உணவு பற்றி இலக்கியங்களில்

எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு. இன்று மீண்டும் தி.ஜா.வின் பாயசம் சிறுகதை படித்தவுடன் நினைவு வந்தது. இன்று தமிழனின் ட்ரேட்மார்க் உணவுகளாக இருக்கும் இட்லி, தோசை, சாம்பார், சட்னி, ஆப்பம் இவை எல்லாம் பற்றி இலக்கியங்களில் வரும் முதல் reference என்ன? எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தேனையும் தினை மாவையும் கடந்ததாகத் தெரியவில்லை. மணிமேகலையில் அட்சய பாத்திரத்தில் சோறு மட்டும்தான் வந்தமாதிரி இருக்கிறது. கம்பர் ஏதாவது விருந்து கிருந்தைப் பற்றி விவரித்திருக்கிறாரா? வந்து போன யுவான் சுவாங், மார்க்கோ போலோ, வாசப் யாராவது என்ன சாப்பாடு கிடைத்தது என்பதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா? பிரதாப முதலியார், கமலாம்பாள், பத்மாவதி, சின்னச் சங்கரன் யாராவது ஏதாவது போகிற போக்கில் சொன்னது நினைவு வருகிறதா?

ஆண்டாள் நம்மாழ்வார் (திருத்திய ஜடாயுவுக்கு நன்றி!) உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் என்று பாடுவதால் வெற்றிலைக்கு ஒரு பழைய reference கிடைக்கிறது. அவ்வையார் பாலையும் தெளிதேனையும் பாகையும் பருப்பையும் பற்றி பாடி இருக்கிறார். எந்தப் பருப்பு தெரியவில்லை.

புகையிலை, கருவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு (துப்பறியும் சாம்பு புத்தகத்தில் உருளைக்கிழங்கை இங்கிலீஷ் கறிகாய் என்கிறாள் வேம்பு), திராட்சை, அன்னாசி, நாவல்பழம், மா, பலா, வாழை, கோழி, ஆடு, மாடு, பன்றி, மான், முயல் என்று ஒரு மகா பெரிய லிஸ்ட் இருக்கிறது. தெரிந்ததை சொல்லுங்களேன், தொகுத்துவிடுவோம்!

பிற்சேர்க்கை:
ஜடாயு தரும் குறிப்புகள்:
பிள்ளையார் துதிப் பாடல்கள் பலவற்றில் உணவு பற்றிக் குறிப்புகள் இருக்கும் – ’மூஷிக வாஹன மோதக ஹஸ்தா’ போன்று. ’கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி’ திருப்புகழ் ரொம்ப பிரபலம். திருப்புகழின் காலம் 15-16ம் நூற்றாண்டு.

இன்னொரு பிரபலமான பிள்ளையார் திருப்புகழ் பக்கரை விசித்ரமணி என்று தொடங்கும். இதில் ஒரு பெரிய பட்சணப் பட்டியலே உள்ளது –
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எட்பொரி அவல் துவரை யிளநீர் வண்-
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு வெள-
ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்

மிக்க அடிசிற்கடலை பக்ஷணமெனக் கொளரு
விக்கின சர்த்தனெனு மருளாழி..

என்று போகும். அருமையான தாளகதி கொண்ட பாடல். அப்படியே கணபதி அசைந்தாடி வந்து பஷணங்களை விழுங்குவது போலவே இருக்கும் பாட்டின் ஓசை!

மேற்சொன்ன திருப்புகழுக்கு சொற்பொருள் விளக்கம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.. அதில் வரும் உணவு வகைகள் –

இக்கு (கரும்பு – இக்ஷு என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம்), அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், துவரை, இளநீர், வண்டெச்சில் (தேன்!!) , பயறு அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை…..

தனிப்பாடல் திரட்டு என்று ஒரு நூல். 15,16,17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல புலவர்களின் கலவையான பாடல்கள் அடங்கியது.. உணவு பற்றி இதில் வரும் ஒரு பாடல் இன்றுவரை மனதில் நிற்கிறது.

