இதன் மேன்மைப்படுத்தப்பட்ட வடிவம் இங்கே.
எனக்கு மகாபாரதம் என்றால் பித்துதான். மகாபாரதத்தை மூலமாக வைத்து எடுக்கப்பட்ட படம், எழுதப்பட்ட கதை எவ்வளவுதான் மோசமாக இருந்தாலும் ஒரு soft corner உண்டு. 22,23 வயதில் ஹைதராபாத்தில் வாழ்ந்தபோது பாண்டவ வனவாசம், நர்த்தனசாலா மாதிரி சினிமா வந்தால் தவறாமல் பார்த்துவிடுவேன். தனியாகத்தான் போக வேண்டும், நண்பர்கள் வரமாட்டார்கள். என்ன இந்த மாதிரி படங்களில் மாதுரி தீக்ஷித் ஏக் தோ தீன் என்று இடுப்பை வளைத்து வளைத்து ஆடுகிறாளா, எப்படி வருவார்கள்? ஆந்திர நண்பர்கள் எல்லாம் எங்களுக்கே போர், நீ எப்படிடா பார்க்கிறே, உனக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்கு என்பார்கள். தூய தெலுங்கில் பேசி நடித்த ஒரு நாடகம் கூட என்ன பேசுகிறார்கள் என்று கொஞ்சம் கூட புரியாமல் பார்த்திருக்கிறேன்.
ஒரு முறை ஜெயமோகன் எனக்கு ராமாயணத்தின் சிறப்பு பற்றி எல்லாம் எடுத்து சொல்லி ஒரு அருமையான பதிவு எழுதி இருந்தார், ஆனால் யார் என்ன சொன்னால் என்ன,
மகாபாரதம் மட்டுமே எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். ராமாயணம் அருகே வரமுடியாது. இது லாஜிக், அறிவுபூர்வமான அணுகுமுறை போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
எல்லா ரஷிய கதைகளுக்கும் நிகோலாய் கோகோலின் “ஓவர்கோட்” என்ற கதையே ஆதாரம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் (ஜெயமோகனோ யாரோ மலையாள சினிமா சாதனையாளர் லோகி சொன்ன மாதிரி) உலகின் எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம்.
பாரதத்தை அடிப்படையாக வைத்து நிறைய நாவல், சினிமா வந்திருக்கும். எனக்கு நினைவிருப்பதை இங்கே லிஸ்ட் போடுகிறேன். நீங்களும் உங்களுக்கு நினைவிருப்பதை சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.
ஜெயமோகன் தான் எழுதிய மூன்று கதைகளை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தி.ஜா. ஒரு கதை எழுதியதாகவும் சொல்லி இருக்கிறார், அது என்ன என்று தெரியவில்லை. ஜரா என்ற வேடன் அம்பால் முடிவுறும் ஸ்ரீகிருஷ்ணனின் இறுதி கணங்கள் குறித்து பாலகுமாரன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார் என்று ஜடாயு குறிப்பிடுகிறார். கர்ணன் பற்றியும் ஒரு கதை (கதையின் பெயர் நினைவு வந்துவிட்டது, தனிமைத் தவம்) எழுதி இருப்பது நினைவு வருகிறது.
மகாபாரதம்:
ஆன்லைனில்:
- களம் – ஜெயமோகன் – நல்ல கதை, கதையின் இறுதி வரிகள் நிறைவாக இருக்கும்.
- பதுமை – ஜெயமோகன் – மனிதருக்கு அபாரமான திறமை, கடைசியில் ஒரு முடிச்சு போடுகிறார் பாருங்கள்!
- நதிக்கரையில் – ஜெயமோகன் – இது மற்ற கதைகளோடு ஒப்பிடும்போது சுமார்தான் (என் கண்ணில்), ஆனால் உற்றார் உறவினர் நண்பர் எல்லாம் இறந்த பின்னர் இருக்கும் வெறுமையை நன்றாக கொண்டுவந்திருப்பார்.
- வடக்கு முகம் – ஜெயமோகன் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 – பீஷ்மர்-அம்பை உறவை அருமையாக கொண்டுவந்திருப்பார்.
- அதர்வம் – ஜெயமோகன் – திரௌபதி பிறக்க செய்யப்பட யாகம்
- ராமச்சந்திரன் உஷா எழுதிய ஒரு சிறுகதை – “அவள் பத்தினி ஆனாள்” – காந்தாரி கண்ணை கட்டிக்கொண்டது எதற்கு என்று யோசிக்கிறார்.
- பிரேம் பணிக்கரின் ரண்டாமூழம் மறுபடைப்பு (transcreation) – எம்.டி. வாசுதேவன் நாயரின் நாவலை தன் சொந்த சரக்கை சேர்த்து “மொழிபெயர்த்திருக்கிறார்.” ரண்டாமூழம் நாவலைப் பற்றி இதன் மூலம்தான் தெரிந்துகொண்டேன். ரண்டாமூழம் கட்டாயமாக படித்தே ஆக வேண்டிய நாவல் என்று தெரிகிறது. இதையும் படிக்கலாம்.
- தேவகாந்தன் கதாகாலம் என்று ஒரு நாவலை எழுதி இருக்கிறார். அதைப் பற்றி கொஞ்சம் விரிவான பதிவு இங்கே.
நாவல்கள்:
- எஸ். ராமகிருஷ்ணனின் “உபபாண்டவம்” தமிழ் நாவல் – நல்ல நாவல்தான், ஆனால் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதே இல்லை. வேறு எந்த மகாபாரதக் கதையிலும் இப்படி ஆனதில்லை.
- எம்.டி. வாசுதேவன் நாயரின் “ரண்டாமூழம்” மலையாள நாவல் – பிரேம் பணிக்கரின் “மொழிபெயர்ப்பே” மனம் கவர்ந்தது, மூலத்தை படித்தே ஆக வேண்டும்.
- பி.கே. பாலகிருஷ்ணனின் “இனி ஞான் உறங்கட்டே” மலையாள நாவல் – படித்ததில்லை.
- எஸ்.எல். பைரப்பாவின் “பர்வா” (பாவண்ணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.) – அபாரமான நாவல். பாரதத்தை அதிசயங்கள் இல்லாத முறையில் வடித்திருக்கிறார். உதாரணமாக இத்தனை ஆயிரம் பேர் மோதுகிறார்கள், இவர்கள் எல்லாருக்கும் சாப்பாடு? காலைக் கடன்களை எப்படி சமாளிப்பார்கள்? கட்டாயம் படியுங்கள்!
- சிவாஜி சாவந்தின் “மிருத்யுஞ்சய்” மராத்தி நாவல் – சுமார்தான். கர்ணன்தான் மெயின் காரக்டர்.
- ஜெயமோகன், திசைகளின் நடுவே – இதுதான் சார்வாகன் கதை
என்று நினைக்கிறேன். மிக அருமையான கதை. - ஜெயமோகன், பத்ம வியூகம் – அபிமன்யுவும் அவன் கொன்ற பிருஹத்பலனும் மீண்டும் பிறப்பதாக கதை.
- ஜெயமோகன், விரித்த கரங்களில் – படித்ததில்லை.
- ஜெயமோகன், இறுதி விஷம் –
படித்ததில்லை. ஜனமேஜயனின்சர்ப்பயாகத்தில் மகாபாரதம் பிறந்த கதையைச் சொல்கிறது என்று ஜடாயு தகவல் தருகிறார்சர்ப்ப யாகத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. எரிந்துகொண்டிருக்கும் பாம்புகளை மனிதனின் கிரியா சக்தியாக உருவகிக்கிறார். - இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா – எனக்கு இந்த புத்தகம் பிடித்திருந்தது.
- சஷி தரூர், Great Indian Novel – எனக்கு அப்போது இந்தப் புத்தகம் பிடித்திருந்தது. இன்றும் தரூர் மேல் இருக்கும் நல்ல அபிப்ராயத்துக்கு இதுதான் unconscious level-இல் காரணம் என்று நினைக்கிறேன். 🙂
- பாலகுமாரன், பெண்ணாசை: – பீஷ்மர் கதையை ஜாதியை வைத்து மறு வாசிப்பு செய்திருக்கிறார். சத்யவதியின் படகுக்கார ஜாதியினர் க்ஷத்ரியர்களால் நசுக்கப்பட்டதாகவும், அவர்களின் துயர் தீர்க்கவே தங்கள் ரத்தம் உள்ள வாரிசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டதாகவும், இதை பீஷ்மரும் புரிந்துகொண்டதாகவும் கதை. சரியாக வரவில்லை. கல்யாணம் ஆனபிறகு சத்யவதி க்ஷத்ரியர் தவிர்த்த மற்ற ஜாதியினருக்கு ஏதாவது செய்ததாக பாரதத்தில் இருந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மை கூடி இருக்கும். பஸ்ஸில் படிக்கலாம்.
- பாலகுமாரன், தனிமைத் தவம்: – கீசக வதம் கதை.
- பாலகுமாரன், கடவுள் வீடு: மகாபாரதப் பித்து உள்ள எனக்கே அலுப்பு தட்டும்படி எழுதி இருக்கிறார். விதுரனின் கதை, எக்கச்சக்க உபதேசம்.
- பாலகுமாரன், கிருஷ்ண அர்ஜுனன்: கிருஷ்ணன் ஒரு கந்தர்வனின் தலையை தன காலடியில் வீழ்த்துவதாக சபதம் செய்ய அவனைக் காப்பாற்றுவதாக அர்ஜுனன் வாக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணனோடு போர் புரிவதாக ஒரு கதை உண்டு. அதை எழுதி இருக்கிறார், தவிர்க்கலாம்.
- சித்ரா பானர்ஜி திவாகருனி, The Palace Of Illusions – எனக்கு டைம் பாஸ் என்ற அளவுக்கு மேல் தேறவில்லை. நினைவுபடுத்திய கெக்கேபிக்குணிக்கு நன்றி!
- தேவதத் பட்நாயக் என்பவர் Pregnant King என்ற ஒரு நாவலை எழுதி இருக்கிறார் என்று ராமச்சந்திரன் உஷா தகவல் தருகிறார்.
- பிரதிபா ரே, யக்ஞசேனி: ஒரிய மொழியில் எழுதப்பட்ட திரவுபதியின் கதை என்று கோபி ராமமூர்த்தி தகவல் தருகிறார்.
கட்டுரைத் தொகுப்பு:
- ஐராவதி கார்வேயின் யுகாந்தர் – என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று. இந்த புத்தகத்தில் வரும் speculations போல நானும் பல முறை யோசித்திருக்கிறேன்.
- குருசரண் தாஸ், The Difficulty of Being Good: On the Subtle Art of Dharma – சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகமாம். தகவல் தந்த ஜடாயுவுக்கு நன்றி!
கிளைக்கதைகளை வைத்து எழுதப்பட்டவை:
- எம்.வி. வெங்கட்ராமின் “நித்யகன்னி” தமிழ் நாவல் – சமீபத்தில்தான் படித்தேன். நல்ல புத்தகம்தான், ஆனால் என்னவோ குறைகிறது. மூலக் கருவை கெடுக்காமல் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம், அவ்வளவுதான். கரு மிகவும் powerful , அதனால் கதையும் powerful ஆக இருக்கிறது.
- வி.எஸ். காண்டேகரின் “யயாதி” மராத்தி நாவல் – அனேகமாக நான் படித்த முதல் இலக்கியம். இன்னும் பிடிக்கிறது.
- கே.எம். முன்ஷியின் “கிருஷ்ணாவதாரா” குஜராத்தி நாவல் – நாலைந்து பாகம் உண்டு, நான் இரண்டோ மூன்றோ பாகம்தான் படித்திருக்கிறேன். தவிர்க்கலாம். (மகாபாரதப் பைத்தியமான நானே இப்படி சொல்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) கிருஷ்ணனின் சக்திகளை, லீலைகளை உலகின் விதிகளுக்கு உட்பட்டு விளக்க முயற்சி செய்கிறார். உதாரணமாக சுதர்சன சக்ரத்தின் சக்தி அது இரும்பால் செய்யப்பட்டது என்பதால்தான்!
