தமிழ்ச் சிறுகதை – ஜெயமோகன் பட்டியல் பாகம் 1

படிக்க வேண்டிய தமிழ் சிறுகதைகள் என்று ஜெயமோகன் ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகள் தேறும். 75 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய reference-களில் ஒன்று இந்தப் பதிவு.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

பார்த்தவுடன் வழக்கம் போல என்ன இதில் படித்திருக்கிறோம் என்ன படிக்கவில்லை என்று கணக்கு ஆரம்பித்துவிட்டது. எனக்கு ஒரு எரிச்சலூட்டும், ஆனால் தீராத பிரச்சினை உண்டு. கதையை பற்றி இரண்டு வரி சொன்னால் தெரியும்; ஆனால் கதையின் தலைப்பு ஞாபகமே வராது.

250+ சிறுகதைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார். நான் பகுதி பகுதியாகத்தான் இவற்றைப் பற்றி எழுத முடியும். முதல் பகுதியில் அவர் சொல்லி இருக்கும் புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள். தமிழின் முதன்மையான எழுத்தாளர் யார் என்றால் நான் புதுமைப்பித்தனைத்தான் ஒரு கணம் கூட யோசிக்காமல் கை காட்டுவேன். அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். அவர் ஹெமிங்க்வே, மார்க்வெஸ், ஃபாக்னர், ஷா மாதிரி பிரபலமாக வேண்டும். தரமான மொழிபெயர்ப்பு, உலக அளவில் மார்க்கெடிங் வேண்டுமே! என்றாவது நான் பணக்காரன் ஆனால் இதுதான் முதல் வேலை…

கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் அழியாச்சுடர்கள் தளத்தில் கதையைப் படிக்கலாம். அன்றிரவு, வேதாளம் சொன்ன கதை, பால்வண்ணம் பிள்ளை ஆகியவை தவிர மிச்ச எல்லாம் அங்கே கிடைக்கிறது.

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்: இந்தக் கதையில் அவர் என்னதான் சொல்ல வருகிறார், கடவுள் எதற்கு வந்தார், இங்கே வந்து என்ன சாதித்தார், moral of the story என்ன, ஓ. ஹென்றி ட்விஸ்ட் எங்கே, சிறுகதைக்கு இருக்க வேண்டிய உச்சம் எங்கே, இது என்ன genre என்றெல்லாம் கேட்டால் பதில் கிடையாது. அட் லீஸ்ட் என்னிடம் கிடையாது. மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் விதிகளை உருவாக்குபவர்கள். இதையெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! கதை பூராவும் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை, (பிள்ளை சிவ பெருமானிடம் சொல்கிறார் – என் பத்திரிகைக்கு ஒரு ஆயுள் சந்தா வாங்கிக்கங்களேன்! சிவ பெருமானின் கவுண்டர் – யார் ஆயுள்?) சரளமான நடை, கந்தசாமிப் பிள்ளையின் பெண்ணின் சித்தரிப்பு எல்லாம் சேர்ந்து இந்த கதையை உன்னதமான ஒன்றாக்குகிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு – நடராஜனையும் பார்வதியையும் தெரியாத அயல் நாட்டினர் இந்தக் கதையை முழுமையாக ரசிக்க முடிக்க முடியாது, எந்த மொழிபெயர்ப்பும் இதன் கலாசார ஆழத்தை இந்தியாவுக்கு வெளியே கொண்டு போக முடியாது என்பது மட்டும்தான்.
  2. கயிற்றரவு: மனித இனத்தின் பெரும் தத்துவக் கேள்வியை – நான் யார்? – கேட்கிறது இந்தக் கதை. ஆனால் எனக்கு பிரமாதமாக ரசிக்கவில்லை.
  3. செல்லம்மாள்: இறந்துகொண்டிருக்கும் மனைவி என்று சுருக்கமாக கதையை சொல்லிவிடலாம். அதற்கு மேல் கதையை விவரிக்க ஒரு ஜெயமோகன்தான் வர வேண்டும். “குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்” என்ற வரி இன்னும் பேசப்படுவது.
  4. சிற்பியின் நரகம்: நாலைந்து முறை படித்தும் எனக்கு இந்தக் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. கலை அழகு மிகுந்த சிற்பம் கடவுளாக மாறிவிட்டதில் சிற்பிக்கு ஏற்பட்ட இழப்பு என்று நினைக்கிறேன்.
  5. கபாடபுரம்: மிக நல்ல fantasy. இன்று கூட அந்த மாதிரி ஒரு சிறுகதையை யாரும் தமிழில் எழுதவில்லை.
  6. ஒரு நாள் கழிந்தது: நான் முதன்முதலில் படித்த புதுமைப்பித்தன் சிறுகதை இதுதான். பள்ளிப்பருவத்தில் துணைப்பாடமாக இருந்தது. இதை எல்லாம் விவரிக்கக் கூடாது, படித்துக் கொள்ளுங்கள்!
  7. அன்றிரவு: நினைவு வரவில்லை, இப்போது பார்த்து புஸ்தகத்தையும் காணோம். யாரப்பா இரவல் வாங்கியது?ஜடாயு நினைவுபடுத்தினார், பிறகு பாஸ்கர் தந்த சுட்டியிலும் போய்ப் பார்த்தேன். எனக்கு இந்தக் கதை சுமார்தான். என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியவில்லை. அலகிலா விளையாட்டு என்கிறாரா? எனக்கு இந்த லீலா வினோதம் எல்லாம் புரிவதில்லை. புரிந்தால் நான் ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன்? நான் மனக்குகை ஓவியங்கள் என்ற கதையில் வரும் மனிதன் கட்சி. 🙂
  8. சாமியாரும் குழந்தையும் சீடையும்: இதில் என்ன இருக்கிறது என்று ஜெயமோகன் இதைப் புகழ்கிறார்? அவரே கோனார் நோட்ஸ் எழுதினால்தான் புரியும்…
  9. காலனும் கிழவியும்: கதையின் நகைச்சுவை இதை உச்சத்துக்குக் கொண்டுபோகிறது. ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.
  10. சாப விமோசனம்: இதுவும் அயல்நாட்டினர் புரிந்து கொள்வது கஷ்டம் என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லாதது. பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்களை விட இந்த ஒரு கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. படித்தவர்களுக்கு கதையை விவரிக்க வேண்டியதில்லை, படிக்காத அதிர்ஷ்டக்காரர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  11. வேதாளம் சொன்ன கதை: என்ன சார் இதையெல்லாம் லிஸ்டில் சேர்க்கிறீர்களே?
  12. பால்வண்ணம் பிள்ளை: அவ்வளவு பிரபலம் ஆகாத, ஆனால் உலகத் தரம் வாய்ந்த சிறுகதை. அசூயைக்கு ஒரு கதை என்று தி.ஜா.வின் பாயசத்தைப் பற்றி சொல்லி இருந்தேன். வீம்புக்கு ஒரு கதை என்று இதை சொல்லலாம்.

அடுத்த முறை அவரைப் பார்த்தால் சண்டை போட வேண்டும் 🙂 – எப்படி மனித இயந்திரம், பொன்னகரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள் மாதிரி கதைகளை விடலாம்? இந்த லிஸ்டை அவர் இங்கே வருவதற்கு முன்பே பார்த்திருந்தால் அவர் இங்கே வந்திருந்தபோது கேட்டிருக்கலாம். எனக்கு நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை. பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது. பக்கம் பக்கமாக பேசினாலும் பதியாத கருத்தை ஆறு வார்த்தைகளில், ஒரே ஒரு வரியில் கற்பு எவ்வளவு செயற்கையான கருத்து என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்!

எஸ்.ரா. க.க. பிள்ளை, செல்லம்மாள் மற்றும் காஞ்சனை ஆகியவற்றை தன் தேர்வுகள் என்று சொல்கிறார். காஞ்சனை படிக்கக் கூடிய கதைதான்; அவர் எழுதிய ஒரே பேய்க்கதையோ? ஆனால் காஞ்சனையை நான் சிறந்த சிறுகதை என்று சொல்லமாட்டேன்.

சுஜாதா மனித எந்திரம் கதையைத்தான் நிறைய மாணிக்கங்களில் தலை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

என்னுடைய anthology-யில் க.க. பிள்ளை, செல்லம்மாள், ஒரு நாள் கழிந்தது, சாப விமோசனம், பால்வண்ணம் பிள்ளை சிறுகதைகள் இடம் பெறும். மேலே சொன்ன சு. பிள்ளையின் காதல்கள், பொன்னகரம், மனித எந்திரம் ஆகியவை இடம் பெறும். எனக்கு புதிய கூண்டு என்ற கதை ஒரு tour de force. கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது.

சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதை சென்னை லைப்ரரி தளத்தில் முழுமையாக இல்லை. கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் பராசக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான். ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை. உணர்ச்சிகரமான துன்பக்கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம். மிச்சத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். (கூடிய விரைவில் anthology-யை பதிக்க வேண்டும்.)

நண்பர் பாஸ்கர் சென்னை லைப்ரரி தளத்தில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இருக்கின்றன என்ற தகவலைக் கொடுத்திருக்கிறார். மகாமசானம் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு மகாமசானத்தை விட செல்லம்மாள் சிறுகதை பிடிக்கும். ஓரளவு ஒத்த தீம் உள்ள கதைகள். சுந்தர ராமசாமி மகாமசானம் கதையை தனக்கு எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லி இருக்கிறார்.

புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. க.க. பிள்ளை, ஒ.நா. கழிந்தது ஆகியவற்றில் வரும் பெண் குழந்தைகளின் சித்தரிப்பைப் பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
ஜெயமோகனின் சிறுகதை தேர்வுகள்
புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும்

9 thoughts on “தமிழ்ச் சிறுகதை – ஜெயமோகன் பட்டியல் பாகம் 1

  1. // புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். //

    அவருக்கு மகள் இருந்தாள், பெயர் ஞாபகம் வரவில்லை. மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்களில் மகள் மீது பாசம் சொரிந்து எழுதியிருப்பார்..

    பு.பு சென்னையில் வாழ்ந்த வீடுகளைத் தேடியலைந்தது பற்றி எஸ்.ரா ஒரு நெகிழ்ச்சியூட்டும் பதிவு எழுதியிருக்கிறார் (துணையெழுத்து). பு.பி கடிதங்களே ஒரு தனி இலக்கிய வகை.

    Like

    1. ஜடாயு, புதுமைப்பித்தனின் பெண் பெயர் தினகரியா? ஏதோ மங்கலாக நினைவு வருகிறது. அன்றிரவு கதை நீங்கள் சொன்னதும் ஓரளவு நினைவு வருகிறது. கடைசியில் “அம்பிகையின் கொங்கை குவட்டிலும் அடி விழுந்தது” என்ற மாதிரி வருமோ?

      பாஸ்கர், புதுமைப்பித்தன் இணைப்புக்கு நன்றி, இப்போது அதையும் பதிவில் சேர்த்துவிட்டேன்.

      Like

  2. // அன்றிரவு: நினைவு வரவில்லை, இப்போது பார்த்து புஸ்தகத்தையும் காணோம். யாரப்பா இரவல் வாங்கியது? //

    ஓர் இரவு?… . அல்லது ஓர் இரவில்?

    நரிகள் பரிகளான கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதையின் புனைவு ஆக்கம் தானே இது? அபாரமான கதை. எனக்கு மிகப் பிடித்த கதை.

    கடைசி பத்தியில் ஈசன் மீது விழுந்த பிரம்படி எதனெதன் மீது விழுந்தது என்றூ வரும் வரிகள் அருமையாக இருக்கும்..

    Like

  3. RV எனக்குப் பிடித்த மற்றொரு கதை “மகாமசானம்”. இது ஜெமோ,எஸ்ரா, சுஜாதா மற்றும் உங்கள் பரிந்துரையில் கூட இல்லை.
    மேலும் எல்லா பு.பு கதைகளை இங்கு படிக்கலாம்.(நன்றி: அழியாச்சுடர் ராம் அவர்களுக்கு. நான் பு.பு. பற்றி எழுதிய பதிவுக்கு ராம் இட்ட மறுமொழியில் அறிந்தது.)
    http://www.chennailibrary.com/ppn/ppn.html

    Like

    1. அருணா, புரியலியே? ஜெயமோகன்தான் ஆதவனின் நாலு கதைகளை சிபாரிசு செய்கிறாரே?
      27. ஆதவன்
      1 ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
      2 முதலில் இரவு வரும்
      3 சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
      4 லேடி

      நான் படித்திருப்பது சிவப்பாய் உயரமாய்…தான். என் anthology-யில் வராது.

      Like

  4. ஆர்.வி

    பட்டியல ஜெ.மோ தளத்துல போய் பார்த்து மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். ராஜன் ஆதவனோட 60 கதைகள் அடங்கிய தொகுப்பு வைத்திருக்கிறார். அதில் இவ்வெல்லா கதைகளுமே இருக்கு. எனக்கு பிடித்த எழுத்தாளர விட்டுட்டாங்களோங்கற பதட்டத்துல கேட்டேன்.:) கார்த்திக், அப்பர் பெர்த், நாற்காலின்னு எதோ தலைபுல வர கதைகளும் எனக்கு பிடித்தது.

    Like

    1. அருணா, நான் “என் பெயர் ராமசேஷன்” மட்டுமே படித்திருக்கிறேன். சிறுகதைகளை இனி மேல்தான் தேடித் பிடிக்க வேண்டும்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.