இந்தியாவில் பாதி பேருக்கு கிரிக்கெட் பைத்தியம் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டை வைத்து எழுதப்பட்ட புனைவுகள் மிகக் குறைவு. கிரிக்கெட்டை விடுங்கள், விளையாட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்டவையே மிக அபூர்வம். ஆங்கிலத்திலோ இவை சர்வசாதாரணம். ஜாக் லண்டனின் A Piece of Steak, ரிங் லார்ட்னர் மற்றும் வில்லியம் சரோயனின் பல கதைகள், காலம் பூராவும் குதிரைப் பந்தயப் பின்புலத்தை வைத்தே எழுதிய டிக் ஃபிரான்சிஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எனக்குத் தெரிந்து தமிழின் மிகச் சிறந்த விளையாட்டுப் புனைவு வாடிவாசல்தான்.
சுஜாதா கிரிக்கெட்டை அங்கங்கே தொட்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் ஒரு பையனை வைத்து ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் பேர் நினைவு வரவில்லை. எனக்குப் பிடித்த ஒரு கிரிக்கெட் (ஸ்ரீரங்கத்துக்) கதையை உப்பிலி ஸ்ரீனிவாஸ் பதித்திருக்கிறார்.
ஏறக்குறைய இப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவது என்பதை மறந்து பல வருஷம் ஆன பிறகு ஒரு முறை ஆஃபீஸில் கிரிக்கெட் மாட்ச். எங்கள் டீமில் எல்லாரும் சொத்து சொத்து என்று விழுந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதையில் வரும் கேவி மாதிரி ரவி என்று ஒருவன் ஆடிக் கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் வந்து நீ சும்மா நின்றால் போதும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். எனக்கு நிற்கத்தான் வந்தது, நான் யோசித்து பாட்டை சுழற்றுவதற்குள் பந்து போய்விடுகிறது. ஆனால் பாருங்கள், என் அதிருஷ்டம், ஒரு பந்து கூட ஸ்டம்புக்குப் போடவில்லை. அதனால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நான் எந்தப் பந்தையும் ஆட முயற்சிக்கவே இல்லை. எப்போதும் shoulder arms-தான். இப்படி நான் ஸ்டாண்ட் கொடுத்து ஒரு ஐம்பது ரன் தேற்றினோம். ஆஹா ஆர்வி என்னமா ஸ்டாண்ட் கொடுத்தான் என்று ஒரே பாராட்டு!
உங்களுக்கு ஏதாவது விளையாட்டை வைத்து எழுதப்பட்ட புனைவு நினைவு வருகிறதா?
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்