Skip to content

உணவு பற்றி இலக்கியங்களில்

by மேல் திசெம்பர் 6, 2010

எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு. இன்று மீண்டும் தி.ஜா.வின் பாயசம் சிறுகதை படித்தவுடன் நினைவு வந்தது. இன்று தமிழனின் ட்ரேட்மார்க் உணவுகளாக இருக்கும் இட்லி, தோசை, சாம்பார், சட்னி, ஆப்பம் இவை எல்லாம் பற்றி இலக்கியங்களில் வரும் முதல் reference என்ன? எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தேனையும் தினை மாவையும் கடந்ததாகத் தெரியவில்லை. மணிமேகலையில் அட்சய பாத்திரத்தில் சோறு மட்டும்தான் வந்தமாதிரி இருக்கிறது. கம்பர் ஏதாவது விருந்து கிருந்தைப் பற்றி விவரித்திருக்கிறாரா? வந்து போன யுவான் சுவாங், மார்க்கோ போலோ, வாசப் யாராவது என்ன சாப்பாடு கிடைத்தது என்பதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா? பிரதாப முதலியார், கமலாம்பாள், பத்மாவதி, சின்னச் சங்கரன் யாராவது ஏதாவது போகிற போக்கில் சொன்னது நினைவு வருகிறதா?

ஆண்டாள் நம்மாழ்வார் (திருத்திய ஜடாயுவுக்கு நன்றி!) உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் என்று பாடுவதால் வெற்றிலைக்கு ஒரு பழைய reference கிடைக்கிறது. அவ்வையார் பாலையும் தெளிதேனையும் பாகையும் பருப்பையும் பற்றி பாடி இருக்கிறார். எந்தப் பருப்பு தெரியவில்லை.

புகையிலை, கருவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு (துப்பறியும் சாம்பு புத்தகத்தில் உருளைக்கிழங்கை இங்கிலீஷ் கறிகாய் என்கிறாள் வேம்பு), திராட்சை, அன்னாசி, நாவல்பழம், மா, பலா, வாழை, கோழி, ஆடு, மாடு, பன்றி, மான், முயல் என்று ஒரு மகா பெரிய லிஸ்ட் இருக்கிறது. தெரிந்ததை சொல்லுங்களேன், தொகுத்துவிடுவோம்!

பிற்சேர்க்கை:
ஜடாயு தரும் குறிப்புகள்:
பிள்ளையார் துதிப் பாடல்கள் பலவற்றில் உணவு பற்றிக் குறிப்புகள் இருக்கும் – ’மூஷிக வாஹன மோதக ஹஸ்தா’ போன்று. ’கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி’ திருப்புகழ் ரொம்ப பிரபலம். திருப்புகழின் காலம் 15-16ம் நூற்றாண்டு.

இன்னொரு பிரபலமான பிள்ளையார் திருப்புகழ் பக்கரை விசித்ரமணி என்று தொடங்கும். இதில் ஒரு பெரிய பட்சணப் பட்டியலே உள்ளது –
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எட்பொரி அவல் துவரை யிளநீர் வண்-
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு வெள-
ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்

மிக்க அடிசிற்கடலை பக்ஷணமெனக் கொளரு
விக்கின சர்த்தனெனு மருளாழி..

என்று போகும். அருமையான தாளகதி கொண்ட பாடல். அப்படியே கணபதி அசைந்தாடி வந்து பஷணங்களை விழுங்குவது போலவே இருக்கும் பாட்டின் ஓசை!

மேற்சொன்ன திருப்புகழுக்கு சொற்பொருள் விளக்கம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.. அதில் வரும் உணவு வகைகள் –

இக்கு (கரும்பு – இக்ஷு என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம்), அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், துவரை, இளநீர், வண்டெச்சில் (தேன்!!) , பயறு அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை…..

தனிப்பாடல் திரட்டு என்று ஒரு நூல். 15,16,17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல புலவர்களின் கலவையான பாடல்கள் அடங்கியது.. உணவு பற்றி இதில் வரும் ஒரு பாடல் இன்றுவரை மனதில் நிற்கிறது.

சைவ மடத்துத் தம்பிரான் ஒருவரிடம், இன்று என்ன சமைப்பது என்று மடத்து சமையல்காரர் கேட்டாராம். தம்பிரான் பதிலை வெண்பாவில் சொன்னாராம் –
சற்றே துவையல் அரை; தம்பீ ஒரு பச்சடி வை
வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை
காயமிட்டுக் கீரை கடை; கம்மெனவே மிளகு
வாயறைக்க வைப்பாய் கறியே!

ஜீப் “சங்கப்பாடல்களில் ‘பார்ப்பனர் மாவடு சாப்பிடுவது’ என்ற விவரம் வருகிறது” என்று சொல்கிறார்.

அ. முத்துலிங்கம் இங்கே ஒரு புறநானூற்றுப் பாடலை குறிப்பிடுகிறார். என்ன பாட்டு என்று யாருக்காவது தெரியுமா?

கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது. ‘உழாமல் விதைத்து விளைந்த தினைச்சோற்றை காட்டெருமைப் பாலில் கலந்து, மானிறைச்சி கொழுப்பு வெள்ளையாக விளிம்பில் ஒட்டியிருக்கும் பானையை கழுவாமல் அதிலே சமைத்து, வாழையிலையில் பரிமாறி பலரோடு உண்ணும் குதிரை மலைத் தலைவனே’ என்று அந்தப் பாடலில் சொல்லியிருப்பது ஞாபகத்துக்கு வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு (இதை எங்கே தொகுப்பது என்றே தெரியவில்லை.)

Advertisements

From → Reading

26 பின்னூட்டங்கள்
 1. சுவையான ஆய்வுதான். யாராவது நிறைய தமிழ் இலக்கியங்கள் அறிந்தவர்கள்தான் இவைகளை பற்றி சொல்ல இயலும்.
  நாம் இன்று பயன்படுத்தும் நிறைய காய்கறி ,பழங்கள் கூட வெளிநாட்டு பிறவிகள்தான்.
  உருளை,தக்காளி,பீன்ஸ்,பப்பாளி போன்றவைகள் எல்லாம் சங்க காலத்தில் இருக்க வாய்ப்பில்லை.

  Like

  • // உருளை,தக்காளி,பீன்ஸ்,பப்பாளி போன்றவைகள் எல்லாம் சங்க காலத்தில் இருக்க வாய்ப்பில்லை. // காக்கு மாணிக்கம், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்தில் இருந்த காய்கறிகள் என்னென்ன என்று ஏதாவது reference இருக்கும் இல்லையா? கீரை மட்டும்தானோ என்று தோன்றுகிறது…

   Like

 2. //பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்//

  இதென்ன காக்டெய்ல்? எப்படி இருக்கும் இது?

  – சிமுலேஷன்

  Like

  • பாயசம்! இன்றைக்கும் கடலைப் பருப்பு பாயசத்தில் கடலைப் பருப்பு, வெல்லம் (பாகு), பால் கலந்து செய்வதில்லையா? இனிப்புக்கு தேனும் சேர்த்துக் கொண்டிருப்பார்கள்…

   Like

 3. geep permalink

  “முதலில் இடியாப்பமும் இனிப்பான தேங்காய்ப் பாலும் வந்தன. அந்த மாதிரி இனிய பலகாரத்தை வந்தியத்தேவன் தன் வாழ்நாளில் அருந்தியதில்லை. பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான். பிறகு புளிக்கறியும் சோளமாப் பணியாரமும் வந்தன; அவற்றையும் ஒரு கை பார்த்தான். அப்படியும் அவன் பசி அடங்கவில்லை; கடைசியாக காற்படி அரிசிச் சோறும் அரைப்படி தயிரும் நுங்கினான்!”

  சங்கப்பாடல்களில் “பார்ப்பனர் மாவடு சாப்பிடுவது” என்ற விவரம் வருகிறது.

  Like

 4. // ஆண்டாள் உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் என்று பாடுவதால் //

  அந்த வரி நம்மாழ்வாருடையது.

  ’முட நெய்பெய்து முழங்கை வழிவார’, ‘நூறு தடா அக்கார அடிசில் பராவி வைத்தேன்’ – ஆண்டாள் குறிப்பிடுபவை.

  தனிப்பாடல் திரட்டு என்று ஒரு நூல். 15,16,17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல புலவர்களின் கலவையான பாடல்கள் அடங்கியது.. உணவு பற்றி இதில் வரும் ஒரு பாடல் இன்றுவரை மனதில் நிற்கிறது.

  சைவ மடத்துத் தம்பிரான் ஒருவரிடம், இன்று என்ன சமைப்பது என்று மடத்து சமையல்காரர் கேட்டாராம். தம்பிரான் பதிலை வெண்பாவில் சொன்னாராம் –

  சற்றே துவையல் அரை; தம்பீ ஒரு பச்சடி வை
  வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை
  காயமிட்டுக் கீரை கடை; கம்மெனவே மிளகு
  வாயறைக்க வைப்பாய் கறியே!

  Like

 5. பிள்ளையார் துதிப் பாடல்கள் பலவற்றில் உணவு பற்றிக் குறிப்புகள் இருக்கும் – ’மூஷிக வாஹன மோதக ஹஸ்தா’ போன்று. ’கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி’ திருப்புகழ் ரொம்ப பிரபலம். கேட்டிருப்பீர்கள். திருப்புகழின் காலம் 15-16ம் நூற்றாண்டு.

  இன்னொரு பிரபலமான பிள்ளையார் திருப்புகழ் பக்கரை விசித்ரமணி என்று தொடங்கும்.. இதில் ஒரு பெரிய பட்சணப் பட்டியலே உள்ளது –

  இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
  எட்பொரி அவல் துவரை யிளநீர் வண்-
  டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு வெள-
  ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்

  மிக்க அடிசிற்கடலை பக்ஷணமெனக் கொளரு
  விக்கின ச ர்த்தனெனு மருளாழி..

  என்று போகும். அருமையான தாளகதி கொண்ட பாடல். அப்படியே கணபதி அசைந்தாடி வந்து பஷணங்களை விழுங்குவது போலவே இருக்கும் பாட்டின் ஓசை!

  Like

 6. மேற்சொன்ன திருப்புகழுக்கு சொற்பொருள் விளக்கம் தேவைப் படும் என்று நினைக்கிறேன்.. அதில் வரும் உணவு வகைகள் –

  இக்கு (கரும்பு – இக்ஷு என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம்), அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், துவரை, இளநீர், வண்டெச்சில் (தேன்!!) , பயறு அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை…..

  Like

 7. இந்திய உணவு பற்றி மிகுந்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி நூல் ஒன்றை ஆக்ஸ்போர்ட் Indian food-A historical companion என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.K.T.Achaya எழுதியது.காலச்சுவடு ஒரு அருமையான உணவுச் சிறப்பிதழை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டது.அதன் சில கட்டுரைகள் புத்தகமாகவும் வெளிவந்துள்ளன என நினைவு.உணவு என்றவுடன் நாஞ்சில்நாடன் தான் நினைவுக்கு வருகிறார்.அவருடைய சில கதைகள் கட்டுரைகள் படிக்கும்போதே ருசிப்பவை

  Like

 8. மேலும் ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு பெயர்கள் வழங்குகின்றன.சர்க்கரைப் பொங்கல் என்று வைஷ்ணவர்கள் சொல்வதில்லை என நினைக்கிறேன்.அக்கார அடிசல் என்று திருவிலிப் புத்தூரில் சொல்வார்கள்.

  Like

 9. ஜடாயு, அருமையான பாடல்களுக்கு நன்றி! அதுவும் அந்த “சற்றே துவையல் அரை!” பாட்டு நன்றாக இருந்தது!

  போகன், மறுமொழிக்கு நன்றி! நாஞ்சில்நாடனைக் கேட்டால் நிச்சயமாக சொல்வார்!

  ஜீப், மாவடு பற்றிய செய்திக்கு நன்றி! வரிகள் நினைவிருக்கிறதா?

  Like

 10. புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ‘பூதன்’ என்கிறவன் ஔவையாருக்கு மிக எளிமையான உணவைப் படைத்தான். வரகு அரிசியைக் கொண்டு சமைத்த சோறு; கத்தரிக்காய்ப் பொரியல்; புளித்த மோர்; பசிக்கு ருசியான, ஆனால் மிக எளிமையான உணவு உண்ட ஔவையாருக்குக் கவிதை பிறக்கிறது:

  :வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
  முரமுரவென் றேபுளித்த மோரும் புல்வேளூர்ப்
  பூதன் புகழ்பரிந் திட்டசோ
  றெல்லா வுலகும் பெறும்!!”

  – சிமுலேஷன்

  Like

 11. பண்டைத் தமிழர்கள் நண்டுக் கறியுடன் பீர்க்கங்காயை இணைத்து உண்டுள்ளனர் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

  – சிமுலேஷன்

  Like

 12. இப்புதிய உணவுப் பழக்கம் பற்றி சிறுபாணாற்றுப்படையின் பின்வரும் பாடலடி குறிப்பிடுகிறது.

  கவைத்தா ளலவன் கலவையொரு பெறுகுவீர் (சிறுபாண 195)

  இதற்கு கவைத்த காலினையுடைய நண்டும், பீர்க்கங்காயும் கலந்த கலப்புடனே பெறுகுவீர் என்று நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன் மூலம் பண்டைத் தமிழர் நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயையும் சேர்த்து உண்டுள்ளனர் என்ற செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பீர்க்கங்காயையும் நண்டையும் கலந்து செய்யும் சமையற் குறிப்பினை நச்சினார்க்கினியர்
  உரையின் வாயிலாகவே அறிய முடிகின்றது.

  – சிமுலேஷன்

  Like

 13. பெரும்பெயர் ஆதி என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.

  ”கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்
  பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்
  டெயினர்………………………………” (புறம் 177 11-3)

  – சிமுலேஷன்

  Like

 14. கோப்பெருநற்கிள்ளி தீக்கடைக்கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சியைக் சுட்டுப் பதப்படுத்தி வழி தப்பிச் சென்ற மறவர்கள் வந்து கூடுவதற்கு முன் உண்க எனப் புலவர்களுக்குக் கொடுத்தான் என்றும், அதனை உண்டு புலவர்கள் பசி தீர்ந்தனர் என்றும் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.

  இழுதினன்ன வானினக் கொழுங்குறை
  அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி” (புறம் 150)

  அம் மன்னன் தான் வேட்டையாடிய மான் தசையைப் புழுக்கி அதனை நெய்போன்ற மதுவுடன் புலவர்களுக்குக் கொடுத்தான். இச் செய்தியை

  ”தானுயிர் செகுந்த மானினப் புழுக்கோ
  டானுவருக் கன்ன வேரியை நல்கி” (புறம் 152)

  என்ற புறப்பாடல் வழி அறியலாம்.

  – சிமுலேஷன்

  Like

 15. ஊனையும் சோற்றையும் உண்டு வெறுத்த மக்கள் அவ்வெறுப்பை மாற்றுவதற்கு வெல்லப்பாகையும் பாலையும் அளவாகக் கலந்து செய்யப்பட்ட பண்ணியங்களைத் தின்றனர் என்பதை.

  ”உனு மூணு முனையி னினிதெனப்
  பாலிற்பெயதவும் பாகிற் கொண்டனவும்”

  என்ற புறப்பாடல் தெரிவிக்கிறது.

  – சிமுலேஷன்

  Like

  • சிமுலேஷன், reference கொடுத்து கலக்கிட்டீங்க! இவற்றையும் விரைவில் இணைத்துவிடுகிறேன்.
   ஜீப், அருமையான சுட்டிக்கு நன்றி!

   Like

 16. உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை

  ”சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
  தாத னின்னகத் தடக்கிக்
  சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)

  எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.

  – சிமுலேஷன்

  Like

 17. geep permalink

  http://www.varalaaru.com/Default.asp?articleid=543

  is a mother lode of references on this topic.

  Like

 18. கஞ்சி குடியானே, கம்பன்சோ றுண்ணாளே,
  வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்
  அஞ்சுதலை ஆவாருக்கு ஆறுதல ஆவாளே
  கஞ்சமுகக் காமாட்சி காண்.
  —ஒப்பிலாமணிப் புலவர் பாடியது
  – சிமுலேஷன்

  Like

 19. பணியாரந் தோசையி லக்கொங்கை
  தோய்ந்திடப் பார்ப்பர்பல்லி
  பணியாரன் தோசையிலாச் செந்து
  வாய்ப்பிற்ப் பார்களென்னோ
  பணியாரந் தோசிஅமுன்னோனுகிட்
  தேத்திப் பழனிச்வ்வேள்
  பணியாரன் தொசைவ ராகாரன்
  னோர்க் கென்ன பாவமிதே

  அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் “இதுவுமது”
  – சிமுலேஷன்

  Like

 20. சிமுலேஷன், கலக்குகிறீர்கள்! ஆனால் இந்தப் பாட்டுகளுக்கு கோனார் நோட்ஸ் வேண்டுமே!

  Like

 21. கஞ்சி குடியானே, கம்பன்சோ றுண்ணாளே,
  வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்
  அஞ்சுதலை ஆவாருக்கு ஆறுதல ஆவாளே
  கஞ்சமுகக் காமாட்சி காண்.
  —ஒப்பிலாமணிப் புலவர் பாடியது

  கஞ்சி என்னும் அற்ப உணவை குடியாதவளும், கம்பரிசியாகிய சோற்றினை உண்ணாதவளும், கறிகாய் பதார்த்தங்களை விரும்பி உண்ணாதவளும், மனதில் அச்சம் உடையவர்களுக்கு அவ்வச்சத்தைப் போக்கடிக்கின்றவளும், தாமரை மலர் போன்ற திருமுகத்தினையுடைய காஞ்சி காமாட்சியம்மையே, நீ காண்பாயாக.

  Like

  • சிமுலேஷன், காமாட்சி பாட்டாவது கொஞ்சம் புரிந்தது. வீரராகவ முதலியார் புரியவே இல்லை. காமாட்சி கஞ்சி குடிக்கமாட்டாள் என்பதெல்லாம் ஒரு பெருமையாக பாடியிருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

   Like

 22. பணியாரந் தோசையி லக்கொங்கை
  தோய்ந்திடப் பார்ப்பர்பல்லி
  பணியாரன் தோசையிலாச் செந்து
  வாய்ப்பிற்ப் பார்களென்னோ
  பணியாரந் தோசிஅமுன்னோனுகிட்
  தேத்திப் பழனிச்வ்வேள்
  பணியாரன் தொசைவ ராகாரன்
  னோர்க் கென்ன பாவமிதே

  அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் “இதுவுமது”

  தின்னும் பண்டங்களாகிய தோசைகள் முன் பிறந்தவனான விநாயகருக்கிப் படைத்து துதி செய்து, பழனிப்பதியில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளை வணங்கும் பாக்கியம் இல்லாதவர்கள் சிவனடியார்களாக மாட்டார்கள். ஆபரணங்கள் பொருந்திய அழகிய இரண்டாகிய மலையைப் போன்ற தனங்களில் தோய்ந்து அனுபவிக்க நினைக்கின்றவர்கள் மறுபிறவியில் பல்லியாகவும், பாம்பாகவும், அந்துப் பூச்சியாகவும், ஒலியை எழுப்ப இயலாச் சிற்றுயிர்களாகப் பிறப்பார்கள்; ஐயோ, அவர்க்கு இது என்ன பாவத்தின் பயன்!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: