அம்மாவுக்கு புரியாது – நான் எழுதி பரிசு வென்ற சிறுகதை

இது ஒரு மீள்பதிவு. நானும் ஒரு கதையை எழுதி, அதுவும் பரிசு வென்றிருக்கிறது! (சிறுகதைப் போட்டி எதுவும் இப்போது இல்லையா? நடந்தால் விவரம் கொடுங்கள், ப்ளீஸ்!)

இது போன வருஷம் (2009) ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்திய போட்டியில் பரிசு வென்ற சிறுகதை.

காதல் என்றாலே வீட்டில் பிரச்சினைதான். அதுவும் என்னை விட வயதில் பெரிய, விவாகரத்து செய்த, கம்மா ஜாதி தெலுங்குப் பெண்ணை காதலித்தால்?

மைலாப்பூரில் அக்மார்க் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன் நான். ஒரே பையன். தினமும் கௌஸல்யா சுப்ரஜா ராமா என்று டேப்பில் கேட்டுத்தான் திருப்பள்ளி எழுச்சி நடக்கும். ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு போகாத நாள் கிடையாது. பி.எஸ். ஹைஸ்கூல், கிண்டி எஞ்சினியரிங் காலேஜ், டிசிஎஸ்ஸில் வேலை. பாடி ஷாப்பிங்கில் அமெரிக்கா வரும் வரைக்கும் ரங்கநாதனை சேவிக்கவும், வெங்கடாசலபதியை சேவிக்கவும்தான் சென்னையை விட்டு வெளியே போயிருக்கிறேன்.

எனக்கு காண்ட்ராக்ட் கிடைத்த கம்பெனியில் மாலா வேலை செய்துகொண்டிருந்தாள். பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போல எல்லாம் உணரவில்லை. கூட வேலை செய்த ஜப்பானியர்களும், சீனர்களும் பேசும் ஆங்கிலம் கொஞ்சமும் புரியாமால் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்த என் மேல் பரிதாபப்பட்டு கொஞ்சம் வேலை சொல்லிக் கொடுத்தாள். இரண்டு வாரம் கழித்து டீம் லன்ச்சுக்கு போனபோது சோயா பீன்ஸ் டோஃபுவை சாப்பிட்டு என் முகம் போன போக்கை பார்த்து சிரித்துவிட்டு அடுத்த நாள் எனக்கு புளியோதரை செய்து கொடுத்தாள். பிறகு அவள் டைவர்ஸ் கதை எல்லாம் தெரிந்தது. அவள் துணிச்சலில், அழகில், உதவி செய்யும் நல்ல மனதில், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நேரடியாக பேசும் குணத்தில், நான்தான் மயங்கிப் போய் அவள் பின்னால் லோ லோ என்று அலைந்தேன். அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னபோது, அவள் தியாகச் சுடர் மாதிரி எல்லாம் வசனம் பேசவில்லை. ரொம்ப சிம்பிளாக எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது, ஆனால் உன்னால் உன் ஆசாரமான குடும்பத்தை சமாளிக்க முடியுமா என்று டைரக்டாக கேட்டாள். முடியும் என்று அப்போது சொல்லிவிட்டேன், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

காண்ட்ராக்ட் முடிந்து இந்தியா வந்தாகிவிட்டது. ஸ்கைப் வாழ்க! தினமும் பேசிக் கொள்கிறோம். மாலா பிரஷர் கொடுக்கவில்லைதான், ஆனால் எனக்கு அவள் வேண்டும், இப்பவே வேண்டும். சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் அம்மா அப்பாவிடம் பேச தைரியம் இல்லை. எப்படி சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் மாலா இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை.

அப்பாவையாவது சமாளித்துவிடலாம். அவர்தான் நான் திருட்டு தம் அடிப்பதை பார்த்தாலும் அதை அம்மாவிடம் போட்டுக் கொடுக்காதவர். தெருவில் சண்டை போட்டு அடி வாங்கி வந்தால் அவர்தான் மருந்து போட்டிருக்கிறார். கம்பெனி பார்ட்டியில் பியர் குடித்துவிட்டு வந்தபோது அம்மாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டவர் அவர்தான். கோபப்படுவார்தான், வருத்தப்படுவார்தான், ஆனால் மன்னித்தும் விடுவார்.

அம்மாவை சமாளிப்பதுதான் முடியாத காரியம். ஆசாரம்தான் அம்மாவின் உயிர் மூச்சு. வாரத்தில் ஆறு நாள் விரதம். ராமன், கிருஷ்ணன், நரசிம்மன், லக்ஷ்மி, பூமாதேவி எல்லாருக்கும் விரதம். பலராமனுக்கும் கோவில் இருப்பது தெரியாது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் பலராமனுக்கும் விரதம் இருப்பாள். கோவிலுக்கு போனால் லேசில் வெளியே வரமாட்டாள். ஆஹா பெருமாள் முகத்தில் என்ன தேஜஸ் என்று பரவசப்பட்ட ஆரம்பித்தால் கூடப் போகிறவன் தாவு தீர்ந்துவிடும். அனுமார் முகத்திலும் அழகை காணும் அளவுக்கு பக்தி. வீட்டில் காப்பியை நான் தூக்கித்தான் குடிக்க வேண்டும். அதுவும் காலை குளித்து முடித்து ஸ்லோகம் சொன்னால்தான் காப்பி. நான் சந்தியாவந்தனம், பரிசேஷனம் எல்லாம் செய்வதில்லை என்று ஒரே வருத்தம். நான் அமெரிக்கா போகும்போது நான்-வெஜிடேரியன் உணவு சாப்பிடக் கூடாது என்று சத்தியம் எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. தம், தண்ணி எல்லாம் என் பிராமண தேஜசின் அருகே வரமுடியாது என்ற நம்பிக்கையால் அதை பற்றி எல்லாம் சத்தியம் வாங்காதது நமக்கு வசதியாகிவிட்டது.

ஒரு முறை என் அப்பாவுக்கு கை ஒடிந்துவிட்டது. என்ன காரணத்தாலோ புத்தூர் கட்டு போட்டுக்கொண்டார். தினமும் வீட்டுக்கு ஒரு நாட்டு வைத்தியர் வந்து முட்டையை உடைத்து கொதிக்கவிட்டு என்னவோ தயார் செய்து கட்டு போடுவார். அம்மா அவருக்கு தனியாக பாத்திரம், ஸ்டவ் எல்லாம் தந்திருந்தாள். அப்பாவுக்கு கை சரியாக போனதும் பாத்திரம் மட்டுமல்ல, ஸ்டவ்வும் குப்பைத்தொட்டிக்கு போய்விட்டது. முட்டை வேக வைத்த ஸ்டவ் வீட்டுக்குள்ளே வந்தால் அம்மாவின் ஆசாரம் தாங்காது!

உண்மையை சொல்லப் போனால் அம்மாவுக்கும் மாலாவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டு பேரும் தைரியசாலிகள். எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனசு. ஆனால் என் அம்மாவுக்கு பிடிவாதம் அதிகம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தால் அப்பாதான் தழைந்து போக வேண்டும். prejudice-உம் அதிகம், அதுதானே பெரிய பிரச்சினையாக இருக்கிறது! அம்மா என்னை, என் ஆசைகளை, என் காதலை புரிந்து கொள்ள மாட்டாள் என்ற நினைப்பு மிக பயமாக இருக்கிறது. எனக்கு அம்மாவும் வேண்டும்தான். அம்மாவா மாலாவா இரண்டில் ஒன்றுதான் என்ற நிலை வந்துவிடுமோ என்றுதான் பயப்படுகிறேன்.

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. வேலைக்கு போக ஆரம்பித்த பிறகும் அம்மா எனக்கு மட்டும் கொஞ்சம் சலுகை கொடுத்திருக்கிறாள். நான் மெ…து…வா…க ஆறு மணிக்கு எழுந்தால் போதும். எழுந்து குளித்து காப்பி குடித்துக்கொண்டிருக்கும்போது அம்மா சொன்னாள் – “முகுந்தா, என்னை இன்னிக்கு கொஞ்சம் அண்ணா நகர் வரைக்கும் கூட்டிண்டு போடா!”

“என்னம்மா விசேஷம்?”

“என்னோட அலமேலு பெரியம்மா பேத்திக்கு கல்யாணம்டா!”

“அப்பாவை கூட்டிண்டு போம்மா! நான் எதுக்கு?”

“இன்னிக்கு அவர் ஃப்ரெண்டு பையன் கல்யாணம் வேற இருக்குடா! அவர் அங்கதான் போகணும்கறார். நீ என்னை கூட்டிண்டு போடா!”

“அட போம்மா! இன்னிக்கு ஒரு நாள்தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலான்னு பாத்தா, நீ வேற!”

” டேய், நான் என்ன டெய்லியாடா உன்ன கேக்கறேன்? இங்க இருக்க அண்ணா நகர்தாண்டா! அப்புறம் அலமேலு பெரியம்மாவும் உன்னை பாத்தா சந்தோஷப்படுவாடா! இந்த மாதிரி நாலு கல்யாணத்துக்கு போனாதான்டா உன் கல்யாணத்துக்கு பொண்ணு கெடைக்கும்!”

“அம்மா போறும்! சும்மா பேசாதே. கூட்டிண்டு போறேன்.”

வேண்டாவெறுப்பாக கிளம்பினேன். அங்கே அலமேலு பாட்டி, அம்மா, ஆண்டாள் பெரியம்மா எல்லாரும் ஒரே பாச மழை. கொஞ்சம் தள்ளிப் போய் நிம்மதியாய் உட்கார்ந்துகொண்டேன்.

நிம்மதி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அம்மா யாரோ ஒரு பட்டுப்புடவை, வைர நெக்லஸ், வைரத்தோடு மாமியை கூட்டிக்கொண்டு என்னிடத்தில் வந்தாள். “ரமா, இவந்தாண்டி என் ஒரே புள்ளை, முகுந்தன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். நானும் அரை மனதோடு ஒரு கும்பிடு வைத்தேன்.

“முகுந்தா, நானும் உங்கம்மாவும் ஸ்கூல்ல ரொம்ப ஃப்ரெண்டு! முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் பார்க்கறோம்!”

“பழைய ஃப்ரெண்டுனா பேச நிறைய விஷயம் இருக்கும். நான் இங்க எதுக்கு உங்களுக்கு தொந்தரவா?”

“அட சும்மா இருடா! இவன் எப்பவும் இப்படித்தான், முசுடு!” என்று அம்மா என் மேல் எரிந்து விழுந்தாள். வேறு வழி இல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு அவர்கள் கூடப் படித்த பானுமதி, சரசா, நடுத்தெரு விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

திடீரென்று டிசிஎஸ் பேர் அடிபட்டது. “இவன் டிசிஎஸ்லியா வேல பாக்கறான்? என்னோட மாப்பிளையோட அத்திம்பேர் அங்கேதாண்டி மானேஜரா இருக்கார்! முகுந்தா, உனக்கு ஸ்ரீனிவாசனை தெரியுமா? அங்கே மானேஜரா இருக்காரே!” என்று ரமா மாமி கூவினார்.

“அங்க தடுக்கி விழுந்தா ஸ்ரீனிவாசன்தான். பத்து பேருக்கு ஒரு மானேஜர். நீங்க யாரை சொல்றேள் தெரியலியே மாமி!”

“நீ உன் கார்டை கொடுரா, ரமா நீ அதை அவர் கிட்டே கொடுத்தா அவர் இவனை கண்டுபிடிச்சுட்டு போறார்!”

சரி இரண்டு விசிட்டிங் கார்ட் கையை விட்டு போனால் பர்சின் கனம் குறையும் என்று என் கார்டை எடுத்து ரமா மாமியிடம் கொடுத்தேன். ரமா மாமி அதை பார்த்துவிட்டு தன் ஹாண்ட்பாகில் வைத்துக் கொள்ளப் போனவர் திடீரென்று மீண்டும் அதை எடுத்துப் பார்த்தார்.

“ஆர். முகுந்த்? அப்போ அந்த சுந்தரம்?”

என் அம்மாவுக்கு நான் பக்கத்தில் இருந்தது ஒரு நொடி மறந்து போயிருக்க வேண்டும். தன் கைகளை விரித்தாள். உச்சுக் கொட்டினாள். பிறகு சொன்னாள்.

“உனக்குத்தான் எல்லாம் தெரியுமேடி! சுந்தரம் முதலியாராச்சே! என் அம்மாவுக்கு என்னால புரிய வைக்க முடியலே!”

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 • அம்மாவுக்கு பிடிச்சிருக்கு!
 • ஜெயமோகனுக்கு பிடிக்கலை
 • 3 thoughts on “அம்மாவுக்கு புரியாது – நான் எழுதி பரிசு வென்ற சிறுகதை

  1. ஆர்வி

   நெடுநாட்களுக்குமுன் நீங்கள் கருத்து கேட்டிருந்தீர்கள்.

   1. இது சுஜாதாபாணி கதை. பேரிதழ்களில் பலரும் எழுதும் பாணி. ஆகவே கொஞ்சம் சலித்துப்போன ஒன்று

   என்னென்ன அம்சங்களை சுஜாதாபானி எனலாம்?

   அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது

   ஆ. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு

   இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது. கதையையே சுருக்கிச் சொல்வது

   உ. மனதைச் சித்தரிக்க விட்டுவிடுவது

   இது ஒருநல்ல பாணி அல்ல. இந்தவகையை சுஜாதா எப்போது மீறிச்சென்றாரோ அப்போதுதான் சுஜாதாவே நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். இது எளிய வாச்கான் எளிதாக வாசிக்கக்கூடியது. ஆனால் உடனே மறந்துவிடவும்செய்வான்

   ஏனென்றால் இதில் கதைமாந்தரும் சூழலும் ‘அங்கே சென்று வாழும்’ அனுபவத்தை அளிப்பதில்லை. அவை சொல்லப்படுகின்றன. உளவியல் நெருக்கடிகள் பதிவாவதில்லை. ஆகவே பண்பாட்டுச்சிக்கல்கள் நிகழ்வதில்லை. விளைவாக கதை அழுத்தம் பெறுவதே இல்லை.

   2 . சுஜாதாவின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் அவர் தொடர்ந்து வழக்கமான் க்ளீஷேக்களை தவிர்த்துக்கொண்டே இருந்தார். நீங்கள் செய்யவில்லை

   உதா: நடுத்தெரு விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற ’பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை’ அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

   ஆகவேதான் அவரது நடை சம்பிரதாயமானதாக ஆகவில்லை. புதுமையை கடைசிவரை தக்கவைத்திருந்தது

   3. கதை பேரிதழ்களுக்குரியது என ஏன் சொல்கிறேன் என்றால் மையச்சிக்கல் என்பதை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால்தான். அம்மாவுக்கும் இளமையில் அதே சிக்கல் இருந்திருக்கிறது போன்ற இம்முடிவு எப்போதுமே எழுதப்படும் ஒன்றே

   சிபாரிசு
   ======

   இக்கதை சார்ந்து நான் நினைப்பது உங்கள் எழுத்தாளர் அசோகமித்திரன் என. அவரை தொடருங்கள். சுஜாதாவை தொடர்ந்து சென்றவர்கள் குமுதத்துக்கே செல்ல முடியும்.

   அசோகமித்திரனின் முக்கியமான இயல்பு அவர் எதையும் ’சொல்வதில்லை’. அவர் வாசகனிடம் விளையாடுவதில்லை. அவரது சித்தரிப்புகள் அடக்கமானவை எளிமையானவை. அவரது சவால் கச்சிதமாகச் சொல்வதில் உள்ளது, சுவாரசியமாகச் சொல்வதில் அல்ல

   அசோகமித்திரன் இதை எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்? .

   1.அந்த வீட்டுச்சூழலை எளிமையான சித்தரிப்புகள் மூலம் சொல்லி நாம் அங்கே சென்று தங்கி அதை அறிந்த உணர்வை உருவாக்கியிருப்பார். நுட்பமான சில தகவல்கள் சூழலையும் கதைமாந்தரின் இயல்புகளையும் எளிதாகச் சொல்லிவிடக்கூடியவை. தன் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அவர்கள் வீட்டில் கிருஷ்ணாயிலா கரியடுப்பா என்று ஒரு பாட்டி கேட்கிறாள் ஒருகதையில். அதேபோல

   2 மையப்பிரச்சினையை அவரே சொல்லாமல் அந்தக்கதாபாத்திரங்களின் உரையாடல் மற்றும் செயல்கள்மூலம் வெளிப்படச் வைத்திருப்பார்.

   3 அம்மாவின் குணச்சித்திரம் இத்தனை ஒற்றைப்படையாக இருக்காது. வாழ்க்கையில் நாம் காணும் கதாபாத்திரங்களில் உள்ள ஒரு மர்மம், ஒரு விளங்காமை எங்கோ இருந்துகொண்டிருக்கும்

   4 கதைமுடிவு இப்படி சொல்லப்பட்டிருக்காது. மிக மென்மையாக, முடிந்தவரை குறைவாகச் சொல்லப்பட்டிருக்கும். கதையின் முடிவில் இருந்து அம்மாவின் குணச்சித்திரம் அதுவரை சொல்லப்பட்டதை மீண்டும் அசைபோட நம்மை கட்டாயப்படுத்தும். அப்போது அம்மா இன்னமும் புரியக்கூடியவளாக ஆக ஆரம்பிப்பாள். உங்கள் கதை முடிந்துவிடுகிறது. அசோகமித்திரன் கதை அங்கே தொடங்கும்

   உங்களுக்கு அசோகமித்திரனின் தலைப்புபாணி அழகாக கைவந்திருக்கிறது. கதைப்பாணியும் கைவரட்டும். எல்லா எழுத்தாளர்களும் ஒரு மாஸ்டரையே முதலில் பின்பற்றுகிறார்கள். அவர் அவர்களை அவர்களின் சொந்த உலகுக்குள் கொண்டு செல்வார்

   வாழ்த்துக்கள்

   ஜெ

   Like

   1. ஜெயமோகன்,

    சந்தோஷத்தை வெளிப்படுத்தத் தெரியவில்லை. சம்பிரதாயமாக நன்றி என்று சொல்வது பற்றவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. மனதில் ஓடும் கதைகளை பேப்பரில் கொண்டு வரும் உற்சாகம் மீண்டும் வருகிறது. நன்றி!

    அசோகமித்திரன் போல எழுத முயற்சி செய் என்கிறீர்கள். என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறேன்? 😉 எழுதி வைத்திருக்கும் கதைகளை எல்லாம் திருப்பி ஒரு முறை படித்துப் பார்த்தேன், எல்லாம் “நான்” சொல்லும் கதைகள்தான் – first person narratives, நேரடியாக சொல்லப்படும் கதைகள்தான். மையப் பிரச்சினையை நேரடியாக சொல்லாமல் இருப்பது, சூழலை விவரிப்பது மூலம் கதையை நகர்த்துவது என்று மாற்றுவது எல்லாம் சுலபமாக இல்லைதான். முயற்சிக்கிறேன்.

    // சுஜாதாவின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் அவர் தொடர்ந்து வழக்கமான் க்ளீஷேக்களை தவிர்த்துக்கொண்டே இருந்தார். நீங்கள் செய்யவில்லை உதா: நடுத்தெரு விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற ’பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை’ அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். // என்று சொல்லி இருந்தீர்கள். முகுந்தன் அப்படித்தான் யோசிப்பான், clicheக்களை தவிர்க்கமாட்டான், அப்படி தவிர்க்காமல் இருப்பது அவனுடைய immaturityஐ காட்டும் என்று நினைத்தேன். overthink செய்துவிட்டேன் போலிருக்கிறது! இல்லை clicheக்களை narrative-இல் கொண்டு வராமல் அவன் பேச்சில் கொண்டு வந்திருக்க வேண்டுமோ என்னவோ.

    இந்த கதை பற்றி நீங்கள் எழுதி இருப்பதையும் நான் கதைகள் பற்றி எழுதுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உற்சாகம் எல்லாம் இறங்கிவிடுகிறது. 🙂 அருமை, அபாரம், அற்புதம், பிரமாதம், மொக்கை, வெட்டி, வேஸ்ட் மாதிரி வார்த்தைகளை தவிர்த்து எழுதப் பழகி கொள்ள வேண்டும்!

    Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.