சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் I

என் கருத்தில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற தமிழ் படைப்புகளின் தரம் குறைவுதான். இப்படி ஏன் நடக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரசனை மாறுபாடு என்று இதை தள்ளுவதற்கில்லை. நான் படித்தவை கொஞ்சமே; படிக்காமல் ஒரு படைப்பைப் பற்றி கருத்து சொல்வது என்பது முட்டாள்தனமே; என்றாலும் படித்தவற்றை வைத்தும், எழுத்தாளர்களின் தரத்தைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை வைத்து சொல்கிறேன், தரம் இல்லாத பல படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இது அற்ப விஷயமில்லை. எவனுக்கோ என்னவோ பரிசு கொடுத்தால் என்ன குடிமுழுகிவிடும் என்று புறம் தள்ளும் விஷயமில்லை. கலைஞர் விருது, கனிமொழி விருது என்று கொடுத்தால் அது விருது வாங்குபவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் மட்டும்தான் தெரியும். சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் இந்தியா முழுவதும் தெரியும் விஷயம். உங்களுக்கு அஸ்ஸாமிய இலக்கியம் பற்றி, ஒரியா இலக்கியம் பற்றி என்ன தெரியும்? இந்த மொழிகளில் நல்ல படைப்புகளை படிக்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? முதலில் சாஹித்ய அகாடமி விருது பெற்றவை எவை, ஞானபீட விருது பெற்றவை எவை என்றுதான் பார்ப்பீர்கள். உலக இலக்கியம் படிக்க வேண்டுமென்றால் நோபல் பரிசு வென்ற எழுத்தாளர்கள் யாரென்றுதான் பார்ப்பீர்கள். அந்த மாதிரி நல்ல தமிழ் படைப்பு வேண்டும் என்று வருபவர்களுக்கு கிடைப்பது ஒரு புளியமரத்தின் கதையும், ஆழி சூழ் உலகும், விஷ்ணுபுரமும் இல்லை. சமுதாய வீதி, குற்றாலக் குறிஞ்சி என்று கிடைத்தால் யாருங்க தமிழ் புத்தகங்களை படிப்பார்கள்? நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்கிறோம்!

நான் இந்த லிஸ்டில் படித்தது கொஞ்சமே. சிலவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தெரியாதது ஒரு 25 சதவிகிதமாவது இருக்கும். யாராவது நல்ல வாசகர்கள் இவற்றைப் பற்றி சிறு குறிப்பாவது எழுதினால் உதவியாக இருக்கும். ஜெயமோகனிடம் நேயர் விருப்பம் மாதிரி கேட்க வேண்டியதுதான்! (அவர் ஒருவரிடம்தான் உரிமையோடு கேட்க முடிகிறது!)

எனக்குத் தெரிந்து இரண்டு புத்தகங்கள் மட்டுமே நல்ல தேர்வுகள் – சில நேரங்களில் சில மனிதர்கள், கோபல்ல கிராமத்து மக்கள். அலை ஓசை, அகல் விளக்கு இரண்டும் அன்று நல்ல தேர்வு என்று நினைக்கப்பட்டிருக்கும். குற்றம் சொல்வதற்கில்லை. குருதிப்புனல், விசாரணைக் கமிஷன் இரண்டும் ரசனை வேறுபாடு என்று விட்டுவிடலாம். அன்பளிப்பு (கு. அழகிரிசாமி), சக்தி வைத்தியம் (தி.ஜா.), மணிக்கொடி காலம் (பி.எஸ். ராமையா), காதுகள் (எம்.வி. வெங்கட்ராம்) நான்கும் நல்ல தேர்வு என்று கேள்விப்பட்டதை வைத்து தோன்றுகிறது. சக்கரவர்த்தி திருமகன் (ராஜாஜி), சமுதாய வீதி (நா.பா.), சேரமான் காதலி (கண்ணதாசன்), இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் (க.நா.சு.), குற்றாலக் குறிஞ்சி (கோவி) எல்லாம் மோசமான தேர்வுகள்.

பதிவின் நீளம் கருதி இரண்டாகப் பிரித்திருக்கிறேன். முதல் பகுதியில் நான் படித்தவற்றைப் பற்றி மட்டும்:

 1. 1956 – அலை ஓசை (நாவல்) – கல்கி கிருஷ்ணமூர்த்தி: இது ஒரு சுமாரான நாவலே. ஆனால் கல்கி மறைந்து ஒரு வருஷம்தான் ஆகி இருக்கும், அலை ஓசை வந்த காலத்தில் மிகவும் பாப்புலர், சுதந்திரப் போராட்டம் எல்லாருக்கும் பசுமையாக நினைவிருந்த காலம். அதனால் கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். கல்கியைப் பற்றிய இன்னுடைய விரிவான மதிப்பீட்டை இங்கே படிக்கலாம்.
 2. 1958 – சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) – சி. ராஜகோபாலச்சாரி: இது அநியாயம். ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்ததற்கெல்லாம் விருதா? வால்மீகிக்கு கொடுத்தால் நியாயம், கம்பனுக்கும் துளசிதாசருக்கும் கொடுத்தால் நியாயம், இவருக்கெல்லாம் கொடுத்திருப்பது அநியாயம். ராஜாஜி இதை மறுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். “ராஜாஜி – ஒரு மதிப்பீடு IIபதிவிலிருந்து:

  அவருடைய வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும் அருமையான அறிமுக புத்தகங்கள். சரளமான நடை. ராமனின் தவறுகளுக்கும் கிருஷ்ணனின் தவறுகளுக்கும் எந்த சப்பைக்கட்டும் கிடையாது. (வில்லிபுத்தூரார் பாரதத்தை படித்து பாருங்கள், எவ்வளவு சப்பைக்கட்டுகள் கட்டப்படுகின்றன?) ஆனால் இந்த புத்தகங்களுக்காக அவர் சாகித்ய அகாடெமி பரிசை வாங்கிக்கொண்டது பெரும் தவறு. அது வியாசருக்கும், வால்மீகிக்கும் சொந்தமானது.

 3. 1961 – அகல் விளக்கு (நாவல்) – மு.வரதராசனார்: மறைந்த சேதுராமன் இந்த புத்தகத்தை எங்களுக்கு அனுப்பினார். அன்றைய கால கட்டத்துக்கு நல்ல நாவல்தான். பக்ஸ் எழுதிய விரிவான விமர்சனம் இங்கே.
 4. 1969 – பிசிராந்தையார் (நாடகம்) – பாரதிதாசன்: இதற்கெல்லாம் பரிசா? வேஸ்ட். வெங்கட் சாமிநாதன் விருதுக்கு தகுதியானவர் எழுதிய தகுதி இல்லாத புத்தகம் என்று இந்த நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
 5. 1971 – சமுதாய வீதி (நாவல்) – நா. பார்த்தசாரதி: தகுதி இல்லாத நாவல். காங்கிரசின் தூணாக அன்று இருந்த சிவாஜியை தாக்கிய நாவல் (தி.மு.க. ஆட்சியில் இருந்தது) என்ற ஒரே காரணத்துக்காக கொடுத்தார்களோ என்று எனக்கு ஒரு கான்ஸ்பிரசி தியரி தோன்றுகிறது.
 6. 1972 – சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) – ஜெயகாந்தன்: நல்ல தேர்வு. விரிவான விமர்சனம் இங்கே மற்றும் இங்கே.
 7. 1977 – குருதிப்புனல் (நாவல்) – இந்திரா பார்த்தசாரதி: என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் இதுதான் இ.பா.வின் பிரபலமான நாவல். என் பதிவு இங்கே.
 8. 1980 – சேரமான் காதலி (நாவல்) – கண்ணதாசன்: இந்த புத்தகம் என்னை தோற்கடித்தது. தம் பிடித்துப் பார்த்தேன், என்னால் ஐம்பது பக்கத்தை தாண்ட முடியவில்லை.
 9. 1986 – இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) – க. நா. சுப்பிரமணியம்: க.நா.சு. ஊருக்கு நாலு பேர் இலக்கியத்தைப் பற்றி யோசியுங்கள் என்று கூப்பிடுகிறார். என்னைப் பெரிதாக கவரவில்லை. நிச்சயமகாக் கொடுத்திருக்கக் கூடாது.
 10. 1991 – கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) – கி. ராஜநாராயணன்: நல்ல தேர்வு. கி.ரா. இதைப் பற்றி அளித்த பேட்டியை இங்கே காணலாம்.
 11. 1992 – குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) – கோவி. மணிசேகரன்: கோவியின் புத்தகங்களில் இதுதான் பெஸ்ட். ஆனால் கோவி நல்ல புத்தகம் எழுதியதே இல்லையே?
 12. 1998 – விசாரணைக் கமிஷன் (நாவல்) – சா. கந்தசாமி: என்னைக் கவரவில்லை. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

பதிவு இங்கே தொடர்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், கவுரவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 • சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் பகுதி 2
 • ஜெயமோகன் கருத்து
 • சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் லிஸ்ட்
 • சாகித்ய அகாடமி தளம்
 • அகல் விளக்கு
 • சமுதாய வீதி
 • சில நேரங்களில் சில மனிதர்கள் பகுதி I, பகுதி II
 • குருதிப்புனல்
 • கி. ராஜநாராயணன் பேட்டி
 • ஞானபீட விருது
 • 7 thoughts on “சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் I

  1. அகல் விளக்கு நாவல் மட்டும் படித்திருக்கிறேன். சுமாரான நாவல். அதற்கு சாகித்ய அகாடமி விருதா. வியப்பாக இருக்கிறது.

   நீங்கள் குறிப்பிட்டுள்ள பட்டியலைப் பார்த்தால், அபத்தமான அரசியல் இருப்பது புரிகிறது. விருதுகளில் இலக்கய சிபாரிசு இல்லாமல் அரசியல் இருந்தால், இதுதான் நிலை.

   சாகித்ய அகாடமி என்பதற்கு பதில் மொக்கைகள் என்று விருதிற்கு பெயர் வைத்திருக்கலாம் போல.

   அதனால்தான் சுஜாதா விருதுகளைப் பற்றி கவலை கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

   Like

   1. ஜெகதீஸ்வரன், அகல் விளக்கு போன்றவை ஒரு காலத்தில் இலக்கியமாக கருதப்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். இன்றைய அடிப்படைகளை வைத்துப் பார்த்தால்தான் அதில் ஓட்டைகள் தெரிகின்றன. இது எல்லாவற்றுக்கும் நடக்கக் கூடியதே. சில நேரங்களில் சி.ம. புத்தகத்தை நூறு வருஷம் கழித்துப் படிப்பவர் என்னய்யா ஒரு நாள் படுத்தாளாம், குடி முழுகிவிட்டதாம், வாட் நான்சென்ஸ் என்று புறம் தள்ள வாய்ப்பு உண்டு. லா.ச.ரா.வை pretentious என்று விலக்க வாய்ப்பு உண்டு. அதற்காக அவற்றை இலக்கியம் என்று கருதும் நம்மை குறை சொல்ல முடியாது இல்லையா? கால ஓட்டத்தில் எது நிற்கும், எது மறையும் என்று நமக்கு உறுதியான கருத்து இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை என்று சொல்வதற்கில்லை…
    காக்கு மாணிக்கம், மறுமொழிக்கு நன்றி!

    Like

  2. சாகித்ய அகாடமியில் நிறைய அரசியலும் மாநில,மொழி ,இன வாதமும் கண்ணுக்கு தெரியாமல் நிலவுவது உண்மை. சாகித்ய அகாடமி என்ற முத்திரை இல்லாமல் நாம் படிக்கச் ஆரம்பித்து நமக்கு பிடித்தவைகளை நம் தெரிவில் வாங்கி சேர்துக்கொள்வதே நான் பின்பற்றும் வழி. இது ஒரு வகையில்
   டென்ஷன் இல்லாத ஒன்று. ஆனால் அந்த முத்திரையுடன் நிறைய பிற மொழி தமிழாக்கங்கள் என்னை கவர்ந்தவை உண்டு.

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.