மிஸ்டர் சிடிசன் (Mr. Citizen)

அமெரிக்க ஜனாதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வார்கள்? புஸ்தகம் எழுதுவார்கள், ஊர் ஊராகப் போய் லெக்சர் அடிப்பார்கள். 1945-1952 கால கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த ஹாரி ட்ரூமன் அப்படி – ரிடையர் ஆன பிறகு – எழுதிய புத்தகம் இது.

அநேகம் சரித்திர நிபுணர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், ஏப்ரஹாம் லிங்கன் மற்றும் ஃபிராங்க்ளின் ரூசவெல்டை A+ grade அமெரிக்க ஜனாதிபதிகளாக கருதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மாற்று குறைந்தவர்களாக – A grade ஜனாதிபதிகளாக – கருதப்படுவர்களில் ஹாரி ட்ரூமனும் ஒருவர். (மற்றவர்கள்: ஆண்ட்ரூ ஜாக்சன், க்ரோவர் க்ளீவ்லேன்ட், தியோடர் ரூசவெல்ட், உட்ரோ வில்சன்)

ஹாரி ட்ரூமன் 1944 தேர்தலில் ஃபிராங்க்ளின் ரூசவெல்டுக்கு துணை ஜனாதிபதியாக இருந்தவர். 1945-இல் ரூசவெல்ட் இறந்துவிட இவர் ஜனாதிபதியானார். அணுகுண்டு வீச உத்தரவிட்டவர் இவர்தான். 1948-இல் எல்லாரும் இவர் தோற்றுவிடுவார் என்று எதிர்பார்க்க – சிகாகோ ட்ரிப்யூன் என்ற பேப்பர் இவர் தோற்றார் என்று நியூசே அடித்துவிட்டது (ஃபோட்டோவைப் பாருங்கள்) – இவர் வென்றார். மிகவும் decisive என்று பேர் வாங்கியவர். புகழ் பெற்ற ஜெனரல் மக்கார்தர் – பசிஃபிக் சமுத்திரத்தின் தலைமை ஜெனரலாக இருந்து ஜப்பானை தோற்கடித்தவர் – கொரியன் சண்டையின்போது இவர் பேச்சை கேட்கமாட்டேன் என்று கொஞ்சூண்டு வம்பு பண்ணியதும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், எந்த தயக்கமும் இல்லாமல், அவரை டிஸ்மிஸ் செய்துவிட்டார். அவருடைய புகழ் பெற்ற இரண்டு quotes: The buck stops here; If you can’t stand the heat, get out of the kitchen. அதாவது நீங்கள் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், முடிவு என் (ஜனாதிபதி) கையில், அப்படி முடிவெடுக்கும் துணிவு இல்லை என்றால் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதே என்பதுதான் இவர் தாரக மந்திரம் என்று சொல்லலாம்.

1952,56 தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்காக போட்டியிட்ட அட்லாய் ஸ்டீவன்சனுக்கும் இவருக்கும் ஆகவில்லை. இந்த புத்தகத்தில் ஏனென்று விளக்குகிறார். இது என் தவறான புரிதல். 52-இல் இவர்தான் மிகவும் முயன்று ஸ்டீவன்சனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறார். 56-இல் ஸ்டீவன்சனுக்கும் அவெரல் ஹாரிமனுக்கும் நடந்த போட்டியில் ஹாரிமனை ஆதரித்திருக்கிறார். ஹாரிமனோடு அவருக்கு மிக நல்ல உறவு உண்டு.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் ஓய்வு பெற்ற பிறகு தான் மிஸ்டர் பிரசிடென்ட் இல்லை, மிஸ்டர் சிடிசனே – சாதாரண குடிமகனே – என்று உறுதியாக நம்புகிறார், அதை விலாவாரியாக விளக்குகிறார். அப்படி வாழ முயற்சியும் செய்திருக்கிறார். (விடுமுறைக்காக தானே காரை ஓட்டிக் கொண்டு போவது, ஸ்பீட் லிமிட்டுக்கு மேல் டிரைவ் செய்வது, கண்ணில் கண்ட மோட்டலில் தங்குவது, வீட்டு லானை mow செய்வது) தனக்கு பிடித்த ஜனாதிபதிகள், ஜனாதிபதிகள் எடுத்த முக்கிய முடிவுகள் என்று விளக்குகிறார்.

முக்கியமான புத்தகம் இல்லை. Content -ஐ படித்துவிட்டு மறந்துவிடலாம்தான். ஆனால் இந்த புத்தகத்தில் தெரிவது ஒவ்வொரு வரியிலும் அவரது decisiveness-தான். எதை எடுத்தாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். எப்படிப்பட்ட மனிதர் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான ஜனாதிபதியின், உலகத் தலைவரின் குணாதிசயத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை படியுங்கள்.