சுஜாதாவின் ஒரு கிரிக்கெட் கதை

இந்தியாவில் பாதி பேருக்கு கிரிக்கெட் பைத்தியம் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டை வைத்து எழுதப்பட்ட புனைவுகள் மிகக் குறைவு. கிரிக்கெட்டை விடுங்கள், விளையாட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்டவையே மிக அபூர்வம். ஆங்கிலத்திலோ இவை சர்வசாதாரணம். ஜாக் லண்டனின் A Piece of Steak, ரிங் லார்ட்னர் மற்றும் வில்லியம் சரோயனின் பல கதைகள், காலம் பூராவும் குதிரைப் பந்தயப் பின்புலத்தை வைத்தே எழுதிய டிக் ஃபிரான்சிஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எனக்குத் தெரிந்து தமிழின் மிகச் சிறந்த விளையாட்டுப் புனைவு வாடிவாசல்தான்.

சுஜாதா கிரிக்கெட்டை அங்கங்கே தொட்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் ஒரு பையனை வைத்து ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் பேர் நினைவு வரவில்லை. எனக்குப் பிடித்த ஒரு கிரிக்கெட் (ஸ்ரீரங்கத்துக்) கதையை உப்பிலி ஸ்ரீனிவாஸ் பதித்திருக்கிறார்.

ஏறக்குறைய இப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவது என்பதை மறந்து பல வருஷம் ஆன பிறகு ஒரு முறை ஆஃபீஸில் கிரிக்கெட் மாட்ச். எங்கள் டீமில் எல்லாரும் சொத்து சொத்து என்று விழுந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதையில் வரும் கேவி மாதிரி ரவி என்று ஒருவன் ஆடிக் கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் வந்து நீ சும்மா நின்றால் போதும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். எனக்கு நிற்கத்தான் வந்தது, நான் யோசித்து பாட்டை சுழற்றுவதற்குள் பந்து போய்விடுகிறது. ஆனால் பாருங்கள், என் அதிருஷ்டம், ஒரு பந்து கூட ஸ்டம்புக்குப் போடவில்லை. அதனால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நான் எந்தப் பந்தையும் ஆட முயற்சிக்கவே இல்லை. எப்போதும் shoulder arms-தான். இப்படி நான் ஸ்டாண்ட் கொடுத்து ஒரு ஐம்பது ரன் தேற்றினோம். ஆஹா ஆர்வி என்னமா ஸ்டாண்ட் கொடுத்தான் என்று ஒரே பாராட்டு!

உங்களுக்கு ஏதாவது விளையாட்டை வைத்து எழுதப்பட்ட புனைவு நினைவு வருகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு

நாஞ்சில் நாடனின் எழுத்துகளை நண்பர் சுல்தான் ஷரீஃப் தொகுத்து வருவது தெரிந்திருக்கும். நான் ரெகுலராகப் படிக்கும் ஒரு தளம் இது, இது வரை பார்க்காவிட்டால் கட்டாயம் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நாஞ்சில் நாடனின் வாழ்க்கைக் குறிப்பு என்று ஒரு பதிவு சமீபத்தில் வந்தது. அவருடைய எழுத்துகளை அருமையாக லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். படிக்க வேண்டிய பதிவு.

நான் நாஞ்சில் நாடனை அதிகம் படித்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் மட்டுமே படித்திருக்கிறேன். விட்டுப்போன ஒரு எழுத்தாளர், தேடிப் பிடிக்க வேண்டும். சுல்தான் ஷரீஃபுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்

நா. பார்த்தசாரதியின் ராணி மங்கம்மாள்

இன்னும் லீவ்தான். ஆசைக்கு ஒரு பதிவு…

ராணி மங்கம்மாளுக்கு தனி போஸ்ட் எழுத ஒரே காரணம்தான் – ஜெயமோகன் இதை சிறந்த historical romance ஆக குறிப்பிட்டிருப்பது. அவருடைய இந்தப் பதிவில் இருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசை.

சரித்திரத்தில் வெகு சில பேர்களே வரலாற்று அறிஞர்களைத் தாண்டி சாதாரண மக்களின் மனதிலும் இடம் பெறுகின்றன. ராஜா தேசிங்கு, கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் என்று மூன்று பேர்தான் எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்கு தெற்கே, மங்கம்மாள் என்ற பேருக்கு ஒரு கவுரவம் உண்டு. அது மங்கம்மாள் “சாலையின் இரு புறமும் மரம் நட்டதாலா”, இல்லை மரம் நடுவதற்கு சாலை போட்டதாலா, சத்திரங்கள் வைத்ததாலா என்று தெரியவில்லை. இன்றைக்கும் மங்கம்மாள் சத்திரம் இருக்கிறதாம் (இன்றைய, அன்றைய ஃபோட்டோக்கள் கீழே). இத்தனைக்கும் அவருக்கு இழுக்கு உண்டாக்குவதற்காகவே கள்ளக் காதல் என்றெல்லாம் வதந்தியைப் பரப்பினார்களாம்.

