Skip to content

முப்பது வயதுக்குள் படிக்க வேண்டிய முப்பது புத்தகங்கள்

by மேல் திசெம்பர் 1, 2010

இப்படி ஒரு பதிவை சமீபத்தில் பார்த்தேன். எனக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் இதைப் பற்றி எழுதினால் யாராவது நான் இளைஞன் என்று ஒத்துக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசைதான்.

 1. Siddhartha by Herman Hesse – பல வருஷங்கள் முன்னால் (எனக்கு 30 வயது ஆவதற்குள்) படித்தது. என்னைக் கவரவில்லை. சித்தார்த்தா (புத்தர் இல்லை) தன் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகிறான்.
 2. 1984 by George Orwell – இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன். சிறந்த புத்தகம். கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
 3. To Kill a Mockingbird by Harper Lee – உனக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது என்று கேட்டால் நிறைய யோசித்து அனேகமாக இந்த புத்தகத்தைத்தான் சொல்வேன். ஒரு அப்பாவாக சொல்கிறேன் – இந்த புத்தகத்தில் இருப்பதைப் போல என் பெண்களுக்கும் எனக்கும் உறவு இருந்தால் என் வாழ்க்கைக்கு அதுவே போதும். (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 4. A Clockwork Orange by Anthony Burgess – படித்ததில்லை. ஆனால் சினிமா பிரமாதமாக இருந்தது.
 5. For Whom the Bell Tolls by Ernest Hemingway – படித்ததில்லை.
 6. War and Peace by Leo Tolstoy – ரொம்ப நாளாக ஷெல்ஃபிலேயே இருக்கிறது. புத்தகத்தின் சைஸ் பயமுறுத்துகிறது.
 7. The Rights of Man by Tom Paine – படித்ததில்லை. படிப்பேன் என்றும் தோன்றவில்லை. அரசு தன் கடமைகளை நிறைவேற்றாதபோது புரட்சி சரியே என்று சொல்கிறது.
 8. The Social Contract by Jean-Jacques Rousseau – படித்ததில்லை. படிப்பேன் என்றும் தோன்றவில்லை. தனி மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறது.
 9. One Hundred Years of Solitude by Gabriel García Márquez – என் டாப் டென் புத்தகங்களிலாவது வரும். இதில் என்ன கதை என்று சொல்வது கஷ்டம். பல நுண்விவரங்கள் உள்ள மிகப் பெரிய ஓவியத்தைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி படிக்கும்போது ஏற்பட்டது. (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 10. The Origin of Species by Charles Darwin – படித்ததில்லை. அவருடைய பரிணாமம் பற்றிய தியரி இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். படிப்பேன் என்றும் தோன்றவில்லை.
 11. The Wisdom of the Desert by Thomas Merton – கேள்விப்பட்டதே இல்லை.
 12. The Tipping Point by Malcolm Gladwell – நல்ல புத்தகம். புத்தகம் வரும்போது எனக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. 🙂 ஒரு ஐடியாவுக்கு சில சமயம் ஒரு டிப்பிங் பாயின்ட் வருகிறது. அந்த பாயிண்டுக்கு பிறகு அது வேகமாக பரவுகிறது, அதை தடுக்க யாராலும் முடிவதில்லை. அதைப் பற்றி நிறைய பேசுகிறது.
 13. The Wind in the Willows by Kenneth Grahame – சூப்பர் டூப்பர் புத்தகம். குழந்தைகளுக்காக எழுதப்பட்டது என்றாலும் நானே இன்னும் விரும்பிப் படிப்பேன். பத்து வயது குழந்தைகளை படிக்க சொல்லுங்கள், இன்னும் சிறு குழந்தைகளுக்கு நீங்கள் படித்து சொல்லுங்கள்! (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 14. The Art of War by Sun Tzu – நல்ல புத்தகம். எப்படி எதிரியை அழிப்பது என்று சொல்கிறது. (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 15. The Lord of the Rings by J.R.R. Tolkien – இதை டீனேஜ் காலத்தில் படித்தேன். இது ஒரு cult புத்தகம். அமெரிக்காவிலும் இந்த புத்தகத்தின் விசிறி என்றால் உடனே ஒரு கனெக்ஷன் ஏற்பட்டுவிடுகிறது!
 16. David Copperfield by Charles Dickens – படிக்கலாம், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு சமுதாயத்தில் வளரும் ஒருவனின் கதை. டிக்கன்சின் சுயசரிதை என்று சொல்வார்கள். (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 17. Four Quartets by T.S. Eliot – எலியட் சென்ற நூற்றாண்டின் பெரும் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஆனால் நான் கவிதையைக் கண்டால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறவன். அப்படி இருந்தும் அவருடைய Wasteland கவிதையில் சில வரிகள் – Here we go around the prickly pear at 4’o clock in the morning – மனித வாழ்க்கையில் அர்த்தம் இல்லாததை அருமையாக சொல்கின்றன. பல வருஷங்களுக்கு முன்னால் படித்திருந்தாலும், அந்த வரிகள் மிக ஆழமாக பதிந்துவிட்டன.
 18. Catch-22 by Joseph HellerOrr would be crazy to fly more missions and sane if he didn’t, but if he was sane he had to fly them. If he flew them he was crazy and didn’t have to; but if he didn’t want to he was sane and had to. இந்த ஒரு அற்புதமான வரியில் கதை அடங்கிவிடுகிறது. பிறகு மிச்ச முன்னூற்று சொச்ச பக்கத்தை கஷ்டப்பட்டுதான் படித்தேன். முப்பது வயதுக்குள் படித்ததால்தான் முடிக்க முடிந்தது, இப்போது ஆரம்பித்திருந்தால் தூக்கிப் போட்டுவிட்டுப் போயிருப்பேன்.
 19. The Great Gatsby by F. Scott Fitzgerald – படித்ததில்லை.
 20. The Catcher in the Rye by J.D. Salinger – இதையும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படித்தேன். ஆனால் பிடித்திருந்தது. ஒரு டீனேஜரின் குழப்பமான மனநிலை என்பது over-simplification . ஆனால் ட்விட்டர் ஸ்டைலில் அவ்வளவுதான் முடியும்.
 21. Crime and Punishment by Fyodor Dostoyevsky – ரொம்ப நாளாக ஷெல்ஃபிலேயே இருக்கிறது. இங்கேயும் புத்தகத்தின் சைஸ் பயமுறுத்துகிறது.
 22. The Prince by Niccolo Machiavelli – படித்ததில்லை. அர்த்த சாஸ்திரம் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.
 23. Walden by Henry David Thoreau – அற்புதமான புத்தகம். ஆனால் நான் இன்னும் இதை படித்து முடிக்கவில்லை. சில சமயம் நல்ல புத்தகங்களை படிக்க சரியான மனநிலை வேண்டும். அந்த மனநிலைக்காக வருஷக்கணக்காக வெயிட் செய்துகொண்டிருக்கிறேன். 🙂
 24. The Republic by Plato – படித்ததில்லை. படிப்பேன் என்றும் தோன்றவில்லை. ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் புத்தகம்.
 25. Lolita by Vladimir Nabokov – கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிறுமியின் பேரில் ஏற்படும் obsession. லா.ச.ரா. இந்த புத்தகத்தின் inspiration-ஆல்தான் “அபிதா” எழுதினர் என்று கேள்வி.
 26. Getting Things Done by David Allen – புரட்டிப் பார்த்திருக்கிறேன். எப்படி செய்ய வேண்டியவற்றை effective ஆக செய்வது என்று சொல்கிறார். படிக்கலாம்.
 27. How To Win Friends and Influence People by Dale Carnegie – புரட்டிப் பார்த்திருக்கிறேன். பிரபலமான புத்தகம். படிக்கலாம்.
 28. Lord of the Flies by William Golding – கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுவர்கள் ஒரு தீவில் மாட்டிக் கொள்கிறார்கள். கிளாசிக் கதைகளில் வருவது போல அவர்கள் ஒன்றுபடவில்லை, தகராறுதான்.
 29. The Grapes of Wrath by John Steinbeck – படித்ததில்லை, புத்தகத்தின் சைஸ் இங்கும் பயமுறுத்துகிறது. அமெரிக்காவில் 1930-களில் பெரும் பொருளாதார வீழ்ச்சி. அந்த காலத்தில் விவசாயக் கூலி வேலை செய்யும் பரம ஏழைகளைப் பற்றிய கதை. ஸ்டீன்பெக் பக்கத்து ஊர்க்காரர். அவரது ஊரான சாலினாஸ் இங்கிருந்து ஒரு ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அவருக்கு அங்கே ஒரு ம்யூசியம் இருக்கிறது.
 30. The Master and Margarita by Mikhail Bulgakov – கேள்விப்பட்டதே இல்லை.
 31. BONUS: How To Cook Everything by Mark Bittman – கேள்விப்பட்டதே இல்லை.
 32. BONUS: Honeymoon with My Brother by Franz Wisner – கேள்விப்பட்டதே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மூலப்பதிவு
லா.ச.ரா.வின் அபிதா

