சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்

இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

படித்தவை:

  1. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  2. கு.ப.ராஜகோபாலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  3. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு: ரயிலில் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் ஏழை சிறுமிக்கு பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன் பழம் வாங்கிக் கொடுக்கிறான். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.
  4. கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.
  5. சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் கதைகளும் நினைவு வருகின்றன.
  6. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றன. அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  8. தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.
  9. பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.
  10. கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  11. திலீப்குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப்குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது.இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.
    கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  12. வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  13. ஜெயமோகன் – பல்லக்கு: வாழ்ந்து கெட்ட குடும்பம் இப்போது ஒரு முன்னாள் “வேலைக்காரன்” மூலம் இருப்பவற்றை விற்று காலத்தை ஓட்டுகிறது. அந்த வேலைக்காரனின் சுயரூபம் தெரியும்போது… பிரமாதமான கதை.
  14. வண்ணதாசன் – நிலை: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  15. ஆ. மாதவன் – நாயனம்: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  16. பாமா – அண்ணாச்சி: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  17. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் – நல்ல denouement, ஆனால் என் கண்ணில் நாஞ்சில் இதை விட பிரமாதமான கதைகளை எழுதி இருக்கிறார்.
  18. சுஜாதா – மகாபலி – என் கண்ணில் சுமாரான கதைதான்.

படிக்காதவை:

  1. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  2. இரா. முருகன் – உத்தராயணம்
  3. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. ரா.கி. ரங்கராஜன் – செய்தி
  6. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  7. ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
  8. சிவசங்கரி – செப்டிக்
  9. சோ. தருமன் – நசுக்கம்
  10. சுந்தர பாண்டியன் – கனவு
  11. சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள், தமிழ் சிறுகதைகள், சுஜாதா

23 thoughts on “சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்

  1. நல்ல தொகுப்பு. நானும் இது போன்ற ‘எஸ்.ரா’ வின் 100 சிறந்த கதைகள் தொகுப்பை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிட வேண்டும். இந்த தொகுப்பையும் அழியாச்சுடர்களில் பகிர்ந்து கொள்ள ஆசை.

    Like

    1. ராம், கேட்கவே வேண்டியதில்லை. உங்கள் தளத்தில் இதை வெளியிட்டால் எனக்குத்தான் கவுரவம். 🙂

      Like

    1. சுசீலா மேடம், நீங்கள் இந்தப் பக்கம் வருவது ரொம்ப சந்தோசம்!

      என் முகவரி rv டாட் subbu அட் ஜீமெயில் டாட் காம்

      Like

  2. அப்போதெல்லாம் ஒரே தலைப்பை கொடுத்து வெவ்வேறு எழுத்தாளர்களை எழுதச் சொல்வதுண்டு. அப்படி கொட்டுமேளம் என்ற தலைப்பை கொடுத்து தி.ஜா வையும் லா.ச.ரா வையும் எழுதச் சொன்னார்களாம். கொட்டுமேளம் நல்ல கதை. சிறுகதை என்ற பெரிய அளவிலான கதை அது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.