Skip to content

மகாபாரதம் சார்ந்த படைப்புகள்

by மேல் நவம்பர் 6, 2010

இதன் மேன்மைப்படுத்தப்பட்ட வடிவம் இங்கே.

எனக்கு மகாபாரதம் என்றால் பித்துதான். மகாபாரதத்தை மூலமாக வைத்து எடுக்கப்பட்ட படம், எழுதப்பட்ட கதை எவ்வளவுதான் மோசமாக இருந்தாலும் ஒரு soft corner உண்டு. 22,23 வயதில் ஹைதராபாத்தில் வாழ்ந்தபோது பாண்டவ வனவாசம், நர்த்தனசாலா மாதிரி சினிமா வந்தால் தவறாமல் பார்த்துவிடுவேன். தனியாகத்தான் போக வேண்டும், நண்பர்கள் வரமாட்டார்கள். என்ன இந்த மாதிரி படங்களில் மாதுரி தீக்ஷித் ஏக் தோ தீன் என்று இடுப்பை வளைத்து வளைத்து ஆடுகிறாளா, எப்படி வருவார்கள்? ஆந்திர நண்பர்கள் எல்லாம் எங்களுக்கே போர், நீ எப்படிடா பார்க்கிறே, உனக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்கு என்பார்கள். தூய தெலுங்கில் பேசி நடித்த ஒரு நாடகம் கூட என்ன பேசுகிறார்கள் என்று கொஞ்சம் கூட புரியாமல் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை ஜெயமோகன் எனக்கு ராமாயணத்தின் சிறப்பு பற்றி எல்லாம் எடுத்து சொல்லி ஒரு அருமையான பதிவு எழுதி இருந்தார், ஆனால் யார் என்ன சொன்னால் என்ன,

மகாபாரதம் மட்டுமே எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். ராமாயணம் அருகே வரமுடியாது. இது லாஜிக், அறிவுபூர்வமான அணுகுமுறை போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

எல்லா ரஷிய கதைகளுக்கும் நிகோலாய் கோகோலின் “ஓவர்கோட்” என்ற கதையே ஆதாரம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் (ஜெயமோகனோ யாரோ மலையாள சினிமா சாதனையாளர் லோகி சொன்ன மாதிரி) உலகின் எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம்.

பாரதத்தை அடிப்படையாக வைத்து நிறைய நாவல், சினிமா வந்திருக்கும். எனக்கு நினைவிருப்பதை இங்கே லிஸ்ட் போடுகிறேன். நீங்களும் உங்களுக்கு நினைவிருப்பதை சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.

ஜெயமோகன் தான் எழுதிய மூன்று கதைகளை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தி.ஜா. ஒரு கதை எழுதியதாகவும் சொல்லி இருக்கிறார், அது என்ன என்று தெரியவில்லை. ஜரா என்ற வேடன் அம்பால் முடிவுறும் ஸ்ரீகிருஷ்ணனின் இறுதி கணங்கள் குறித்து பாலகுமாரன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார் என்று ஜடாயு குறிப்பிடுகிறார். கர்ணன் பற்றியும் ஒரு கதை (கதையின் பெயர் நினைவு வந்துவிட்டது, தனிமைத் தவம்) எழுதி இருப்பது நினைவு வருகிறது.

மகாபாரதம்:

 • ராஜாஜியின் மகாபாரதம் (வியாசர் விருந்து) – இதை விட சிறந்த மொழிபெயர்ப்பை, சுருக்கத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
 • சோவின் மகாபாரதம் பேசுகிறது – ராஜாஜியை விட அதிகமாக விவரங்களை கொடுத்திருப்பார்.
 • அமர் சித்ரா கதா காமிக்ஸ் – கட்டாயம் படிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தவறாமல் வாங்கிக் கொடுங்கள்!
 • ஆன்லைனில்:

  1. களம் – ஜெயமோகன் – நல்ல கதை, கதையின் இறுதி வரிகள் நிறைவாக இருக்கும்.
  2. பதுமை – ஜெயமோகன் – மனிதருக்கு அபாரமான திறமை, கடைசியில் ஒரு முடிச்சு போடுகிறார் பாருங்கள்!
  3. நதிக்கரையில் – ஜெயமோகன் – இது மற்ற கதைகளோடு ஒப்பிடும்போது சுமார்தான் (என் கண்ணில்), ஆனால் உற்றார் உறவினர் நண்பர் எல்லாம் இறந்த பின்னர் இருக்கும் வெறுமையை நன்றாக கொண்டுவந்திருப்பார்.
  4. வடக்கு முகம் – ஜெயமோகன் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 – பீஷ்மர்-அம்பை உறவை அருமையாக கொண்டுவந்திருப்பார்.
  5. அதர்வம் – ஜெயமோகன் – திரௌபதி பிறக்க செய்யப்பட யாகம்
  6. ராமச்சந்திரன் உஷா எழுதிய ஒரு சிறுகதை – “அவள் பத்தினி ஆனாள்” – காந்தாரி கண்ணை கட்டிக்கொண்டது எதற்கு என்று யோசிக்கிறார்.
  7. பிரேம் பணிக்கரின் ரண்டாமூழம் மறுபடைப்பு (transcreation) – எம்.டி. வாசுதேவன் நாயரின் நாவலை தன் சொந்த சரக்கை சேர்த்து “மொழிபெயர்த்திருக்கிறார்.” ரண்டாமூழம் நாவலைப் பற்றி இதன் மூலம்தான் தெரிந்துகொண்டேன். ரண்டாமூழம் கட்டாயமாக படித்தே ஆக வேண்டிய நாவல் என்று தெரிகிறது. இதையும் படிக்கலாம்.
  8. தேவகாந்தன் கதாகாலம் என்று ஒரு நாவலை எழுதி இருக்கிறார். அதைப் பற்றி கொஞ்சம் விரிவான பதிவு இங்கே.

  நாவல்கள்:

  1. எஸ். ராமகிருஷ்ணனின் “உபபாண்டவம்” தமிழ் நாவல் – நல்ல நாவல்தான், ஆனால் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதே இல்லை. வேறு எந்த மகாபாரதக் கதையிலும் இப்படி ஆனதில்லை.
  2. எம்.டி. வாசுதேவன் நாயரின் “ரண்டாமூழம்” மலையாள நாவல் – பிரேம் பணிக்கரின் “மொழிபெயர்ப்பே” மனம் கவர்ந்தது, மூலத்தை படித்தே ஆக வேண்டும்.
  3. பி.கே. பாலகிருஷ்ணனின் “இனி ஞான் உறங்கட்டே” மலையாள நாவல் – படித்ததில்லை.
  4. எஸ்.எல். பைரப்பாவின் “பர்வா” (பாவண்ணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.) – அபாரமான நாவல். பாரதத்தை அதிசயங்கள் இல்லாத முறையில் வடித்திருக்கிறார். உதாரணமாக இத்தனை ஆயிரம் பேர் மோதுகிறார்கள், இவர்கள் எல்லாருக்கும் சாப்பாடு? காலைக் கடன்களை எப்படி சமாளிப்பார்கள்? கட்டாயம் படியுங்கள்!
  5. சிவாஜி சாவந்தின் “மிருத்யுஞ்சய்” மராத்தி நாவல் – சுமார்தான். கர்ணன்தான் மெயின் காரக்டர்.
  6. ஜெயமோகன், திசைகளின் நடுவே – இதுதான் சார்வாகன் கதை என்று நினைக்கிறேன். மிக அருமையான கதை.
  7. ஜெயமோகன், பத்ம வியூகம் – அபிமன்யுவும் அவன் கொன்ற பிருஹத்பலனும் மீண்டும் பிறப்பதாக கதை.
  8. ஜெயமோகன், விரித்த கரங்களில் – படித்ததில்லை.
  9. ஜெயமோகன், இறுதி விஷம்படித்ததில்லை. ஜனமேஜயனின் சர்ப்பயாகத்தில் மகாபாரதம் பிறந்த கதையைச் சொல்கிறது என்று ஜடாயு தகவல் தருகிறார் சர்ப்ப யாகத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. எரிந்துகொண்டிருக்கும் பாம்புகளை மனிதனின் கிரியா சக்தியாக உருவகிக்கிறார்.
  10. இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா – எனக்கு இந்த புத்தகம் பிடித்திருந்தது.
  11. சஷி தரூர், Great Indian Novel – எனக்கு அப்போது இந்தப் புத்தகம் பிடித்திருந்தது. இன்றும் தரூர் மேல் இருக்கும் நல்ல அபிப்ராயத்துக்கு இதுதான் unconscious level-இல் காரணம் என்று நினைக்கிறேன். 🙂
  12. பாலகுமாரன், பெண்ணாசை: – பீஷ்மர் கதையை ஜாதியை வைத்து மறு வாசிப்பு செய்திருக்கிறார். சத்யவதியின் படகுக்கார ஜாதியினர் க்ஷத்ரியர்களால் நசுக்கப்பட்டதாகவும், அவர்களின் துயர் தீர்க்கவே தங்கள் ரத்தம் உள்ள வாரிசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டதாகவும், இதை பீஷ்மரும் புரிந்துகொண்டதாகவும் கதை. சரியாக வரவில்லை. கல்யாணம் ஆனபிறகு சத்யவதி க்ஷத்ரியர் தவிர்த்த மற்ற ஜாதியினருக்கு ஏதாவது செய்ததாக பாரதத்தில் இருந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மை கூடி இருக்கும். பஸ்ஸில் படிக்கலாம்.
  13. பாலகுமாரன், தனிமைத் தவம்: – கீசக வதம் கதை.
  14. பாலகுமாரன், கடவுள் வீடு: மகாபாரதப் பித்து உள்ள எனக்கே அலுப்பு தட்டும்படி எழுதி இருக்கிறார். விதுரனின் கதை, எக்கச்சக்க உபதேசம்.
  15. பாலகுமாரன், கிருஷ்ண அர்ஜுனன்: கிருஷ்ணன் ஒரு கந்தர்வனின் தலையை தன காலடியில் வீழ்த்துவதாக சபதம் செய்ய அவனைக் காப்பாற்றுவதாக அர்ஜுனன் வாக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணனோடு போர் புரிவதாக ஒரு கதை உண்டு. அதை எழுதி இருக்கிறார், தவிர்க்கலாம்.
  16. சித்ரா பானர்ஜி திவாகருனி, The Palace Of Illusions – எனக்கு டைம் பாஸ் என்ற அளவுக்கு மேல் தேறவில்லை. நினைவுபடுத்திய கெக்கேபிக்குணிக்கு நன்றி!
  17. தேவதத் பட்நாயக் என்பவர் Pregnant King என்ற ஒரு நாவலை எழுதி இருக்கிறார் என்று ராமச்சந்திரன் உஷா தகவல் தருகிறார்.
  18. பிரதிபா ரே, யக்ஞசேனி: ஒரிய மொழியில் எழுதப்பட்ட திரவுபதியின் கதை என்று கோபி ராமமூர்த்தி தகவல் தருகிறார்.

  கட்டுரைத் தொகுப்பு:

  1. ஐராவதி கார்வேயின் யுகாந்தர் – என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று. இந்த புத்தகத்தில் வரும் speculations போல நானும் பல முறை யோசித்திருக்கிறேன்.
  2. குருசரண் தாஸ், The Difficulty of Being Good: On the Subtle Art of Dharma – சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகமாம். தகவல் தந்த ஜடாயுவுக்கு நன்றி!

  கிளைக்கதைகளை வைத்து எழுதப்பட்டவை:

  1. எம்.வி. வெங்கட்ராமின் “நித்யகன்னி” தமிழ் நாவல் – சமீபத்தில்தான் படித்தேன். நல்ல புத்தகம்தான், ஆனால் என்னவோ குறைகிறது. மூலக் கருவை கெடுக்காமல் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம், அவ்வளவுதான். கரு மிகவும் powerful , அதனால் கதையும் powerful ஆக இருக்கிறது.
  2. வி.எஸ். காண்டேகரின் “யயாதி” மராத்தி நாவல் – அனேகமாக நான் படித்த முதல் இலக்கியம். இன்னும் பிடிக்கிறது.
  3. கே.எம். முன்ஷியின் “கிருஷ்ணாவதாரா” குஜராத்தி நாவல் – நாலைந்து பாகம் உண்டு, நான் இரண்டோ மூன்றோ பாகம்தான் படித்திருக்கிறேன். தவிர்க்கலாம். (மகாபாரதப் பைத்தியமான நானே இப்படி சொல்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) கிருஷ்ணனின் சக்திகளை, லீலைகளை உலகின் விதிகளுக்கு உட்பட்டு விளக்க முயற்சி செய்கிறார். உதாரணமாக சுதர்சன சக்ரத்தின் சக்தி அது இரும்பால் செய்யப்பட்டது என்பதால்தான்!

  “நவீன” கவிதை: (ஐடியா கொடுத்த ஜடாயுவுக்கு நன்றி!)

  1. பாரதி, பாஞ்சாலி சபதம் – சமீபத்தில் கூட “சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு” பாட்டை எனக்கு பிடித்த வெகு சில கவிதைகளில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தேன்.
  2. ராம்தாரி சிங் தினகர் – ரஷ்மிரதி (ஹிந்தி கவிதை) – நான் தமிழ் கவிதையை கண்டாலே ஓடுபவன், ஹிந்தியை எல்லாம் படிக்க சான்சே இல்லை. 🙂 உங்களுக்கும் கவிதை அலர்ஜி என்றால் ஜடாயுவை திட்டிக் கொள்ளுங்கள்! 🙂

  அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள்:

  1. ஷ்யாம் பெனகலின் “கல்யுக்” (1981) – ஹிந்தி: எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.
  2. மணிரத்னத்தின் “தளபதி” (1988) – தமிழ்: நல்ல படம், தமிழுக்கு நிச்சயமாக above average படம்

  மகாபாரத திரைப்படங்கள்:

  1. அபிமன்யு (1948) காசிலிங்கம் இயக்கி எம்.எஸ். குமரேசன் (அபிமன்யு), நரசிம்ம பாரதி (கிருஷ்ணன்), எம்ஜிஆர் (அர்ஜுனன்) நடித்தது. இதற்கு கருணாநிதிதான் வசனம் எழுதினாராம், ஆனால் ஏ.எஸ்.ஏ. சாமி வசனம் என்றுதான் டைட்டில். சுப்பையா நாயுடு இசை. நாயுடுவுக்கு ஒரு சிச்சுவேஷனுக்கு மெட்டு சரியாக வரவில்லையாம். அங்கே அப்போது ஆஃபீஸ் பாயாக வேலை பார்த்த எம்எஸ்வி போட்ட மெட்டு நாயுடு பேரில் வெளிவந்ததாம். பாட்டு – புது வசந்தமாமே வாழ்விலே
  2. பி.ஆர். பந்துலுவின் “கர்ணன்” (1964) – பார்த்து பல வருஷம் ஆயிற்று, பாட்டுகளுக்காகத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
  3. வீர அபிமன்யு (1965) – புகழ் பெற்ற பார்த்தேன் சிரித்தேன் பாட்டு இந்தப் படத்தில்தான். ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா, நாகேஷ் நடித்தது.
  4. என்.டி. ராமாராவின் “தான வீர சூர கர்ணா” (1977) – தெலுங்கு: என்.டி.ஆர். பார்ப்பவர்களை சித்திரவதை செய்வார்.
  5. பாலபாரதம் (1972) – தெலுங்கு: எனக்கு பிடித்திருந்தது. அநேகம் பேருக்கு போர்தான் அடிக்கும்.
  6. குருக்ஷேத்ரம் – தெலுங்கு: எனக்கு பிடித்திருந்தது. அநேகம் பேருக்கு போர்தான் அடிக்கும்.
  7. பாண்டவ வனவாசம் (1965) – தெலுங்கு: எனக்கே போர்தான் அடித்தது.
  8. மாயா பஜார் (1957) – தமிழ்+தெலுங்கு: எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.
  9. நர்த்தனசாலா – என்.டி.ஆர்., எஸ்.வி. ரங்காராவ் சாவித்திரி நடித்த படம் – கீசக வதம் கதை. ரங்காராவின் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் புகழப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நல்ல படமில்லை.

  நாடகம்:

  1. பீட்டர் ப்ரூக்ஸின் “மகாபாரதம்” – அற்புதம், ஆனால் ஒன்பது மணி நேர நாடகம். கட்டாயம் பாருங்கள்!
  2. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய சித்ராங்கதா

  தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

  தொடர்புடைய சுட்டிகள்:
  ஜெயமோகன் ராமாயணம், பாரதம் இரண்டையும் ஒப்பிடுகிறார்.

  Advertisements

  From → Legends, Lists

  32 பின்னூட்டங்கள்
  1. ஆர்வி

   தி.ஜானகிராமன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

   நான் எழுதிய மகாபாரதக்கதைகள்

   1. திசைகளின் நடுவே
   2 இறுதிவிஷம்
   3 பத்மவியூகம்
   4 விரித்த கரங்களில்
   5 நதிக்கரையில்

  2. ஆர்வி,

   கிளைக்கதைகளை வைத்து எழுதப்பட்டவை – இந்தத் தலைப்பின் கீழ் இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா-வை சேர்க்கலாம்.

   • லக்ஷ்மி பாலகிருஷ்ணன், மறுமொழிக்கு நன்றி! இ.பா.வையும் இப்போது லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.

  3. கர்ணன் – //பாட்டுகளுக்காகத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.// நிச்சயமாக. சமீபத்தில் டிவிடி கிடைத்தது என்று பார்க்க உட்கார்ந்ததில் உருண்டு புரண்டு சிரிக்க வேண்டியதாகி விட்டது. :)))))

  4. ஆர்.வி, அட நீங்களும் ஒரு சக மகாபாரத பித்தரா? ரொம்ப சந்தோஷம்!

   நல்ல தொகுப்பு.

   ஜெ.மோவின் “இறுதி விஷம்’ கதையும் நல்ல படைப்பு.. இது ஜனமேஜயனின் சர்ப்பயாகத்தில் மகாபாரதம் பிறந்த கதையைச் சொல்கிறது.. கட்டாயம் படியுங்கள்.

   இதில் நவீன கவிதை என்று ஒரு வகை சேர்த்து, அதில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தையும் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அது பாரத மொழிபெயர்ப்பல்ல. தன்னளவில் முழுமையான தீவிர இலக்கியப் பிரதி. இதே போல, ஹிந்தியில் கர்ணனை மையப் படுத்தி நவீன கவிஞர் ராமதாரி திங் தினகர் ரஷ்மிரதீ என்று ஒரு நெடுங்கவிதை எழுதியிருக்கிறார்.

   ஜரா என்ற வேடன் அம்பால் முடிவுறும் ஸ்ரீகிருஷ்ணனின் இறுதி கணங்கள் குறித்து பாலகுமாரன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். பெயர் ஞாபகம் வரவில்லை.

   ஆங்கிலத்தில் ஷஷி தரூர் The great Indian novel என்று ஒரு மகாபாரத spoof நாவல் எழுதியிருக்கிறார். இந்திய சுதந்திரம் மற்றும் அதன் தொடர்ச்சியான காலகட்டங்களின் அரசியல் வரலாறு மகா “பாரதமாக” சொல்லப் படுகிறது. ’இந்திரா ப்ரிய துர்யோதனி’ என்பது ஒரு பாத்திரத்தின் பெயர் :)) பீஷ்மர், திருதராஷ்டிரன், பாண்டு ரோல்களுக்கு மிகச் சரியான தலைவர்களை தேர்வு செய்திருப்பார் ஷஷி தரூர். விவரண நடையில் (narrative) எழுதப் பட்ட நாவல். பல இடங்களில் தூக்கலான அங்கதம் உண்டு, ரசிக்கத் தக்க நாவல்.

   பத்தியாளர் மற்றும் மேனேஜ்மென்ட் குரு குர்சரண் தாஸிம் ஒரு மகாபாரத அபினாமி.. முழுக்க மகாபாரத பாத்திரங்கள், அவர்களின் இயல்புகளை அடிப்படையாக வைத்து “The Difficulty of Being Good: On the Subtle Art of Dharma” என்று சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். (பெங்குயின் வெளியீடு).. இன்னும் நான் படிக்கவில்லை.. ஆனால் இப்படி ஒரு புத்தகம் எழுதியதற்காகவே அவரைப் பாராட்டத் தோன்றூகீறது..

  5. ஜடாயு, உங்கள் மறுமொழியில் இருந்த விவரங்களையும் சேர்த்துவிட்டேன். (இன்றைக்கு ஒரு non-fiction புத்தகத்தைப் பற்றி எழுதினேன், உங்கள் நினைவுதான் வந்தது…)

  6. knvijayan permalink

   நானும் ஒரு பாரதகதை பைத்தியம் தான்.கார்வேயின் உகாந்தர் ஒரு அற்புதமான ஆராய்ச்சி நூல்.உங்களுக்கு பிடித்த ராஜாஜியின் வியாசர் விருந்து என்னை கவரவில்லை ,ராஜாஜி தன்னுடைய கைசரக்கு எல்லாம் சேர்த்து அதன் கலை அழகை கெடுத்து நமக்கு அறிவுரை கூற இதை பயன்படுத்தி கொண்டார்.பாமர தமிழன் பாரத்கதையை தன்னுடைய இதயத்தில் வைத்துகொண்டான்.வட தமிழ்நாட்டில் எல்லா கிராமங்களிலும் திரவுபதி அம்மன் கோயில் இருப்பதும்,பாரத கதை பிரசங்கமும்,தெரு கூத்தும் இன்றைய கணினி யுகத்திலும் இருப்பதே தமிழன் எந்த அளவிற்கு இந்த கதையை நேசிக்கிறான் என்பது புலப்படும்.14 -ம் நூற்றாண்டில் வில்லிபுத்துரார் இதனை தமிழில் எழுதினார்,ஆனால் அவர் குருஷேத்திர யுத்தமோடு நிறுத்திகொண்டார்.பெருந்தேவன் என்பவர் எழுதிஉள்ளார். வேத வியாசர் எழுதியதை முழுக்கவும் 18 -ம் நூற்றாண்டில் நல்லா பிள்ளை என்பவர் எழுதிஉள்ளார்.உரை இல்லாமலே எல்லோரும் படிக்கும் vakaiyil எளிமையாக எழுதிஉள்ளார்.பாஞ்சாலி சபதத்தை எழுதிய நமது குரு முழு பாரதத்தையும் எழுதாமல் போனது தமிழனின் துர் அதிர்ஷ்டமே.ஏசு காவியம் எழுதிய கண்ணதாசன் மகாபாரதத்தை எழுதி இருந்தால் அது தமிழ் இலக்கியத்தின் மைல் கல்லாயிருந்திருக்கும்.மகாதேவி என்ற படத்தில் மானம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்வது நமது சமுதாயம் என்ற பாடலில் அபிமன்யு போர்க்களத்தில் மாளும் காட்சியை அற்புதமாக வடித்திருப்பார். கேட்பவர் கண்ணில் நீர் வழியும்.நமது தீவினை அவரும் எழுதவில்லை.

   • விஜயன், // வியாசர் விருந்து என்னை கவரவில்லை // நான் படித்த வயதாக இருக்கலாம். நீங்கள் சொல்லும் பாட்டு சரியாக நினைவு வரவில்லை.
    மோகன், பாராட்டுக்கு நன்றி!

  7. அன்புள்ள RV,

   மிக அருமையான தொகுப்பு. படிக்கவேண்டிய நூல்கள் ஏகப்பட்டன உள்ளன.

  8. எனக்குப் பிடித்த மகாபாரதம் சார்ந்த படைப்பு, சித்ரா பானர்ஜி திவாகருணியின் “மாய மாளிகை” / “The palace of illusions” தான். என் புத்தக விமர்சனம்: http://kekkepikkuni.blogspot.com/2009/02/palace-of-illusions.html

   திருநங்கையான சிகண்டிக்குத் தங்கையாகப் பிறந்து, பிறவியிலேயே “துரியோதனாதியரின் எதிரி”யாக கூறப்பட்டு, அவள் விருப்பமே அறியாமல் பாண்டவர் ஐவருக்கு மணமுடிக்கப்பட்டு, அவமானத்திலும் அவமானமாக ஒவ்வொரு கணவனுடனும் வாழும் ஓராண்டின் முடிவில், அவள் கற்பை நிலைநாட்டும் வகையாக “கன்னி”யாக ஆகிவிடுகிறாள் திரௌபதி. ஒரு ராஜகுமாரியான அவள் உண்மையில் யாரைக் காதலித்திருப்பாள்?

  9. அருமையான வித்தியாசமான தொகுப்பு, ஆர்வி. நான் படிக்க வேண்டியது நிறைய இருக்கு போல. மகாபாரதம் ஒரு வற்றாத சுரங்கம்தான்.

  10. கெக்கேபிக்குணி, நீங்கள் தந்த விவரத்தையும் இணைத்துவிட்டேன், நன்றி!
   ராம், படிக்க நிறைய இருப்பது என்று நீங்கள் சொல்வது எல்லாருக்கும் பொருந்தும் நூற்றுக்கு நூறு உண்மை.

  11. Thanks for this excellent read. I liked every little bit of it. I bookmarked this and will be reading again.

  12. Kala permalink

   A very good List. I hv read most of these books except the 2 Malayala Novels and Palace of Illusions.
   Thks for the list

   • போகன், இந்த லிஸ்டில் முக்கால்வாசி புத்தகங்கள் எனக்கும் அப்படித்தான். அதனால் என்ன குடி முழுக்விட்டது? 🙂

  13. Devdutt Pattnnaik எழுதிய Pregnant King இன்னும் ஒரு மகாபாரதத்தை அடிப்படையாய் கொண்ட நாவல் இரவல் வாங்கி வந்துள்ள புத்தகம். இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். அதிகம் சொல்லப்படாத கதை இன்னும் மகாபாரதத்தில் எவ்வளவு கதைகள் உள்ளதோ?
   என்னுடைய எள்ளுருண்டை http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html உரையாடல்
   நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசுப் பெற்ற கதை

   • உஷா ராமச்சந்திரன், Pregnant King பற்றி கேள்விப்பட்டதில்லை. உரையாடல் போட்டியில் நானும் ஒரு பரிசு வாங்கினேன், அப்போதே உங்கள் கதையைப் படித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!

  14. balajisrini permalink

   RV, Tagore wrote a play called Chitrangada, based on the wife of Arjuna. Check it out.

   • சித்ராங்கதா பற்றிய தகவலுக்கு நன்றி, பாலாஜி, இப்போது விவரத்தை இணைத்துவிட்டேன்.
    அருணா, உபபாண்டவம் பற்றி யாராவது எழுதப் போகிறார்களா?

  15. அருணா permalink

   ஆர்.வி

   இன்று உபபாண்டவம் பற்றிய நம் கூட்டத்தில் இந்த லிஸ்ட்டை பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இங்கு வந்து பார்த்தால் நீங்களும் அதை பற்றியே எழுதி இருக்கிறீர்கள்.

  16. அருணா permalink

   ஆர். வி

   பாலாஜி, சுந்தரேஷ் மற்றும் உங்கள் பெற்றோர்கள் தான் முழுதாக படித்திருந்தார்கள். பாக்ஸ் குறிப்பு எடுத்து கொண்டார். ஒருவேளை அவர் எழுதலாம். நான் ரொம்ப நாளா முயற்சி பண்ணுகிறேன். எஸ்.ரா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

  17. ஆர்.வி.சார்,
   வாசுதேவன் நாயரின் நாவலை” இரண்டாம் இடம்”என்ற தலைப்பில் குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்திருக்கிறாரே,சாகித்திய அகாடமி வெளியீடு
   படித்திருக்கிறீர்களா?

  18. ரெங்கசுப்ரமணி permalink

   மகாபாரதன் என்னும் கடலின் இன்னொரு ரசிகரை சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழில் மகாபாரதத்தை முழுவது யாராவாது மொழி பெயர்த்துள்ளனரா? நான் சிறுவயதில் ஒரு புத்தகத்தை படித்துள்ளேன், பின் வர்த்தமானனின் ஒரு பதிப்பை வாங்கினேன். அதில் கதையே துண்டு துண்டாக இருப்பது போன்ற பிரமை. அவர்கள் இஷ்டப்படி வெட்டி சுருக்கிவிட்டார்கள் போல. கடைசியில் படித்தது சோ எழுதியது. அது அதிக விவரத்துடன் ஒரு கதை போல இருந்தது. நீங்கள் தந்த லிஸ்டில் ஜெயமோகனின் கதைகளில் சிலவற்றை படித்துள்ளேன். சிறந்த கதைகள், ஆனால் யுதிரிஷ்டரின் கதாபத்திரம் ஒரு எள்ளலுடனே படைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது. கிருஷ்ண கிருஷ்ணா வும் பிடித்திருந்தது. உண்மையில் மிகவும் ரசித்து படித்தேன். அதற்கு காரணம் இ.பா அல்ல, அது கிருஷ்ணரைப் பற்றி என்பதால்தான். உபபாண்டவம் பற்றி கேள்விபட்டு வாங்கலாம் என்று நினைக்கும் பொழுதுதான் மாமல்லனின் தளத்தில் “குந்தி கிருஷ்ணனின் சகோதரி” என்று கதை கூறுவதாக படித்தேன், யோசித்து தான் வாங்க வேண்டும் போல.

  19. Kishore permalink

   Devdutt Pattanaik – Jaya (thamizhil Jayam – Vikatan prasuram)
   Mahabharatham (muzhumaiyaana thamizh mozhipeyappu; athaavathu unabridged translation) – Mahabharatha parvangal (narmatha pathippagam/ New Booklands), Mahabharatham (Bhagavan Nama publications, Mandaiveli), Mahabharatham (Nrisimhapriya, Venkatesa Agraharam st, Mylapore).

  20. Yajnaseni (The story of Draupadi) by Prathibha Ray, orignally written in Oriya, translated by Pradip Bhattacharya into English

  21. Iniyaa permalink

   கோடி நன்றிகள் ஆர்வி. உபபாண்டவம் மட்டுமே இதுவரை வாசித்துள்ளேன்.இப்பதிவை வாசித்தவுடன் இரண்டாம் இடம் என் நண்பரிடம் இரவல் வாங்கி வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்.இந்தபதிவு என்னளவில் ஓர் பௌக்கிஷம்.

   உங்க பரிந்துரைக்கள் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியாக உள்ளன
   மீண்டும் என் நன்றிகள்.

   • இனியா, இரண்டாம் இடம் படித்த பிறகு உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்!

  22. ganesh permalink

   other OLD tamil bharatam works (by)

   Aranganaatha kavirayar Bharatham (Aranganaatha kavirayar)
   Athiparuvathaadi Paruvam (Ambalathuaaduvamayaar)
   Bharata Saaravenba (Perumal swami)
   Bharata venba (Bharata venba paadiya perunthevanaar)
   Mahaavindam (perundevanaar)

   Naaturpura Bharata noolgal

   Alli arasaani malai
   pavala kodi maalai
   pulandhiran thootu
   pulandhiran kalavu
   poonuruvi msakkai
   eniyetram
   paandavar vanavaasam
   kirutinan thoothu
   abiman sundari maalai
   viraada paruvam
   aadi paruvam
   vithuvaan kuram (alli kuram)
   thuroopadai kuravanji

   killaikadhai

   maarivayil
   paanjaali sabatam

   nallavenba
   naidatham

   • அன்புள்ள கணேஷ்,

    மகாபாரதம் பற்றி தெரியாத சில விவரங்களைத் தொகுத்து தந்ததற்கு நன்றி. இரண்டாவது வடிவத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன்…

  Trackbacks & Pingbacks

  1. ராஜமார்த்தாண்டன் சிபாரிசுகள் « சிலிகான் ஷெல்ஃப்
  2. இன்று புதிதாய்… | சிலிகான் ஷெல்ஃப்

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: