அம்மாவுக்குப் புரியாது – ஜெயமோகனின் விமர்சனம்

சிறுகதை எழுதுவது எப்படி என்று நிறைய பேர் சொல்வதைப் படித்திருக்கிறேன். கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் வை, கதையின் ஒவ்வொரு வரியும் அந்த கடைசி வரிக்கு வாசகனை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் நின்றது. என் மனதில் உள்ள கதைகள் எப்போதும் கடைசி வரியில்தான் ஆரம்பிக்கின்றன. ஆனால் கதையை எப்படி நீட்டுவது என்பது கை வரவில்லை. நேர்கோடான, அனேகமாக first person -இல் மட்டும்தான் எழுத முடிகிறது. கதை “நான்” வாசகருக்கு சொல்வது, அதை தாண்டி கதையை சம்பவங்கள், உரையாடல் மூலம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

பாலகுமாரன் அடிக்கடி சொல்வார் – சிறுகதை எழுதுவது எப்படி என்று தனக்கு சுஜாதாதான் சொல்லிக் கொடுத்தார் என்று. அப்படி நமக்கும் யாராவது சொல்லிக் கொடுக்க மாட்டார்களா என்று எனக்கும் ஒரு ஆசை உண்டு. எழுத வேண்டும் என்று ஆசை இருப்பவன் எல்லாம் பாலகுமாரனா என்று கேட்காதீர்கள். ஜெயமோகனைப் பார்த்தபோது அவரை இப்படி கேட்க நமக்கு என்ன அருகதை என்ற வெட்கமே இல்லாமல் சார் சொல்லிக் கொடுங்க என்று கேட்டேன். அவரும் நேரம் ஒதுக்க முயற்சி செய்வதாக சொன்னார், அமையவில்லை. சரி நம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன்.

இன்று அவர் அம்மாவுக்குப் புரியாது கதைக்கு டீடெய்லாக ஒரு மறுமொழி எழுதி இருக்கிறார். அசோகமித்ரன் மாதிரி எழுத முயற்சி செய் என்கிறார். என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறேன்? 🙂

அவரது மறுமொழி எழுத ஆசைப்படும் பலருக்கும் பயன்படும் என்று இங்கே ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். என்ஜாய்!

ஆர்வி

நெடுநாட்களுக்குமுன் நீங்கள் கருத்து கேட்டிருந்தீர்கள்.

1. இது சுஜாதா பாணி கதை. பேரிதழ்களில் பலரும் எழுதும் பாணி. ஆகவே கொஞ்சம் சலித்துப் போன ஒன்று

என்னென்ன அம்சங்களை சுஜாதா பாணி எனலாம்?

அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது

ஆ. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு

இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது. கதையையே சுருக்கிச் சொல்வது

உ. மனதைச் சித்தரிக்க விட்டுவிடுவது

இது ஒரு நல்ல பாணி அல்ல. இந்த வகையை சுஜாதா எப்போது மீறிச் சென்றாரோ அப்போதுதான் சுஜாதாவே நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். இது எளிய வாச்கான் எளிதாக வாசிக்கக் கூடியது. ஆனால் உடனே மறந்துவிடவும் செய்வான்

ஏனென்றால் இதில் கதை மாந்தரும் சூழலும் ‘அங்கே சென்று வாழும்’ அனுபவத்தை அளிப்பதில்லை. அவை சொல்லப்படுகின்றன. உளவியல் நெருக்கடிகள் பதிவாவதில்லை. ஆகவே பண்பாட்டுச் சிக்கல்கள் நிகழ்வதில்லை. விளைவாக கதை அழுத்தம் பெறுவதே இல்லை.

2 . சுஜாதாவின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் அவர் தொடர்ந்து வழக்கமான் க்ளீஷேக்களை தவிர்த்துக்கொண்டே இருந்தார். நீங்கள் செய்யவில்லை

உதா: நடுத்தெரு விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற ’பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை’ அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆகவேதான் அவரது நடை சம்பிரதாயமானதாக ஆகவில்லை. புதுமையை கடைசி வரை தக்கவைத்திருந்தது

3. கதை பேரிதழ்களுக்குரியது என ஏன் சொல்கிறேன் என்றால் மையச்சிக்கல் என்பதை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால்தான். அம்மாவுக்கும் இளமையில் அதே சிக்கல் இருந்திருக்கிறது போன்ற இம்முடிவு எப்போதுமே எழுதப்படும் ஒன்றே

சிபாரிசு
======

இக்கதை சார்ந்து நான் நினைப்பது உங்கள் எழுத்தாளர் அசோகமித்திரன் என. அவரை தொடருங்கள். சுஜாதாவை தொடர்ந்து சென்றவர்கள் குமுதத்துக்கே செல்ல முடியும்.

அசோகமித்திரனின் முக்கியமான இயல்பு அவர் எதையும் ’சொல்வதில்லை’. அவர் வாசகனிடம் விளையாடுவதில்லை. அவரது சித்தரிப்புகள் அடக்கமானவை எளிமையானவை. அவரது சவால் கச்சிதமாகச் சொல்வதில் உள்ளது, சுவாரசியமாகச் சொல்வதில் அல்ல

அசோகமித்திரன் இதை எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்? .

1.அந்த வீட்டுச்சூழலை எளிமையான சித்தரிப்புகள் மூலம் சொல்லி நாம் அங்கே சென்று தங்கி அதை அறிந்த உணர்வை உருவாக்கியிருப்பார். நுட்பமான சில தகவல்கள் சூழலையும் கதைமாந்தரின் இயல்புகளையும் எளிதாகச் சொல்லிவிடக்கூடியவை. தன் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அவர்கள் வீட்டில் கிருஷ்ணாயிலா கரியடுப்பா என்று ஒரு பாட்டி கேட்கிறாள் ஒருகதையில். அதேபோல

2 மையப்பிரச்சினையை அவரே சொல்லாமல் அந்தக்கதாபாத்திரங்களின் உரையாடல் மற்றும் செயல்கள்மூலம் வெளிப்படச் வைத்திருப்பார்.

3 அம்மாவின் குணச்சித்திரம் இத்தனை ஒற்றைப்படையாக இருக்காது. வாழ்க்கையில் நாம் காணும் கதாபாத்திரங்களில் உள்ள ஒரு மர்மம், ஒரு விளங்காமை எங்கோ இருந்துகொண்டிருக்கும்

4 கதைமுடிவு இப்படி சொல்லப்பட்டிருக்காது. மிக மென்மையாக, முடிந்தவரை குறைவாகச் சொல்லப்பட்டிருக்கும். கதையின் முடிவில் இருந்து அம்மாவின் குணச்சித்திரம் அதுவரை சொல்லப்பட்டதை மீண்டும் அசைபோட நம்மை கட்டாயப்படுத்தும். அப்போது அம்மா இன்னமும் புரியக்கூடியவளாக ஆக ஆரம்பிப்பாள். உங்கள் கதை முடிந்துவிடுகிறது. அசோகமித்திரன் கதை அங்கே தொடங்கும்

உங்களுக்கு அசோகமித்திரனின் தலைப்புபாணி அழகாக கைவந்திருக்கிறது. கதைப்பாணியும் கைவரட்டும். எல்லா எழுத்தாளர்களும் ஒரு மாஸ்டரையே முதலில் பின்பற்றுகிறார்கள். அவர் அவர்களை அவர்களின் சொந்த உலகுக்குள் கொண்டு செல்வார்

வாழ்த்துக்கள்

ஜெ

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 • அம்மாவுக்கு புரியாது சிறுகதை
 • அம்மாவுக்கு பிடிச்சிருக்கு!
 • 14 thoughts on “அம்மாவுக்குப் புரியாது – ஜெயமோகனின் விமர்சனம்

  1. RV,

   நீங்களே அவரிடம், கருத்துக் கேட்கக் கூச்சப்படும்போது, கூச்சமே இல்லாமல் நான் கேட்டதை நினைத்தால், இப்போது கூச்சமாக உள்ளது.

   நீங்கள் இதுவரை கற்றுக் கொண்டதைப் பகிர்ந்து கொண்டால் எங்களுக்கு உபயோகமாக இருக்குமே?

   Anyway, நேரம் கிடைத்தால் என்னுடைய வலைப்பூவைப் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன் (மோதிரக் கையால் குட்டு வாங்க முடியாவிட்டாலும், அப்படிக் குட்டு வாங்கியவரிடமாவது குட்டு வாங்கலாமே என்ற நப்பாசைதான் காரணம்)

   அப்புறம், ஜெமோ வணிக எழுத்தாளர் மரபில்(?) ஆர்வி என்று குறிப்பிடுவது தங்களைத்தானா?

   Like

  2. சந்தேகத்தைத் தாங்களே தீர்த்து வைத்ததற்கு நன்றி ஜெமோ!

   அவரைப் பற்றி முதன் முதலாக உங்கள் மூலமாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்…

   Like

  3. ஆர்.வி.

   ஜெயமோகனின் கருத்துக்கள் கிடைக்கப் பெற்றதற்கு வாழ்த்துக்கள். (எனக்கும் ஒரு ஆசை இருந்தது. ”மெட்ரோ”வை எடுத்துக் கொண்டு அவரிடம் கருத்து வாங்கி வரவேண்டும் என்று நினத்திருந்தேன். நடக்கவில்லை. கருத்து வாங்கும் அளவிற்கு பெரிய காப்பியமா என்பது வேறு பிரச்சனை 🙂 ஆனால் சூழல், வாழ்வனுபவம் போன்றவைகளுக்காக நிச்சயம் ஒரு இரண்டு மதிப்பெண் கொடுப்பார் என்ற ஒரு நப்பாசை 🙂 )

   என் இரண்டு காசுகள் – (என் சிற்றறிவிற்கு புரிந்தது)
   கதையின் ட்விஸ்ட் என்பதை மட்டும் நாம் நம்பி எழுத முடியுமா? அப்படி எழுதிக் கொண்டிருந்தால் ஒரு puzzle master மாதிரி அல்லவா அமைந்துவிடும்? இந்தக் கதையில் எனக்கு பிடித்த அம்சமே (உன்னிடம் கூறியிருக்கிறேன்) வாசகர்களை அறிவாளிகளாக நினைப்பது. அதாவது கதையின் முடிச்சை நாம் அவிழ்க்காமல் வாசகர்களே அவிழ்த்துக் கொள்வது. (நான் முடிச்சு என்று சொல்வது டிவிஸ்ட்டை அல்ல). இதைத்தான் நல்ல பாணி இல்லை என்று உ) பாய்ண்டில் சொல்கிறாரா ஜெயமோகன்?

   மற்றபடி பொதுவாக (உன் கதையைச் சொல்லவில்லை) சிறுகதைகளில் ட்விஸ்ட் மட்டுமே வைப்பது சுவாரசியமாக இருந்தாலும் ட்விஸ்ட் தெரிந்தவுடன் மறுபடி படிக்க முடியாமல் போய் விடுமோ என்று சந்தேகம் வருகிறது. கதைகளில் தாக்கம் வேறு, திரைப்படங்களில் தாக்கம் வேறு.

   சில சமயம் ட்விஸ்ட் மிகவும் ஸ்டராங்காக அமைந்தால் அதன் பாதிப்பும் ஸ்டராங்காக இருக்கும். பாக்யராஜ் சினிமாவில் ட்விஸ்ட் அடிக்கடி வைத்திருப்பார். ஒரு திரைப்படத்தில் ரவிச்சந்திரனுக்கும், மனோரமாவுக்கும் பாக்யராஜ் மகன். தாய் தந்தையருக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தாய் ஒரு வார்த்தை தவறுதலாக விடுகிறார். “போடா அனாதை பயலே” என்பது போல. Freeze பண்ணி இடைவேளை விடுகிறார். அது கதையின் டிவிஸ்ட். மகனுக்கும், சினிமா பார்ப்பவர்களுக்கும் பலத்த ஷாக்.

   இந்த பாதிப்பை நாவலில் கொண்டு வரமுடியும், சிறு கதைகளில் கொண்டு வரமுடியுமா?

   Like

  4. பகவதி

   நான் சொன்னவற்றை நீங்கள் தவறுதலாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். 1. டிவிஸ்ட் அல்லது திருப்பம் இருந்தே ஆகவேண்டும் என நான் சொல்வதில்லை. அது செவ்வியல் சிறுகதைகளின் பாணி. இன்றைய சிறுகதைகளுக்கு உச்சமுடிச்சு, உச்ச வெடிப்பு, உச்ச விரிவு போதுமானது. அதை கவித்துவமாகக் குறிப்புணர்த்திச் செல்வது பல நல்ல கதைகளின் இயல்பாக உள்ளது. இதை கடைசியில் ஒரு புது தொடக்கம் என்று சொல்லலாம். அப்படி கடைசியில் கதை மேலும் தொடங்காமல் முடிந்தால் அது கதையே ஒழிய சிறுகதை அல்ல.

   ஆர்வியின் கதையில் உண்மையில் திருப்பம் உள்ளது. அந்த திருப்பம் தமிழின் வழக்கமான வணிகக்கதைகளில் அதிகமாக வருவதுபோல உள்ளது. அதில் புதுமை இல்லை. இதையே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது கதை முடியும் இடத்தில் இருந்து இன்னொரு கதை தொடங்கியிருக்கும்

   கதைக்கு திருப்பம் அளிப்பது வேறு திருப்பம் நிகழ்வது வேறு. ஓ ஹென்றி அளிப்பது திருப்பம். செக்காவின் நிகழ்வது திருப்பம். செக்காவின் திருப்பம் ஒரு கதை சட்டென்று மானுடவாழ்க்கையின் ஒரு ஆழத்தைச் சென்று தொடுவதன் மூலம் உருவாகக்கூடியது. அது கதையை விரிவாக்கும். கலையின் ஆழத்தை சாத்தியமாக்கும்

   அசோகமித்திரனின் பிரயாணம் கதையில் உச்ச திருப்பம் அமைந்திருக்கும் விதம் உதாரணம். அது கதையை சிறிதாக்கவில்லை. முடித்தும் வைக்கவில்லை. அந்த திருப்பம் மூலம் கதை முற்றிலும் வேறொன்றாக தொடங்கி வேறு கதையாகிறது.

   ஜானகிராமனின் பாயசம் கதையில் திருப்பம் இல்லை. ஆனால் உச்சம் உள்ளது. சாமநாது பாயசத்தை கவிழ்ப்பது. அதை இலகுவாக சொல்லி அதன் மையத்தை வாசகனுக்கு ஊகத்துக்கு விட்டுச்செல்கிறார். வாசகனின் நுண்ணுணர்வை நம்பி எழுதுவதென்பது அதுவே

   Like

  5. உச்சகட்ட திருப்பம் என்பதே சிறுகதைக்காக உருவாக்கப்பட்ட உத்திதான். எட்கார் அல்லன்போ மற்றும் ஓ ஹென்றியால். அல்லது அந்த உத்திதான் சிறுகதை எனப்பட்டது. அந்த உத்தியே பின்னர் நாடகங்களுக்கும் சினிமாவுக்கும் சென்றது

   Like

  6. // ஓ ஹென்றி அளிப்பது திருப்பம். செக்காவின் நிகழ்வது திருப்பம். செக்காவின் திருப்பம் ஒரு கதை சட்டென்று மானுடவாழ்க்கையின் ஒரு ஆழத்தைச் சென்று தொடுவதன் மூலம் உருவாகக்கூடியது. அது கதையை விரிவாக்கும். கலையின் ஆழத்தை சாத்தியமாக்கும் //
   அதே அதே. ஓ ஹென்றி டெக்னிக்கை தாண்ட முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. ட்விஸ்ட், கடைசி வரி மனதில் உருவான பிறகுதான் கதையை எழுதவே முடிகிறது. அந்த வரிக்கும் நேர் கோட்டில், first person narrative-இல் தான் போக முடிகிறது. இந்தக் கதையையே அசோகமித்திரன் எப்படி எழுதி இருப்பார் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன், இன்னும் பிடிபடவில்லை.

   Like

  7. >>>உச்சகட்ட திருப்பம் என்பதே சிறுகதைக்காக உருவாக்கப்பட்ட உத்திதான்

   ஜெயமோகன்,

   நறுக்கென்று புரியவைத்து விட்டீர்கள். நன்றி.

   பிரச்சனை என்னவென்றால் “அம்மாவுக்கு புரியாது” போன்ற கதைககளில் (அளவை குறிப்பிடுகிறேன்) அடர்த்தியாக எழுதாவிட்டால், அதுவும் பரந்த காலத்தை உணர்த்தாவிட்டால், திருப்பத்தின் தாக்கத்தை உணர்த்துவது கடினமாக உள்ளது.

   மேலும் வாழ்வு அனுபவமும், சூழலும் சிறுகதைகளை ஆக்ரமிக்க இயலுமா? ”விஷயத்துக்கு வாடா” என்று சொல்ல மாட்டார்களா? இருந்தாலும் அதை மெட்ரோ என்ற கதையில் முயற்சி செய்தேன்.

   பக்ஸ்

   Like

  8. ஹிஹி, ஜெயமோகன் “உங்க சிலிகான் ஷெல்ஃப்” பற்றி எழுதினவுடனே, இந்த கதையை நீங்க மீள்பதிவு செய்ததற்கு இது ஒன்று தான் காரணம் என்று நினைத்தேன். நீங்க ஆசைப்பட்டது நடந்திட்டது.

   Like

  9. எனக்கும் தன்னிலை விவரிப்பு தான் எளிதாக வரும்.அப்போதுதான் ஒரு உணர்வுப் பூர்வமான ஈடுபாடு வருகிறது.ஜெயந்தி மனசு பாரத்தில் அழுந்தியது என்று யாரும் எழுதினால் ஜெயந்தி மனசு அழுந்துவது இவருக்கு எப்படித் தெரிந்தது என்று குதர்க்கமாகத் தோன்றுகிறது.ஜெமோ அதை தவறெனச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.அவர் எப்போதும் நுண்ணிய விவரணைகள் இலக்கியத்துக்கு முக்கியம் எனச் சொல்வார்.சுஜாதாவின் கதைகளில் நுண்ணிய விவரணைகள் இராது.ஆனால் தந்தி அடிப்பது போல சில சொற்களில் ஒரு கோட்டோவியம் போல களத்தை விவரித்துவிட்டுப் போய் விடுவார்.இதுவே அவரின் கவர்ச்சி.அதே சமயம் மேலோட்டமான ஒரு வாசிப்பனுபவத்தையே ஜெமோ போன்று ஆழ்கடலில் நீந்துபவர்க்குத் தரக் கூடும்.உங்கள் கதையில் நுண்ணிய விவரணைகள் குறைவு ஆகவேதான் அசோகமித்திரனைப் பிடித்துக் கொள்ளச்சொல்கிறார் எனத் தோன்றுகிறது..

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.