சோவின் “சர்க்கார் புகுந்த வீடு”

பழைய கிரேக்க நாடகங்களைப் படித்திருக்கிறீர்களா? எஸ்கைலஸ் (Aeschylus), சோஃபோக்ளிஸ் (Sophocles), யூரிபிடிஸ் (Euripides), அரிஸ்டோஃபனஸ் (Aristophanes) ஆகிய நான்கு ஆசிரியர்களின் நாடகங்கள் இன்றும் கிடைக்கின்றன. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை என்று சொல்கிறார்கள். முதல் மூவரும் ட்ராஜடி நாடகங்களை எழுதினார்கள். அரிஸ்டோஃபனசோ காமெடி நாடகங்கள். சாக்ரடீசை கிண்டல் செய்யும் Clouds, பெண்கள் படுக்கைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்து போரை நிறுத்தும் Lysistrata என்று சில நாடகங்கள் நினைவு வருகின்றன. எல்லாவற்றிலும் கேலியும் கிண்டலும்தான். அதுவும் அந்தக் கால அரசியல்வாதி ஒருவரை – க்ளியான் (Cleon) – போட்டுத் தாக்கி இருப்பார். அருமையான நகைச்சுவை நாடகங்களை எழுதியவர் என்று கொண்டாடப்படுபவர்.

எனக்கு சோ ராமசாமிக்கும் அரிஸ்டோஃபனசுக்கும் தரத்தில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் அரிஸ்டோஃபனசுக்கு இருக்கும் மதிப்பில் சோவுக்கு நூற்றில் ஒரு பங்கு கூட கிடையாது. சோவை நாடக ஆசிரியர் என்றோ, நகைச்சுவையாக எழுதுபவர் என்றோ பாராட்டுபவர்கள் அபூர்வமே. பழைய காலத்து எழுத்து எது கிடைத்தாலும் – அதுவும் 2500 வருஷத்துக்கு முன் எழுதப்பட்ட நாடகங்கள் – அவற்றை ஆராய, அலச ஒரு நிபுணர் கூட்டம் இருக்கும்தான். அரிஸ்டோஃபனசுக்கு இருக்கும் புகழில் பெரும் பங்கு அந்த புராதனத் தன்மையால்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அவர் எழுதியவை இலக்கியம் என்றே பொதுவாக கருதப்படுகிறது. சர்க்கார் புகுந்த வீடு மாதிரி ஒரு புத்தகத்தை சோ கூட இலக்கியம் என்று கருதமாட்டார்.

சர்க்கார் புகுந்த வீடு புத்தகத்தில் சோ கருணாநிதி, எம்ஜிஆர், இந்திரா காந்தி எல்லாரையும் கிழி கிழி என்று கிழிக்கிறார். ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததை, இந்திரா காந்தி இருவரையும் கிள்ளுக்கீரையாக நினைத்ததை, இருவரும் இந்திரா போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கோ என்று ஜால்ரா போட்டதை, கிண்டல் செய்து மாளவில்லை. அவ்வப்போது தன்னைத் தானே – குறிப்பாக தன் இந்திரா எதிர்ப்பு நிலையை – கிண்டல் செய்துகொள்கிறார். பக்கத்துக்கு இரண்டு முறையாவது சிரிக்கலாம்.

கதை என்று ஒன்றுமில்லை. 1980-82 காலம். எம்ஜிஆர் இரண்டாம் முறை முதல்வர். கருணாநிதி அவருக்கு வழக்கமான எதிர்கட்சித் தலைவர் பதவியில். மத்தியில் இந்திரா அரசு. ரிடையர் ஆன கந்தசாமி ஒரு சர்வ கட்சி பொதுக்கூட்டத்தில் நடுவில் புகுந்து அரசு நிர்வாகத்தை குறை சொல்கிறார். நாட்டை என்ன நிர்வாகிப்பது, ஐந்து குடும்பங்கள் தங்கி இருக்கும் எங்கள் வீட்டை நிர்வகியுங்கள் என்று சவால் விடுகிறார். அவர் போதாத காலம், சவால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவரையும் ரகுநாத ஐயர் என்ற இன்னொரு குடும்பத்துப் பெரியவரையும் முன்னால் வைத்து எல்லாரையும் சகட்டு மேனிக்கு சாடுகிறார்.

முதல் அத்தியாயத்திலேயே களை கட்டிவிடுகிறது. காந்தி பிறந்த நாள் அன்று சர்வகட்சி கூட்டம். எம்ஜிஆர் வந்தபிறகுதான் போவேன் என்று கருணாநிதியும், அவர் வந்த பிறகுதான் போவேன் என்று எம்ஜிஆரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மேடையில் இருக்கும் பிற கட்சித் தலைவர்கள் எல்லாருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுத்துவிடுகிறது. பிறகு கண்ணதாசன் ஒரு ஐடியா கொடுக்கிறார் – இங்கே ஒருத்தர் வந்திருக்கிறார், யாரென்று தெரியவில்லை, பார்த்தால் மத்திய அரசில் ஏதோ துணை அமைச்சர் மாதிரி இருக்கிறது என்று இருவருக்கும் ஃபோன் செய்யச் சொல்கிறார். இங்கே இரண்டு பேரும் வந்த பிறகு யாரென்று கேட்டால் எல்லாரும் மறந்துவிட்ட பா. ராமச்சந்திரனை காட்டி சமாளித்துக் கொள்ளலாம் என்கிறார்.

கந்தசாமியின் சவால் பற்றி வரும் பத்திரிகை ரிபோர்ட்கள் அபாரம்! சவால் விடும்போது கந்தசாமியின் கையிலிருந்து தவறி விழுந்த பட்டாணியை எம்ஜிஆர் பிடிக்கிறார். அ.தி.மு.க. பத்திரிகை பட்டாணி விழுந்ததை நாட்டு வெடிகுண்டு என்கிறது. முரசொலி பட்டாணி கூட இல்லை, பட்டாணித் தோல் என்கிறது. மக்கள் குரல் டி.ஆர்.ஆர். ஒரு பட்டாணியின் எடை எவ்வளவு, அது விழுந்த வேகம் என்ன என்றெல்லாம் பெரிதாக கணக்குப் போட்டு அது ஒரு பயங்கர ஆயுதம் என்கிறார். முடியே இல்லாத தலை, முடிவே இல்லாத விழி கொண்ட துக்ளக் ஆசிரியர் (இதெல்லாம் அவரது description) இந்திரா ஆட்சி இப்படியே தொடர்ந்தால் நாளைக்கு வீச பட்டாணி கிடைக்காதே என்று கவலைப்படுகிறார். விகடனோ பட்டாணி சாப்பிடுவதால் வரும் தீமைகள் என்று கவர் ஸ்டோரி எழுத முற்படுகிறது. குமுதம் வீட்டில் இருக்கும் பெண்களை கவர்ச்சியாகப் படம் எடுத்து அட்டைப்படத்தில் போடத் துடிக்கிறது.