சரித்திரம் சரியாக நினைவில்லாதவர்களுக்காக: கணவன் சொக்கநாத நாயக்கர் இறந்ததும் மகன் ரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனுக்கு regent ஆக இருந்து வயது வந்ததும் அவனுக்கு மகுடம் சூட்டுகிறாள் ராணி மங்கம்மாள். மகன் இறந்ததும் பேரனுக்கு regent. பேரன் அவளை சிறை வைத்து முடிசூடுகிறான். மங்கம்மாள் பெரும் வெற்றிகளை எல்லாம் அடையவில்லை. அவர் “ஆட்சிக்காலத்தில்” ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி தன் நாடு ஒரு சுதந்திர நாடு என்று பிரிந்து போனார். ஆனால் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு இருந்தது. அதுவே அவர் நினைவில் தங்கக் காரணம் என்று நினைக்கிறேன்.

நா.பா. இந்தக் கதையை அவர் பாணியில் எழுதுகிறார். கதையில் அவ்வளவாக சுவாரசியம் இல்லை. பாத்திரங்கள் எல்லாம் caricatures மட்டுமே. அதுவும் கிழவன் சேதுபதியுடன் மகன் முத்துவீரப்பன் இடும் “போர்” ரொம்ப கேனத்தனமாக இருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நல்ல அருமையான வாய்ப்பு – இதையே கி.ரா., சு.ரா., ஜெயமோகன், ஏன் கல்கி மாதிரி ஒருவர் கூட பிய்த்து உதறி இருப்பார்கள். இவர் சாண்டில்யனை விட பரவாயில்லாமல் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். என்னைக் கேட்டால் இதற்கு பதில் ஏதாவது நாயக்கர் வரலாறு என்கிற மாதிரி சரித்திரப் புத்தகத்தையே படிக்கலாம். ஆனால் இதுவே அவர் எழுதிய சிறந்த சரித்திரப் புத்தகம் என்று நினைக்கிறேன். சம்பவங்களை நேர்மையாகத் தொகுத்திருக்கிறார். உபதேசம் இருந்தாலும் குறைவாகத்தான் இருக்கிறது.

வரலாறு என்ற முறையில் படிக்கலாம். கதை என்ற முறையில் தோல்வி.

புத்தகத்தை ஆன்லைனில் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், சரித்திர நாவல்கள்

Anthem

(இது ஒரு மீள் பதிவு. முன்பு கூட்டாஞ்சோறு தளத்தில் வந்தது.)

Anthem
தான் வாழும் சூழ்நிலையின் பாதிப்பினால் ஒரு எழுத்தாளருடைய மொத்த கொள்கையும் உருவாகலாம் என்பதற்க்கு அய்ன் ராண்ட் ஒரு தலைச்சிறந்த உதாரணம்.  ரஷ்யாவின் கொள்கைகள் மேலிருந்த வெறுப்பு objectivism என்னும் தத்துவ சிந்தனையில் முடிந்தது. அவருடைய எழுத்தின் உக்கிரம் சுதந்திரமாக இயங்கமுடியாத சூழ்நிலையை புறக்கணிப்பதிலும், தனி மனிதர்களின் வாழ்வின் குறிக்கோள் தங்களை சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பதிலும் தான் மையம் கொண்டிருந்த்த்து. Atlas Shrugged, The Fountain Head போன்ற நாவல்கள் இந்த கொள்கையை பறைச்சாற்றும் தத்துவ நூலகள் போல அமைந்துள்ளது.

இந்தியா போன்ற சமுதாய முன்னேற்ற மைய நோக்கை கொள்கையாகக் கொண்ட அரசாங்கத்தின் கீழுள்ள சமூகத்தில் வாழும் நமக்கு இது போன்ற அய்ன் ராண்ட் நாவல்கள் ஏற்புடையாதாக இருப்பதில்லை. அதனால் இவருடைய கொள்கைகளை புரிந்து கொள்வதற்க்கும் சிரமமாக இருக்கலாம். மேலும் புரியாத கொள்கைகளை கொண்ட இந்த நாவல்களை படிப்பதற்கும் சிரமமாக இருக்கலாம்.

அவருடைய கொள்கைகளை அறிந்து கொள்வதற்கும், சரி வர புரிந்து கொள்வதற்க்கும் ஆன்த்தம் ஒரு primer ஆக விளங்குகிறது. இது அய்ன் ராண்டின் மிக எளிமையான நாவல். ஒரு கற்பனை சோசியலிச சமுதாயத்தை அறிமுகப்படுத்தி, தனி நபர் என்பவரின் அடையாளம் இழக்கபட்ட மற்றும் தனிநபர் என்ற ஒரு அடையாள்மே  இல்லாத அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒரு தனி நபரை அடையாளம் அடைய செயவதே கதையின் மையக் கரு. மேலும் Collectivism vs Individualism எனபதை அடிபபடை வாதமாகக் கொண்டு பின்னப்பட்ட நாவல்.

இலக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, ஆன்த்தம் நாவலில் ஒட்டுமொத்த சமுதாய இயந்திரத்தை எதிர்த்து தனிநபரின் சிறப்பை சாதுர்யமாக உயர்த்தி சொல்வது அய்ன் ராண்டின் சிறப்பு. இயந்திர தனமாக மக்கள் செலுத்தப்படுகிறார்கள். இயந்திரத்தனமாக பிறப்பது முதல், படிப்பது, பொழுதுபோக்குவது, வேலை நிர்ணயிக்கப்படுவது, ஏன் சிந்தனை (உயிர் வாழ்விற்கு தேவைப்படும் அடிப்படை சிந்தனை மட்டுமே) செய்வதுகூட இயந்திர தனமாகத்தான். இப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமைப்பில் தனி நபர் சார்ந்த முன்னேற்றம் குற்றமாக கருதப்படும் பொழுது அந்த குற்றத்தில் சுய பிரஞ்கையுடன் ஈடுபடலாம் என்கிறார். மேலும் அது தான் தனி நபர் தர்மம் என்கிறார்.

படிப்பதற்கு அய்ன் ராண்டின் கொள்கைகள் நம்பிக்கையும் எழுச்சியும் ஊட்டுவதாக இருந்தாலும், சராசரி மனிதர்களே அதிகமாகக் கொண்ட சமுதாயத்தில் வாழும் இப்படிப்பட்ட சராசரி மனிதர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு இந்தக் கொள்கைகள் சாத்தியமானதா என்பது நமக்கு எப்பொழுதும் எழும் கேள்வி. அய்ன் ராண்ட் இந்த சராசரி மனிதர்களை பற்றி கவலையில்லை என்று தான் ஒரு முகவுறையில் சொல்கிறார். (கவலையில்லை என்றால் அவர்களுக்கு என்ன தீர்வு என்ன என்பது புரியவில்லை. தீர்வைப் பற்றி கவலை பட வேண்டிய அவசியம் தனி மனிதனுக்கு இல்லை என்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.). மேலும் அவருடைய சிந்தனை எல்லாம் அறிவுஜீவிகள் பற்றியே என்றும் இது அறிவுஜீவிகளின் உலகம் மட்டுமே என்பதும் சற்று நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் அய்ன் ராண்ட் பற்றி எழுதியுள்ளது கீழே உள்ள சுட்டிகளில் பார்க்கலாம்.

Ayn Rand 1
Ayn Rand 2
Ayn Rand 3
Ayn Rand 4

அய்ன் ராண்ட் பற்றி மேலும் இங்கே பார்க்கலாம்.

Ayn Rand Institute

அனிமல் ஃபார்ம்

(இது ஒரு மீள் பதிவு – முன்பு கூட்டாஞ்சோறு தளத்தில் வெளியானது)

 

animalfarm
வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ஒரு ஆவலிருந்தது. RVயிடம் புத்தகத்தை கேட்டிருந்தேன். ஓவ்வொரு முறையும் அவனிடமிருந்து விடைபெறும் பொழுது மறந்து விடுவேன். என்னுடைய பெண் பிருந்தாவிற்கு இலக்கிய வகுப்பிற்க்காக பள்ளியில் இந்த புத்தகம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவள் படித்து முடித்தும் நான் எடுத்துக் கொண்டேன். அவள் ஒரு எச்சரிக்கை கொடுத்தாள். “Daddy, don’t read the introduction, it will give away the story” என்றாள். நானும் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரிஃபேஸ், இண்ட்ரொடக்‌ஷன் இரண்டையும் விட்டு விட்டு படிக்கத் தொடங்கினேன். பின்னர் அவை இரண்டையும் படித்து சரி பார்த்தேன். பிருந்தா சொன்னது ஓரளவு சரியாகத்தானிருந்தது. கதையில் வரும் மேஜர், ஸ்னோபால், நெப்போலியன் கதாபாத்திரங்களை நிஜபாத்திரங்களுடன் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும் சில பாத்திரங்களையும் கண்டு கொள்ளமுடிந்தது. சில பாத்திரங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை.

பண்ணை வைத்திருக்கும் மிஸ்டர்.ஜோன்ஸை எதிர்த்து பண்ணை மிருகங்கள் புரட்சி செய்து பண்ணையின் நிலைமையை மாற்றிய கதை.  இது காலத்தினுடன் சேர்த்து பார்த்து படித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இப்பொழுது படிப்பவர்களுக்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரியவில்லை. ரஷ்யப் புரட்சி, கம்யூனிஸம், கார்ல் மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி ஆகியவர்களின் மேல் நாட்டமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இலக்கியம்.

ஜார்ஜ் ஆர்வெல் கலையையும், அரசியலையும் பிணைத்து அழகான இலக்கியமாக Animal Farmஐ நமக்கு வழங்கியுள்ளார். இன்றைய காலத்தில் ”அரசியலில் இதெல்லாம் சகஜம்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 1920-1950 காலகட்டங்களில் புரட்சி மலர்ந்தால் நமக்கு தினம் விருந்து என்று கனவு கண்டு கொண்டிருந்த பல கோடி மக்களுக்கு அரசியல்வாதிகளின் அந்தர் பல்டிகள் மிகுந்த ஏமாற்றமாகியிருக்கலாம். இன்று இருக்கும் நமக்கு அரசியல்வாதிகள் செயல்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைய செய்யாது. ஏனென்றால் அன்றைய காலத்தை விட இன்று அரசியல்வாதிகள் நிறையவே மக்களை தலையில் மிளகாய் அரைத்து மொட்டையாக்கி விட்டார்கள். ஏதாவது கொஞ்சம், நஞ்சம் முடி இருந்தாலும் அதையும் திருடி விற்று காசு பார்த்துவிடுவார்கள். இதனால் மக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை கேட்டும், செயல்களை பார்த்தும் தங்கள் மொட்டை தலையை தடவிப் பார்த்து பழகிக் கொண்டார்கள்.

இன்று Animal Farmஐ இலக்கிய ஆர்வத்துடன் படிப்பவர்களுக்கு, இது இன்றும் மகிழ்வூட்டும் ஒரு புத்தகம். மிருகங்களின் ஏழு கட்டளைகள் (மோசஸின் 10 கட்டளைகளை போல்), Beasts of England என்ற கவிதை எல்லாம் நல்ல தமாஷ்.

அதிகம் கதையை சொல்லவேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புத்தகத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

லீவ்

போஸ்ட் எழுதி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னொரு வாரமாவது ஆகும், சில பல சொந்த வேலைகள். பக்ஸ் எழுதினால் உண்டு.

தமிழ்ச் சிறுகதை – ஜெயமோகன் பட்டியல் பாகம் 1

படிக்க வேண்டிய தமிழ் சிறுகதைகள் என்று ஜெயமோகன் ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகள் தேறும். 75 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய reference-களில் ஒன்று இந்தப் பதிவு.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

பார்த்தவுடன் வழக்கம் போல என்ன இதில் படித்திருக்கிறோம் என்ன படிக்கவில்லை என்று கணக்கு ஆரம்பித்துவிட்டது. எனக்கு ஒரு எரிச்சலூட்டும், ஆனால் தீராத பிரச்சினை உண்டு. கதையை பற்றி இரண்டு வரி சொன்னால் தெரியும்; ஆனால் கதையின் தலைப்பு ஞாபகமே வராது.

250+ சிறுகதைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார். நான் பகுதி பகுதியாகத்தான் இவற்றைப் பற்றி எழுத முடியும். முதல் பகுதியில் அவர் சொல்லி இருக்கும் புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள். தமிழின் முதன்மையான எழுத்தாளர் யார் என்றால் நான் புதுமைப்பித்தனைத்தான் ஒரு கணம் கூட யோசிக்காமல் கை காட்டுவேன். அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். அவர் ஹெமிங்க்வே, மார்க்வெஸ், ஃபாக்னர், ஷா மாதிரி பிரபலமாக வேண்டும். தரமான மொழிபெயர்ப்பு, உலக அளவில் மார்க்கெடிங் வேண்டுமே! என்றாவது நான் பணக்காரன் ஆனால் இதுதான் முதல் வேலை…

கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் அழியாச்சுடர்கள் தளத்தில் கதையைப் படிக்கலாம். அன்றிரவு, வேதாளம் சொன்ன கதை, பால்வண்ணம் பிள்ளை ஆகியவை தவிர மிச்ச எல்லாம் அங்கே கிடைக்கிறது.