சைவ மடத்துத் தம்பிரான் ஒருவரிடம், இன்று என்ன சமைப்பது என்று மடத்து சமையல்காரர் கேட்டாராம். தம்பிரான் பதிலை வெண்பாவில் சொன்னாராம் –
சற்றே துவையல் அரை; தம்பீ ஒரு பச்சடி வை
வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை
காயமிட்டுக் கீரை கடை; கம்மெனவே மிளகு
வாயறைக்க வைப்பாய் கறியே!

ஜீப் “சங்கப்பாடல்களில் ‘பார்ப்பனர் மாவடு சாப்பிடுவது’ என்ற விவரம் வருகிறது” என்று சொல்கிறார்.

அ. முத்துலிங்கம் இங்கே ஒரு புறநானூற்றுப் பாடலை குறிப்பிடுகிறார். என்ன பாட்டு என்று யாருக்காவது தெரியுமா?

கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது. ‘உழாமல் விதைத்து விளைந்த தினைச்சோற்றை காட்டெருமைப் பாலில் கலந்து, மானிறைச்சி கொழுப்பு வெள்ளையாக விளிம்பில் ஒட்டியிருக்கும் பானையை கழுவாமல் அதிலே சமைத்து, வாழையிலையில் பரிமாறி பலரோடு உண்ணும் குதிரை மலைத் தலைவனே’ என்று அந்தப் பாடலில் சொல்லியிருப்பது ஞாபகத்துக்கு வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு (இதை எங்கே தொகுப்பது என்றே தெரியவில்லை.)

கல்கியின் “பாங்கர் விநாயகராவ்”

கல்கி மதுவிலக்கு அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி விமோசனம் என்ற பத்திரிகையில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. எந்த கதையும் சுகமில்லை. பிரசாரம் கதையை விட முக்கியமாக இருக்கும்போது கதையில் இலக்கிய நயம் தொலைந்து போய்விடுகிறது. மேலும் கல்கியின் ஆரம்ப கால சிறுகதைகள் இவை – சுவாரசியம் குன்றாமல் எழுதும் கலையை அவர் இன்னும் முழுதாக தெரிந்துகொள்ளாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். பிற்காலத்திலும் பிரமாதமான சிறுகதைகள் எழுதிவிட்டார் என்று சொல்வதற்கில்லை, ஆனால் தப்பிலி கப் மாதிரி சிறுகதைகள் படிக்கக் கூடியவை.

ஆனால் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். அந்த முன்னுரையில் விமோசனம் பத்திரிகை உருவான விதம், அவருக்கும் ராஜாஜிக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பதை பற்றி எல்லாம் விவரித்திருக்கிறார். பிரமாதமாக இருந்தது. அந்த முன்னுரையைப் பற்றித்தான் இந்தப் பதிவு. இந்த புத்தகம் வானதி பதிப்பகம் வெளியீடு, இதற்காகவே வாங்கலாம்! ஓசியில் படிக்க விரும்புபவர்கள் இங்கே படிக்கலாம். (கட் பேஸ்ட் செய்ய முடியவில்லை.)

1925-28 வாக்கில் ராஜாஜிக்கு கல்கியை அவ்வளவு நன்றாக தெரியாது. கல்கி கதர் போர்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர சென்னை போகும்போது ராஜாஜி அவரை ரயிலில் பார்த்திருக்கிறார். ராஜாஜி ஒரு மதுவிலக்கு பத்திரிகை நடத்த கல்கியை அழைத்துக்கொள்ளலாம் என்ற அவரது எண்ணத்தை கல்கியிடம் சொல்லியிருக்கிறார். கல்கிக்கு இஷ்டம்தான், ஆனால் பத்திரிகை ஆரம்பிக்க நாளாகும் என்பதால் நவசக்தியில் திரு.வி.க.விடம் சேர்ந்திருக்கிறார். மூன்று வருஷம் ராஜாஜியிடமிருந்து மதுவிலக்குப் பத்திரிகை பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒரு நாள் ராஜாஜி சென்னைக்கு வந்திருந்தபோது அவரை கல்கி பார்க்க போயிருக்கிறார். அப்போது என்னவோ காரணத்தால் நவசக்தி வேலையையும் விட்டுவிட்டார். ராஜாஜி நீ சென்னையில் வேலை இல்லாமல் இருந்தால் கெட்டுபபோய்விடுவாய் என்று சொல்லி அவரை திருச்செங்கோட்டுக்கு அனுப்பி இருக்கிறார்.

