சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்

இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

படித்தவை:

  1. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  2. கு.ப.ராஜகோபாலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  3. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு: ரயிலில் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் ஏழை சிறுமிக்கு பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன் பழம் வாங்கிக் கொடுக்கிறான். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.
  4. கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.
  5. சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் கதைகளும் நினைவு வருகின்றன.
  6. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றன. அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  8. தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.
  9. பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.
  10. கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  11. திலீப்குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப்குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது.இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.
    கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  12. வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  13. ஜெயமோகன் – பல்லக்கு: வாழ்ந்து கெட்ட குடும்பம் இப்போது ஒரு முன்னாள் “வேலைக்காரன்” மூலம் இருப்பவற்றை விற்று காலத்தை ஓட்டுகிறது. அந்த வேலைக்காரனின் சுயரூபம் தெரியும்போது… பிரமாதமான கதை.
  14. வண்ணதாசன் – நிலை: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  15. ஆ. மாதவன் – நாயனம்: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  16. பாமா – அண்ணாச்சி: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  17. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் – நல்ல denouement, ஆனால் என் கண்ணில் நாஞ்சில் இதை விட பிரமாதமான கதைகளை எழுதி இருக்கிறார்.
  18. சுஜாதா – மகாபலி – என் கண்ணில் சுமாரான கதைதான்.

படிக்காதவை:

  1. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  2. இரா. முருகன் – உத்தராயணம்
  3. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. ரா.கி. ரங்கராஜன் – செய்தி
  6. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  7. ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
  8. சிவசங்கரி – செப்டிக்
  9. சோ. தருமன் – நசுக்கம்
  10. சுந்தர பாண்டியன் – கனவு
  11. சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள், தமிழ் சிறுகதைகள், சுஜாதா

நோபல் பரிசு

விருதுகள் என்று ஆரம்பித்தாயிற்று. நோபலை மட்டும் விடுவானேன்?

இது வரை இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் லிஸ்டை இங்கே காணலாம்.

ஆனால் படித்தவர்கள் கொஞ்சமே. (அதனால் கமென்ட் அடிக்காமல் இருந்துவிடப் போகிறேனா என்ன?)

கிப்ளிங்குக்கு (1907 பரிசு) கொடுத்தது சரியே. அவர் இந்தியாவை பாம்புகளும் பக்கிரிகளும் நிறைந்த ஒரு exotic நாகரீகமாக காட்டி, ஐரோப்பியர்களை வாவ் என்று சொல்ல வைத்து பெரும் புகழைப் பெற்றார். ஆனால் அவரது inventiveness அபாரம்! மோரோபி-ஜூக்ஸ் கதையை படித்துப் பாருங்கள்! அதற்காகவே கொடுக்கலாம்.

எனக்கு கவிதை அலர்ஜி அதனால் தாகூரின் (1913 பரிசு) கவிதைகளை (பாடப் புத்தகத்தில் வந்தவை தவிர) நான் படித்ததில்லை. அவரது கதைகள் எனக்கு பரவாயில்லை ரகம்தான்.

பெர்னார்ட் ஷா (1925 பரிசு) எனக்கு மிகவும் பிடித்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். அவரது Arms and the Man, சீசர் அண்ட் கிளியோபாட்ரா ஆகியவை மிகவும் பிரமாதமானவை. அவருக்கு கொடுத்தது சரியே.

பேர்ல் எஸ். பக்கின் (1938 பரிசு) படைப்புகள் கொஞ்சம் மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. அவருக்கு கொடுக்கப்பட்டது சரி இல்லை என்றுதான் தோன்றுகிறது.

ஹெர்மன் ஹெஸ்ஸியின் (1946) சித்தார்த்தா தவிர நான் வேறு எதுவும் படித்ததில்லை. அந்தப் புத்தகம் என்னை கவரவில்லை. அபிப்ராயம் சொல்ல அது போதாது. அதே போல ஃபாக்னர்(1949), சால் பெல்லோ(1976), சிங்கர்(1978),மற்றும் ஃபாக்னரின் சில நல்ல சிறுகதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். அபிப்ராயம் சொல்ல அது போதாது.

சர்ச்சிலின் (1953) non-fiction புத்தகங்களை புரட்டி மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனாலும் சொல்கிறேன், சர்ச்சிலுக்கு கொடுத்திருக்கக் கூடாது.

ஹெமிங்வேக்கு (1954) நிச்சயமாக கொடுக்கலாம். Old Man and the Sea ஒன்றே போதும்.

வி.எஸ். நைபாலின்(2001) non-fiction புத்தகங்கள் powerful ஆக இருந்தன. ஆனால் அவரது புனைவுகள் எனக்கு தேறவில்லை.

நிறைய பேர்/புத்தகங்கள் படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறார்கள். ஹென்றிக் சியன்கேவிக்சின்(1905) Quo Vadis, கால்ஸ்வொர்த்தியின்(1932) Forsyte Saga, சிங்க்ளேர் லூயிஸின்(1930) Babbitt, லுய்ஜி பிராண்டெல்லோ (1934), யூஜீன் ஓநீல்(1936), பெக்கட்(1969), ஆகியோரின் நாடகங்கள், வில்லியம் கோல்டிங்கின்(1953 Lord of the Flies, காமுவின்(1957) ப்ளேக், பாஸ்டர்நாக்கின்(1958) டாக்டர் ஷிவாகோ, ஸ்டீன்பெக்கின்(1962) Grapes of Wrath, ஷோலோகோவின்(1965) And Quite Flows the Don, சோல்ஷேனிட்சினின்(1970) Gulag Archipealago எல்லாம் ரொம்ப நாளாக ஷெல்ஃபில் இருக்கின்றன, படிக்கத்தான் முடியவில்லை. லோசா(2010), டோரிஸ் லெஸ்சிங்(2007), ஒர்ஹான் பாமுக்(2006), ஹரால்ட் பின்டர்(2005), ஜே.எம். கொஎட்சி(2003), ஹோசே சரமகோ(1998), நடைன் கார்டிமர்(1991), நக்யூப் மஃபூஜ்(1988), யசுனாரி கவபாடா(1968) எல்லாரையும் படிக்க எப்போது நேரம் கிடைக்குமோ தெரியாது. (எகிப்திய எழுத்தாளரான மஃபூஜின் ஒரு கதையை சுஜாதா காப்பி அடித்திருக்கிறார். கதையின் பெயர் அரையர் என்று நினைவு.)

நோபல் பரிசின் முக்கியத்துவம் பல மொழிகளின் முக்கிய எழுத்தாளர்கள் யார் என்று நமக்கு சொல்வதே. அவர்கள் தேர்வு நம் கண்ணில் தவறாக இருக்கலாம். ஆனால் அது விற்கப்படுவதில்லை, அரசியல் அழுத்தங்களுக்காக தரப்படுவதில்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது. (அரசியல் அழுத்தம் இல்லாமல் இருக்காது.)

ஜார்ஜ் ஆர்வெல், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆர்தர் மில்லர், பெர்டோல்ட் பிரெக்ட், ஏன் டென்னசி வில்லியம்ஸ் போன்றவர்களுக்கு என் கிடைக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?

தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன் ஆகியோரின் தரம் இவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. இந்திய எழுத்து என்று பார்த்தால் இப்போதைக்கும் ப்ரேம்சந்தும், பஷீரும், பைரப்பாவும்தான் நினைவு வருகின்றனர். பலர் – சுந்தர ராமசாமி, கி.ரா. அழகிரிசாமி, மாதிரி பலர் தகுதி உள்ளவர்களே. மொழிபெயர்க்கப்பட்டால்தான் வெளியே தெரியும், இல்லாவிட்டால் நித்தம் தவம் செய்யும் குமரி எல்லைக்கும் வட மாலவன் குன்றத்துக்கும் நடுவிலே குண்டுசட்டி குதிரைதான்.

உங்கள் மனம் கவர்ந்த நோபல் பரிசு வென்ற எழுத்தாளர்கள், படைப்புகள் உண்டா? இருந்தால் கட்டாயமாக மறுமொழி எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்