ஜெனோவின் டைகாட்டமியில் என் வலது ஆள்காட்டி விரல் சிக்கியிருந்தது. இடது கையில் காஃபி. முக்கால் டம்ளர் மிச்சமிருந்த்து. டிஸ்போஸபில் பேப்பர் கப். மூக்கு கண்ணாடி வழியாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வானத்தில் வெகு தூரத்தில் என் காஃபி தெரிந்தது. இதை குடிக்க வேண்டுமென்றால் இதில் பாதியை முதலில் குடிக்க வேண்டும், அந்தப் பாதியை குடிக்க வேண்டுமென்றால் அந்தப் பாதியில் பாதியை முதலில் குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியை குடிக்கவேண்டுமென்றால் அந்தப் பாதியில் பாதியில் பாதியை குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியில் பாதியில் பாதியில்…எந்தப் பாதியைய் பற்றி இப்ப நினைக்கிறோம்? இரண்டாவது வந்ததா? மூன்றாவது பாதியா? குழம்புகிறதே…எதுவாக இருந்தால் என்ன? இப்பொழுது காஃபி குடிக்க வேண்டும். ச்ச்ச்ச…காஃபி குடிப்பது இவ்வளவு கஷ்டமா?
தலைக்கு மேல் நின்ற எலக்ட்ரானிக் போர்ட் திடீரென்று விழித்துக் கொண்டு “டிரெய்ன் அரைவிங்” என்று அனைந்து அனைந்து அறிவித்து கொண்டிருந்தது. நான் காஃபி குடிப்பது பற்றிய சிந்தனையை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு, அடையாளத்துக்காக ஆள்காட்டிவிரலை 27வது பக்கத்தில் மேலும் பத்திரப்படுத்திக் கொண்டேன். லேப்டாப்பின் சுமையால் தோளில் இருந்து உடம்பின் குறுக்காக ஓடிய வார் மெதுவாக நழுவி வந்து கழுத்தை நெருக்கியது. புத்தகம் வைத்திருந்த கையின் பெருவிரலால் வாரை மீண்டும் தோள் பட்டைக்கு கொண்டு வர முயன்ற போது புத்தகத்தின் பைண்டிங் மூலை கண்ணத்தை அறுத்தது.வரிசை பரபரப்பாகியது. முன்னால் மூன்று பேர் தான். இன்று சீட் கிடைக்கும். பின்னால் ஒரு முப்பது பேர் இருந்தனர். அவர்கள் ஏற வேண்டுமென்றால் நான் முதலில் ஏற வேண்டும். நான் ஏறவேண்டுமென்றால் என் முன்னால் நிற்ப்பவர் ஏற…ச்சேய்…என்ன இது? நான் ஜெனோ இல்லயே! அப்புறம் என்ன?
சத்தமில்லாமல் ட்ரெய்ன் வழுக்கிக் கொண்டு நின்றது. வாசல் துல்லியமாக மஞ்சளிலில் கறுப்பு பெயிண்ட் அடித்து பார்வையற்றவர்களுக்காக போட்டிருந்த டெக்ஸ்ஷர்ட் ஸர்பேஸ் முன் வந்து நின்றது. ஹிஸ்ஸ் எனற மெலிதான ஓசையோடு கதவுகள் வழிவிட்டது. க்யூ ஜெனோவின் டைகாட்டமி பற்றி அக்கறையேயில்லாமல் அலட்சியமாக அவருடைய ”ஆரமப” சிக்கலை தாண்டியிருந்தது. நானும் உந்தப்பட்டு காலியாக இருந்த சீட்டுகளில் எதை பிடிப்பது என்று ஒரு கணம் திணறிவிட்டு ஒரு ஜன்னலோர சீட்டில் போய் முடிந்தேன். பத்தே வினாடியில் ஹிஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் கதவுகள் ஜோடி ஜோடியாக மீண்டும் சேர்ந்து கொண்டன. மெலிதான ஒரு உந்தல் உடம்பை தாக்கியது. அவ்வளவுதான்.அதன் பிறகு ட்ரெயின் நகர்கிறது என்பது அவசரமாக பின்னோக்கி செல்லும் வெளிப்புறக் காட்சிகள் மூலம் மட்டுமே ஊர்ஜிதமாகியது.
பதினோறாவது ஸ்டேஷனில் இறங்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டேன். அதற்குள் காஃபியை குடித்துவிட்டால் கப்பை தூக்கி எறிந்துவிடலாம். ஜெனோவும், லேப்டாப்பும் தான். ஈஸி. பிரின்ஸ்டன்.
மாணவர்கள். கேள்விகள். எக்ஸ்ட்ரீமா பாயிண்ட்ஸில் சில இன்று எதிர் பார்க்கப்படவேண்டிய ஒன்று. நியூட்டன்-லெய்ப்னிட்ஸ் பற்றி பேசிவிடவேண்டும். அப்புறம் டிஅலெம்பர்ட், அப்புறம் டெல்ட்டா-எப்ஸலான், எக்ஸாம்பிள்ஸ், எக்சர்சைஸ், அடுத்தவாரமாவது டிரைவேடிவ்ஸ் தொட்டுவிடவேண்டும். எல்லாம் தான் ஹைஸ்ஸ்கூலில் படித்திருப்பார்களே? பிறகு நமக்கென்ன தலையெழுத்தா? ட்ரெய்னின் வேகம் குறைந்தது. எப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு நம்மை புரொமோட் செய்வார்களோ! அடுத்த ஸ்டேஷன். ஹிஸ்ஸ்ஸ்…தபதபதபதப…..ஹிஸ்ஸ்ஸ்ஸ்… மீண்டும் வேகம். இந்த ட்ரெய்ன் இல்லையென்றால் நமக்கு கஷ்டம் தான். எவ்வளவு ஸ்மூத். காஃபி கொட்டிவிடுமென்ற கவலையே தேவையில்லை.
உலகத்தில் எல்லா இடத்திலேயும் மெட்ரொ ட்ரெயின்கள். எல்லாம் ஒரே மாதிரி. எங்கே இருருக்கிறோம் இப்போது? பாஸ்டனா? நியூ ஜெர்ஸியா? சிங்கப்பூரா? பெர்லீனா? அல்லது லண்டனா? ச்சே..விஸிட்டிங் புரொபஸர் பாடு பரவாயில்லை. நான் வெகேஷன் ஸ்பாட் ஃபில் பண்ணுவதற்க்காகவே பிறந்திருப்பேணோ? ஒரே ஒரு வாரத்திற்க்காக மட்டும் பாரிஸில் வொர்க் பண்ணியிருக்கிறேன். ஒரு மூன்று மாதமாவது வேண்டும். ஆமாம். இனி மேல் மூன்று மாதத்திற்கு குறைவாக ஒத்துக்கொள்ளக் கூடாது. இந்தியாவிலும் இப்படி இருக்கக்கூடாதா? ஸ்மூத் டிரெயின்…வேர்க்காமல் விறுவிறுக்காமல்…அப்படி மட்டுமிருந்துவிட்டால் பெர்ம்மாக போய்விடலாம். அப்பா, அம்மாவுடன் திவ்ய தேசம் போகலாம். சரவண பவனில் இட்லியும் மெதுவடையும் சாப்பிடலாம். மாதம் ஒரு முறை ஸ்ரீரெங்கத்திற்கும், திருப்பதிக்கும் மாற்றி மற்றி போய் பகவானிடம் நியூட்டன் லெய்பினிட்ஸூக்கு செய்தது நியாயமா என்று கேட்கலாம்….
”ஸ்ர், ஸ்டேஷன் ஆகயா” – ஃபஸ்ட் இயர் ஸ்டூடெண்ட் மிட்டர் சிங் ல்லையா இவன்? இவன் பிரின்ஸ்டனில் என்ன…ச்சேய்…தூங்கிவிட்டேனா? நான் எங்கேயிருக்கிறேன்? மிட்டர் சிங் என் லேப்டாப்பை எடுத்துக் கொண்டான். நான் ஆறிப்போன காஃபியை எடுத்துகொண்டேன். அவனும் நானும் பரபரத்து வெளியே குதித்தோம். பின்னால் ஹிஸ்ஸ்ஸ்… திரும்பிப்பார்த்த போது ட்ரெயின் அங்கு இல்லை. எல்க்ட்ரானிக் போர்ட்களில் “ட்ரெய்ன் லீவிங்” மறைந்து ”பல்பங்காஷ்” என்று தோன்றியது சற்றே நிதானமானேன். இது என்ன? கனவா? அப்போ பிரின்ஸ்டன்? வெளியே நடந்தோம்.
”மிஸ்டர். சீனிவாசன், என்ன இன்றைக்கு இறங்கவேண்டிய ஸ்டேஷனில் கரெக்டா இறங்கிட்டீங்க போலிருக்குதே. பிரின்ஸ்டனை விட்டு வந்த இந்த இரண்டு மாதத்தில் இது இரண்டாவது முறை.”, கேட்டு கொண்டே ஸ்டீவன்ஸ் காலேஜ் பஸ்ஸிர்க்காக காத்துக் கொண்டிருந்த என்னுடனும் மிட்டர்சிங்குடனும் சேர்ந்துக் கொண்டார் ”லாஸ்ட் எபிகிராஃப்ஸ் ஆஃப் சோலாஸ்” பற்றி பேச தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த ஹிஸ்டரி விஸிட்டிங் புரொஃபெஸர் பத்மநாபன்.
கையிலிருந்த ஜெனோ என்னைப்பார்த்து புன்முறுவல் செய்வது போலிருந்தது. ஆறிப்போன காஃபி மேலும் ஆறிக்கொண்டிருந்தது.

(டெல்லி மெட்ரோ ட்ரெய்ன் உலகத் தரத்துடன் இயங்குகிறது என்று Newyork Times ல் வந்த செய்தியால் இன்ஸ்பைர் ஆகியதால் வந்த விளைவே இந்தக் கதை)
(சமீபத்தில் நடந்த சில சம்பாஷனைகள் இந்தக் கதையை மீண்டும் பதிய வைக்கிறது. மேலும் இந்த கதையை இங்கே சேகரித்த மாதிரியும் இருக்கும். இந்த கதை என் முதல் முயற்ச்சி.)
Like this:
Like ஏற்றப்படுகின்றது...