ஒரு கவியரங்கம் நடக்கிறது பாருங்கள், மு.மேத்தா தாத்தா பற்றி பாடுகிறார். மதரை மரியாதை இல்லாமல் சொன்னால் அது நகைச்சுவை என்கிறார் ஒருவர். (மரியாதை இல்லாமல் சொன்னால் மதர் மதன் ஆகிவிடுகிறது, மதன் கார்ட்டூன்கள் அந்தக் காலத்தில் பிரபலம்)

பிரச்சினை என்னவென்றால் புத்தகம் ரொம்பவுமே topical. ஒரு கட்டத்தில் கந்தசாமி, ரகுநாத ஐயர் இருவரும் கடன் தொந்தரவு தாளாமல் நாராயணசாமி நாயுடு என்ற விவசாயிகள் சங்கத் தலைவரைப் பார்க்கிறார்கள். கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை என்று கவலைப்படுகிறார்கள். அவர் கடனைத் திருப்பி தருவதா, நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆட்களா என்கிறார். நாயுடு அந்தக் காலத்தில் விவசாயிகள் கடனை அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்று தீவிரமாகப் போராடியவர். அது தெரியாதவர்களுக்கு இந்த ஜோக் புரியாது. இந்த மாதிரி நிறைய – மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., இதயம் பேசுகிறது மணியன், ம.பொ.சி. எல்லாரும் எம்ஜிஆருக்கு சோப் போடுவது, விகடன் திடீர் திடீரென்று இது கெடுதல், அது கெடுதல் என்று எழுதுவது, அப்போது அடிக்கடி நடந்த ரயில் விபத்துகள், இந்திராவின் சாமியார் fixation, என்று பலப்பல ஜோக்குகள். (அரிஸ்டோஃபனசுக்கும் இதே பிரச்சினைதான். க்ளியான் என்ன செய்தார் என்று யாருக்குத் தெரியும்?)

எனக்கும் இது இலக்கியம் இல்லைதான். பொழுதுபோக்கு நாவல்தான். ஆனால் நான் இதை ஒரு minor classic என்றே கருதுகிறேன். மாண்டி பைதானைப் (Monty Python) போல, பி.ஜி. உட்ஹவுசைப் போல சோ இந்திய, தமிழக அரசியலை வைத்து ஒரு உலகத்தைப் படைத்திருக்கிறார். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்: சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு

திலிப்குமாரின் சிபாரிசுகள்

திலிப்குமாரை பற்றி ஆர்.வி. குறிப்பிட்டிருந்ததை பார்த்தவுடன் இதை எழுதத் தோன்றியது. சமீபத்தில் நான் திலிப்குமாரை சென்னையில் சந்தித்தேன். நிறையப் பேச முடிந்தது. இன்னும் பேசியிருப்பார். எனக்குதான் நேரமில்லாமல் போய்விட்டது. அவர் ஒரே மாதிரியான் ஒரு கதையை எப்படி இலக்கியம் பற்றி நன்கு தெரிந்த ஒருவரும் இலக்கியம் பற்றி தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளும்  தமிழகத்தின் ”பெரிய மனிதர்” ஒருவரும் கொண்டு செல்கிறார்கள் என்பதை ”ஒப்பிட்டார்”. மிகவும் அனுபவித்து விளக்கினார். சொல்லும் பொழுதே எனக்கு இலக்கியம் என்பதைப் பற்றிய சிக்கலான முடிச்சு ஒன்று அவிழ்ந்த உணர்வு ஏற்ப்பட்டது.

அவர் இரண்டு புத்தகங்களை சிபாரிசு செய்தார். அவை

1. தர்பாரி ராகம் (Dharbhari Ragam)
2. நீலகண்ட பறவையைத் தேடி (Neelakanda Paravaiyai Thedi)

நான் இரண்டும் படித்ததில்லை. அவை எங்கே கிடைக்கலாம் என்று திலிப்குமார் கூறினார். எனக்கு வாங்கி வருவதற்கு நேரமில்லை.

அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

ஜெயமோகனின் கட்டுரைகள் –

ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்
அதீன் பந்த்யோபாத்யாயாவின் ‘நீலகண்ட பறவையை தேடி’

நானும் புத்தகங்களும்

என் அம்மாவுக்கு புத்தகப் பித்து உண்டு. எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை உள்ளூர் (லாடகரனை எண்டத்தூர்) நூலகத்தில் உறுப்பினனாக சேர்த்துவிட்டாள். முதல் முதலில் படித்த கதை புத்தகம் ஏதோ ஓநாய் பன்றிக்குட்டிகளை சாப்பிட முயற்சிக்க, அம்மா பன்றி அதை துரத்துவதாக வரும். எனக்கு அப்போதிலிருந்தே புத்தகங்கள் – குறிப்பாக கதைப் புத்தகங்கள் – மிகவும் பிடிக்கும்.

வாண்டு மாமா (காட்டு சிறுவன் கந்தன் புத்தகம் இன்னும் கிடைக்கிறதா?) கதைகளை முடித்த பிறகு, எனக்கு புஸ்தகங்களை சிபாரிசு செய்தது என் அம்மாதான். சாண்டில்யன், ஜெயகாந்தன், சாயாவனம், கே.ஏ. அப்பாசின் இன்குலாப், வி.எஸ். காண்டேகரின் யயாதி, உண்மை மனிதனின் கதை என்ற ஒரு ரஷிய புத்தகம், ஏ.என். சிவராமன் எழுதிய அமெரிக்க ராக்கெட் ப்ரோக்ராம் பற்றிய ஒரு புத்தகம் ஆகிய சிபாரிசுகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. என்ன தைரியத்தில் சாண்டில்யன் கதைகளை என் அம்மா படிக்க சொன்னாள் என்று இன்னும் புரியவில்லை. ஆனால் மலைவாசல், மன்னன் மகள், கன்னிமாடம், யவனராணி, கடல்புறா, ராஜமுத்திரை ஆகியவற்றில் எனக்கு நினைவிருப்பது சாகசங்கள்தான். பத்து வயதுக்குள்ளேயே சாண்டில்யன் முடிந்து விட்டது. ஜெயகாந்தன் சில முறைதான் புரியும். சில நேரங்களில் சில மனிதர்கள் சரியாக புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஜயஜய சங்கர சீரிஸ் புரிந்தது. சாயாவனம் படிக்கும்போது ஒரு 11 வயதிருக்கலாம். அற்புதமான புஸ்தகம். எனக்கு 12 வயது இருக்கும்போது ஒன்றன் பின் ஒன்றாய் வந்த வேலை மாற்றல்கள், படிப்பு ஆகியவற்றால் எங்கள் குடும்பம் பிரிந்துவிட்டது. 20 வயதான பிறகு நான்தான் அம்மாவுக்கு புஸ்தகம் சிபாரிசு பண்ண வேண்டிய நிலை.

எனக்கு தமிழ் புத்தகங்களை யாரும் சீர்தூக்கி விமர்சிப்பதில்லை, டாப் டென் புத்தகங்களை யாரும் சிபாரிசு செய்வதில்லை என்ற பெரிய குறை உண்டு. இப்போதே அந்த குறை இருந்தால் ஒரு இருபது முப்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அப்படியே அந்தக் காலத்தில் இலக்கிய விமர்சனங்கள் வந்தாலும் அது டி.கே.சி, மு.மு. இஸ்மாயில் மாதிரி யாராவது கம்பன், புறநானூறு, குறளோவியம் பற்றி எழுதியதாகத்தான் இருக்கும். கதைப் புத்தகங்களை பற்றி யாரும் சிபாரிசு செய்வதே இல்லை. நானோ பண்டைத் தமிழ் இலக்கியம் என்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுபவன். சுஜாதா மாதிரி வேறு யாராவது எழுதுகிறார்களா? (பெங்களூர் ரவிச்சந்திரன் என்பவர் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதை தொகுப்பு சுஜாதாவின் ஸ்டைலில் எழுதப்பட்டிருக்கும்.) பி.ஜி. உட்ஹவுஸ் மாதிரி எழுதுபவர்கள் உண்டா? (தேவன், எஸ்.வி.வி.யின் சில படைப்புகள்) பிரெக்ட் மாதிரி நாடகம் எழுதுபவர்கள் உண்டா? (எனக்கு தெரிந்து யாருமில்லை) எனக்கு இந்த மாதிரி கேள்விகள்தான். பதில் சொல்லத்தான் யாருமில்லை. நான் வேலைக்கு போய் ஓரளவு கையில் பணம் வந்து மாதம் ஒன்றிரண்டு புஸ்தகம் கவலைப்படாமல் வாங்கலாம் என்ற நிலை வந்த பிறகு தமிழில் என்ன வாங்குவது என்றே தெரியவில்லை.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எண்பதுகளின் இறுதியில் புத்தக கண்காட்சி நடத்துவார். நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கினேன். அவர் நீங்க படிக்கற ஜாதி போலருக்கே என்று பல புத்தகங்களை சிபாரிசு செய்தார். அவர் சொல்லித்தான் நான் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?, எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை போன்றவற்றை வாங்கினேன். அவர் சொன்ன எல்லா புத்தகங்களையும் வாங்கித் தொலைத்திருக்கலாம். நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று காட்டிக்கொள்ளும் ஒரு உந்தல் இருந்ததால், சிலவற்றை வாங்கவில்லை. அவர் சிபாரிசு செய்த ஆல்பர்ட் காமுவை இருபது வருஷங்களுக்கு பிறகும் நான் இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம். நான் 2 வருஷம்தான் செகந்தராபாதில் இருந்தேன். அதனால் அவருடன் அதிக பழக்கம் இல்லை. தமிழ், தமிழ் வாசிப்பு ஆகியவற்றுக்கு உண்மையாக உழைத்தவர். அவருக்கு ஒரு கை கொடுத்திருக்கலாம். புத்தகக் கண்காட்சியில் உட்கார்ந்து பில்லாவது போட்டிருக்கலாம். நான் ஒன்றும் பெரிதாக வெட்டி முறிக்கவில்லை. என் துரதிருஷ்டம், அந்த வயதில் தோன்றவில்லை. ஒரு விஷயத்தை ஆர்கனைஸ் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று அந்தக் காலத்தில் தெரியவே இல்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி பிரபலமாக ஆரம்பித்ததும் எண்பதுகளின் இறுதியில்தான். இரண்டு முறை ஆஃபீசுக்கு லீவ் போட்டுவிட்டு சென்னை வந்து புஸ்தகங்கள் வாங்கி இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐநூறு ரூபாய்க்கு புஸ்தகம் வாங்கினால் அதிகம், அதற்கு மேல் கட்டுப்படியாகாது.

க.நா. சுப்பிரமணியம் எழுதிய படித்திருக்கிறீர்களா? என்ற புத்தகம்தான் முதன் முதலாக நான் படித்த தமிழ் புத்தகங்களை பற்றிய புத்தகம். இன்னும் என்னிடம் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட மண்ணாசை போன்ற புத்தகங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. 1957-இல் முதல் பதிப்பு வந்திருக்கிறது. அப்போதே மனுஷன் தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த எழுத்துகளை பற்றி எழுதி இருக்கிறார். எனக்கு அதை படிப்பது பெரிய சுகமாக இருந்தது. இரண்டே முக்கால் ரூபாய் விலை! நான் சுப்ரபாரதிமணியன் சொல்லியும் எனக்கே தெரிந்தும் (வேறென்ன, சுஜாதா புத்தகங்கள்தான்) அந்தக் கண்காட்சியில் ஒரு பத்து இருபது புஸ்தகம் வாங்கினேன். இதை மட்டும் வீட்டுக்கு கூட போகாமல் அங்கேயே ஒரு வராந்தாவில் உட்கார்ந்து படித்து முடித்தேன்.

அதற்கு பிறகு ஜெயமோகன். அவருடன் 2000-2001 கால கட்டத்தில் இணைய தளத்தில் கல்கி, மற்றும் பல புஸ்தகங்கள் குறித்து வாதித்திருக்கிறேன். அவர் தமிழில் சிறந்த புத்தகங்களாக தானே எழுதிய விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவற்றை குறிப்பிட்டது பலருக்கு பிடிக்கவில்லை. தலைக்கனம் பிடித்த மனிதர் என்று ஒரு அபிப்ராயம் நிலவியது. அவருக்கு அவரது புத்தகங்கள் பிடித்திருந்தால் போலி தன்னடக்கம் காரணமாக அதைப் பற்றி சொல்லக்கூடாது என்பதெல்லாம் பிதற்றல். அவரும் ஒரு வாசகர், காசு கொடுத்து (சரி ஓசியில்) புஸ்தகம் படிக்கும் எல்லாருக்கும் – எழுத்தாளர்கள் உட்பட எல்லாருக்கும் – புஸ்தகங்கள் பற்றி கருத்து சொல்ல உரிமை உண்டு. ஜெயமோகனின் வாசிப்பு சிபாரிசுகள் மிக முக்கியமானவை. எனக்குத் தெரிந்து பாப்புலர் எழுத்துகளுக்கு இலக்கியத்தில் ஒரு இடம் உண்டு என்று எழுதிய முதல் “இலக்கிய” எழுத்தாளர் அவர்தான். இன்றும் அவர் மட்டுமே நல்ல பாப்புலர் எழுத்து என்று ஒரு லிஸ்ட் போட்டிருப்பவர். அவர் எழுத்தாளர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்த புத்தகங்கள் மிக அருமையானவை. அவரது நாவல் என்ற புத்தகம் கதை, நீள்கதை, நாவல் என்றெல்லாம் கொஞ்சம் செயற்கையான பாகுபாடுகளை உருவாக்குகின்றன. ஆனாலும் அவரது கருத்துகள், அந்தப் புத்தகம் மிகவும் முக்கியமானவை.

க.நா.சு. போன்றவர்கள் என் ஜாதி. பிடித்திருக்கிறது, இல்லை என்பதோடு சரி. விமர்சகர் என்பதை விட சிபாரிசு செய்பவர் என்று சொல்லலாம். ஏன் பிடித்திருக்கிறது, எப்படிப்பட்ட புனைவுகள் கால ஓட்டத்தில் நிற்கின்றன என்று ஒரு meta-level -இல் ஜெயமோகனின் “நாவல்” புத்தகம் பேசுகிறது. படிக்க சுலபமான புத்தகம் என்று சொல்லமாட்டேன், ஆனால் கஷ்டமான புத்தகமும் இல்லை. புரியாத மொழியில் தன் மேதமையை காட்ட எழுதப்பட்ட புத்தகம் இல்லை. தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதிய புத்தகங்களும் மிக அருமையானவை. தேர்ந்த அலசல்கள். நிறைகுறைகளை சீர்தூக்கிப் பார்ப்பவை. அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவரோடு ஓரளவு ஒத்த ரசனை உள்ள நானே பல இடங்களில் அவரது கண்ணோட்டத்தை மறுத்து எழுதி இருக்கிறேன். அவரது கருத்துகளோடு, கோட்பாடுகளோடு எனக்கு சில வேறுபாடுகள் உண்டு, ஆனால் அவர் கோட்பாடுகள், கருத்தை வெளிப்படுத்தும் பாணியை பெரிதும் மதிக்கிறேன்.

இந்த மாதிரி அலசல்கள் நிறைய வர வேண்டும். ஆனால் என் கண்ணில் எதுவும் இது வரை படவில்லை. எஸ்.ரா. எழுதிய சில கட்டுரைகளை, அதுவும் இணையத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். பொதுவாக இந்த மாதிரி கட்டுரைகள் எல்லாம் நிறைகளை பற்றி மட்டுமே பேசுபவை, குறைகளைப் பற்றி எழுதுவதில்லை. இலக்கிய விமர்சனம் என்று வந்துவிட்டால் அடுத்தவரை குறை சொல்லக் கூடாது என்ற நாகரீகத்தை விட தன் மனதுக்குப் பட்டதை நேர்மையாக எழுதுவதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது கையில் ஓரளவு காசு புரண்டது. புஸ்தகங்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற வெறியை தீர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஆனால் எங்கே புஸ்தகங்கள்? எனக்குத் அப்போதெல்லாம் தெரிந்த ஒரே கடை ஹிக்கின்பாதம்ஸ்தான். சில புஸ்தகங்கள் கிடைத்தன. அப்புறம் லாண்ட்மார்க் பற்றி கேள்விப்பட்டு அங்கே போனேன், இன்னும் சில கிடைத்தன. ஆனால் நான் தேடிக்கொண்டிருந்த புஸ்தகங்கள் – வாடிவாசல், நித்யகன்னி மாதிரி – எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் அல்லையன்ஸ் பதிப்பகம் போனேன். அங்கே சில தேவன் புத்தகங்களை வாங்கினேன். பிறகு வாடிவாசல் கிடைக்குமா என்று கேட்டேன். விற்பனையாளர் அந்தப் பேரையே கேட்டதில்லை. கடைசியில் அவர் சொன்னார் “இதே ஆர்.கே. மட் ரோட்லே போங்கோ. பி.எஸ். ஹைஸ்கூல் முன்னாலே, இந்தியன் பாங்க் மாடிலே திலீப்குமார்னு ஒருத்தர் சின்ன கடை நடத்தறார், அவரை கேட்டு பாருங்கோ” – சரி இதுதான் கடைசி என்று அங்கே போனேன். என் பல வருஷ தேடல் அங்கே ஒரு நொடியில் முடிந்தது. நான் அதற்கப்புறம் சென்னைக்கு போய் என் உறவினர்கள், நண்பர்களை பார்க்காமல் வந்திருக்கிறேன். திலீப்குமாரை பார்க்காமல் வந்ததில்லை. அவர் கை காட்டும் புஸ்தகங்களை வாங்குவேன். மெதுவாகத்தான் படிப்பேன். (விஷ்ணுபுரம் படிக்க 4 வருஷம் ஆயிற்று.)

இணையம் வந்த பிறகு நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. இது வரை பார்க்காதவர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிபாரிசுகளை பார்க்கலாம். ஆனால் இணையத்தில் சண்டை சச்சரவு கொஞ்சம் அதிகம். அதுவும் ஜெயமோகனுக்கு “வசை காந்தம்” என்று பட்டமே கொடுக்கலாம். 🙂 அதை தாண்டிப் பொறுமையாகப் படிப்பவர்களுக்கு இணையம் ஒரு பொக்கிஷம்!

கல்கியின் “அலை ஓசை”

கல்கியின் அலை ஓசை நாவல் உயர்ந்த இலக்கியம் இல்லை. திடுக்கிடும் சம்பவங்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சி வைக்க வேண்டிய கட்டாயம், நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள், ஸ்டீரியோடைப் காரக்டர்கள் என்று எல்லா விதமான பலவீனங்களும் மலிந்து காணப்படுகின்றன. கதாநாயகி சீதா கல்கத்தாவில் மயங்கி விழுந்தால் அங்கே அவளைக் காப்பாற்றுவதற்காகவே அமர்நாத்-சித்ரா தம்பதியினர் அங்கே மாற்றல் ஆகிப் போயிருக்கிறார்கள். லாகூரில் மாட்டிக் கொண்டால் மவுல்வி சாஹிபும் ரசியா பேகமும் வந்து காப்பாற்றுகிறார்கள். இரவு 12 மணிக்கு யாரும் இல்லாத இரவில் தற்கொலை செய்து கொள்ளப்போனால் அம்மாஞ்சி சூர்யா வந்து தடுக்கிறான். நேரம்தான்!

நாவலை மீள்வாசிப்பு செய்தபோது எனக்கு அலைகள் ஓய்வதில்லை படம் நினைவு வந்துகொண்டே இருந்தது. என் பதின்ம வயதுகளில் வந்த படம் அது. பாட்டுகள் அமர்க்களமாக இருந்தன. கன்னாபின்னா என்று ஓடிற்று. பார்த்தவரெல்லாம் புகழ்ந்தார்கள். இரண்டு முறை படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு வழியாக டிக்கெட் கிடைத்துப் போய்ப் பார்த்தால் பாரதிராஜா சோகப்படுத்துகிறார். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் சீன் – கார்த்திக்கும் ராதாவும் ஓடுகிறார்கள், ஊரே துரத்துகிறது, தியாகராஜன் அவர்களை வெட்டப் போகிறார், திடீரென்று பாதிரியார் வந்து தடுக்கிறார். பாதிரியாரைப் பார்த்து நானும் என் நண்பர்களும் கொல்லென்று சிரித்துவிட தியேட்டரில் ரத்தக் களரி ஆகும் நிலை. பாதிரியார் எங்கிருந்து வந்தார்? கரெக்டாக இங்கே மாட்டிக் கொள்வார்கள் என்று முன்னாலேயே கணித்து அங்கே வந்து ஒளிந்து கொண்டிருந்தாரா?

Deux ex machina – அதிசய தற்செயல் நிகழ்ச்சிகள் – கதையில் வரலாம். இங்கே Deux ex machina-வில் அவ்வப்போது கதை வருகிறது.

அப்புறம் அலை ஓசை என்று தலைப்பு வைத்துவிட்டோமே என்று பலவந்தமாக அந்த ஓசையை இழுத்து வருகிறார்.

ஆனால்: ஆயிரம் குறை இருந்தாலும் கதையில் கொஞ்சம் ஜீவன் இருக்கிறது. நிறைய சுவாரசியம் இருக்கிறது. சீதா இறக்கும்போது அங்கஹீனம் அடைந்த தாரிணியின் கோர சொரூபத்தைப் பார்த்து அக்கா என்ன அழகாக இருக்கிறாய் என்று வியக்கும் இடத்தில் கவிதை இருக்கிறது. சீதாவைக் கண்டு சுண்டு உட்பட எல்லாரும் கொஞ்சம் மயங்குவதில் உண்மை இருக்கிறது.

லலிதாவும் அவள் அத்தை மகள் சீதாவும் நெருங்கிய தோழிகள். நல்ல வேலையில் இருக்கும் ராகவன் தாரிணியை காதலிக்கிறான், ஆனால் அது கைகூடவில்லை. லலிதாவை பெண் பார்க்க வரும் ராகவன் சீதாவை விரும்பி மணம் செய்து கொள்கிறான். லலிதாவின் அண்ணன் சூர்யா காங்கிரஸ்காரன். அவன் தாரிணியை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சந்திக்கிறான். இருவரும் நெருங்குகிறார்கள். தாரிணியை மீண்டும் சந்திக்கும் ராகவன் அவளையும் மணக்க விரும்புகிறான். தாரிணி அவனை நிராகரிக்கிறாள். சீதா-ராகவன் வாழ்க்கை பரஸ்பர சந்தேகத்தால் நரகம் ஆகிறது. சில அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளால் சீதா-ராகவன் பிரிகிறார்கள், பிறகு சேர்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது சீதா பாகிஸ்தான் பக்கம் மாட்டிக் கொள்கிறாள். தாரிணி தன் சொந்த அக்கா என்று அவளுக்கு தெரிய வருகிறது. பல துன்பங்களுக்குப் பின்னால் ராகவனின் மடியில் அவள் இறக்கிறாள். தாரிணி கை இழந்து கண்ணிழந்து கோரமான உருவத்தோடு இருந்தாலும் சீதாவின் இறுதி ஆசைப்படி ராகவனும் அவளும் மணந்து கொள்கிறார்கள்.

கல்கியின் ஆதர்சம் டிக்கன்ஸ் ஆக இருக்க வேண்டும். இது ஒரு Dickensian நாவலே. ஆனால் டிக்கன்சின் பாத்திரப் படைப்பு எப்போதும் சிறப்பானது. இந்த கதையில் ஸ்கோப் இருந்தும் கல்கியின் கவனம் மெலோட்ராமா கதையில்தான் இருக்கிறது. சீதா, ராகவன், தாரிணி, சூர்யா, லலிதா எல்லாருமே நன்றாக வரக் கூடிய பாத்திரங்கள்தான். சுதந்திரப் போராட்டம் போராட்டம் என்கிறார்களே தவிர அது யாருடைய வாழ்க்கையையும் பெரிதாக பாதிப்பதாகத் தெரியவில்லை. (இத்தனைக்கும் ஜெயிலுக்கு போகிறார்கள், அடி வாங்குகிறார்கள்…) வழக்கமான காதல் கத்திரிக்காய் என்ற உலகத்தைத்தான் கல்கி காட்டுகிறார். இதை நல்ல இலக்கியம் ஆக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது.

கதையில் சீதாவைக் கண்டு சூர்யா, ராகவன், பட்டாபி எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். அது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. ஆனால் அத்தை மகளை சூர்யா விரும்புவது, காதலி தாரிணி சாயலில் உள்ளவளை ராகவன் விரும்புவதும், தனக்காக உழைத்த நாகரீகப் பெண்மணியை பட்டாபி விரும்புவதும் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளே.

ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின் படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?

ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

ஆன்லைனில் படிக்க விரும்புபவர்கள் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம். மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இது ஒரு flawed, மெலோட்ராமா கதையே. ஆனாலும் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து கிடக்கிறது. அதனால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

வாசந்தியின் “ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன”

“Coming of Age ” புத்தகங்கள் என்று ஒரு genre உண்டு. தினம் தினம் டீனேஜர்கள் பெரியவர்களாக மாறிக் கொண்டிருக்கும் மாறாத விந்தையை விவரிக்கும் புத்தகங்கள். வாஸந்தி அந்த genre-இல் எழுதி இருக்கும் ஒரு புத்தகம் இது.

உண்மையை சொல்லிவிடுகிறேன், இந்த புத்தகம் எனக்கு சுமார்தான். இத்தனைக்கும் நல்ல வடிவமைப்பு, மாற்றத்தை நோக்கி சீராக செல்லும் கதை என்று பல நல்ல அம்சங்கள் உள்ள கதைதான். ஆனால் சுவாரசியம் குறைவு. ஜெயமோகன் இதை இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – குறிப்பிடவில்லை என்றால் இதைப் பற்றி என்றாவது வாஸந்தி பற்றி ஒரு பதிவு எழுதி அதில் ஒரு சின்ன பாராவாக எழுதி இருப்பேன். அவர் சொல்லி இருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எனக்கொரு ஆசை.

சிம்பிளான கதை. கொஞ்சம் படிப்பு வராத பையன். மேல் தட்டு குடும்பம். மக்கு என்று எல்லாரும் கொஞ்சம் இளக்காரமாகப் பார்க்கிறார்கள். அம்மாவுக்கு தெரிந்தவர்கள் பையன் எல்லாம் டாக்டர், எஞ்சினியர் என்று இருக்கும்போது இவன் இப்படி இருக்கிறானே என்று மிகவும் வருத்தம். பையனுக்கு தோட்டம் என்றால் கொஞ்சம் ஆசை. அவர்கள் தோட்டத்தை பராமரிக்கிறான். அம்மாவைப் பற்றி ஊரில் தவறான பேச்சு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மூல காரணம் தான்தான் என்று தெரிந்து கொண்டு பையன் ஊரை விட்டு ஓடப் பார்க்கிறான். அவனை தடுத்து நிறுத்தும் அம்மாவும் அப்பாவும் பையன் பெரியவன் ஆகிவிட்டான் என்று தெரிந்துகொள்கிறார்கள்.

Coming of Age என்பதை subtle ஆக சொல்லி இருக்கிறார். வடகிழக்கு மாநில பின்புலம் (ஷில்லாங் என்று நினைக்கிறேன்) கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக ஆக்குகிறது. இன்னும் பெரிதாக டெவலப் செய்திருந்தார் என்றால் நன்றாக வந்திருக்கலாம். இப்போது சுவாரசியம் பற்றவில்லை.

படிக்கலாம்தான். ஆனால் படிக்காவிட்டாலும் பெரிய நஷ்டம் இல்லை.

எழுத்தாளர் அனுத்தமா மறைவு

என்னைப் பொறுத்த வரையில் ஒரு எழுத்தாளருக்கு ஆபிச்சுவரி என்றால் அவரது எழுத்துகளை அலசுவதுதான். அனுத்தமாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை, அதனால் விட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தேன். அவரது ஒரு பேட்டியையும் அவர் புத்தகங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தையும் பதிவு செய்து வைப்போமே என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

அனுத்தமா, சமீபத்தில் மறைந்த ஆர். சூடாமணி போன்றவர்களை கலைமகள் எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் குடும்பப் பெண்களின் உலகம். பெண்களின் மன உளைச்சல்களைப் பற்றியே அதிகம் எழுதுவார்கள். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.

தன் தோழி ஆர். சூடாமணியைப் பற்றி அனுத்தமாவே நினைவு கூர்ந்தார், அதை இங்கே படிக்கலாம்.

சிறந்த ஆபிச்சுவரி என்றால் அது ஜெயமோகன் எழுதியதுதான். திருப்பூர் கிருஷ்ணன் கல்கியில் எழுதிய அஞ்சலியை உப்பிலி ஸ்ரீனிவாஸ் தன் தளத்தில் பதித்திருக்கிறார்.

ஹிந்து பத்திரிகையில் அவரைப் பற்றி இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன, அவற்றை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம். முதல் கட்டுரை அவரை எடுத்த ஒரு பேட்டி. இரண்டாவது கட்டுரையில் அவரது சில புத்தகங்கள் பற்றி எழுதப்பட்டிருகிறது.

300 சிறுகதைகள், 21 நாவல்களை எழுதி இருக்கிறாராம். என்றாவது அவரது கேட்ட வரம் மட்டுமாவது நாவலைப் படிக்க வேண்டும். ஜெயமோகன் அதை சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

நாஞ்சில்நாடனுக்கு சாஹித்ய அகாடமி விருது

கொஞ்ச நாள் முன்னால்தான் தகுதி அற்றவர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது தருகிறார்களே என்று குறைப்பட்டுக் கொண்டேன். கமிட்டி காதில் விழுந்துவிட்டதோ என்னவோ இப்போது நாஞ்சில்நாடனுக்கு விருது கிடைத்திருக்கிறது. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதிக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்.

நான் நாஞ்சில் நாடனின் ஏழெட்டு சிறுகதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். இன்னும் படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கிறது என்பது ஒரு சின்ன மகிழ்ச்சி!

இப்போது அவரது தொகுக்கப்பட்ட சிறுகதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவோ சொந்தப் பாட்டன் கதை சொல்வது போல ஒரு உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அந்த சரளம் வெகு சிலருக்கே கை வந்திருக்கிறது.

இந்த நேரத்தில் நாஞ்சில்நாடனின் படைப்புகளை வலையேற்றிக் கொண்டிருக்கும் சுல்தான் ஷரீஃபுக்கும் ஒரு ஜே போடுவோம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் நாடன், விருதுகள்

ஒரு பழைய புத்தகம்

நண்பர் திருமலைராஜனிடமிருந்து அந்தக் காலத்து பிரபல வக்கீல் வி.சி. கோபாலரத்தினம் எழுதிய ஒரு பழைய புத்தகத்தை தள்ளிக்கொண்டு வந்தேன். புத்தகம் 1944-இல் வெளியிடப்பட்டிருகிறது. தினமணி வெளியீடு #6 என்றும், பதிப்பாசிரியர் பி.ஸ்ரீ. என்றும் போட்டிருந்தது என் curiosity-ஐத் தூண்டிவிட்டது. இப்படி தினமணி எத்தனை புத்தகங்களை வெளியிட்டது என்று தெரியவில்லை.

புத்தகத்தின் பெயர் “ஹாஸ்ய நாடகங்கள்-கட்டுரைகள்“. ஹாஸ்யம் ஒன்றும் பெரிதாக இல்லை. அபூர்வமாக சில இடங்களில் புன்னகை வருகிறது. எனக்கு நடையும் மணிப்பிரவாள மொழியும் சுவாரசியமாக இருந்தன. ஸரி என்றுதான் எழுதுவார், சரி இல்லை.

கோபாலரத்தினம் “சுல்தான்பேட்டை சப்-அசிஸ்டன்ட் மாஜிஸ்ட்ரேட்“, “வர்ணக் கண்ணாடிகள்“, “ஒன்றை நினைக்கின்” ஆகிய மூன்றும் அவரது மாமனார் வி.வி. ஸ்ரீனிவாசையங்கார் – இவரும் பிரபல வக்கீலாம் – ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்களை தமிழில் ரீசைக்கிள் செய்தது என்று குறிப்பிடுகிறார். அப்படி என்றால் இந்த நாடகங்கள் 1920-களில் எழுதப்பட்டவை என்று யூகிக்கிறேன். அந்தக் காலகட்டத்துக்கு நல்ல நாடகங்களாக இருந்திருக்கலாம். சுல்தான்பேட்டை மாஜிஸ்ட்ரேட் நாடகம் திடீரென்று நீதிபதி ஆக நியமிக்கப்பட்ட ஒருவர், நீதிமன்ற தலைமை குமாஸ்தா, ஆகியோரின் சிறு தகராறுகளையும், மாஜிஸ்ட்ரேட் பதவி இழப்பதையும் பற்றி; வர்ணக் கண்ணாடிகள் கதையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு பெரிய மனிதர்; அவருக்கு குணமானதும் ஆபரேஷன் சான்ஸ் போச்சே என்று வருத்தப்படும் டாக்டர், ஒரு சூப்பர் உயில் எழுதும் சான்ஸ் போச்சே என்று வருத்தப்படும் வக்கீல், சொத்துக்காக அடித்துக் கொள்ளும் குடும்பத்தார் ஆகியோரைப் பற்றி. ஒன்றை நினைக்கின் நாடகத்தில் கேஸ் இல்லாத வக்கீல் வந்தவரிடம் பெரிதாக பந்தா பண்ணிக் கொள்ள, அவரோ இன்கம் டாக்ஸ் ஆஃபீசர்.

கட்டுரைகளில் எவ்வளவு நிஜம், எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. ஒரு ஆங்கிலேய நீதிபதி விநாயகர் நாயக்கர் ஜாதி கடவுள் என்று புரிந்து கொள்கிறார். இன்னொரு கேசில் இரும்பு விலை இறங்கிவிட்டதால் பிரதிவாதி ஒரிஜினல் ஒப்பந்த விலையில் இரும்பை வாங்க மறுக்கிறான். கேஸ் ஒரு வழியாக நடக்கும்போது இரும்பு விலை ஏறிவிடுகிறது. பிரதிவாதி தப்பு என் பேரில்தான், ஒத்துக் கொள்கிறேன் என்கிறான், வாதியோ கேசை வாபஸ் வாங்குகிறேன் என்கிறான். இப்படி சில சம்பவங்களை விவரிக்கிறார்.

காலாவதியாகிவிட்ட புத்தகம்தான். தவிர்க்கலாம்தான். ஆனாலும் curiosity value இருக்கிறது.

வி.வி ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய சில நாடகங்களை பம்மல் சம்பந்த முதலியார் மொழிபெயர்த்து நடித்திருக்கிறார். மனைவியால் மீண்டவன் என்ற நாடகத்தில் மனைவியை ஒதுக்கி யாரோ தாசி பின்னால் போகும் கணவன் நோய்வாய்ப்படும்போது நர்சாக வந்து அவனை மனைவி திருத்துகிறாள். இதெல்லாம் ஏதோ காலேஜில் போடும் நாடகம் போலிருக்கிறது. அப்போதெல்லாம் நாடகம் என்பது அபூர்வமாக இருந்திருக்க வேண்டும், ஏதோ ஹீரோ ஹீரோயின் என்று இருந்துவிட்டால் போதும் என்ற நிலையாக இருந்திருக்க வேண்டும். ஐயங்கார் எழுதிய Domestication of Damu என்ற நாடகத்தையும் முதலியார் மனைஆட்சி என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்

எனக்கு துப்பறியும் கதைகள் மீது கொஞ்சம் பித்து உண்டு. பதின்ம வயதில் படித்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என் உள்ளம் கவர்ந்தவை. அதை விட சிறந்த துப்பறியும் கதைகள் இன்னும் வரவில்லை. பிடித்த கதைகளை சமீபத்தில் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன்.

ஹோம்ஸ் கதைகளைப் படித்துவிட்டு வேறு கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆவல். அகதா கிறிஸ்டி, பெர்ரி மேசன் கதைகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. கிறிஸ்டி பிடித்திருந்தாலும் ஹோம்ஸ் அளவு இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. பெர்ரி மேசன் கிறிஸ்டி அளவு கூட வரவில்லை. வேறு துப்பறியும் கதைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

அப்போது ஹ்யூ கிரீன் தொகுத்த Rivals of Sherlock Holmes என்ற புத்தகம் கிடைத்தது. ஹ்யூ கிரீன் (கிரஹாம் கிரீனின் சகோதரர்) இப்படி மூன்று அருமையான தொகுதிகளை கொண்டு வந்திருக்கிறார். Rivals of Sherlock Holmes, Further Rivals of Sherlock Holmes, American Rivals of Sherlock Holmes. அவர்தான் பிற நல்ல கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த Rivals அனைவரும் ஹோம்ஸின் “சமகாலத்தவர்” – அதாவது ஹோம்ஸ் கதைகள் வந்த காலத்தில் – 19 -ஆம் நூற்றாண்டு இறுதி, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் – இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அந்த மூன்று தொகுதிகளிலிருந்து எனக்குப் பிடித்த சில துப்பறியும் “நிபுணர்கள்”, எழுத்தாளர்கள் பற்றி சின்ன ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

கிரான்ட் ஆலனின் கர்னல் க்ளே (Grant Allen’s Colonel Clay): க்ளே ஒரு ஏமாற்றுக்காரன். மீண்டும் மீண்டும் தென்னாப்பிரிக்க மில்லியனர் வாண்ட்ரிஃப்டிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டே இருக்கிறான். Episode of the Diamond Links என்னுடைய ஃபேவரிட் கதை.

ராபர்ட் பாரின் யூஜீன் வால்மான்ட் (Robert Barr’s Eugene Valmont): Absent-minded Coterie ஒரு அருமையான கதை. ஆனால் வேறு எதுவும் அவ்வளவு சுகமில்லை.

ஜாக்விஸ் ஃப்யூட்ரல்லின் திங்கிங் மெஷின் (Jacques Futrelle’s Thinking Machine): ப்ரொஃபசர் வான் டூசன் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி. சவால் விட்டு ஜெயிலிலிருந்து தப்பிக்கும் Problem of Cell 13 மிகவும் அருமையான கதை. எல்லா கதைகளிலும் தரம் எப்போதும் நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் படிக்கலாம்.

மாரிஸ் லேப்ளான்கின் ஆர்சீன் லூபின் (Maurice Leblanc’s Arsene Lupin): லூபின் ஒரு திருடன். சில கதைகள் – Arsene Lupin in Prison, Red Silk Scarf – நன்றாக இருக்கும்.

ஆர்தர் மாரிசனின் மார்ட்டின் ஹெவிட் (Arthur Morrison’s Martin Hewitt): ஹெவிட் ஒரு சம்பிரதாய துப்பறியும் நிபுணர். படிக்கலாம்.

ஆர்தர் மாரிசனின் டாரிங்க்டன் (Arthur Morrison’s Dorrington): டாரிங்க்டன் துப்பறிபவனாக வேஷம் போடும் திருடன். படிக்கலாம்.

கிளிஃபோர்ட் ஆஷ்டவுனின் ராம்னி ப்ரிங்கிள் (Clifford Ashdown’s Romney Pringle): ராம்னி ப்ரிங்கிள் ஏமாற்றுக்காரர். நான் படித்த கதைகளின் ambience charming ஆக இருந்தது.

பாரனஸ் ஆர்க்சியின் (Baroness Orczy) Old Man in the Corner: ஒரு டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு மர்மங்களை தீர்ப்பார் இந்தக் கிழவர். மிகவும் நன்றாக இருக்கும்.

ஆஸ்டின் ஃபிரீமனின் டாக்டர் தார்ண்டைக் (Austin Freeman’s Dr. Thorndyke): தார்ண்டைக் விஞ்ஞானத்தை பயன்படுத்தி துப்பறிபவர். கொஞ்சம் dry ஆக இருந்தாலும் கதைகள் மிக நன்றாக இருக்கும்.

வில்லியம் ஹோப் ஹாட்க்சனின் கார்னகி (William Hope Hodgson’s Carnacki): கார்னகி பேயோட்டுபவர். எல்லா கதைகளிலும் ஒரு supernatural background இருக்கும்.

எர்னஸ்ட் பிரம்மாவின் மாக்ஸ் காரடோஸ் (Ernest Bramah’s Max Carrados): காரடோஸ் ஒரு குருடர். ஹோம்ஸ் தரத்துக்கு இல்லாவிட்டாலும் நல்ல துப்பறியும் கதைகள்.

பின்னால் படித்த சில நல்ல துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்:

  1. எட்கார் ஆலன் போ – டூபின் (Edgar Allan Poe – Auguste Dupin) குறிப்பாக Purloined Letter சிறுகதை. டூபின் இல்லாத Gold Bug சிறுகதை.
  2. அகதா கிறிஸ்டி – ஹெர்க்யூல் போய்ரோ, மிஸ் மார்பிள் கதைகள் (Agatha Christie: Hercule Poirot, Miss Marple)
  3. டோரதி சேயர்ஸ் – பீட்டர் விம்சி கதைகள் (Dorothy Sayers: Lord Peter Wimsey)
  4. ஜி.கே. செஸ்டர்டன் – ஃபாதர் பிரவுன் கதைகள் (G.K. Chesterton: Father Brown)
  5. ஈ.சி. பென்ட்லி – ட்ரென்ட் கதைகள் (E.C. Bentley: Trent)
  6. ஹெச்.சி. பெய்லி – டாக்டர் ஃபார்ச்சூன் கதைகள் (H.C. Bailey – Dr. Fortune)
  7. எட்கார் வாலஸ் – ஜே.ஜி. ரீடர் கதைகள் (Edgar Wallace – J.G. Reeder)
  8. ஜோசஃபின் டே (Josephine Tey) – குறிப்பாக Daughter of Time நாவல்.
  9. மெல்வில் டேவிசன் போஸ்ட் – அங்கிள் எப்னர், ராண்டால்ஃப் மேசன் கதைகள் (Melville Davisson Post – Uncle Abner, Randolph Mason)
  10. டாஷியல் ஹாம்மட் (Dashiel Hammett)
  11. ரேமன்ட் சாண்ட்லர் – ஃபிலிப் மார்லோ (Raymond Chandler – Phillip Marlowe)
  12. ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) – குறிப்பாக Three Coffins நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

சி.எஸ். ஃபாரஸ்டரின் ஹார்ன்ப்ளோயர் சீரிஸ்

சி.எஸ். ஃபாரஸ்டர் (C.S. Forester) எழுதிய ஹார்ன்ப்ளோயர் (Hornblower) கதைகள் எல்லாம் சாகசக் கதைகள். ஹார்ன்ப்ளோயர் சின்ன வயதில் ஆங்கிலேய கப்பற்படையில் ஒரு midshipman (அப்பெரண்டிஸ் மாதிரி) ஆக சேருகிறார். பல பதவி உயர்வுகளைப் பெற்று அட்மிரல் ஆகிறார். இது நடப்பது நெப்போலியன் காலத்தில். நெப்போலியன் ஏறக்குறைய ஐரோப்பா முழுவதையும் கட்டுப்படுத்தினாலும் இங்கிலாந்து தன் கப்பற்படையை வைத்து நிமிர்ந்து நிற்க முடிந்தது. அந்த பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட கதைகள்.

நெப்போலியன் காலம் பாய்மரக் கப்பல் காலம். கடிதங்கள் மூலமாகவே செய்திகளைத் தெரிந்து கொள்ளும் காலம். ஐரோப்பியக் கப்பல்கள் ஐரோப்பாவிலிருந்து பல ஆயிரம் மைல்கள் தூரத்தில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த காலம். கப்பல் இங்கிலாந்திலிருந்து கிளம்பும்போது இங்கிலாந்தும் ஸ்பெய்னும் எதிரிகளாக இருக்கலாம். கப்பல் காப்டன்களுக்கு பசிஃபிக் கடலில் நம் எதிரி ஸ்பெய்னின் கப்பல்களை எதிர்த்து இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டு என்று உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கலாம். நாலைந்து மாதத்தில் நிலைமை மாறி இங்கிலாந்தும் ஸ்பெய்னும் நட்பு நாடுகளாகிவிட்டால்? அந்த செய்தி சண்டைகளுக்கு முன் அந்த காப்டன்களுக்கு போய்ச் சேராவிட்டால்? இந்த கருவை வைத்துத்தான் ஃபாரஸ்டர் இந்த சீரிசை ஆரம்பித்தார்.

Happy Return (Beat to Quarters) கதையில் காப்டன் ஹார்ன்ப்ளோயர் பசிஃபிக் கடலுக்குப் போகிறார். அங்கே ஒரு லோகல் தலைவன் எல் சுப்ரீமோவுக்கு ஸ்பெய்னை எதிர்க்க உதவும்படி அவருக்கு ஆணை. அந்த தலைவனோ ஒரு megalomaniac. கொடூரமானவன். ஹார்ன்ப்ளோயர் தன் கப்பலை விட வலிமை வாய்ந்த ஒரு ஸ்பெய்ன் கப்பலை கைப்பற்றி எல் சுப்ரீமோவுக்கு கொடுக்கிறார். அப்புறம்தான் தெரிகிறது ஸ்பெய்னும் இங்கிலாந்தும் இவர் கடல் பயண காலத்தில் நட்பு நாடுகளாகிவிட்டன என்று. இப்போது அவருக்கு அந்த வலிமை வாய்ந்த கப்பலை மீண்டும் வெல்ல வேண்டிய கட்டாயம். இங்கிலாந்து அரசியலில் வலிமை வாய்ந்த வெல்லிங்க்டன், வெல்லஸ்லி ஆகியோரின் தங்கை பார்பாராவுக்கும் இவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் ஹார்ன்ப்ளோயர் ஏற்கனவே மணமானவர். பார்பாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. அதனால் சேர முடியவில்லை.

அடுத்த கதையான Ship of the Line-இல் ஹார்ன் ப்ளோயருக்கு மத்தியதரைக்கடலில் ஃபிரெஞ்ச் வணிகத்தை தகர்க்க பணி. எனக்கு மிகவும் பிடித்த சீன் கரையில் இருக்கும் ஒரு ராணுவத்தை கடலில் இருந்தே தாக்கி அழிக்கும் காட்சி. கடைசி சீனில் தன் ஒரே கப்பலைக் கொண்டு நாலு கப்பல்களை எதிர்த்துப் போராடுகிறார். எதிரி கப்பல்கள் அழிந்தாலும் தானும் சிறைப்படுகிறார். இந்தப் போரை த்ரில்லிங் ஆன காட்சியாக சித்தரிக்கிறார்.

அடுத்த கதையான Flying Colours-இல் அவரை தூக்கில் போட பாரிசுக்கு அழைத்துப் போகும்போது தப்புகிறார். ஒரு கப்பலைக் கைப்பற்றி மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்புகிறார். அங்கே அவர் சாகசங்கள் அவரை பெரிய ஹீரோவாக்கிவிடுகின்றன. இதற்கிடையில் அவர் மனைவியும், பார்பாராவின் கணவனும் இறந்துவிட, காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

சீரிஸ் எப்படிப் போகும் என்று யூகிக்கலாம். கடல் சண்டைகள், ஒரு காப்டனுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள், சாகசங்கள் என்று சுவாரசியமான புத்தகங்கள். ஒரு கப்பல் காப்டனுக்கு சண்டை மட்டுமே உலகம் இல்லை. ஒரு அலுவலகத்தில் ஒரு மானேஜருக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் போல பல உண்டு. குண்டு பற்றாக்குறை, புரட்சி செய்யும் கப்பலை மீண்டும் கைப்பற்றுதல், கடலில் மூழ்கிய பொக்கிஷத்தை எடுப்பது மாதிரி பல non-violent பிரச்சினைகளை சமாளிப்பது நன்றாக இருக்கும். உதாரணமாக கப்பலில் ஆள் பற்றாது. வணிகக் கப்பலிலிருந்து ஆட்களை பலவந்தமாக கொண்டு வருவார். இது “சட்ட விரோதம்”. அவருக்கு நெல்சனின் சவப் பெட்டியை தேம்ஸ் நதியில் ஒரு ceremonial ஊர்வலமாக கொண்டு வரும் கடமை தரப்படும். வரும்போது அவர் படகில் ஓட்டை, படகே முழுகும் அபாயம். பாதி ஊர்வலத்தில் படகை நிறுத்த முடியாது. யார் கண்ணிலும் படாமல் தொப்பிகளை வைத்து தண்ணீரை எடுத்து எடுத்து வெளியே ஊற்றுவார்கள். 🙂

ஹார்ன்ப்ளோயர் கதைகள் வெறும் சாகசக் கதைகள் இல்லை. கப்பல் என்பது ஒரு தனி உலகம். அங்கே காப்டன் சர்வாதிகாரி. அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அந்த கப்பலுக்கு பெரிய தாக்கம் ஏற்படுத்தும். இதை ஒரு லீடர்ஷிப் ப்ராப்ளம் என்ற வகையில் ஃபாரஸ்டர் அணுகுகிறார். தனக்கு confidence குறைவாக இருந்தாலும் அந்த காப்டன் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியாது. இமேஜுக்காக ஹார்ன்ப்ளோயர் சில காரியங்களை செய்வார். எங்கே விதிகளை மீற வேண்டும் என்று யோசித்து முடிவெடுப்பார். ஒரு தலைவனின் மன ஓட்டம், உளைச்சல்கள் ஆகியவற்றை அவ்வப்போது அருமையாக சித்தரிக்கிறார். அந்தக் கோணமே இந்த சீரிசை எனக்கு சாகசக் கதைகள் என்ற genre -இலிருந்து மேலே கொண்டு வருகிறது.

முதல் புத்தகத்திலேயே காப்டன் என்று வந்தாலும், பின்னால் வந்த புத்தகங்கள் அவர் எப்படி காப்டன் ஆனார், காப்டன் எப்படி அட்மிரல் ஆனார் என்பதையும் விவரிக்கின்றன. ரொம்ப டெக்னிகல் விஷயங்களை – எப்படி பாய்களை விரிப்பது, காற்றை எப்படி பயன்படுத்துவது – பேசமாட்டார். எல்லாரும் புரிந்து கொள்ளக் கூடிய அளவில்தான் இருக்கும்.

காப்டனின் நண்பன், மற்றும் அவரது முதல் உதவியாளன் முதல் லுட்டினன்ட் புஷ். டாக்டர் வாட்சன் மாதிரி ஒரு பாத்திரம். நல்ல பாத்திரப் படைப்பு.

இந்த சீரிசை இரண்டு விதமாகப் படிக்கலாம். புத்தகங்கள் வெளியிடப்பட்ட order-இல்.

  1. The Happy Return (1937, called Beat to Quarters in the U.S.)
  2. A Ship of the Line (1938)
  3. Flying Colours (1938)
  4. The Commodore (1945, called Commodore Hornblower in the U.S.)
  5. Lord Hornblower (1946)
  6. Mr. Midshipman Hornblower (1950)
  7. Lieutenant Hornblower (1952)
  8. Hornblower and the Atropos (1953)
  9. Hornblower in the West Indies (1958)
  10. Hornblower and the Hotspur (1962)
  11. Hornblower and the Crisis (1967, unfinished novel and short stories)

இல்லாவிட்டால் ஹார்ன் ப்ளோயர் மிட்ஷிப்மன்-இலிருந்து அட்மிரல் ஆவதை கால வரிசையில் படிக்கலாம்.

  1. Mr. Midshipman Hornblower (1950)
  2. Lieutenant Hornblower (1952)
  3. Hornblower and the Hotspur (1962)
  4. Hornblower and the Crisis (1967, unfinished novel and short stories)
  5. Hornblower and the Atropos (1953)
  6. The Happy Return (1937, called Beat to Quarters in the U.S.)
  7. A Ship of the Line (1938)
  8. Flying Colours (1938)
  9. The Commodore (1945, called Commodore Hornblower in the U.S.)
  10. Lord Hornblower (1946)
  11. Hornblower in the West Indies (1958)

எனக்கு மிகவும் பிடித்த கதை லுட்டினன்ட் ஹார்ன்ப்ளோயர் (Lieutenant Hornblower). இதில்தான் அவர் லுட்டினண்ட் பதவியிலிருந்து இரண்டு மூன்று சீனியர்களைத் தாண்டி காப்டன் ஆகிறார். ஆரம்பப் பகுதியில் அவர் வேலை செய்யும் கப்பலின் காப்டனுக்கு paranoia – பைத்தியம் என்றே சொல்லலாம். ஆனால் காப்டன் பைத்தியம் என்று சொல்வதில் நிறைய ரிஸ்க் உண்டு, சொன்னவர் மீது கோர்ட் மார்ஷியல் நடக்கலாம். ஹார்ன்ப்ளோவர் அந்தக் காப்டனை எப்படி சமாளிக்கிறார், ஹைத்தி தீவில் ஏற்பட்ட தோல்வியை எப்படி வெற்றியாக மாற்றுகிறார், வேலை இல்லாதபோது ஏற்படும் வறுமை, புஷ்-ஹார்ன்ப்ளோவரின் நட்பு உருவான விதம் என்று பல பிரமாதமான சம்பவங்களை சித்தரிக்கிறார்.

Mr. Midshipman Hornblower-இல் அவர் கப்பலின் ஜூனியர் அதிகாரி. பல சம்பவங்கள்.

Hornblower and the Hotspur-இல் முதல் முறை காப்டன். பல சாகசங்கள். கப்பலை நிர்வகிப்பதைப் பற்றிய நல்ல சித்தரிப்பு.

சில சிறுகதைகளும் உண்டு. எனக்கு Hornblower and His Majesty சிறுகதை ஓரளவு பிடித்தமானது. மனநிலை சரியில்லாத மன்னன் மூன்றாம் ஜார்ஜின் சித்தரிப்பை ரசித்தேன். Hand of Destiny, Hornblower and the Chartiable Offering போன்ற சிறுகதைகளும் பரவாயில்லை. Point and the Edge சிறுகதை draft, அவர் எழுத நினைத்த கரு போல இருக்கிறது.

கிரிகரி பெக் (Gregory Peck) நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைக்கதை ஆகியவற்றின் Happy Return, Ship of the Line, Flying Colours ஆகியவற்றின் கலவை.

பதின்ம வயதினருக்கு சாகசங்கள் பிடிக்கலாம். அவர்களை கட்டாயம் படிக்கச் சொல்லுங்கள்!

இதை எல்லாம் இலக்கியம் என்று சொல்லமாட்டேன். பொழுதுபோக்கு நாவல்களே. ஆனால் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகசக் கதைகள்