பட்டேன். இப்போதும் புரிந்துவிட்டது என்று நிச்சயமாக சொல்வதற்கில்லை. அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா? போய்ட்டார் என்றுதான் நினைக்கிறேன். 🙂 என் லிஸ்டில் வராது. இங்கே படிக்கலாம்.
 2. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ – அருமையான சிறுகதை. என் anthology-இல் நிச்சயமாக இடம் பெறும்.
 3. கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ – நெகிழ்ச்சியான சிறுகதை. இங்கே படிக்கலாம்.
 4. கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ – கிருஷ்ணன் நம்பியின் உன்னதமான சிறுகதை. இங்கே படிக்கலாம். என் anthology-இல் நிச்சயமாக இடம் பெறும்.
 5. வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ – அருமையான சிறுகதை, இங்கே படிக்கலாம். என் anthology-இல் நிச்சயமாக இடம் பெறும்.
 6. வண்ணதாசனின் ‘தனுமை’ – நல்ல சிறுகதை, ஆனால் என் anthology-இல் வராது. இங்கே படிக்கலாம்.
 7. திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’ – நல்ல சிறுகதை, ஆனால் என் anthology-இல் வராது.
 8. காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’ – முன்பு எப்போதோ படித்தது, பெரிதாக என்னைக் கவரவில்லை.
 9. ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ – ஜி. நாகராஜனின் பிரமாதமான குறுநாவல்.
 10. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ – கி.ரா.வின் அற்புதமான நாவல்.
 11. தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ – தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று. இதைப் பற்றி பக்ஸ் எழுதுவான் எழுதுவான் என்று பார்க்கிறேன், இன்னும் அவனுக்கு கை வரவில்லை.
 12. கல்கியின் ‘தியாகபூமி’ – மெலோட்ராமா நிறைந்த சினிமாத்தனமான நாவல். சினிமாவின் திரைக்கதைதானே!
 13. தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ – படிக்கலாம். ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
 14. அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’ – என்னைப் பெரிதாக கவரவில்லை.
 15. பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ – அருமையான புத்தகம்.
 16. ஜெயமோகனின் ‘ரப்பர்’ – நல்ல நாவல், ஆனால் முழுமையான வெற்றி அடையவில்லை என்றுதான் சொல்வேன்.
 17. கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ – நாடகமும் அருமை, சினிமாவும் அருமை.

படிக்காதவை, கேள்விப்படாதவை, இந்த புனைவுகளில் பலவும் என் படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கின்றன.

 1. விந்தனின் ’பாலும் பாவையும்’
 2. பா. ஜெயப்பிரகாசத்தின் ‘இன்னொரு ஜெருசலேம்’
 3. நீல. பத்மனாபனின் ‘பள்ளி கொண்டபுரம்’
 4. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’
 5. பொன்னீலனின் ‘உறவுகள்’
 6. கு. சின்னப்பபாரதியின் ‘தாகம்’
 7. சோ. தர்மனின் ‘நசுக்கம்’
 8. இமயத்தின் ‘கோவேறு கழுதைகள்’
 9. பா. செல்வராஜின் ‘தேனீர்’
 10. பாமாவின் ‘கருக்கு’
 11. ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’
 12. கிருத்திகாவின் ‘வாசவேஸ்வரம்’
 13. அம்பையின் ‘சிறகுகள் முறியும்’
 14. பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’
 15. சே. யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’
 16. பெ. கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’
 17. நகுலனின் ‘நிழல்கள்’
 18. மா. அரங்கநாதனின் ‘காடன் மலை’
 19. பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’
 20. எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’
 21. தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’
 22. குமார செல்வாவின் ‘உக்கிலு’
 23. நரசய்யாவின் ‘கடலோடி’
 24. தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’
 25. சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’
 26. நாகூர் ரூமியின் ‘குட்டி யாப்பா
 27. சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’
 28. பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’
 29. பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’
 30. ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’
 31. எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’
 32. வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’
 33. ந. பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’
 34. சுதேசமித்திரனின் ‘அப்பா’
 35. யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’
 36. அ. சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’
 37. சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’
 38. அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’
 39. பழமலயின் ‘சனங்களின் கதை’
 40. கலாநதி கைலாசபதியின் ‘ஒப்பியல் இலக்கியம்’
 41. எஸ். ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’
 42. ஆர்.கே. கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’
 43. கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு
 44. சிட்டி

கீழே இருப்பவை எல்லாம் கவிதைகள் என்று நினைக்கிறேன், பொதுவாக எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்பதால் படிக்க வாய்ப்பு குறைவு. ஆனால் லிஸ்டில் உள்ள பலரும் புகழ் பெற்ற கவிஞர்கள், பொதுவாக புதுக்கவிதை எழுதுபவர்கள்.

 1. ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’ – கவிதை அலர்ஜி இருந்தாலும் இவரது இரண்டு கவிதைகளை ரசித்தேன். அந்தக் கவிதைகள் இங்கே.
 2. சி. மணியின் ‘வரும், போகும்’
 3. கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’
 4. மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’
 5. மீராவின் ‘ஊசிகள்’
 6. சோ. வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’
 7. பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’
 8. மஹாகவியின் ‘குறும்பா’
 9. மு. மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’
 10. காமராசனின் ‘கறுப்பு மலர்கள்’
 11. அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’
 12. கல்யாண்ஜியின் ‘புலரி’
தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்
தொடர்புடைய சுட்டி: இரா. முருகனின் தளம்