Advertisements

From → Book Recos

32 பின்னூட்டங்கள்
 1. Ajay permalink

  “The Master and Margarita by Mikhail Bulgakov”
  Good Satire

  Like

 2. இந்தப்பட்டியலில் நான் வாசிக்காத பத்துநூல்கள் உள்ளன. யார் இப்படி பட்டியல்போட்டலும் விகிதாச்சாரம் இப்படித்தான் இருக்கும்போல.

  இந்தப்பட்டியல்போட்ட ஆசாமி கேள்விப்பட்டதை வாசிப்பவரே ஒழிய தனக்கான சொந்த ரசனை அற்றவர். ஆகவே நூல்கள் நடுவே அவருக்கான சொந்த கருத்தின் மையச்சரடு ஓடவில்லை. அனேகமாக அறுபது எழுபதுகளில் அமெரிக்கச் சூழலில் அதிகம் பேசப்பட்ட புனைகதைகளை சொல்லியிருக்கிறார், அவ்வள்வுதான்

  இந்தப்பட்டியலில் உள்ள கணிசமான நூல்களை மனமுதிர்ச்சி உடையவர்கள் பொருட்படுத்தவேண்டிய தேவை இல்லை. அவை ஒரு காலகட்டத்துக்குள் மட்டும் நிற்பவை. அப்போது பேசப்பட்டு அடுத்த காலகட்டத்தில் பொருளிழந்து மறைபவை.

