சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் II

முதல் பகுதி இங்கே. முழு பட்டியலை தமிழ் விக்கிபீடியாவில் காணலாம். 2020 முடிவு வரை 28 நாவல்/நாடகத்துக்கும், 16 அபுனைவுகளுக்கும் 8 கவிதைத் தொகுப்புகளுக்கும் 7 சிறுகதைத் தொகுப்புகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. பல சொத்தைப் படைப்புகளுக்கு (கோவி. மணிசேகரன், மீ.ப. சோமு இத்யாதி) விருது கொடுத்திருக்கிறார்கள்.

பரிசு பெற்ற நாவல், சிறுகதை, கவிதை என்று பிரித்துப் பிரித்து கீழே கொடுத்திருக்கிறேன்.

நாவல்:

      1. 1956 – அலை ஓசைகல்கி கிருஷ்ணமூர்த்தி: இது ஒரு சுமாரான நாவலே. ஆனால் கல்கி மறைந்து ஒரு வருஷம்தான் ஆகி இருக்கும், அலை ஓசை வந்த காலத்தில் மிகவும் பாப்புலர், சுதந்திரப் போராட்டம் எல்லாருக்கும் பசுமையாக நினைவிருந்த காலம். அதனால் கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.
      2. 1958 – சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) – சி. ராஜகோபாலச்சாரி: இது அநியாயம். ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்ததற்கெல்லாம் விருதா? வால்மீகிக்கு கொடுத்தால் நியாயம், கம்பனுக்கும் துளசிதாசருக்கும் கொடுத்தால் நியாயம், இவருக்கெல்லாம் கொடுத்திருப்பது அநியாயம். ராஜாஜி இதை மறுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
      3. 1961 – அகல் விளக்குமு. வரதராஜன்: மறைந்த சேதுராமன் இந்த புத்தகத்தை எங்களுக்கு அனுப்பினார். அன்றைய கால கட்டத்துக்கு நல்ல நாவல்தான். பக்ஸ் எழுதிய விரிவான விமர்சனம் இங்கே.
      4. 1963 – வேங்கையின் மைந்தன் (வரலாற்று நாவல்) – அகிலன் (பி. வி. அகிலாண்டம்): நான் படித்ததில்லை. ஆனால் பொதுவாக அகிலனின் தரம் சாஹித்ய அகாடமிக்கு இருக்க வேண்டிய தரத்தை விட குறைவுதான். ஆனால் ஒரு காலகட்டத்தில் மு.வ., அகிலன், நா.பா. போன்றவர்கள் இலக்கியம் படைத்தார்கள் என்றே கருதப்பட்டது. அன்றைய ரசனை வேறுபாடு, அன்றைய தர நிர்ணயிப்பால் கொடுக்கப்பட்டிருக்கும், ரொம்பவும் குற்றம் சொல்வதற்கில்லை என்று நினைத்தேன். புத்தகம் மகா மோசம், எந்த காலகட்டத்திலும் பரிசுக்குத் தகுதி உள்ளது என்று யாரும் நினைத்திருக்க முடியாது.
      5. 1969 – பிசிராந்தையார் (நாடகம்) – பாரதிதாசன்: இதற்கெல்லாம் பரிசா? வேஸ்ட். வெங்கட் சாமிநாதன் விருதுக்கு தகுதியானவர் எழுதிய தகுதி இல்லாத புத்தகம் என்று இந்த நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
      6. 1971 – சமுதாய வீதிநா. பார்த்தசாரதி: தகுதி இல்லாத நாவல். நா.பா.வே இதை விட நல்ல நாவல்களை எழுதி இருக்கிறார். காங்கிரசின் தூணாக அன்று இருந்த சிவாஜியை தாக்கிய நாவல் (தி.மு.க. ஆட்சியில் இருந்தது) என்ற ஒரே காரணத்துக்காக கொடுத்தார்களோ என்று எனக்கு ஒரு கான்ஸ்பிரசி தியரி தோன்றுகிறது.
      7. 1972 – சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்: நல்ல தேர்வு. விரிவான விமர்சனம் இங்கே மற்றும் இங்கே.
      8. 1973 – வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்: நான் ராஜம் கிருஷ்ணனைப் படித்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
      9. 1977 – குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் இதுதான் இ.பா.வின் பிரபலமான நாவல்.
      10. 1980 – சேரமான் காதலி (வரலாற்று நாவல்) – கண்ணதாசன்: இந்த புத்தகம் என்னை தோற்கடித்தது. தம் பிடித்துப் பார்த்தேன், என்னால் ஐம்பது பக்கத்தை தாண்ட முடியவில்லை.
      11. 1984 – ஒரு காவிரியைப் போலதிரிபுரசுந்தரி லக்ஷ்மி: லக்ஷ்மியின் பிற புத்தகங்களைப் படித்ததை வைத்து சொல்கிறேன், இது தவறான தேர்வாகத்தான் இருக்கும். எப்படி அய்யா லக்ஷ்மியை எல்லாம் தேர்ந்தெடுக்கிறீர்கள்!
      12. 1991 – கோபல்ல கிராமத்து மக்கள்கி. ராஜநாராயணன்: நல்ல தேர்வு. கி.ரா. இதைப் பற்றி அளித்த பேட்டியை இங்கேகாணலாம்.
      13. 1992 – குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) – கோவி. மணிசேகரன்: கோவியின் புத்தகங்களில் இதுதான் பெஸ்ட். ஆனால் கோவி நல்ல புத்தகம் எழுதியதே இல்லையே?
      14. 1993 – காதுகள்எம். வி. வெங்கட்ராம்: இந்தப் புத்தகத்தை படித்ததில்லை, ஆனால் எம்.வி.வி. நல்ல எழுத்தாளர். சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
      15. 1994 – புதிய தரிசனங்கள்பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவத்சலன்): படித்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
      16. 1995 – வானம் வசப்படும் (வரலாற்று நாவல்) – பிரபஞ்சன்: இந்தப் புத்தகத்தை படித்ததில்லை, ஆனால் பிரபஞ்சன் நல்ல எழுத்தாளர். சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. தகுதி உள்ள நாவலே, ஆனால் மானுடம் வெல்லும் என் கண்ணில் இன்னும் கொஞ்சூண்டு பெட்டர்.
      17. 1997 – சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான்: இந்தப் புத்தகத்தை படித்ததில்லை, ஆனால் தோப்பில் நல்ல எழுத்தாளர். சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
      18. 1998 – விசாரணைக் கமிஷன்சா. கந்தசாமி: என்னைக் கவரவில்லை. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
      19. 2001 – சுதந்திர தாகம்சி.சு. செல்லப்பா இந்தப் புத்தகத்தை படித்ததில்லை, ஆனால் செல்லப்பா நல்ல எழுத்தாளர். சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
      20. 2003 – கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) – வைரமுத்து: படித்ததில்லை. வைரமுத்து கொஞ்சம் pretentious எழுத்தாளர் என்று ஒரு நினைப்பு, அதனால் எனக்கு கொஞ்சம் aversion உண்டு. படித்தவர்கள் சொல்லுங்களேன்! தவறான தேர்வு.
      21. 2005 – கல்மரம்திலகவதி: படித்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
      22. 2011 – காவல்கோட்டம் – சு. வெங்கடேசன்: ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகம், நன்றாகத்தான் இருக்க வேண்டும். நான் ஆரம்பித்தேன், படித்த வரையில் நன்றாக இருந்தது ஆனால் வருஷக்கணக்காக முடிக்கவில்லை.
      23. 2012 – தோல் – டி. செல்வராஜ்: படித்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
      24. 2013 – கொற்கை – ஜோ டி க்ருஸ்
      25. 2014 – அஞ்ஞாடிபூமணி
      26. 2018 – சஞ்சாரம்எஸ். ராமகிருஷ்ணன்: நல்ல புத்தகம். விருது கொடுக்கப்பட்டது சரியே.
      27. 2019 – சூல்சோ. தர்மன்: படித்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
      28. 2020 – செல்லாத பணம்இமையம்: நல்லு புத்தகம், விருது கொடுக்கப்பட்டது சரியே.

சிறுகதைகள்:

நான் இந்த லிஸ்டில் இருக்கும் சிறுகதைத் தொகுப்புகளை படித்ததில்லை. (அப்படி படித்திருந்தாலும் எனக்கு கதைதான் நினைவு இருக்கும், தலைப்புக்கள் மறந்துவிடுகின்றன.) அழகிரிசாமி, தி.ஜா., ஆதவன், அசோகமித்திரன் எல்லாரும் பரிசு வாங்கும் தகுதி உள்ளவர்களே. மே. பொன்னுச்சாமியை நான் படித்ததில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.

        1. 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
        2. 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
        3. 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
        4. 1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
        5. 2007 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
        6. 2010 – நாஞ்சில்நாடன் – சூடிய பூ சூடற்க: இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்றாலும் நாஞ்சிலைத் தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம். இந்த trend தொடரவேண்டும்.
        7. 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்

Non-Fiction:

என் கருத்தில் இலக்கிய விமர்சனங்களுக்கு இந்த மாதிரி விருதுகள் கொடுப்பது அபூர்வமாக இருக்க வேண்டும். இங்கே படைப்புகளை விட விமர்சனங்களுக்கு அதிக விருது கொடுப்பது போல இருக்கிறது.

        1. 1955 – தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) – ரா. பி. சேதுப்பிள்ளை: சேதுப்பிள்ளை இன்று காலாவதியான ஒரு பாணியில்தான் எழுதி இருக்கிறார். ஆனால் அந்தக் காலத்து ரசனை, தேர்வுமுறை வேறுபாடு என்று சொல்லலாம். ரொம்பவும் குற்றம் சொல்வதற்கில்லை.
        2. 1962 – அக்கரைச்சீமை (பயண நூல்) – சோமு (மீ. ப. சோமசுந்தரம்): படித்ததில்லைதான். ஆனால் இவற்றுக் கெல்லாம் விருது கொடுப்பது தவறு என்றே நினைக்கிறேன். பிற மொழி வாசகர்கள் படிக்க வேண்டியது என்று சிபாரிசு செய்ய வேண்டிய படைப்பாக இது இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ராஜாஜிக்கு கொடுத்தோம், அவர் சீடருக்கும் கொடுப்போம் என்று கொடுத்துவிட்டார்களா? மீ.ப. சோமுவின் நமது செல்வம் என்ற புத்தகம் தவிர வேறு எதுவும் என்னைக் கவர்ந்ததில்லை. அதற்கே கொடுக்கலாம் என்று சொல்வதற்கில்லை.
        3. 1965 – ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) – பி. ஸ்ரீ ஆச்சார்யா: பி.ஸ்ரீ. சம்பிரதாய குரு பரம்பரைக் கதையை எழுதி இருப்பார். இதற்கெல்லாம் விருதா? கமிட்டியில் நிறைய அய்யங்கார்கள் இருந்தார்களா? 🙂
        4. 1966 – வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) – ம. பொ. சிவஞானம்: ம.பொ.சி.யின் பிற புத்தகங்களை படித்ததை வைத்து இதுவும் rambling ஆக இருக்கும் என்றே நினைக்கிறேன். விருது பெறும் தரத்தில் இருக்க வாய்ப்பு குறைவு.
        5. 1967 – வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) – கி. வா. ஜகன்னாதன்: கி.வா.ஜ. புத்தகங்களை நான் படித்ததில்லை. கலைமகள் படித்த அனுபவத்தை வைத்துப் பார்த்தால் இதற்கு விருது பெறும் தரம் இருக்காது என்றே தோன்றுகிறது. நல்ல புத்தகம்தான், ஆனால் கோனார் நோட்சுக்கெல்லாம் எதற்கு விருது?
        6. 1974 – திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – K.D. திருநாவுக்கரசு: படிக்காவிட்டாலும் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
        7. 1975 – தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – R. தண்டாயுதம்: படிக்காவிட்டாலும் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
        8. 1978 – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) – வல்லிக்கண்ணன்: புதுக்கவிதையை கண்டாலே ஓடுபவன், இதை எல்லாம் எங்கே படிக்கப் போகிறேன்? இது கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருந்தது என்று நினைவு, அதனால் ஓரளவாவது சுமாராக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரி புதுக்கவிதைக்கு விருது வழங்குவதற்கு முன் எப்படிங்க புதுக்கவிதை பற்றிய ஆராய்ச்சிக்கு விருது கொடுக்கறாங்க?
        9. 1981 – புதிய உரைநடை (விமர்சனம்) – M. ராமலிங்கம்: படிக்காவிட்டாலும் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
        10. 1982 – மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) – பி. எஸ். ராமையா: நான் படிக்க விரும்பும் புத்தகம். தரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
        11. 1983 – பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) – தொ. மு. சிதம்பர ரகுநாதன்: சிதம்பர ரகுநாதன் முக்கியமான எழுத்தாளர் என்று கேள்வி. நான் படித்ததில்லை. ஆனால் இந்த மாதிரி பாரதி ஆய்வுக்கெல்லாம் பரிசு கொடுக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன். கம்பன், சங்க இலக்கியம், காப்பியங்கள் என்றால் அது வேறு விஷயம். எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் இது ஒரு seminal புத்தகம் என்றூ குறிப்பிடுகிறார், தேடிப் பார்க்க வேண்டும்.
        12. 1985 – கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) – அ. சா. ஞானசம்பந்தன்: அட அடுத்த விமர்சனப் பரிசு கம்பன் பற்றிய ஆய்வுக்கா? அ.ச.ஞா.வை படித்ததில்லை. படிக்காமல் ஒன்றும் சொல்வதற்கில்லை.
        13. 1986 – இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) – க. நா. சுப்பிரமணியம்: க.நா.சு. ஊருக்கு நாலு பேர் இலக்கியத்தைப் பற்றி யோசியுங்கள் என்று கூப்பிடுகிறார். என்னைப் பெரிதாக கவரவில்லை. நிச்சயமாக விருது கொடுத்திருக்கக் கூடாது.
        14. 1989 – சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) – லா. ச. ராமாம்ருதம்: லா.ச.ரா.வின் படைப்புகளில் புனைவு எங்கே முடிகிறது, உண்மை எங்கே ஆரம்பிக்கிறது என்று சொல்வது கஷ்டம். ஆனால் தரமான புத்தகத்துக்குத்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
        15. 2000 – விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) – தி. க. சிவசங்கரன்: தி.க.சி. பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்காமல் ஒன்றும் சொல்வதற்கில்லை.
        16. 2015 – இலக்கிய சுவடுகள் (சுயசரிதக் கட்டுரைகள்) – ஆ. மாதவன்

கவிதை:

கவிதைகளைப் பற்றி பேசும் தகுதி எனக்கில்லை. ஜெயமோகன் மாதிரி யாராவது இவற்றைப் பற்றி கருத்து சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். அவர் புவியரசின் மொழிபெயர்ப்பு கவிதைகளைப் பற்றி கோபப்பட்டது நினைவிருக்கிறது.

          1. 1968 – வெள்ளைப் பறவை (கவிதை) – அ. ஸ்ரீனிவாசராகவன்
          2. 1978 – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) – வல்லிக்கண்ணன்: புதுக்கவிதையை கண்டாலே ஓடுபவன், இதை எல்லாம் எங்கே படிக்கப் போகிறேன்? இது கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருந்தது என்று நினைவு, அதனால் ஓரளவாவது சுமாராக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரி புதுக்கவிதைக்கு விருது வழங்குவதற்கு முன் எப்படிங்க புதுக்கவிதை பற்றிய ஆராய்ச்சிக்கு விருது கொடுக்கறாங்க?
          3. 1999 – ஆலாபனை (கவிதைகள்) – அப்துல் ரகுமான்
          4. 2002 – ஒரு கிராமத்து நாடி (கவிதைகள்) – சிற்பி. பாலசுப்பிரமணியம்
          5. 2004 – வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) – ஈரோடு தமிழன்பன்
          6. 2006 – ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) – மு.மேத்தா
          7. 2009 – கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) – புவியரசு
          8. 2017 – காந்தல் நாட்கள் (கவிதைகள்) – இன்குலாப்

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

13 thoughts on “சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் II

  1. என்னங்க இது அநியாயம், ” பிற புத்தகங்களைப் படித்ததை வைத்து” _______க்கு விருது பெறத் தகுதி இல்லைன்னு சொல்றீங்க. “இந்தப் புத்தகத்தை படித்ததில்லை, ஆனால் ___________ நல்ல எழுத்தாளர். சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது” என்று மத்தவங்களப் பத்தி எழுதறீங்க.

    நீங்க சாகித்ய அகாதெமி விருது கமிட்டில இருந்தா புத்தகத்தோட அட்டைய மட்டும் உங்ககிட்ட குடுத்துட்டு உள்ள இருக்கறத மறைச்சு வெக்கணும் போல இருக்கே!

    Like

  2. //வைரமுத்து கொஞ்சம் pretentious எழுத்தாளர் என்று ஒரு நினைப்பு,//

    Understatement of the year!!!!!!

    கள்ளிக்காட்டு இதிகாசத்தை இரண்டு வாரங்களுக்கு மேல் படிக்கவியலவில்லை. அவ்வளவு அலட்டல்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Like

    1. நட்பாஸ், நிறைய எம்ஜிஆர் படங்களை பார்த்திருக்கிறீர்கள், ஆனால் ரிக்ஷாக்காரனை பார்க்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். ரிக்ஷாக்காரனில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு தேசிய அளவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது சரியா தவறா என்று உங்களுக்கு எதுவுமே தோன்றாதா? 🙂
      டோண்டு, மறுமொழிக்கு நன்றி! உங்களுக்கும் வைரமுத்துவின் “கவிதை நயம்” எரிச்சல் ஊட்டுகிறதா? ஜெகதீஸ்வரன் சொல்லும் கருவாச்சி காவியம் படித்திருக்கிறீர்களா? மேலும் விஜயன் சொல்வது சரிதானா? ராமானுஜரை ஏற்காத அய்யங்கார்கள் உண்டா? நீங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?

      Like

  3. வைரமுத்துவின் “கருவாச்சி காவியம்” நன்றாக இருக்கும். மிகுந்த உழைப்பு அதில் தெரிந்தது. நிறைய விசயங்களை என் பாட்டியிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.

    Like

  4. RV -இன் கவனத்திற்குபெரும்பான்மையான அய்யங்கார்கள் ஆசாரியன் ஸ்ரீ இராமானுசனை தங்கள் குருவாக ஒப்புகொள்ளுவதில்லை.

    Like

  5. இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வெங்கடேசன் தேர்வு

    மதுரையில் வசிக்கும் தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். இவர் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற நூலுக்கு இந்த ஆண்டிற்க்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

    இவர் எழுதிய ஒரே ஒரு நாவல் ‘காவல்கோட்டம்’ என்பதும், இக்கதையைத் தழுவி இயக்குனர் வசந்தபாலனின் கைவண்ணத்தில் ‘அரவான்’ என்ற படம் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நாவலின் கதைப் பின்னணி என்னவென்றால் அதிக எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கரும், சிறிய எண்ணிக்கையில் திருட்டை தொழிலாகக் கொண்ட கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதாகும்.

    Like

    1. அன்புள்ள PAK, எனக்கு பொதுவாக கவிதை புரிவதில்லை. அதுவும் பாரதியே உலகமகாகவி என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவன். பாரதியை மதிப்பீடு செய்யும் திறமை எனக்கில்லை. 🙂 இந்த தன்னிலை விளக்கங்களைக் கொடுத்துவிட்டுத்தான் தேடவே ஆரம்பிக்க வேண்டும். 🙂

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.