அங்கே கல்கிக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். இது அந்தக் காலத்தில் போதுமா போதாதா என்று தெரியாது. ஒருத்தருக்குப் போதும் என்றுதான் நினைக்கிறேன். (ஐம்பதுகளில் டீனேஜ் பருவத்தில் இருந்த என் அம்மாவின் அப்போதைய கனவு மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.) கல்கிக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் ராஜாஜியின் மகனான சி.ஆர். நரசிம்மனுக்கு நாற்பதுதான். அந்த நாற்பது ரூபாய் சம்பளத்தில்தான் நரசிம்மன், அப்பா ராஜாஜி, தங்கை லக்ஷ்மி (எதிர்காலத்தில் காந்தியின் மருமகள்) எல்லாரும் வாழவேண்டுமாம்! அதுவும் 17×10 அடி உள்ள ஒரே அறை கொண்ட வீட்டில்! (அந்த வீடுதான் அங்கே மாளிகை என்றும் அதைக் கண்டு தனக்கு பொறாமை உண்டு என்றும் கல்கி எழுதுகிறார்.)

பணக்கார வக்கீல் தன் பங்களா, ஆயிரக்கணக்கில் வருமானம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாற்பது ரூபாய் சம்பளத்தில் எதற்கு வாழ்ந்தார்? (இதே போல் பெரியாரும் வருமானம் வரும் தோப்புகளை எல்லாம் அழித்தார்) சரி அவருக்கு பைத்தியம் என்றாலும், கல்கி, மற்றும் பலரும் எதற்கு அவர் பேச்சை கேட்டுக்கொண்டு சொற்ப சம்பளத்தில் அங்கே வேலை செய்தார்கள்?

மதுவிலக்குக்காக ஒரு பத்திரிகை – இது எப்படி விற்கும் என்று தெரியவில்லை. கல்கிக்கும் இதே சந்தேகம்தான். பத்து இதழ்கள் வந்திருக்கின்றன. ராஜாஜியும் கல்கியுமே எல்லா பக்கங்களையும் நிரப்பி இருக்கிறார்கள். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போனதும் கல்கி இதுதான் சான்ஸ் என்று இழுத்து மூடிவிட்டாராம்.

இரண்டு கேள்விகள்:

  1. ஒரு இடத்தில் அந்த ஊரில் பஞ்சம் என்றும் இந்த ஆசிரமம் மூலம் கதர் நூற்பதன் மூலம் லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். கதர் விற்று அவ்வளவு லாபம் வந்திருக்கப்போவதில்லை. பிறகு லட்சங்கள் எங்கிருந்து வந்தன?
  2. சில ஹரிஜன்கள், பிராமணர் அல்லாதார் பற்றி குறிப்பிட்டாலும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் பிராமணர்கள் போலத்தான் தோன்றுகிறது. காங்கிரஸில் அப்போது இருந்த பிராமணர் அல்லாதோர் (திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, முத்துரங்க முதலியார் (முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் மாமனார்), டி.எஸ்.எஸ். ராஜன், ஜே.சி. குமரப்பா, சர்தார் வேதரத்தினம் பிள்ளை) யாருமே இதில் பங்கெடுத்துக்கொள்ள முன் வரவில்லையா? இல்லை பிராமணர்களுக்கு முன்னுரிமை இருந்ததா?
  3. அருமையான memoir-க்காக இந்த புத்தகத்தை – இல்லை இல்லை முன்னுரையைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். இந்தப் பதிவையே non-fiction என்ற பிரிவில்தான் இணைத்திருக்கிறேன்.

    பின்குறிப்பு: கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து சிறு திருத்தங்களுடன் மீள்பதிக்கப்பட்டது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் non-fiction

    தொடர்புடைய சுட்டி: சென்னை லைப்ரரி தளத்தில் கல்கியின் முன்னுரை