  உதாரணமாக கீழ்க்கண்ட நூல்கள். 1. லோலிதா. இன்று அதன் நடையழகை மட்டும் சிலர் கொண்டாடுவார்கள். அதில் தத்துவ ஆழமோ கவிதை நுட்பமோ மானுடஎழுச்சிகளோ ஏதுமில்லை. 2 கிரேப்ஸ் ஆஃப் ராத் சாதாரண முற்போக்கு நாவல். கேஸி என்ற ஒரே ஒருகதாபாத்திரம் கொஞ்சம் கிறிஸ்துவை நினைவூட்டும். 3. கேச்சர் இன் த ரை பதின்பருவத்தின் சஞ்சலத்தை, களங்கமின்மையின் அழிவை சொல்லக்கூடியது. அதைவிட முக்கியமான ஆயிரம் நூல்கள் உள்ளன 4. ஃபார் ஹூம் த பெல் டால்ஸ் சாதாரணமான ஒரு போர்ப்பின்புல நாவல். அராஜகத்தின் சித்திரங்கள் உள்ளது. ஹெமிங்வேயி எந்த நூலும் இந்தவகையான முப்பதுக்குள் வரத்தகுதி கொண்டவை அல்ல. 5 ஆர்வெலின் நாவல்களும் காலகட்டத்துக்குள் நிற்பவை. அவரது 1984 மட்டுமே ஓரளவேனும் மானுடனின் எப்போதைக்குமான சிக்கலாகிய அரசின் அதிகாரம் பற்றி பேசுகிறது. ஆனால் அதைவிட பிரமாதமாக பேசிய பல நாவல்கள் உள்ளன. 6. சித்தார்த்தாவும் நல்ல நாவலே ஒழிய மேலான ஆக்கம் அல்ல. 7. டேவிட் காப்பர் ஃபீல்ட் முழுமையாகவே காலாவதியான நாவல். ஒரு வரலாற்றுச்சின்னம். 8. டோல்கின் ஃபூ!

  இந்தப்பட்டியலில் புனைவிலக்கியத்தில் இந்தவகை 30க்குள் வரும் தகுதிகொண்ட ஒரே நாவல் போரும் அமைதியும் மட்டுமே. மார்க்யூஸ் நாவலை பரிசீலிக்கலாம்.

  ஆர்வி இந்தப்பட்டியலில் வாசிக்க மிகமிக எளிதான நாவல் ’போரும் அமைதியும்’தான். எட்டாம் வகுப்பு கடைசி விடுமுறையில் என் மகள் சைதன்யா வாசிக்க புத்தகம் கேட்டாள். கொடுத்தேன். 15 நாளில் உணர்ச்சிகரமாக வாசித்து முடித்தாள். கண்ணீருடன். இனி ஒருபோதும் அவள் எளிய நாவல்களுக்குள் நிறைவு காணமுடியாது

  ஜெ

  Like

 3. எனக்கு இன்னும் முப்பது வயது ஆகவில்லை;ஏனென்றால் இதில் எதையுமே நான் படித்ததில்லை !!

  Like

  • சந்திரசேகரன், அடடா எனக்கு இது தோன்றாமல் போய்விட்டதே!

   Like

  • பட்டியலைப் படித்தவுடன் பயந்துவிட்டேன். அடடே…கொலைமா பாதகம் ஏதோ செய்துவிட்டோம் என்று.

   உண்மை விளக்கிய சந்திரசேகரனுக்கு நன்றி! 🙂

   Like

 4. அன்புள்ள ஜெயமோகன்,

  லிஸ்ட் என்பதே ரசனையின் அடிப்படையில் எழுதப்படுவதுதானே! அதுவும் முப்பது வயதுக்குள் என்றால் கொஞ்சம் பக்குவம் குறைந்த வயது, இளமைக் காலத்தில் குறிப்பாக பதின்ம வயதில் தன்னைக் கவர்ந்த புத்தகங்களுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுக்கத் தோன்றும். என்னை அந்த வயதில் கேட்டிருந்தால் நான் நிச்சயமாக எய்ன் ராண்டை, பி.ஜி. வுட்ஹவுசைக் குறிப்பிட்டிருப்பேன். இன்று அவர்களைத் தாண்டி வந்தது, அந்த இளமைக் கால என்ஜாய்மென்ட் போனது துரதிருஷ்டம் என்று சில சமயம் தோன்றுகிறது. 🙂 ஆனால் எய்ன் ராண்டையும், பி.ஜி. உட்ஹவுசையும் அந்த வயதில் – முப்பது கூட கொஞ்சம் லேட், இருபது வயதுக்குள்ளே படிக்க வேண்டியவர்கள் என்றே கருதுகிறேன். ஷெர்லாக் ஹோம்ஸை, பொன்னியின் செல்வனை, ஹாரி பாட்டரை பதின்ம வயதில் படிப்பதுதான் சுகம், பொருத்தம் என்று தோன்றுகிறது.

  நீங்கள் படிக்காமல் விட்டது பத்து என்றால் நான் படித்ததே பத்துதான் இருக்கும். 🙂 ஆனால் அந்தப் பத்தில் எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் – To Kill a Mockingbird, 1984, One Hundred Years, Wind in the Willows, Art of War – இருக்கின்றன. நான் படித்த காலகட்டத்தில் எனக்கு Catcher in the Rye பிடித்திருந்தது. மீண்டும் படித்தால் பிடிக்குமோ இல்லையோ தெரியாது. படிக்காதவற்றிலும் மூன்று புத்தகங்களாவது – War and Peace, Crime and Punishment, Walden – படித்தே ஆக வேண்டிய லிஸ்டில் இருக்கின்றன. படித்த சில பக்கங்களை வைத்து வால்டன் எனக்கு பிடிக்கும் என்று தோன்றுகிறது. சரியான மூட் வர பல வருஷங்களாகக் காத்திருக்கிறேன். 🙂

  டோல்கீனை தொன்மங்கள் வரிசையில் வைக்க வேண்டிய ஒரு புத்தகத்தை உருவாக்கியவர் என்று கருதுகிறேன். அவர் மகாபாரதமோ, ராமாயணமோ எழுதவில்லைதான். ஆனால் கிங் ஆர்தருக்கு, பியோவுல்ஃபுக்கு கொஞ்சம் அருகில் வரக்கூடிய தொன்மத்தை உருவாக்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன். சரி அவரை விட்டுவிடுவோம், அதில் நமக்கு இசைவு ஏற்படாது. 🙂

  முதலில் வார் அண்ட் பீசை தேடி எடுக்க வேண்டும், முடிந்தால் இந்த மாதமே படித்துவிடுகிறேன்…

  Like

  • ramanujam permalink

   அன்புள்ள ஆர்.வீ
   அற்புதமான பதிவு
   crime and punishment war and peace கட்டாயம் படிக்கவும்
   முப்பது வயதுக்கு மேல்தான் இரண்டும் ரசிக்கும்
   அன்புடன்
   ராமானுஜம்

   Like

 5. இந்த லிஸ்ட்டில் ஏறக்குறைய இருபது புத்தகங்களை நான் ஏற்கனவே படித்துவிட்டேன் என்று சொல்லி பெருமை அடித்துக் கொள்ளலாம் என்றால் அதற்குள் இவையெல்லாம் புத்தகங்களே அல்ல பிட் நோடிஸ்கள் என்று ஜெமோ சொல்லி ஆட்டத்தை கலைத்துவிட்டார்…ஸ்டீன்பெக் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்…அமெரிக்காவில் இருந்து வந்த சோசலிசக் குரல்…ஜெமோ குறிப்பிட்ட அந்த ஸ்டீன்பெக் புத்தகத்துக்கு நோபல் பரிசு கிடைத்தது…அவர் எல்லா நாவல்களிலுமே ஞானி மாதிரி ஒரு ஆள் வந்து பேசிக் கொண்டே இருப்பார்…[பாலகுமாரனில் வருவது போல] இதில் பத்து தடவையாவது படிக்க முயன்று தோற்ற புத்தகம் ஜெமோவின் மகள் 15 நாளில் முடித்து விட்ட போரும் அமைதியும் ..நான் ஒரு இலக்கியத் தற்குறி போல் இருக்கிறதே…..

  Like

 6. natbas permalink

  தான் தன் முப்பதாவது வயதுக்குள் படிக்கிற புத்தகத்தால் ஒருத்தருக்குப் பயன் இருக்கிறதென்றால் நிச்சயமாக ஜார்ஜ் ஆர்வெல்லை ஒரு பார்வை பார்க்க வேண்டும். அரசியல் சார்பு உள்ளவர்கள் கையில் சிக்கி மொழி எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை சூப்பராக நிறைய இடங்களில் எழுதி இருக்கிறார். உதாரணத்துக்கு இந்தக் கட்டுரை- http://orwell.ru/library/essays/politics/english/e_polit

  இந்தப் பத்தியைப் பாருங்கள்-

  Here is a well-known verse from Ecclesiastes:

  “I returned and saw under the sun, that the race is not to the swift, nor the battle to the strong, neither yet bread to the wise, nor yet riches to men of understanding, nor yet favour to men of skill; but time and chance happeneth to them all.”

  Here it is in modern English:

  “Objective considerations of contemporary phenomena compel the conclusion that success or failure in competitive activities exhibits no tendency to be commensurate with innate capacity, but that a considerable element of the unpredictable must invariably be taken into account.”

  🙂

  எதற்காக இல்லையென்றாலும் கம்யூனிசம் மற்றும் அரசியல் சார்பு செய்தி/ கட்டுரைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியாவது ஆர்வெல்லின் அனிமல் பார்மைப் படிக்கச் சொல்லலாம்.

  Like

 7. போரும் அமைதியும் வாசிக்க சிறந்த வழி ஒன்றுண்டு. முதல் ஐம்பது பக்கங்களில் வரும் பெயர்களையும் அவர்களின் உறவுமுறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வது. அந்த வம்சவரிசை நினைவில் நின்றால் பிரச்சினையே இல்லை. இரண்டு என்ன ஆனாலும் சரி என 100 பக்கம் தாண்டிவிடுவது. பிறகு அதுவே கொண்டுசெல்லும்.

  ஸ்டீன்பெக்கின் பாணி நடுவே வரும் உபதேசம். கிரேப்ஸ் ஆப் ராத்தில் ஒரு அத்தியாயம் கதை அடுத்தது உபதேசம் மீண்டும் கதை. சில இடங்கள் மனசை தொடும். பிழைப்பு தேடி கலிஃபோர்னியா செல்லும் வழியில் யாரோ ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் தாத்தாவை புதைத்துச்செல்லும் இடம்…

  Like

 8. க்ரேப்ஸ் ஆப் ராத் அமெரிக்காவில் வந்த சமயம் பல மாநிலங்களில் தடை செய்யப் பட்டு அவரது உருவ பொம்மை எல்லாம் எரிக்கப் பட்டது.அயன் ராண்டுக்கு நல்லதொரு முறி மருந்தாக அவரைப் படிக்கலாம்.ஸ்டீன்பேக்கின் சிறந்த புத்தகமாக நான் கருதுவது ஈஸ்ட் ஆப் ஈடன் தான்…சோசலிசத்தை எல்லாம் விட்டுவிட்டு அவர் எழுதின நாவல்.அதில் வருகிற கேதி மறக்க முடியாத ஒரு எதிர் பாத்திரம்.evil என்கிற கிறித்துவ கருதுகோளின் முழுவடிவம் அந்த பாத்திரம்.அவர் கதைகளில் நிறைய உபதேசம் வரும் என்பது உண்மையே.பாலகுமாரனுடன் ஒப்பிட்டது அதனால்தான்….

  போரும் அமைதியும் ஜெமோ சொன்னது போல பாத்திரங்களின் குவியல்..யார் ஆண்ட்ரூ யார் ஆண்ட்ரூ இல்லை என்று நினைவு வைத்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது.பத்து தடவையும் முதல் நூறு பக்கத்தோடு தடுக்கி விழுந்து விடுவேன்.10x 100….என்று நினைத்தால்…..

  ஜெமோவின் ஆங்கில நூல் பரிந்துரைப் பட்டியலுக்காக காத்திருக்கிறேன்….

  Like

 9. போகன், எனக்கென்னவோ ஸ்டீன்பெக்கைப் படிப்பதில் ஒரு தயக்கம். பல வருஷங்களுக்கு முன் படித்த, பல நண்பர்கள் சிலாகித்த, திரைப்படமாக எல்லாம் வந்த, Of Mice and Men பிடிக்கவே இல்லை. Grapes of Wrath சைஸ் வேறு பயமுறுத்துகிறது. ஜெயமோகன் வேறு நேரத்தை ஏன் வீணடிக்கிறாய் என்கிறார். 🙂 சின்ன புத்தகமான Pearl படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.

  பாஸ்கர், எனக்கு ஆர்வெல் ஓரளவு பிடிக்கும். Homage to Catalonia எனக்குப் பிடித்த ஒரு புத்தகம். ஆனால் அவரது 1984, Animal Farm எல்லாம் ஒரு டிக்மார்க்தான் என்று நினைக்கிறேன்.

  Like

  • natbas permalink

   Down and out in London and Paris? எத்தனை தடவை வேனடுமானாலும் படிக்கலாமே… Shooting an Elephant? – Colonialism பற்றித் தீவிரமான கருத்துகள் வைத்திருந்தார்.

   எனக்குத் தெரிந்து நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை அருமையாக எழுதி இருக்கிறார். உழைப்பவர்களின் வாழ்க்கை குறித்து உண்மையான அக்கறையோடு கதை கட்டுரை வடிவங்களில் வாழ்நாள் பூரா விவாதித்தவர். அந்த அக்கறையில் அரசியல் கோட்பாடுகளைக் கூடத் தூக்கி எறிந்தவர். அதற்காகவாவது அவர் பேரை மறக்கக் கூடாதென்று முப்பதோடு ஒன்றாக சேத்துக்குங்க சார்… ஆர்வெல்லை ஒரேயடியா ஓரங்கட்டறது அநியாயம்.

   Like

 10. அவருடைய சின்ன புத்தகங்கள் எதுவுமே அவ்வளவு நன்றாக இருக்காது.travels with charley உட்பட.பியர்ல்,.mice and men .கூட அப்படியே…சிலரால் பெரிதாகத்தான் எழுதவரும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.ஈஸ்ட் ஆப் ஈடன் கொஞ்சம் படித்துப் பாருங்கள்…ஆனால் அதுவும் பெரிசுதான்…கிரேப்ஸ் ஆப் ராத் ஒலிப் புத்தகமாக கிடைக்கிறது..அதனுடைய வானொலி நாடக ஆக்கமே கூட நன்றாக இருந்தது..அமெரிக்காவில் அதிக முறை வானொலி நாடகமாக ஆக்கப் பட்ட படைப்புகளில் ஒன்று.காரணம் எளிதே.சம்பாசனைகள் மூலமாகவே அவர் கதையை நகர்த்தி விட முடியும்.இணையத்தில் தேடினால் கிடைக்கும்..[இதே போல் விஷ்ணுபுரத்தை ஒரு வானொலி நாடகமாக ஆக்கிவிடவேண்டும் என முயற்சித்தால் விளைவு எப்படி இருக்கும் என்று என் புத்தி ஏனோ விபரீதமாக யோசிக்கிறது]

  போரும் அமைதியும் படிப்பதற்கு ஜெமோ சொன்ன அதே போல் அறிவுரையை நான் குடிப்பதற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது பலர் சொல்லி இருக்கிறார்கள்!முதல் இரண்டு பெக் மட்டும் கண்ணா கண்ணை மூடிட்டு குடிச்சுடு .அப்புறம் அது தானா உள்ள போய்டும் என்பார்கள்.படிப்பதற்கும் அதே உத்திதான் போல் இருக்கிறது..

  Like

  • natbas permalink

   Of Mice and Men எனக்கு ரொம்பப் பிடித்தமான புத்தகம். கதை கவிதை விஷயத்தில் நம் ரசனை படைப்புகளை விட நம்மைத்தான் எடை போட்டுச் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

   ஸ்டீன்பெக்கின் இந்த அருமையான கதையைப் பற்றி அவ்வளவு நன்றாக இருக்காது என்று ஒரு அபிப்பிராயம் எழுந்து அதை யாரும் எதுவும் சொல்லவில்லை என்ற அவப்பெயர் வரக்கூடாதென்பதற்காக இதைப் பதிவு செய்கிறேன் 🙂

   Like

 11. One Hundred Years of Solitude by Gabriel García Márquez

  இந்த புத்தகம் முழுவதும் படிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தாலே ஆச்சரியம் தான். முதல் 50 பக்கம் தாண்டுவதற்குள் மூச்சு திணறிவிட்டது. புத்தகத்தை மூடிவிட்டு விக்கிப்பீடியாவில் என்ன விஷயம் என்று பார்த்தால் மேஜிகல் ரியலிசமாம் போர்ஹேவின் வழியில். சுத்தம்!

  Like

 12. இந்த பட்டியலையும் இதன் மீதான விவாதங்களையும் பார்க்கும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர் நான் திண்ணை இணையதளத்தில் இதேபோல முக்கியமான நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் பட்டியல் ஒன்றை அளித்தேன். அந்தப்பட்டியல் இப்போது என் இணையதளத்தில் இருக்கிறது. ஆர்வி ஏற்றோ மறுத்தோ ஒவ்வொரு முறையும் மேற்கோள்காட்டுவது அது. இன்று அந்தப்பட்டியல் பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிந்ததாக உள்ளது. அதை ஏற்றோ மறுத்தோ வேறு பட்டியல்கள் வெளியாகின்றன. இந்தப்பட்டியல்களின் நகல்களுடன் புத்தகச்சந்தைகளுக்கு வரும் ஏராளமானவர்களை நான் கண்டிருக்கிறேன், பதிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்பட்டியல்களில் இடம்பெற்ற ஏறத்தாழ எல்லா ஆக்கங்களும் மறுபதிப்பாகி விட்டன இப்போது.

  நான் இந்திய இலக்கியங்கள் வரிசையில் எழுதிய கட்டுரைகளில் [கண்ணீரை பின் தொடர்தல்] அளித்த நாவல் பட்டியலில் உள்ள நாவல்கள் இன்று மீண்டும் பரவலாக வாசிக்கப்படுகின்றன. அவற்றில் கணிசமானவை முப்பது நாற்பது வருடங்களாக மறுபதிப்பு காணாதவை. அவை மறுபதிப்புக்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள் எனக்கு நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்கள்.

  ஆனால் இந்தப்பட்டியல்களை நான் அளித்த காலகட்டத்தில் எத்தனை எதிர்ப்புகள், வசைகள். தமிழையே அழிக்கக்கூடிய ஒரு மாபெரும் சதிவேலையை நான் செய்வதாக சொல்லப்பட்டது. விடப்பட்ட ஒவ்வொரு நூலும் ஒரு கிளாசிக் என்றும் நான் அவற்றை விடுவதற்கே இப்பட்டியலை அளிப்பதாகவும் சொன்னார்கள். என்னுடைய நாவல்களை பட்டியலில் சேர்த்தமை மிகமோசமான சுயவிளம்பர உத்தி என்றார்கள். கடைசியாக பட்டியல் போடுவதே ஒரு கேவலமான உத்தி, செய்யவே கூடாது என்றார்கள். அப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்றும் அதே வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். வேறு விஷயங்களில். அவர்களால் அவற்றை மட்டுமே செய்ய முடியும்.

  நான் அப்போது மீண்டும் மீண்டும் விளக்கினேன். உலகம் முழுக்க இந்த வகையான பட்டியல்கள் போடப்படுகின்றன என்றும் அது தரமான வாசிப்பை உருவாக்குவதற்கான வழிமுறை என்றும் சொல்லி பல பட்டியல்களை சுட்டிக்காட்டினேன். எந்த பட்டியலும் முழுமையானதாக இருக்காது, ஆகவே என் பட்டியலுடன் உடன்படாதவர்கள் இன்னொரு பட்டியல் போடலாம், அவ்வாறு பல பட்டியல்கள் வரும்போதுதான் தரமான நூல்களுக்கான ஒரு பொது தெரிவு உருவாகும் என்றேன். என்னுடைய பட்டியல்கள் ஒரு தெளிவான இலக்கிய அளவுகோலின் அடிப்படை கொண்டவை. அதன் அடிப்படையில் ஒரு விமர்சகனாக நான் முன்வைக்கும் படைப்புகளில் என் ஆக்கங்கள் இருக்க கூடாதென்றில்லை. இது தீர்ப்பு அல்ல. இது ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் வெளிப்பாடே என்றேன்.

  இன்று யோசிக்கும்போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஒரு சர்வசாதாரணமான விஷயத்தை, உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றை, தமிழில் செய்வதற்கு எத்தனை எதிர்ப்புகளை , எத்தனை அவதூறுகளை சந்திக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு விளக்க வேண்டியிருக்கிறது!

  ஆனால் அந்த

  Like

 13. அன்புள்ள ஜெயமோகன்,

  நீங்கள் திண்ணையில் எழுதிய கட்டுரைகள் சரியாக நினைவில்லை. ஆனால் ஃ போரம்ஹப்பில் நிகழ்ந்த விவாதங்கள் நினைவிருக்கின்றன. முதல் முறையாக “வணிக” எழுத்துகளுக்கு ஒரு இடம் உண்டு என்று எனக்குத் தெரிந்து சொன்ன “சீரிய” எழுத்தாளர் நீங்கள்தான். உங்கள் நாவல்களை பட்டியலில் சேர்த்ததற்கு கன்னாபின்னா என்று திட்டு வாங்கியதும் நன்றாக நினைவிருக்கிறது. அப்படி சேர்த்துக் கொள்ள உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று நானும் அப்போது வாதாடினேன் (Bhoori என்ற பேரில்) , உங்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ.

  பட்டியலே போடக்கூடாது என்று சொன்னவர்களைப் பற்றி என்னத்தை சொல்வது? தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான் பழமொழிதான் நினைவு வருகிறது…

  Like

 14. இந்த பட்டியல் போடுவது என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நான் தமிழ் புத்தகங்கள் வாங்குவதே ஜெமோ, எஸ்.ரா. போன்றவர்களின் பரிந்துரை மூலம் தான். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த பட்டியல்கள் மூலம் சரியான எழுத்தாளர்களை சென்றடைய முடிகிறது. அதன் மூலம் இவர்கள் பட்டியலில் இல்லாத சில கதைகள் மிகவும் பிடித்து விடுகிறது. உதாரணமாக புதுமைப் பித்தனின் “மகா மசானம்” கூறலாம்.இதே போல் தமிழ் மற்றும் பிற மொழிக் கவிதைகளுக்கு ஒரு பட்டியல் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  Like

 15. natbas permalink

  பட்டியல்கள் மிக்க இன்றியமையாதவை. அவற்றைத் தொகுப்பதில் பயன் இருக்கிறது என்பதை விடவும், பட்டியல்களைப் படிப்பதிலேயே ஒரு சுவையும் கூட இருக்கிறது. ஆங்கில மொழியில் இதை எல்லாரும் அனுபவித்து செய்கிறார்கள.

  Goodreads என்ற வாசகர் தளத்தில் வகை வகையாக எவ்வளவு பட்டியல்கள் இருக்கின்றன பாருங்கள்-
  http://www.goodreads.com/list

  Like

  • பாஸ்கர் மற்றும் பாஸ்கர் (நட்பாஸ்), மறுமொழிக்கும் சுட்டிக்கும் நன்றி! To Kill a Mockingbird-க்கு முதல் இடம் என்பது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான்…

   Like

 16. இரண்டு பட்டியல்களிலும் சுவையாக இருந்தன.எனக்குப் பிடித்த மேலும் சில எழுத்தாளர்கள் அதில் இருந்தது மகிழ்வைத் தந்தது.Charlotte bronte,Henry miller போன்றவர்கள்.சாரு போன்றவர்களின் தொடக்கம் மில்லர் தான் என்று நான் கருதுகிறேன்.ப்ரொண்டே சகோதரிகள் இருவருமே பட்டியலில் உள்ளது வியப்பாகத் தெரிந்தது.க்ராஹாம் க்ரீன் போன்றோரை ஏன் விட்டுவிட்டார்கள் என்று புரியவில்லை.செந்தில் குமார் கொடுத்த இரண்டு பட்டியல்களிலும் கிரேப்ஸ் ஆப் ராத் இருப்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.சமீபத்தில் பென்குயின் நிறுவனம் வெளியிட்ட இலக்கிய அகராதியிலும் அது நவீன யுகக் காவியங்கள் என்ற வரிசையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது!உண்மையில் அந்த நாவல் அமெரிக்காவின் பொதுவான உணர்வுத் திசைக்கு எதிரானது சோசலிசம் பேசுவது..எனினும் அது தொடர்ந்து வாசிக்கப் படுவது சில கேள்விகளை எழுப்புகிறது.மனசாட்சியின் குரல்?

  Like

 17. பாஸ்கர் (நட்பாஸ்), Down and out in London and Paris எனக்கும் அந்தக் காலத்தில் பிடித்திருந்தது. ஆர்வெல்லை ஓரம் கட்டவில்லை. ஆனால் ஆர்வெலின் புத்தகங்களில் மிகவும் சிறந்த 1984 , Animal Farm இரண்டுமே காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. அவை இல்லாவிட்டால் ஆர்வெலின் இலக்கிய இடம் கொஞ்சம் சந்தேகம்தான்…

  போகன், Grapes of Wrath என்றைக்காவது பெண்ணுக்கு பாடமாக வரும், அப்போது அவளுக்கு உதவி செய்யவாவது படித்தாக வேண்டும் என்று நினைக்கிறேன்…

  முரளி, மூச்சைப் பிடித்துக்கொண்டு இன்னொரு ஐம்பது பக்கம் தாண்டிவிட்டால் One Hundred Years of Solitude புத்தகத்தை கீழே வைக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 🙂

  பாஸ்கர், தமிழ் கவிதைகளுக்கு ஜெயமோகனே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார் – http://www.jeyamohan.in/?p=215

  செந்தில்குமார், சுட்டிகளுக்கு நன்றி!

  ராமானுஜம்+கிரி, மறுமொழிக்கு நன்றி!

  Like

 18. அருணா permalink

  ஆர்.வி

  பட்டியலா குடுத்து தாக்கறீங்களே! நான் இதில் 10 படித்திருக்கிறேன். To Kill a mocking bird, 100 years of solitude, Siddhartha எல்லாம் இப்ப படித்தாலும் பிடிக்காலம்னு நினைக்கிறேன். Dale Carniege லாம் எந்த லிஸ்டுலையுமே குடுக்கறது ரொம்ப டூ மச்..

  Tipping point 20 வயசுல ஒரு நல்ல அபுனைவா படிக்கலாம்.

  ஜெ. மோவை போன முறை சந்திச்சப்போ போரும் அமைதியும் படிக்க இதே யோசனையை சொன்னார். பார்ப்போம். அடுத்த வருடமாவது முடிகிறதா என்று. அவரோட 250 தமிழ் சிறுகதைகள் சிபாரிச இந்த வருஷத்துக்குள்ள படிக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.

  Like

 19. அருணா permalink

  ஜெ. மோ – பட்டியல் போட்டு அதற்காக நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு வருத்தங்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல், தமிழில் சமீபமாக படிக்க ஆரம்பித்திருக்கும் என் போன்றோர்க்கு உங்கள் பட்டியல் எல்லாமே பைபிள். ஆங்கில இலக்கியத்திற்கும் ஒன்று சீக்கிரமே போடுவீர்கள் என காத்திருக்கிறேன்.

  என்னை விட மிக சமீபமாக தமிழில் படிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு நான் முதலில் அனுப்புவது உங்கள் பரிந்துரைகள் தான். உங்கள் சிறுகதை பட்டியலில் வலைதளத்தில் என்னெல்லாம் இருக்கிறது என தேடி கிடைப்பனவற்றிற்கு லின்க் கொடுத்து என் நண்பர்களுக்கு நான் அனுப்பி வருகிறேன்.

  Like

  • அருணா, // உங்கள் சிறுகதை பட்டியலில் வலைதளத்தில் என்னெல்லாம் இருக்கிறது என தேடி கிடைப்பனவற்றிற்கு லின்க் கொடுத்து என் நண்பர்களுக்கு நான் அனுப்பி வருகிறேன். // லிங்குகளை இங்கேயும் பதித்துவிடலாம், எங்களுக்கும் அனுப்புங்கள்…

   Like

 20. அருணா permalink

  ஆர்.வி – அன்றே உங்களுக்கு அனுப்பினேன். அவர் குறிப்பிட்டுள்ள 250 ல் 70 கதைகள் இணையத்தில் பிடித்தேன். தேடினால் இன்னும் கிடைக்கலாம்.

  Like

 21. செந்தில் குமார் தேவன் permalink

  அருணா, ஜெ குறிப்பிட்ட கதைகளின் இணைப்புகளைத் தொகுத்துக் கொடுத்தால் அரங்காவிடம் சொல்லி ஜெ தளத்திலேயே கதைகளுக்கான இணைப்பைக் கொடுத்து விடலாம்.
  ஏற்கனவே தொகுத்து வைத்திருப்பதை மட்டுமாவது அனுப்பி வையுங்கள்.

  செந்தில் குமார் தேவன்
  senthilkdevan@gmail.com

  Like

 22. அருணா, செந்தில், அரங்கசாமி மூலமாகவோ அல்லது இங்கோ விரைவில் பதித்துவிடுவோம்…

  Like

Trackbacks & Pingbacks

 1. Tweets that mention முப்பது வயதுக்குள் படிக்க வேண்டிய முப்பது புத்தகங்கள் « சிலிகான் ஷெல்ஃப் -- Topsy.com
 2. பட்டியல்கள்… »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: