அம்மாவுக்குப் புரியாது – ஜெயமோகனின் விமர்சனம்

சிறுகதை எழுதுவது எப்படி என்று நிறைய பேர் சொல்வதைப் படித்திருக்கிறேன். கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் வை, கதையின் ஒவ்வொரு வரியும் அந்த கடைசி வரிக்கு வாசகனை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் நின்றது. என் மனதில் உள்ள கதைகள் எப்போதும் கடைசி வரியில்தான் ஆரம்பிக்கின்றன. ஆனால் கதையை எப்படி நீட்டுவது என்பது கை வரவில்லை. நேர்கோடான, அனேகமாக first person -இல் மட்டும்தான் எழுத முடிகிறது. கதை “நான்” வாசகருக்கு சொல்வது, அதை தாண்டி கதையை சம்பவங்கள், உரையாடல் மூலம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

பாலகுமாரன் அடிக்கடி சொல்வார் – சிறுகதை எழுதுவது எப்படி என்று தனக்கு சுஜாதாதான் சொல்லிக் கொடுத்தார் என்று. அப்படி நமக்கும் யாராவது சொல்லிக் கொடுக்க மாட்டார்களா என்று எனக்கும் ஒரு ஆசை உண்டு. எழுத வேண்டும் என்று ஆசை இருப்பவன் எல்லாம் பாலகுமாரனா என்று கேட்காதீர்கள். ஜெயமோகனைப் பார்த்தபோது அவரை இப்படி கேட்க நமக்கு என்ன அருகதை என்ற வெட்கமே இல்லாமல் சார் சொல்லிக் கொடுங்க என்று கேட்டேன். அவரும் நேரம் ஒதுக்க முயற்சி செய்வதாக சொன்னார், அமையவில்லை. சரி நம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன்.

இன்று அவர் அம்மாவுக்குப் புரியாது கதைக்கு டீடெய்லாக ஒரு மறுமொழி எழுதி இருக்கிறார். அசோகமித்ரன் மாதிரி எழுத முயற்சி செய் என்கிறார். என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறேன்? 🙂

அவரது மறுமொழி எழுத ஆசைப்படும் பலருக்கும் பயன்படும் என்று இங்கே ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். என்ஜாய்!

ஆர்வி

நெடுநாட்களுக்குமுன் நீங்கள் கருத்து கேட்டிருந்தீர்கள்.

1. இது சுஜாதா பாணி கதை. பேரிதழ்களில் பலரும் எழுதும் பாணி. ஆகவே கொஞ்சம் சலித்துப் போன ஒன்று

என்னென்ன அம்சங்களை சுஜாதா பாணி எனலாம்?

அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது

ஆ. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு

இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது. கதையையே சுருக்கிச் சொல்வது

உ. மனதைச் சித்தரிக்க விட்டுவிடுவது

இது ஒரு நல்ல பாணி அல்ல. இந்த வகையை சுஜாதா எப்போது மீறிச் சென்றாரோ அப்போதுதான் சுஜாதாவே நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். இது எளிய வாச்கான் எளிதாக வாசிக்கக் கூடியது. ஆனால் உடனே மறந்துவிடவும் செய்வான்

ஏனென்றால் இதில் கதை மாந்தரும் சூழலும் ‘அங்கே சென்று வாழும்’ அனுபவத்தை அளிப்பதில்லை. அவை சொல்லப்படுகின்றன. உளவியல் நெருக்கடிகள் பதிவாவதில்லை. ஆகவே பண்பாட்டுச் சிக்கல்கள் நிகழ்வதில்லை. விளைவாக கதை அழுத்தம் பெறுவதே இல்லை.

2 . சுஜாதாவின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் அவர் தொடர்ந்து வழக்கமான் க்ளீஷேக்களை தவிர்த்துக்கொண்டே இருந்தார். நீங்கள் செய்யவில்லை

உதா: நடுத்தெரு விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற ’பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை’ அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆகவேதான் அவரது நடை சம்பிரதாயமானதாக ஆகவில்லை. புதுமையை கடைசி வரை தக்கவைத்திருந்தது

3. கதை பேரிதழ்களுக்குரியது என ஏன் சொல்கிறேன் என்றால் மையச்சிக்கல் என்பதை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால்தான். அம்மாவுக்கும் இளமையில் அதே சிக்கல் இருந்திருக்கிறது போன்ற இம்முடிவு எப்போதுமே எழுதப்படும் ஒன்றே

சிபாரிசு
======

இக்கதை சார்ந்து நான் நினைப்பது உங்கள் எழுத்தாளர் அசோகமித்திரன் என. அவரை தொடருங்கள். சுஜாதாவை தொடர்ந்து சென்றவர்கள் குமுதத்துக்கே செல்ல முடியும்.

அசோகமித்திரனின் முக்கியமான இயல்பு அவர் எதையும் ’சொல்வதில்லை’. அவர் வாசகனிடம் விளையாடுவதில்லை. அவரது சித்தரிப்புகள் அடக்கமானவை எளிமையானவை. அவரது சவால் கச்சிதமாகச் சொல்வதில் உள்ளது, சுவாரசியமாகச் சொல்வதில் அல்ல

அசோகமித்திரன் இதை எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்? .

1.அந்த வீட்டுச்சூழலை எளிமையான சித்தரிப்புகள் மூலம் சொல்லி நாம் அங்கே சென்று தங்கி அதை அறிந்த உணர்வை உருவாக்கியிருப்பார். நுட்பமான சில தகவல்கள் சூழலையும் கதைமாந்தரின் இயல்புகளையும் எளிதாகச் சொல்லிவிடக்கூடியவை. தன் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அவர்கள் வீட்டில் கிருஷ்ணாயிலா கரியடுப்பா என்று ஒரு பாட்டி கேட்கிறாள் ஒருகதையில். அதேபோல

2 மையப்பிரச்சினையை அவரே சொல்லாமல் அந்தக்கதாபாத்திரங்களின் உரையாடல் மற்றும் செயல்கள்மூலம் வெளிப்படச் வைத்திருப்பார்.

3 அம்மாவின் குணச்சித்திரம் இத்தனை ஒற்றைப்படையாக இருக்காது. வாழ்க்கையில் நாம் காணும் கதாபாத்திரங்களில் உள்ள ஒரு மர்மம், ஒரு விளங்காமை எங்கோ இருந்துகொண்டிருக்கும்

4 கதைமுடிவு இப்படி சொல்லப்பட்டிருக்காது. மிக மென்மையாக, முடிந்தவரை குறைவாகச் சொல்லப்பட்டிருக்கும். கதையின் முடிவில் இருந்து அம்மாவின் குணச்சித்திரம் அதுவரை சொல்லப்பட்டதை மீண்டும் அசைபோட நம்மை கட்டாயப்படுத்தும். அப்போது அம்மா இன்னமும் புரியக்கூடியவளாக ஆக ஆரம்பிப்பாள். உங்கள் கதை முடிந்துவிடுகிறது. அசோகமித்திரன் கதை அங்கே தொடங்கும்

உங்களுக்கு அசோகமித்திரனின் தலைப்புபாணி அழகாக கைவந்திருக்கிறது. கதைப்பாணியும் கைவரட்டும். எல்லா எழுத்தாளர்களும் ஒரு மாஸ்டரையே முதலில் பின்பற்றுகிறார்கள். அவர் அவர்களை அவர்களின் சொந்த உலகுக்குள் கொண்டு செல்வார்

வாழ்த்துக்கள்

ஜெ

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 • அம்மாவுக்கு புரியாது சிறுகதை
 • அம்மாவுக்கு பிடிச்சிருக்கு!
 • தாயிற் சிறந்த விமர்சகர் இல்லை

  ஒரு வருஷத்துக்கு முன் சிறுகதைப் போட்டி என்று பார்த்தேன், எழுதி வைத்திருந்த ஒரு கதையை அனுப்பினேன், வெற்றியும் பெற்றது. ஆனால் அதை என் பெற்றோரிடம் – குறிப்பாக அம்மாவிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது. கதை பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ என் அம்மா வெளியே ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்றுதான் சொல்வாள். நான் எழுதியதாயிற்றே! என் அம்மாவுக்கு நான் எழுதியதுதான் முக்கியம், என்ன எழுதி இருக்கிறேன் எனபது இரண்டாம் பட்சமே. ஆனால் கதையில் வரும் அம்மாவுக்கு என் அம்மாதான் ரோல் மாடல். என் அம்மாவும் சாமியை கோவிலில் இருந்து வேரோடு பிடுங்கும் ஜாதிதான். என் அம்மாவும் அப்பாவுக்கு புத்தூர் கட்டு போட முட்டை காய வைத்த ஸ்டவ்வை தூக்கிப் போட்டிருக்கிறாள். அதனால் ஏதாவது வருத்தப்படப் போகிறாள் என்று ஒரு சின்ன பயம்.

  ஆனால் இந்தக் கதைக்கான கரு என் அம்மாவிடமிருந்துதான் கிடைத்தது. எனக்கு பதினைந்து பதினாறு வயது இருக்கும்போது பேச்சுவாக்கில் ஒரு முறை சொன்னாள் – தான் ஹைஸ்கூலுக்கு போன காலங்களில் யாரோ ஒருவன் “அட பாருடா இந்த பொண்ணை! எவ்ளோ அழகா இருக்கு” என்று சொல்ல என் அம்மா பயந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து விட்டாளாம். அது வரையில் எனக்கு அம்மா என்றால் என் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மெஷின் + கண் கண்ட தெய்வம் என்ற புரிதல்தான். அந்த வயதில் நான் சைட் அடிக்க போவது போல் என் அம்மாவையும் யாரோ அவளுடைய சின்ன வயதில் சைட் அடித்திருக்கலாம் என்ற புரிதல் எனக்கு அப்போது ஒரு paradigm shift. பழைய தமிழ் படங்களில் வருவது போல் அலைகள் வேக வேகமாக கரையில் மோதி, நிலம் பிளந்து, ட்ரம்ஸும், வயலினும், உலகத்தில் இருக்கும் எல்லா இசைக் கருவிகளும் திடும் திடும் என்று அதிர்ந்த ஒரு க்ஷணம்.

  அப்படி நான் அதிர்ந்த அந்த க்ஷணத்தைத்தான் இந்த கதையில் பிடிக்க முயற்சி செய்தேன். முகுந்தனுக்கும் அதே மாதிரி அதிர்ச்சி, paradigm shift ஏற்படும் ஒரு தருணத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசை. இந்தக் கதையை ஒரு வாசகனாகப் படிக்கும்போது அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அது என் கல்யாண ஃபோட்டோவை நானே பார்ப்பது மாதிரி – அந்த ஃபோட்டோவில் எனக்கு மனிதர்கள் மட்டும் தெரியமாட்டார்கள், நாங்கள் போட்ட சண்டைகள், சிரித்து மகிழ்ந்த தருணங்கள் எல்லாம் தெரியும். அந்த மாதிரிதான் இந்த கதையிலும் நான் எழுதாமல் விட்ட எத்தனையோ விஷயங்கள் தெரியும். என் மனதில் இருக்கும் பெரும் கதையில் ஒரு சிறு பகுதி மட்டும்தான் பேப்பருக்கு வந்திருக்கிறது. (நல்ல வேளை பிழைத்தேன் என்று நீங்கள் விடும் பெருமூச்சு கேட்கிறது.) ஆனால் அந்த க்ஷணத்துக்கு படிப்பவர்களை கூட்டி வருவதில் வெற்றி பெற்றேனா என்று எனக்கு சந்தேகம்தான். அம்மாவைத் தவிர மற்ற காரக்டர்கள் எல்லாம் மிக தட்டையாகத்தான் இருக்கிறார்கள். அம்மாவே சரியாக வந்திருக்கிறதா என்று கொஞ்சம் சந்தேகம்தான்.

  இப்படி என் படைப்பைப் பற்றி எனக்கு ஆயிரம் சந்தேகம் இருந்தாலும், அவற்றில் பலவற்றை ஜெயமோகன் ஊர்ஜிதப்படுத்தினாலும், என் அம்மாவிடம் பேசியபோது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தன்னை தெரிந்து கொண்டதாகவும், படித்துவிட்டு சிரித்ததாகவும் சொன்னாள். என் ரசனையின் ஊற்றுக்கண் என் அம்மாதான். அம்மாவுக்கு பிடித்த மாதிரி ஒரு கதை எழுதிவிட்டேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது!

  பிற்சேர்க்கை: இந்தக் கதையை எழுதியது பல விதத்தில் சந்தோஷம் தந்தது. கடைசியாக கிடைத்த சந்தோஷம் ஜெயமோகனே இதை விமர்சித்திருப்பது. அந்த விமர்சகரைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்…

  தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

  தொடர்புடைய சுட்டிகள்:

 • அம்மாவுக்கு புரியாது சிறுகதை
 • ஜெயமோகனுக்கு பிடிக்கலை