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்: இந்தக் கதையில் அவர் என்னதான் சொல்ல வருகிறார், கடவுள் எதற்கு வந்தார், இங்கே வந்து என்ன சாதித்தார், moral of the story என்ன, ஓ. ஹென்றி ட்விஸ்ட் எங்கே, சிறுகதைக்கு இருக்க வேண்டிய உச்சம் எங்கே, இது என்ன genre என்றெல்லாம் கேட்டால் பதில் கிடையாது. அட் லீஸ்ட் என்னிடம் கிடையாது. மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் விதிகளை உருவாக்குபவர்கள். இதையெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! கதை பூராவும் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை, (பிள்ளை சிவ பெருமானிடம் சொல்கிறார் – என் பத்திரிகைக்கு ஒரு ஆயுள் சந்தா வாங்கிக்கங்களேன்! சிவ பெருமானின் கவுண்டர் – யார் ஆயுள்?) சரளமான நடை, கந்தசாமிப் பிள்ளையின் பெண்ணின் சித்தரிப்பு எல்லாம் சேர்ந்து இந்த கதையை உன்னதமான ஒன்றாக்குகிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு – நடராஜனையும் பார்வதியையும் தெரியாத அயல் நாட்டினர் இந்தக் கதையை முழுமையாக ரசிக்க முடிக்க முடியாது, எந்த மொழிபெயர்ப்பும் இதன் கலாசார ஆழத்தை இந்தியாவுக்கு வெளியே கொண்டு போக முடியாது என்பது மட்டும்தான்.
  2. கயிற்றரவு: மனித இனத்தின் பெரும் தத்துவக் கேள்வியை – நான் யார்? – கேட்கிறது இந்தக் கதை. ஆனால் எனக்கு பிரமாதமாக ரசிக்கவில்லை.
  3. செல்லம்மாள்: இறந்துகொண்டிருக்கும் மனைவி என்று சுருக்கமாக கதையை சொல்லிவிடலாம். அதற்கு மேல் கதையை விவரிக்க ஒரு ஜெயமோகன்தான் வர வேண்டும். “குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்” என்ற வரி இன்னும் பேசப்படுவது.
  4. சிற்பியின் நரகம்: நாலைந்து முறை படித்தும் எனக்கு இந்தக் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. கலை அழகு மிகுந்த சிற்பம் கடவுளாக மாறிவிட்டதில் சிற்பிக்கு ஏற்பட்ட இழப்பு என்று நினைக்கிறேன்.
  5. கபாடபுரம்: மிக நல்ல fantasy. இன்று கூட அந்த மாதிரி ஒரு சிறுகதையை யாரும் தமிழில் எழுதவில்லை.
  6. ஒரு நாள் கழிந்தது: நான் முதன்முதலில் படித்த புதுமைப்பித்தன் சிறுகதை இதுதான். பள்ளிப்பருவத்தில் துணைப்பாடமாக இருந்தது. இதை எல்லாம் விவரிக்கக் கூடாது, படித்துக் கொள்ளுங்கள்!
  7. அன்றிரவு: நினைவு வரவில்லை, இப்போது பார்த்து புஸ்தகத்தையும் காணோம். யாரப்பா இரவல் வாங்கியது?ஜடாயு நினைவுபடுத்தினார், பிறகு பாஸ்கர் தந்த சுட்டியிலும் போய்ப் பார்த்தேன். எனக்கு இந்தக் கதை சுமார்தான். என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியவில்லை. அலகிலா விளையாட்டு என்கிறாரா? எனக்கு இந்த லீலா வினோதம் எல்லாம் புரிவதில்லை. புரிந்தால் நான் ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன்? நான் மனக்குகை ஓவியங்கள் என்ற கதையில் வரும் மனிதன் கட்சி. 🙂
  8. சாமியாரும் குழந்தையும் சீடையும்: இதில் என்ன இருக்கிறது என்று ஜெயமோகன் இதைப் புகழ்கிறார்? அவரே கோனார் நோட்ஸ் எழுதினால்தான் புரியும்…
  9. காலனும் கிழவியும்: கதையின் நகைச்சுவை இதை உச்சத்துக்குக் கொண்டுபோகிறது. ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.
  10. சாப விமோசனம்: இதுவும் அயல்நாட்டினர் புரிந்து கொள்வது கஷ்டம் என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லாதது. பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்களை விட இந்த ஒரு கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. படித்தவர்களுக்கு கதையை விவரிக்க வேண்டியதில்லை, படிக்காத அதிர்ஷ்டக்காரர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  11. வேதாளம் சொன்ன கதை: என்ன சார் இதையெல்லாம் லிஸ்டில் சேர்க்கிறீர்களே?
  12. பால்வண்ணம் பிள்ளை: அவ்வளவு பிரபலம் ஆகாத, ஆனால் உலகத் தரம் வாய்ந்த சிறுகதை. அசூயைக்கு ஒரு கதை என்று தி.ஜா.வின் பாயசத்தைப் பற்றி சொல்லி இருந்தேன். வீம்புக்கு ஒரு கதை என்று இதை சொல்லலாம்.

அடுத்த முறை அவரைப் பார்த்தால் சண்டை போட வேண்டும் 🙂 – எப்படி மனித இயந்திரம், பொன்னகரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள் மாதிரி கதைகளை விடலாம்? இந்த லிஸ்டை அவர் இங்கே வருவதற்கு முன்பே பார்த்திருந்தால் அவர் இங்கே வந்திருந்தபோது கேட்டிருக்கலாம். எனக்கு நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை. பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது. பக்கம் பக்கமாக பேசினாலும் பதியாத கருத்தை ஆறு வார்த்தைகளில், ஒரே ஒரு வரியில் கற்பு எவ்வளவு செயற்கையான கருத்து என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்!

எஸ்.ரா. க.க. பிள்ளை, செல்லம்மாள் மற்றும் காஞ்சனை ஆகியவற்றை தன் தேர்வுகள் என்று சொல்கிறார். காஞ்சனை படிக்கக் கூடிய கதைதான்; அவர் எழுதிய ஒரே பேய்க்கதையோ? ஆனால் காஞ்சனையை நான் சிறந்த சிறுகதை என்று சொல்லமாட்டேன்.

சுஜாதா மனித எந்திரம் கதையைத்தான் நிறைய மாணிக்கங்களில் தலை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

என்னுடைய anthology-யில் க.க. பிள்ளை, செல்லம்மாள், ஒரு நாள் கழிந்தது, சாப விமோசனம், பால்வண்ணம் பிள்ளை சிறுகதைகள் இடம் பெறும். மேலே சொன்ன சு. பிள்ளையின் காதல்கள், பொன்னகரம், மனித எந்திரம் ஆகியவை இடம் பெறும். எனக்கு புதிய கூண்டு என்ற கதை ஒரு tour de force. கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது.

சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதை சென்னை லைப்ரரி தளத்தில் முழுமையாக இல்லை. கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் பராசக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான். ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை. உணர்ச்சிகரமான துன்பக்கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம். மிச்சத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். (கூடிய விரைவில் anthology-யை பதிக்க வேண்டும்.)

நண்பர் பாஸ்கர் சென்னை லைப்ரரி தளத்தில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இருக்கின்றன என்ற தகவலைக் கொடுத்திருக்கிறார். மகாமசானம் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு மகாமசானத்தை விட செல்லம்மாள் சிறுகதை பிடிக்கும். ஓரளவு ஒத்த தீம் உள்ள கதைகள். சுந்தர ராமசாமி மகாமசானம் கதையை தனக்கு எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லி இருக்கிறார்.

புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. க.க. பிள்ளை, ஒ.நா. கழிந்தது ஆகியவற்றில் வரும் பெண் குழந்தைகளின் சித்தரிப்பைப் பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
ஜெயமோகனின் சிறுகதை தேர்வுகள்
புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும்

கிருஷ்ணன் நம்பி

நான் முதல் முதலாக படித்த கிருஷ்ணன் நம்பி சிறுகதை மருமகள் வாக்கு. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பில் (இந்த புஸ்தகங்களை யாரப்பா இரவல் வாங்கி இருக்கீங்க?) படித்தேன். அசந்துபோனேன். கதையின் வடிவம், கரு, நடை எல்லாமே கனகச்சிதமாக இருந்தன. என்றும் இந்தக் கதையின் தாக்கம் குறையாது, உலக இலக்கியத்தில் இடம் பெற வேண்டிய கதை.

அப்புறம் நம்பி சுந்தர ராமசாமியின் நண்பர் என்று தெரிந்துகொண்டேன். சுரா என்ற பெரிய ஆகிருதியின் முன் நம்பி மங்கிப் போய்விட்டார், சுரா டெண்டுல்கர் என்றால் இவர் காம்ப்ளி என்று நினைத்துக் கொண்டேன். சுரா நம்பியைப் பற்றி எழுதி இருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். நெகிழ்வாக இருந்தது, ஆனால் அதில் சுரா இவரது ஆக்கங்களைப் பற்றி பெரிதாக எழுதவில்லை. நம்பியின் வாழ்க்கை பொருளாதார ரீதியில் எப்போதுமே போராட்டம்தான். நாற்பது நாற்பத்தைந்து வயதில் கான்சரில் இறந்துபோனார் என்று தெரிந்துகொண்டேன். எனக்கு எப்பவும் எழுத்தாளனை விட எழுத்தில்தான் ஆர்வம். கஷ்டப்பட்டாரா, அடப் பாவமே என்பதற்கு மேல் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. மருமகள் வாக்கு என்ற சிரஞ்சீவிக் கதையை எழுதினார், வேறு ஒன்றும் தேறாது என்று ஏனோ தோன்றியது.

தோழி அருணாவுக்கு நம்பி பெரியப்பாவோ சித்தப்பாவோ என்று தெரிந்தது. அவர் வீட்டில் இருந்து ராஜமார்த்தாண்டன் தொகுத்த அவரது ஆக்கங்களின் முழுத் தொகுப்பை லவட்டிக் கொண்டு வந்தேன். முதல் இரண்டு சிறுகதைகளும் சுமாராக இருந்தன. அடுத்து எனக்கு ஒரு வேலை வேண்டும் என்ற கதையைப் படித்தேன். மனிதர் பிஸ்தாதான். பிறகு புஸ்தகத்தை கீழே வைக்க முடியவில்லை, எல்லா சிறுகதைகளையும் கிடுகிடுவென்று படித்து முடித்தேன். புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க இன்னும் மனசு வரவில்லை, அவ்வப்போது புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

நம்பியின் உலகம் பற்றாக்குறை உலகம். அதில் சந்தோஷமாக இருப்பவர்கள் குறைவு. அவரது பலம் தோற்றுக் கொண்டு இருக்கும் மனிதர்களின் மனப் போராட்டத்தை சித்தரிப்பதுதான். அவருடைய சிறந்த கதைகள் எல்லாவற்றிலும் இந்த தீம் அடி நாதமாக ஓடுகிறது. அந்த அடிநாதத்தோடு அவர் powerfulness-ஐ இணைக்கும்போது கதை எங்கேயோ போய்விடுகிறது.

நம்பியின் இரண்டாவது பலம் குழந்தைகளை சித்தரிப்பது. குழந்தைகளின் rejuvenating freshness, குரூரம் இரண்டையும் அருமையாகக் கொண்டு வருகிறார். குழந்தை மனம் படைத்த பெரியவர்களை (மருமகள் வாக்கு, எனக்கு ஒரு வேலை வேண்டும்) அவர் சித்தரிக்கும்போதும் இது அவருக்கு கை கொடுக்கிறது.

மருமகள் வாக்கில் மருமகளை அடக்கி ஆளும் மாமியார். மருமகள் கொஞ்சூண்டு எதிர்க்க நினைக்கிறாள். பிறகு?

எனக்கு ஒரு வேலை வேண்டும் கதையின் நாயகன் மனதளவில் குழந்தைதான். ஏழைக் குடும்பம். அர்ச்சகர் அப்பாவுக்கு கிடைக்கும் மடைப்பள்ளி உண்டைக்கட்டிகளில் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. தம்பி ராஜப்பா மெட்ராசில் ஏதோ ஒரு வேலையில். நாயகனின் கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. நாயகனுக்கு ஒரு வேலை வேண்டும், ராஜப்பா மாதிரி ஒரு வேலை வேண்டும், அதில் வரும் பணத்தைக் கொண்டு கொஞ்சம் மினுக்க வேண்டும். தனக்கு குறை இருக்கிறது என்பது தெரியாத மனம்.

தங்க ஒரு மாதிரி ஒரு கதையை தமிழில் நான் முன்னால் படித்ததில்லை. சென்னையில் தன் சொற்ப சம்பளத்தில் தங்க ஒரு வீடு தேடும் நாயகன் என்பதற்கு மேல் கதையைப் பற்றி பேச விரும்பவில்லை. நேராக படித்துக் கொள்ளுங்கள்.

எக்சென்ட்ரிக் ஒரு பற்றாக்குறை குடும்பத்தின் தலைவனின் சம்பள நாளை விவரிக்கிறது. அவனுக்கும் தன் கவலை எல்லாம் மறக்க வேண்டும். எப்படி மறப்பது?

நிம்மதியும் அப்படித்தான். யோசித்து யோசித்து ஒரே ஒரு தோசை ஆர்டர் செய்யும் சூரி ஹோட்டலில் எதிர் டேபிளில் ஒரு பிடி பிடிப்பவனை எதிரியாகப் பார்க்கிறான். உண்மையில் அவன் சூரியின் நண்பன். எப்படி?

கணக்கு வாத்தியார் குழந்தைகள் உலகம். மூன்றாவது பாஸ் ஆக வேண்டும் என்று டென்ஷனாக இருக்கும் பையன் வாத்தியாரிடம் அடி வாங்குகிறான்.

காணாமல் போன அந்தோணி மாதிரிதான் கதை எழுத ஆசைப்படுகிறேன். (அசோகமித்திரன் எல்லாம் ரொம்ப தூரம்!) கச்சிதமான கதை. கிழவி வளர்க்கும் ஆடு – கசாப்புக் கடைக்காரர்கள் கேட்டுத் தராத ஆடு – காணாமல் போய்விடுகிறது. அருமையான ட்விஸ்ட்.

சத்திரத்து வாசலில் கதையில் இயலாமை எப்படி கோபமாக மாறுகிறது என்று.

பல கதைகள் நன்றாக இருக்கின்றன. தேரோடும் வீதியிலே நல்ல சித்தரிப்பு. சங்கிலி இன்னும் கொஞ்சம் subtle ஆக எழுதப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலை முதல் நத்தை மாதிரி கூட்டுக்குள் வாழும் ஒருவனைப் பற்றி. கிணற்றுத் தவளைத்தனத்தை நன்றாக காட்டி இருக்கிறார். நீலக்கடல் நெகிழ்வான கதை, குழந்தைகள் உலகில் சாவு பற்றி. விளையாட்டுத் தோழர்களும் குழந்தைகள் உலகம்தான். ஊனமுற்ற ஒரு குழந்தை. சிங்கப்பூர்ப் பணம் ஓ. ஹென்றி டைப் கதை. கடைசி வரிகளுக்காக எழுதப்பட்டதுதான், ஆனால் படிக்கலாம். கருமிப் பாட்டி, சத்திரத்து வாசலில், நாணயம், போட்டி எல்லாம் சுமாரான கதைகள். நாணயம் மாதிரி ஒரு கதையை ஆர்.கே. நாராயணும் எழுதி இருக்கிறார். வருகை எனக்கு சரியாகப் புரியவில்லை.

புத்தகத்தை ராஜமார்த்தாண்டன் தொகுத்திருக்கிறார். “கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்” என்ற பேரில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிறுகதைகளைத் தவிர அவர் எழுதிய கவிதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், சில கடிதங்கள் கூட இருக்கின்றன. விலை 350 ரூபாய். வாங்குங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். இங்கே வாங்கலாம்.

ஜெயமோகன் மருமகள் வாக்கு, தங்க ஒரு, சத்திரத்து வாசலில் ஆகியவற்றை சிறந்த கதைகள் என்று குறிப்பிடுகிறார். எஸ்.ரா.வுக்கு மருமகள் வாக்கு, தங்க ஒரு. எனக்கோ மருமகள் வாக்கு, தங்க ஒரு, காணாமல் போன அந்தோணி, எக்சென்ட்ரிக், எனக்கு ஒரு வேலை வேண்டும். இவற்றுக்கு ஓரிரண்டு மாற்றுக் குறைந்த, ஆனால் நல்ல சிறுகதைகள் இன்னும் ஒரு ஆறேழு இருக்கும். 25 சிறுகதைகள்தான் எழுதி இருக்கிறார். 23-தான் கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் பாதிக்குப் பாதி நல்ல கதைகள். மனிதர் இன்னும் நிறைய எழுதவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
மருமகள் வாக்கு சிறுகதை

நிகோலாய் கோகோலின் “ஓவர்கோட்”

எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. டோஸ்டோவ்ஸ்கி சொன்னாராம் – “ரஷிய எழுத்தாளர்கள், கதைகள் எல்லாமே கோகோலின் ஓவர்கோட் கதையிலிருந்து வந்தவைதான்” என்று. நாலைந்து முறை படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் கதையின் simplicity என்னை வியக்க வைக்கிறது. கொஞ்சம் பெரிய கதை – குறுநாவல் என்று சொல்லலாம். கட்டாயமாகப் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்:

தொடர்புடைய சுட்டி:
ஓவர்கோட் பற்றிய விக்கி குறிப்பு

ஆனா அபொஸ்டொலு

அலெக்சாண்டர் காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கும் இரண்டு துப்பறியும் கதைகள். இரண்டையும் படிக்கலாம். இந்த ஐடியா தமிழில் வந்தால் நன்றாக இருக்காது? பெரிய பழுவேட்டரையர் துப்பறிகிறார்!

A Murder in Macedon: அலெக்சாண்டரின் அப்பாவான ஃபிலிப் கொல்லப்படுகிறார் – எல்லார் முன்னாலும், அவரது நம்பகமான போர் வீரனால். இது நடக்கும்போது அலெக்சாண்டரின் அம்மாவை தள்ளி வைத்துவிட்டு ஃபிலிப் வேறு ஒரு இளம் பெண்ணை வேறு மணந்து கொண்டிருக்கிறார். அலெக்சாண்டர் ஃபிலிப்புக்கு பிறந்தவர் இல்லை, அவருக்கு அரசாள உரிமை இல்லை என்று ஒரு வதந்தி உலாவுகிறது. அதனால் இந்த கொலை பற்றி அலெக்சாண்டர் மேல் கூட சந்தேகம் இருக்கிறது. இவை எல்லாம் ஆவணங்களில் இருக்கிறது.
யார் கொலை செய்தது, ஏன் கொலை நடந்தது என்று அலெக்சாண்டரின் தோழி (தோழி மட்டுமே) ஆன மிரியம் துப்பறிகிறாள். கதையில் அந்த வீரன் ஃபிலிப்பின் முன்னாள் காதலன் கூட. (கிரேக்க நாட்டில் அப்போது ஓரினச்சேர்க்கை சர்வ சாதாரணமான விஷயமாக இருந்திருக்கிறது.) ஃபிலிப்பை கொல்ல பாரசீக டாரியஸ், ஏதென்சின் டெமாஸ்தனிஸ் போன்றவர்கள் விரும்புகிறார்கள்.

A Murder in Thebes: ஃபிலிப்பின் மரணத்துக்கு பிறகு அவர் வென்ற கிரேக்க நகரங்கள் அலெக்சாண்டருக்கு அடி பணிய விரும்பவில்லை. தீப்ஸ் அலெக்சாண்டருடன் போரிடுகிறது. அலெக்சாண்டர் தீப்சை முழவதுமாக எரித்துவிடுகிறார். இது சரித்திரத்தில் படிக்கக் கூடிய நிகழ்ச்சி. இந்த பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல். தீப்ஸ் அலெக்சாண்டர் இறந்துவிட்டதாக ஒரு வதந்தியை கேள்விப்படுகிறது. தீப்சில் இருக்கும் ஒரு மாசிடோனியப் படையை தொல்லைப்படுத்துகிறது. அவர்களின் ஒரு தளபதியை பேச்சு வார்த்தைக்கு அழைத்து அங்கேயே கொன்றுவிடுகிறது. இன்னொரு தளபதி பூட்டிய அறையிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான். அங்கே இருக்கும் ஒரு கோவிலில் கிரேக்க தொன்மங்களில் வரும் ஈடிபசின் கிரீடம் இருக்கிறது. அதை அணிய அலெக்சாண்டர் விரும்புகிறார், ஆனால் அதை எடுப்பது கஷ்டம். ஐதீகப்படி அதை சில விதி முறைகளுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும். மிரியம் மீண்டும் துப்பறிகிறாள்.

ஆனா அபொஸ்டொலு (Anna Apostolou) என்பது பால் சி. டோஹர்டி (Paul C. Doherty) என்பவரின் புனைபெயர்.

இரண்டையும் படித்துவிட்டு தூக்கிப்போட்டு விடலாம். எனக்கு இவற்றில் உள்ள சுவாரசியம் எல்லாம் சரித்திர சம்பவங்களை வைத்து ஒரு துப்பறியும் கதை எழுதப்பட்டிருப்பதுதான். துப்பறியும் கதைகளில் இது ஒரு sub-genre. லிலியன் டி லா டோரே (Lilian de la Torre) என்பவர் முதல் ஆங்கில அகராதியை தொகுத்த சாமுவேல் ஜான்சன் துப்பறிவதாக சில கதைகள் எழுதி இருக்கிறார். உம்பர்டோ ஈகோ (Umberto Eco) எழுதிய Name of the Rose புகழ் பெற்ற நாவல், படிக்க சுவாரசியமாகவும் இருக்கும். வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி:
பால் சி. டோஹர்டி பற்றி விக்கி குறிப்பு