ஒரு வருஷத்துக்கு முன் சிறுகதைப் போட்டி என்று பார்த்தேன், எழுதி வைத்திருந்த ஒரு கதையை அனுப்பினேன், வெற்றியும் பெற்றது. ஆனால் அதை என் பெற்றோரிடம் – குறிப்பாக அம்மாவிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது. கதை பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ என் அம்மா வெளியே ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்றுதான் சொல்வாள். நான் எழுதியதாயிற்றே! என் அம்மாவுக்கு நான் எழுதியதுதான் முக்கியம், என்ன எழுதி இருக்கிறேன் எனபது இரண்டாம் பட்சமே. ஆனால் கதையில் வரும் அம்மாவுக்கு என் அம்மாதான் ரோல் மாடல். என் அம்மாவும் சாமியை கோவிலில் இருந்து வேரோடு பிடுங்கும் ஜாதிதான். என் அம்மாவும் அப்பாவுக்கு புத்தூர் கட்டு போட முட்டை காய வைத்த ஸ்டவ்வை தூக்கிப் போட்டிருக்கிறாள். அதனால் ஏதாவது வருத்தப்படப் போகிறாள் என்று ஒரு சின்ன பயம்.
ஆனால் இந்தக் கதைக்கான கரு என் அம்மாவிடமிருந்துதான் கிடைத்தது. எனக்கு பதினைந்து பதினாறு வயது இருக்கும்போது பேச்சுவாக்கில் ஒரு முறை சொன்னாள் – தான் ஹைஸ்கூலுக்கு போன காலங்களில் யாரோ ஒருவன் “அட பாருடா இந்த பொண்ணை! எவ்ளோ அழகா இருக்கு” என்று சொல்ல என் அம்மா பயந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து விட்டாளாம். அது வரையில் எனக்கு அம்மா என்றால் என் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மெஷின் + கண் கண்ட தெய்வம் என்ற புரிதல்தான். அந்த வயதில் நான் சைட் அடிக்க போவது போல் என் அம்மாவையும் யாரோ அவளுடைய சின்ன வயதில் சைட் அடித்திருக்கலாம் என்ற புரிதல் எனக்கு அப்போது ஒரு paradigm shift. பழைய தமிழ் படங்களில் வருவது போல் அலைகள் வேக வேகமாக கரையில் மோதி, நிலம் பிளந்து, ட்ரம்ஸும், வயலினும், உலகத்தில் இருக்கும் எல்லா இசைக் கருவிகளும் திடும் திடும் என்று அதிர்ந்த ஒரு க்ஷணம்.
அப்படி நான் அதிர்ந்த அந்த க்ஷணத்தைத்தான் இந்த கதையில் பிடிக்க முயற்சி செய்தேன். முகுந்தனுக்கும் அதே மாதிரி அதிர்ச்சி, paradigm shift ஏற்படும் ஒரு தருணத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசை. இந்தக் கதையை ஒரு வாசகனாகப் படிக்கும்போது அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அது என் கல்யாண ஃபோட்டோவை நானே பார்ப்பது மாதிரி – அந்த ஃபோட்டோவில் எனக்கு மனிதர்கள் மட்டும் தெரியமாட்டார்கள், நாங்கள் போட்ட சண்டைகள், சிரித்து மகிழ்ந்த தருணங்கள் எல்லாம் தெரியும். அந்த மாதிரிதான் இந்த கதையிலும் நான் எழுதாமல் விட்ட எத்தனையோ விஷயங்கள் தெரியும். என் மனதில் இருக்கும் பெரும் கதையில் ஒரு சிறு பகுதி மட்டும்தான் பேப்பருக்கு வந்திருக்கிறது. (நல்ல வேளை பிழைத்தேன் என்று நீங்கள் விடும் பெருமூச்சு கேட்கிறது.) ஆனால் அந்த க்ஷணத்துக்கு படிப்பவர்களை கூட்டி வருவதில் வெற்றி பெற்றேனா என்று எனக்கு சந்தேகம்தான். அம்மாவைத் தவிர மற்ற காரக்டர்கள் எல்லாம் மிக தட்டையாகத்தான் இருக்கிறார்கள். அம்மாவே சரியாக வந்திருக்கிறதா என்று கொஞ்சம் சந்தேகம்தான்.
இப்படி என் படைப்பைப் பற்றி எனக்கு ஆயிரம் சந்தேகம் இருந்தாலும், அவற்றில் பலவற்றை ஜெயமோகன் ஊர்ஜிதப்படுத்தினாலும், என் அம்மாவிடம் பேசியபோது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தன்னை தெரிந்து கொண்டதாகவும், படித்துவிட்டு சிரித்ததாகவும் சொன்னாள். என் ரசனையின் ஊற்றுக்கண் என் அம்மாதான். அம்மாவுக்கு பிடித்த மாதிரி ஒரு கதை எழுதிவிட்டேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது!
பிற்சேர்க்கை: இந்தக் கதையை எழுதியது பல விதத்தில் சந்தோஷம் தந்தது. கடைசியாக கிடைத்த சந்தோஷம் ஜெயமோகனே இதை விமர்சித்திருப்பது. அந்த விமர்சகரைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்…
தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
One thought on “தாயிற் சிறந்த விமர்சகர் இல்லை”