லவ் ஸ்டோரி – தமிழ் எழுத்தாளர்கள் கைவண்ணத்தில்

இது ஒரு மீள்பதிவு (சில அப்டேட்களுடன்), நினைவுபடுத்திய நண்பர் போகனுக்கு நன்றி!

எரிக் செகால் எழுதிய லவ் ஸ்டோரி என் மனதை தொட்ட புத்தகங்களில் ஒன்று. பல முறை படித்த புத்தகம்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி பக்கங்களை படிக்கும்போது கண்ணில் நீர் தேங்கும். ஆலிவர் பாரெட் IV தன் அப்பாவின் தோள்களில் சாய்ந்து அழும் காட்சி மிக உருக்கமானது.

ஆனால் யோசித்து பார்த்தால் இந்த புத்தகத்தில் ஒன்றுமே இல்லை. பணக்கார குடும்பத்து நாயகன் ஏழை பெண்ணை காதலித்து, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு, கல்யாணம் செய்து கொள்கிறான். மனைவி சிறு வயதிலேயே இறந்து விடுகிறாள். இந்த மில்ஸ் அண்ட் பூன் கதையை செகால் எவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கிறார்!

இதே கதையை பிரபல தமிழ் எழுத்தாளர்கள் என்ன தலைப்பு வைத்திருப்பார்கள், எப்படி எல்லாம் எழுதி இருப்பார்கள் என்று ஒரு கற்பனை. என்னை இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் மன்னிப்பார்களாக!

ஜெயமோகன், ஆழப் பரவும் நிழல்: புத்தகத்தில் மொத்தம் ஆயிரம் பக்கம். அப்பாவும் மகனும் உணர்ச்சியில் கொந்தளிக்கிறார்கள். அப்பா தமிழ் கலந்த மலையாளத்திலும் மகன் மலையாளம் கலந்த தமிழிலும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொள்கிறார்கள். ஜெனிஃபரின் மறைவுக்கு பிறகு பாரெட் எப்படி எல்லாம் சீரழிகிறான், கஞ்சா குடிக்கிறான், பிச்சை எடுக்கிறான் என்று ஒரு நூறு பக்கம் இருக்கிறது. அதற்கு பிறகு ஜெயமோகனே இந்த புத்தகத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதிக் கொள்கிறார். அது ஒரு ஐந்நூறு பக்கம்.

அசோகமித்திரன், மறைந்த உடல்கள்: பாரெட்டுக்கு ஏன் ஜெனிஃபரை மணந்தோம் என்றே தெரியவில்லை. என்னவோ நடந்துவிட்டது. இப்போது ஜெனிஃபர் இறக்கப் போகிறாள் என்றதும் சரி சீக்கிரம் செத்தால் நல்லது என்று நினைக்கிறான்.

புதுமைப்பித்தன், கடவுளும் ஜெனிஃபரின் பிள்ளையும் – ஆலிவர் பாரெட் பிள்ளைவாள் ஜெனிஃபர் என்ற கிருஸ்தவ பெண்ணை விவாகம் செய்து கொள்கிறார். பிரசவத்தில் இறந்து கொண்டிருக்கும் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போக பணமில்லை. அப்போது கடவுள் ஒரு விசிட் அடித்து இதுதான் அய்யா பொன்னகரம்! என்கிறார். (வந்தது ஏசுவா, ஈசனா என்று கேட்கக் கூடாது)

தி. ஜானகிராமன், அப்பா வந்தார் – வயதில் மூத்த ஜெனிஃபரை ஆலிவர் காதலிப்பதை அப்பா எதிர்க்கிறார். அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் தொடுப்பு என்று பின்னால் தெரிய வருகிறது.

இந்திரா பார்த்தசாரதி, சந்திர சாமி: டெல்லியில் ஆலிவர் பாரெட் அய்யங்கார் மத்திய மந்திரியின் குருவின் வைப்பாட்டியின் தம்பி மகளை மணந்து டெல்லியில் பெரிய ஆளாகிறான். அவள் இறந்ததும் அவனை யாரும் சீந்தவில்லை. பாதி புத்தகம் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஏனென்றால் All characters talk only in English, you know.

பாலகுமாரன், சித்தியின் கோமணம்: ஒரு சித்தி (சித்தருக்கு பெண்பால்) வந்து ஜெனிஃபரை குணப்படுத்திவிடுகிறார். அந்த சித்தி போன ஜென்மத்தில் கோமணம் மட்டுமே அணிந்த ஒரு சித்தருக்கு தாசியாக “சேவை” செய்ததால் சித்தி கிடைத்துவிடுகிறது.

நா. பார்த்தசாரதி, பொங்கி வருகின்ற புது வெள்ளம்: நாவல் பூராவும் அப்பா பாரெட்டின் சிறுமைத்தனத்தை கண்டு பிள்ளை பாரெட்டும் ஜென்னிஃபரும் பொங்குகிறார்கள், பொங்குகிறார்கள், பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சாண்டில்யன், வன மோகினி – இளைய ராணா ஆலிவர் பாரெட் அக்பரின் வைப்பாட்டி மகளான ஜெனிஃபர் கானை மணந்து சிங்காதனத்தை துறக்கிறான். நடுவில் காடு, மலை எல்லாம் பற்றி ஐந்து பக்கத்துக்கு ஒரு முறை வர்ணனை – இந்த காடு, மலை எல்லாம் ஜெனிஃபர் கானின் உடலில் இருக்கிறது. ஜெனிஃபர் கானை குணப்படுத்த ராஜ வைத்தியரை மூத்த ராணாவிடம் கடனாக கேட்கிறான். ராஜ வைத்தியர் வர தாமதம் ஆகி ஜெனிஃபர் இறந்ததும் அவன் வீறு கொண்டு எழுந்து அக்பரை எதிர்க்கிறான்.

கலைஞர் கருணாநிதி, சாதிச் சுடுகாடு – ஆலிவர் பாரெட் அய்யர் தலித் ஜெனிஃபரை காதலிப்பதை மூட நம்பிக்கைகளில் மூழ்கிய அப்பா பாரெட் எதிர்த்திட்டார். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை பொறுக்க முடியாமல் ஒரு போலி சாமியார் ஜெனிஃபருக்கு விஷம் வைத்திட்டார். காலம் கடந்த பின் அப்பா அய்யர் அழுதிட்டார்.

லக்ஷ்மி, பூங்குளத்துப் பூங்குயில்: கல்யாணம் செய்துகொண்ட பிறகு பாரெட் ஜென்னிஃபரைப் பிரிந்து மிராசுதார் பாரெட் சொல்லும் ஒரு பணக்காரப் பெண்ணை மணக்கிறான். கடைசி காலத்தில் மனம் திருந்தி அவள் காலில் விழ வரும்போது அவளுக்கு கான்சர். கதை நடப்பது பூங்குளம் கிராமத்தில்.

சிவசங்கரி, என்ன கொடுமை இது?: லக்ஷ்மி எழுதிய அதே கதைதான், நகர்ப்புறத்தில் நடக்கிறது.

அனுராதா ரமணன், பெண்ணுக்கு எப்போதும் இன்னல்தான்: லக்ஷ்மி எழுதிய அதே கதைதான்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா – கெட்டி கிட்னி: அப்பா பாரெட் ஒரு இன்ஸ்பெக்டரை/பரத்தை/நரேந்திரனை கூப்பிடுகிறார். என் பையன் என்னிடம் 5000 ரூபாய் ஏன் கேட்டான் என்று கண்டுபிடிக்க சொல்கிறார். கிட்னியை திருட சதி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

படிப்பவர்களும் உங்கள் கை வரிசையை காட்டுங்களேன்! (எனக்கு ஜெயகாந்தன், சுஜாதாவுக்கு எதுவும் சரியாக வரவில்லை…)

4 thoughts on “லவ் ஸ்டோரி – தமிழ் எழுத்தாளர்கள் கைவண்ணத்தில்

  1. 🙂 கதைச் சுருக்கமெல்லாம் போதாது சார்.

    அதைவிட ஆங்கில நூலின் முக்கியமான ஒரு பத்தியை எழுதி விட்டு, இதைத் தமிழில் வெவ்வேறு எழுத்தாளர்கள் எப்படி எழுதியிருப்பார்கள் என்று எழுதிப் பார்க்கலாம்….

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.