மெட்ரோ

ஜெனோவின் டைகாட்டமியில் என் வலது ஆள்காட்டி விரல் சிக்கியிருந்தது. இடது கையில் காஃபி. முக்கால் டம்ளர் மிச்சமிருந்த்து. டிஸ்போஸபில் பேப்பர் கப்.  மூக்கு கண்ணாடி வழியாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வானத்தில் வெகு தூரத்தில் என் காஃபி தெரிந்தது. இதை குடிக்க வேண்டுமென்றால் இதில் பாதியை  முதலில் குடிக்க வேண்டும், அந்தப் பாதியை குடிக்க வேண்டுமென்றால் அந்தப் பாதியில் பாதியை முதலில் குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியை குடிக்கவேண்டுமென்றால் அந்தப் பாதியில் பாதியில் பாதியை குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியில் பாதியில் பாதியில்…எந்தப் பாதியைய் பற்றி இப்ப நினைக்கிறோம்? இரண்டாவது வந்ததா? மூன்றாவது பாதியா? குழம்புகிறதே…எதுவாக இருந்தால் என்ன? இப்பொழுது காஃபி குடிக்க வேண்டும். ச்ச்ச்ச…காஃபி குடிப்பது இவ்வளவு கஷ்டமா?

தலைக்கு மேல் நின்ற எலக்ட்ரானிக் போர்ட் திடீரென்று விழித்துக் கொண்டு “டிரெய்ன் அரைவிங்” என்று அனைந்து அனைந்து அறிவித்து கொண்டிருந்தது. நான் காஃபி குடிப்பது பற்றிய சிந்தனையை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு, அடையாளத்துக்காக ஆள்காட்டிவிரலை 27வது பக்கத்தில் மேலும் பத்திரப்படுத்திக் கொண்டேன். லேப்டாப்பின் சுமையால் தோளில் இருந்து உடம்பின் குறுக்காக ஓடிய வார் மெதுவாக நழுவி வந்து கழுத்தை நெருக்கியது. புத்தகம் வைத்திருந்த கையின் பெருவிரலால் வாரை மீண்டும் தோள் பட்டைக்கு கொண்டு வர முயன்ற போது புத்தகத்தின் பைண்டிங் மூலை கண்ணத்தை அறுத்தது.வரிசை பரபரப்பாகியது.  முன்னால் மூன்று பேர் தான். இன்று சீட் கிடைக்கும். பின்னால் ஒரு முப்பது பேர் இருந்தனர். அவர்கள்  ஏற வேண்டுமென்றால் நான் முதலில் ஏற வேண்டும். நான் ஏறவேண்டுமென்றால் என் முன்னால் நிற்ப்பவர் ஏற…ச்சேய்…என்ன இது? நான் ஜெனோ இல்லயே! அப்புறம் என்ன?

சத்தமில்லாமல் ட்ரெய்ன் வழுக்கிக் கொண்டு நின்றது. வாசல் துல்லியமாக மஞ்சளிலில் கறுப்பு பெயிண்ட் அடித்து பார்வையற்றவர்களுக்காக போட்டிருந்த டெக்ஸ்ஷர்ட் ஸர்பேஸ் முன் வந்து நின்றது. ஹிஸ்ஸ் எனற மெலிதான ஓசையோடு  கதவுகள் வழிவிட்டது. க்யூ ஜெனோவின் டைகாட்டமி பற்றி அக்கறையேயில்லாமல் அலட்சியமாக அவருடைய ”ஆரமப” சிக்கலை தாண்டியிருந்தது. நானும் உந்தப்பட்டு காலியாக இருந்த சீட்டுகளில் எதை பிடிப்பது என்று ஒரு கணம் திணறிவிட்டு ஒரு ஜன்னலோர சீட்டில் போய் முடிந்தேன். பத்தே வினாடியில் ஹிஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் கதவுகள் ஜோடி ஜோடியாக மீண்டும் சேர்ந்து கொண்டன. மெலிதான ஒரு உந்தல் உடம்பை தாக்கியது. அவ்வளவுதான்.அதன் பிறகு ட்ரெயின் நகர்கிறது என்பது அவசரமாக பின்னோக்கி செல்லும் வெளிப்புறக் காட்சிகள் மூலம் மட்டுமே ஊர்ஜிதமாகியது.

பதினோறாவது ஸ்டேஷனில் இறங்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டேன். அதற்குள் காஃபியை குடித்துவிட்டால் கப்பை தூக்கி எறிந்துவிடலாம். ஜெனோவும், லேப்டாப்பும் தான். ஈஸி. பிரின்ஸ்டன்.
மாணவர்கள். கேள்விகள். எக்ஸ்ட்ரீமா பாயிண்ட்ஸில் சில இன்று எதிர் பார்க்கப்படவேண்டிய ஒன்று. நியூட்டன்-லெய்ப்னிட்ஸ் பற்றி பேசிவிடவேண்டும். அப்புறம் டிஅலெம்பர்ட், அப்புறம் டெல்ட்டா-எப்ஸலான், எக்ஸாம்பிள்ஸ், எக்சர்சைஸ், அடுத்தவாரமாவது டிரைவேடிவ்ஸ் தொட்டுவிடவேண்டும். எல்லாம் தான் ஹைஸ்ஸ்கூலில் படித்திருப்பார்களே? பிறகு நமக்கென்ன தலையெழுத்தா? ட்ரெய்னின் வேகம் குறைந்தது.  எப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு நம்மை புரொமோட் செய்வார்களோ! அடுத்த ஸ்டேஷன். ஹிஸ்ஸ்ஸ்…தபதபதபதப…..ஹிஸ்ஸ்ஸ்ஸ்… மீண்டும் வேகம். இந்த ட்ரெய்ன் இல்லையென்றால் நமக்கு கஷ்டம் தான். எவ்வளவு ஸ்மூத். காஃபி கொட்டிவிடுமென்ற கவலையே தேவையில்லை.

உலகத்தில் எல்லா இடத்திலேயும் மெட்ரொ ட்ரெயின்கள். எல்லாம் ஒரே மாதிரி. எங்கே இருருக்கிறோம் இப்போது? பாஸ்டனா? நியூ ஜெர்ஸியா? சிங்கப்பூரா? பெர்லீனா? அல்லது லண்டனா? ச்சே..விஸிட்டிங் புரொபஸர் பாடு பரவாயில்லை. நான் வெகேஷன் ஸ்பாட் ஃபில் பண்ணுவதற்க்காகவே பிறந்திருப்பேணோ? ஒரே ஒரு வாரத்திற்க்காக மட்டும் பாரிஸில் வொர்க் பண்ணியிருக்கிறேன். ஒரு மூன்று மாதமாவது வேண்டும். ஆமாம். இனி மேல் மூன்று மாதத்திற்கு குறைவாக ஒத்துக்கொள்ளக் கூடாது. இந்தியாவிலும் இப்படி இருக்கக்கூடாதா? ஸ்மூத் டிரெயின்…வேர்க்காமல் விறுவிறுக்காமல்…அப்படி மட்டுமிருந்துவிட்டால்  பெர்ம்மாக போய்விடலாம். அப்பா, அம்மாவுடன் திவ்ய தேசம் போகலாம். சரவண பவனில் இட்லியும் மெதுவடையும் சாப்பிடலாம். மாதம் ஒரு முறை ஸ்ரீரெங்கத்திற்கும், திருப்பதிக்கும் மாற்றி மற்றி போய் பகவானிடம் நியூட்டன் லெய்பினிட்ஸூக்கு செய்தது நியாயமா என்று கேட்கலாம்….

”ஸ்ர், ஸ்டேஷன் ஆகயா” – ஃபஸ்ட் இயர் ஸ்டூடெண்ட் மிட்டர் சிங் ல்லையா இவன்? இவன் பிரின்ஸ்டனில் என்ன…ச்சேய்…தூங்கிவிட்டேனா? நான் எங்கேயிருக்கிறேன்? மிட்டர் சிங் என் லேப்டாப்பை எடுத்துக் கொண்டான். நான் ஆறிப்போன காஃபியை எடுத்துகொண்டேன். அவனும் நானும் பரபரத்து வெளியே குதித்தோம். பின்னால் ஹிஸ்ஸ்ஸ்… திரும்பிப்பார்த்த போது ட்ரெயின் அங்கு இல்லை. எல்க்ட்ரானிக் போர்ட்களில் “ட்ரெய்ன் லீவிங்” மறைந்து ”பல்பங்காஷ்” என்று தோன்றியது சற்றே நிதானமானேன். இது என்ன? கனவா? அப்போ பிரின்ஸ்டன்? வெளியே நடந்தோம்.

”மிஸ்டர். சீனிவாசன், என்ன இன்றைக்கு இறங்கவேண்டிய ஸ்டேஷனில் கரெக்டா இறங்கிட்டீங்க போலிருக்குதே. பிரின்ஸ்டனை விட்டு வந்த இந்த இரண்டு மாதத்தில் இது இரண்டாவது முறை.”, கேட்டு கொண்டே ஸ்டீவன்ஸ் காலேஜ் பஸ்ஸிர்க்காக காத்துக் கொண்டிருந்த என்னுடனும் மிட்டர்சிங்குடனும் சேர்ந்துக் கொண்டார் ”லாஸ்ட் எபிகிராஃப்ஸ் ஆஃப் சோலாஸ்” பற்றி பேச தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த ஹிஸ்டரி விஸிட்டிங் புரொஃபெஸர் பத்மநாபன்.

கையிலிருந்த ஜெனோ என்னைப்பார்த்து புன்முறுவல் செய்வது போலிருந்தது. ஆறிப்போன காஃபி மேலும் ஆறிக்கொண்டிருந்தது.

(டெல்லி மெட்ரோ ட்ரெய்ன் உலகத் தரத்துடன் இயங்குகிறது என்று Newyork Times ல் வந்த செய்தியால் இன்ஸ்பைர் ஆகியதால் வந்த விளைவே இந்தக் கதை)

(சமீபத்தில் நடந்த சில சம்பாஷனைகள் இந்தக் கதையை மீண்டும் பதிய வைக்கிறது. மேலும் இந்த கதையை இங்கே சேகரித்த மாதிரியும் இருக்கும். இந்த கதை என் முதல் முயற்ச்சி.)

17 thoughts on “மெட்ரோ

 1. யார் யார் கதைகளை இங்கு பதிவிடுவது என்று ஏதாவது எடிட்டோரியல் பாலிஸி வைத்திருக்கிறீர்களா?

  மோதிரக் கையால் குட்டு என்ன, குத்து வாங்கவும் சில பேர் தயாராக இருக்கக் கூடும் இல்லையா…

  ஒரு நைப்பாசைதான், ஹி ஹி…

  Like

  1. பாஸ்கர், கதையை எழுதியது பக்ஸ், ஆர்வி இல்லை. 🙂
   பாஸ்கர் (நட்பாஸ்), அப்படி ஒரு பாலிசியும் கிடையாது. ஆனால் ஜெயமோகன் பதில் எழுதுவார் என்று காரண்டி எல்லாம் கிடையாது. 🙂

   Like

   1. இதைப் படித்தேன்…

    “பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்”
    http://balhanuman.wordpress.com/2010/11/12/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/

    அசோகமித்திரன் கதைகள் குறித்த திறனாய்வைப் படிப்பது என்பது வேறு. உங்கள் கதையும் அசோகமித்திரன் கதையும் ஒப்பிடப்பட்டு எது நல்ல இலக்கியம், ஏன் அது நல்ல இலக்கியமாகிறது என்ற demonstrationஐ பார்ப்பது வேறு. இரண்டும் வெவ்வேறு படிப்பினைகள், இல்லையா?

    மருத்துவமனையில் பெரிய டாக்டர் ஆரோக்கியம் குறித்து வகுப்பு எடுப்பது ஒரு பக்கம். அப்புறம் மாணவர்களைக் கூட்டிக் கொண்டு போய் நோய்ப் படுக்கையில் இருப்பவர்களைக் காட்டி இன்னாரிடம் இந்தப் பிரச்சினை இருக்கிறது, இதை இதை இப்படி இப்படி சரி பண்ண முடியும் என்று காட்டுவது வேறு. இரண்டும் தேவைதான், இல்லையா?

    பொதுவாக தனி உரையாடல்களில் இலக்கியவாதிகள் இதையெல்லாம் பேசுவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் தளம் மெல்ல மெல்ல அந்த திசையில் வளரும், நாமும் இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன், அந்த ஆசையில் மண் விழுந்து விடும் போலிருக்கிறதே? 😦

    Like

   2. பாஸ்கர் (நட்பாஸ்), // அந்த ஆசையில் மண் விழுந்து விடும் போலிருக்கிறதே? // என்ன சொல்ல வருகிறீர்கள், ஒன்றும் புரியவில்லையே?

    Like

   1. நீண்ட பின்னூட்டம், மன்னிக்கவும்.

    அதாவது, ஜெயமோகன் அவர்கள் முதலில் ஆர்வி அவர்களின் கதை உத்தியை சுஜாதா அவர்கள் மற்றும் அசோகமித்திரன் அவர்கள் போன்றவர்களின் உத்திகளோடு ஒப்பிட்டு அழகாக விளக்கம் தந்தார்.

    சுஜாதா, அசோகமித்திரன் போன்றவர்கள் தங்களுக்கென்று ஒரு கதைக் களம், நடை என்று ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி மற்றவர்களோடு ஒப்பிட்டுதான் அவர்கள் எழுத்தில் குற்றம் கண்டுபிடிக்க முடியுமே தவிர, தனியாக கதையை மட்டும் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தி, இங்கே இங்கே கதையை முன்னெடுத்து செல்லத் தவறி விட்டார், இங்கே தவறான குரல் வருகிறது- இன்னும் என்னன்னவோ, எனக்குக் கற்பனைப் போதாது- என்று எந்த மனசாட்சியுள்ள விமரிசகரும் சொல்ல முடியாது. ஆனால் வளரும் எழுத்தாளருக்கும் வளராத வாசகருக்கும் இந்த மாதிரியான பார்வை மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

    இது இல்லாவிட்டால், நாமெல்லாம் கலி முற்றும் வரை இது இன்ன வகை இலக்கியம், இது இன்னார் எழுதிய கதை மாதிரி இருக்கிறது என்று லேபில் ஒட்டிக் கொண்டே காலம் தள்ள வேண்டியதுதான், நான் உங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனக்கும் இது பொருந்தும்தான். நாமெல்லாம் கதையை இந்த மாதிரி பார்க்கப் பழக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறேன்.

    அசோகமித்திரன் அவர்கள் சுஜாதா அவர்கள் போன்ற தேர்ந்த எழுத்தாலர்க்கியளின் கதைகளில் உள்ள /இல்லாத செவ்வியல்தன்மைகளைத் திறனாய்வு செய்யலாம், அவ்வளவுதான். ஆனால் உங்கள் கதை, ஆர்வி கதை இதைப் பற்றியெல்லாம் பேசும்போதுதான் நான் முன் சொன்ன கதை குறித்த அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாகப் பேச முடியும் என்றுத் தோன்றுகிறது.

    இதை ஜெயமோகன் அவர்களே பல வளரும் எழுத்தாளர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரிலும் அஞ்சலிலும் செய்து வருவார் என்று நினைக்கிறேன். எந்த ஒரு நல்ல எழுத்தாளரும் அதை செய்யவே செய்வார்கள்.

    அன்றைக்கு ஆர்வி கதை, இன்றைக்கு உங்கள் கதை, நாளைக்கு நண்பர் சு மோகன் கதை அப்புறம் வேறொருவர் என்று எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஜெயமோகன் அவர்கள் கதை எழுதுவது குறித்து இங்கே சொல்லக் கூடும், இந்த வலைக்குறிப்பு நல்ல இலக்கியத்தை நிகழ்த்திக் காட்டும் இடமாக மாறக் கூடும், அது எழுத/ வாசிக்க ஆசைப்படுகிறவர்களுக்கு உருப்படியான தகவல்கள் இருக்கிற இடமாக இந்த வலைக்குறிப்பை மாற்றக் கூடும் என்று நினைத்தேன். அதற்கான இணக்கமான சூழல் உருவாக்கி வருகிறது என்று ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் (நானும்கூட என் நண்பர் ஒருவரின் கதையை நைசாக உள்ளே நுழைத்து ஜெயமோகன் அவர்கள் ஏதாவது சொல்கிறாரா என்று பார்க்கலாம் என்று நினைத்தேன், உண்மையை ஏன் மறைக்க வேண்டும்?)

    அந்த மாதிரி எதுவும் இனி நடக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. அதைத்தான் சொன்னேன்.

    நான் இங்கு யாரையாவது தவறாக ஏதாவது பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள். ஏமாற்றத்தில் சொன்ன வார்த்தைக்கு என்ன மரியாதை இருக்குமோ அதுதான் இதற்கும். நன்றி.

    Like

   2. பாஸ்கர் (நட்பாஸ்), // எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஜெயமோகன் அவர்கள் கதை எழுதுவது குறித்து இங்கே சொல்லக் கூடும்… // இது அவரது நேரத்தையும் வசதியையும் பொறுத்தது. அவரது தளத்திலும் அவர் இதைப் பல முறை செய்திருக்கிறார்…

    Like

 2. RV, சுஜாதாவின் தாக்கம் ரொம்பவே இருப்பது போல் தோன்றுகிறது.
  நிறைய நன்றாக எழுத வாழ்த்துக்கள்.

  பாஸ்கர்.

  Like

  1. // சுஜாதாவின் தாக்கம் ரொம்பவே இருப்பது போல் தோன்றுகிறது.//

   அதென்ன சார் ஏதோ வைரஸ் தாக்கிட்டா மாதிரி ‘ரொம்பவே இருப்பது போல் தோன்றுகிறது’ என்று கவலையுடன் சொல்கிறீர்கள்?

   என்னைக் கேட்டால் இந்தக் கதைக்கு இன்னும் நிறைய சுஜாதா வேண்டும் என்றுதான் சொல்வேன். அந்த மாதிரி எழுதப்பட வேண்டிய கதைக்களம் இது.

   அதிகப்பிரசங்கித்தனமா பேசிட்டேனோ? யாரும் தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு கருத்துதான்.

   Like

  1. நட்பாஸ்க்கு வாழ்த்து கூறியிருக்கிறீர்கள். பாஸ்கர் மீண்டும் கவனக்குறைவா? 🙂 கருத்துக்களுக்கு நன்றி.

   Like

 3. Bags

  மன்னிக்கவும். கவனக் குறைவு இல்லை. குற்றமே தான். ஏனெனில் மீண்டும் ஒரு முறை கதைப் படித்து விட்டு நன்றியை பாஸ் செய்தது நட்பாஸ் அவர்களுக்கு. இந்த முறை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  நட்பாஸ்

  இதற்கு மேல் சுஜாதா தாக்கமா? தெகட்டிவிடும் பாஸ்.

  Like

 4. //இதற்கு மேல் சுஜாதா தாக்கமா? தெகட்டிவிடும் பாஸ்.//

  ஒரு காலத்தில் சுஜாதா மாதிரி எழுதி இருக்கிறீர்கள் என்றால் அது பாராட்டு. இப்போது அப்படி சொன்னால் வசவாக இல்லாவிட்டாலும் குத்தல் என்றாவது வைத்துக் கொள்ளலாம்.

  நான் பாயசத்தில் வெல்லம் பத்தாது என்று சொல்கிறேன், நீங்கள் எல்லாம் வத்தக் குழம்பில் ஏன் சாமி வெல்லம் போடுகிறீர்கள் என்று கேட்பதாகத் தெரிகிறது 🙂

  நாம் வற்றல் குழம்பையும் லேகியத்தையும் மட்டுமா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்? சில பேர் வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி என்று பட்டையைக் கிளப்பட்டுமே, அதுவும் நாக்குக்கு ருசியாகத்தானே இருக்கிறது?!

  Like

 5. நட்பாஸ்,

  நான் குத்தலாகச் சொல்லவில்லை. அது ஒரு பாராட்டு தான். சுஜாதாவின் இலக்கிய இடத்தைப் பற்றி இன்று பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அவர் ஒரு “unique ” தமிழ் எழுத்தாளர். வேறு எந்த எழுத்தாளரும் (எனக்குத் தெரிந்த வரை) இந்த அளவு “விரிவு”(range) இருந்ததில்லை என்பது கருத்து.
  Bags இந்த கதையில் “convergent ” பற்றி காபி குடிப்பதில் அழகாக விளக்கியுள்ளார்.
  நீங்கள் பெங்களூர் சென்றதில்லையா? அங்கு ரசத்தில் கூட வெல்லம் போடுவார்கள். ஆக மொத்தம் ருசி நன்றாக இருந்தால் எழுத்தென்ன, இசையென்ன அல்லது சாப்பாடென்ன, ஒரு கை பார்க்க வேண்டியது தான்.

  பாஸ்கர்.

  Like

  1. மிக்க நன்றி. புரிந்து கொண்டேன்.

   “மேலும் வாழ்வு அனுபவமும், சூழலும் சிறுகதைகளை ஆக்ரமிக்க இயலுமா? ”விஷயத்துக்கு வாடா” என்று சொல்ல மாட்டார்களா? இருந்தாலும் அதை மெட்ரோ என்ற கதையில் முயற்சி செய்தேன்.” என்று சொல்கிறார் பேக்ஸ்.

   அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

   Like

 6. நட்பாஸ், முழு வெற்றி என்று சொல்ல முடியாது. அனுபவம் என்று வரும் போது ஓரளவுக்கு நொந்து போன பேராசிரியர் என்று புரிகிறது. இன்னும் கொஞ்சம் அவர் இயல்பை வெளிப்படுத்தி இருக்கலாம்.அழுத்தம் குறைவு. சூழல் என்று வந்தால் ஒன்றுமே இல்லை. ரயிலில் ஏற்படும் சிறிய அதிர்வு மற்றும் சுகமான பயணம் என்பதைத் தவிர. ரயில்வே நிலையத்தைப் பற்றி சிறது விவரித்திருக்கலாம். சுஜாதா பாணியில் எழுதும் போது, “ஓர் அழகான பெண் ipad உடன் மரத்தடியில் அமர்ந்து, ஜீன்ஸ், பாப்கட்….கொஞ்சம் ரயில் லேட்டா வராதா…”என்று வாசகனை சஞ்சாரிக்க விட்டிருக்கலாம். ரொம்ப ஆசாரம். காபி கொட்டி விடும் என்பது சரியில்லை போல் தோன்றுகிறது. ஏனென்றால் அமெரிக்காவில் எங்கு காபி வாங்கினாலும் மூடியுடன் கிடைக்கும். ஒருவேளை பேராசிரியரே மூடி உபயோகிக்காத இயல்போ? தெரியவில்லை. இந்தியாவில் ரயில் இப்படி இருக்கக் கூடாதா என்பதற்கு பதில் சென்னையில் என்று எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அங்கு தான் வையிலும், வேர்வையும் இணை பிரியாமல் இருக்கும். முதல் முயற்சி என்பதால் இந்த அளவு எழுதியதே பெரிய விஷயம். சந்தேகமில்லை.
  இந்தக் கதையில் நான் மிகவும் ரசித்த இடங்கள்: காபி பாதி, அதில் பாதி, அதில் பாதி என்பது. அடுத்ததாக எப்சிலோன்-டெல்டா – தனி சுகம். அது கணிதமோ, இயற்பியலோ படித்தவர்கள் அதிகம் ரசிக்கலாம். நியுட்டன்-லெய்பினிட்ஸூ சண்டை.
  Bags நட்பாஸ் கேட்டாரே என்று என் மனதில் தோன்றியதை எழுதினேன். எழுதுவதும், படிப்பதும் எனக்கு ஒரு பொழுது போக்கு தான். இது விமர்சனம் இல்லை. ஒரு கருத்து தான். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ அல்லது என் புரிதல் தவறாக இருந்தாலோ தெரிவிக்கவும்.நன்றி.

  Like

  1. சூப்பர். இப்படி நாலு பேர் நுட்பமாகத் தன் கதையை கவனித்தால்தானே எழுதுபவருக்கும் மேலே எழுதுகிற உற்சாகம் வரும்? அதனால்தான் கேட்டேன். நீங்கள் இது இதை ரசித்தேன், இந்த இந்த விஷயங்களை விரித்து எழுதி இருக்கலாம் என்று மிக சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.

   விமரிசனம் என்பதைவிட வாசகன் தான் வாசித்ததைப் பகிர்ந்து கொள்கிறான் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். உங்கள் பகிர்வு இந்தக் கதையை மறுபடியும் படிக்கத் தூண்டியது என்பது மட்டுமில்லை, கதை தருகிற வாசிப்பானுபவத்தை இன்னும் செறிவாக்கியது என்பதும் உண்மைதான்.

   மிக்க நன்றி.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.