“நவீன” கவிதை: (ஐடியா கொடுத்த ஜடாயுவுக்கு நன்றி!)
- பாரதி, பாஞ்சாலி சபதம் – சமீபத்தில் கூட “சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு” பாட்டை எனக்கு பிடித்த வெகு சில கவிதைகளில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தேன்.
- ராம்தாரி சிங் தினகர் – ரஷ்மிரதி (ஹிந்தி கவிதை) – நான் தமிழ் கவிதையை கண்டாலே ஓடுபவன், ஹிந்தியை எல்லாம் படிக்க சான்சே இல்லை. 🙂 உங்களுக்கும் கவிதை அலர்ஜி என்றால் ஜடாயுவை திட்டிக் கொள்ளுங்கள்! 🙂
அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள்:
- ஷ்யாம் பெனகலின் “கல்யுக்” (1981) – ஹிந்தி: எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.
- மணிரத்னத்தின் “தளபதி” (1988) – தமிழ்: நல்ல படம், தமிழுக்கு நிச்சயமாக above average படம்
மகாபாரத திரைப்படங்கள்:
- அபிமன்யு (1948) காசிலிங்கம் இயக்கி எம்.எஸ். குமரேசன் (அபிமன்யு), நரசிம்ம பாரதி (கிருஷ்ணன்), எம்ஜிஆர் (அர்ஜுனன்) நடித்தது. இதற்கு கருணாநிதிதான் வசனம் எழுதினாராம், ஆனால் ஏ.எஸ்.ஏ. சாமி வசனம் என்றுதான் டைட்டில். சுப்பையா நாயுடு இசை. நாயுடுவுக்கு ஒரு சிச்சுவேஷனுக்கு மெட்டு சரியாக வரவில்லையாம். அங்கே அப்போது ஆஃபீஸ் பாயாக வேலை பார்த்த எம்எஸ்வி போட்ட மெட்டு நாயுடு பேரில் வெளிவந்ததாம். பாட்டு – புது வசந்தமாமே வாழ்விலே
- பி.ஆர். பந்துலுவின் “கர்ணன்” (1964) – பார்த்து பல வருஷம் ஆயிற்று, பாட்டுகளுக்காகத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
- வீர அபிமன்யு (1965) – புகழ் பெற்ற பார்த்தேன் சிரித்தேன் பாட்டு இந்தப் படத்தில்தான். ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா, நாகேஷ் நடித்தது.
- என்.டி. ராமாராவின் “தான வீர சூர கர்ணா” (1977) – தெலுங்கு: என்.டி.ஆர். பார்ப்பவர்களை சித்திரவதை செய்வார்.
- பாலபாரதம் (1972) – தெலுங்கு: எனக்கு பிடித்திருந்தது. அநேகம் பேருக்கு போர்தான் அடிக்கும்.
- குருக்ஷேத்ரம் – தெலுங்கு: எனக்கு பிடித்திருந்தது. அநேகம் பேருக்கு போர்தான் அடிக்கும்.
- பாண்டவ வனவாசம் (1965) – தெலுங்கு: எனக்கே போர்தான் அடித்தது.
- மாயா பஜார் (1957) – தமிழ்+தெலுங்கு: எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.
- நர்த்தனசாலா – என்.டி.ஆர்., எஸ்.வி. ரங்காராவ் சாவித்திரி நடித்த படம் – கீசக வதம் கதை. ரங்காராவின் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் புகழப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நல்ல படமில்லை.
நாடகம்:
- பீட்டர் ப்ரூக்ஸின் “மகாபாரதம்” – அற்புதம், ஆனால் ஒன்பது மணி நேர நாடகம். கட்டாயம் பாருங்கள்!
- ரவீந்திரநாத் தாகூர் எழுதிய சித்ராங்கதா
தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகன் ராமாயணம், பாரதம் இரண்டையும் ஒப்பிடுகிறார்.