அகல் விளக்கு

(இது ஒரு மீள் பதிவு. முன்பு கூட்டாஞ்சோற்றில் வந்தது. இதை முதலில் எழுதும் பொழுது இருந்த என் மனநிலை இப்பொழுது மிகவும் முதிர்ந்து விட்டது போல் தோன்றுகிறது. இப்பொழுது இது ஸ்கூல் காம்பொசிஷன் அஸைன்மெண்ட் போல் இருக்கிறது. 🙂 என்றாலும் எழுதியதை மாற்ற மனமில்லாததால் அப்படியே விட்டுவிடுகிறேன்.)

இது நான் படித்த முதல் மு.வ. நாவல். ஸ்ரீ. சேதுராமன் அவர்கள் இதை சென்னையில் வாங்கி எங்களுக்கு அனுப்பி வைத்தார்.  சிந்தனையை தூண்டக்கூடிய அருமையான ஒரு புத்தகத்தை வாங்கி அனுப்பிய அவருக்கு எங்கள் நன்றி.

இந்த நாவலை மேலோட்டமாக வாசித்தால் ஏதோ பண்பையும், குணங்களையும் ஆசிரியர் போதிப்பது போல் உள்ளது. சற்றே சிந்தித்துப் பார்த்தால் இதில், வலிய ஆளுமைகளை உருவாக்க உகந்த நுட்பமான கருத்துக்கள் பரந்து இரைந்து கிடக்கின்றன. சாகித்ய அகடமி விருது இதற்க்கு பொருத்தமான ஒன்றே என்று தோன்றுவதல்லாமல் பரிசுக் குழுவில் பங்கேற்றவர்களின் மதிநுட்பத்தையும் உணர முடிகிறது. வரதராசனாரின் வாழ்வில் விழுமங்கள் இன்றியமையாதது என்றும், விழுமங்களுக்கு அவர் வைத்திருந்த உயர்ந்த மதிப்பும் இந்த நாவலின் மூலம் நமக்கு தெளிவாகிறது.

வேலுவும், சந்திரனும் இரண்டு துருவத்தின் குறியீடுகள். வாழ்வில் அழகிற்க்கு கிடைக்கும் மதிப்பும், சலுகைகளும் அழகின்மைக்கு கிடைக்காத்தால் சட்டென வாழ்க்கை நியாயமற்றது என்பது சொல்லப்படுகிறது. அழகிற்கும், கோரத்திற்கும் அன்றாடம் நடக்கும் போராட்டம் அலட்சியத்திற்குடையது அல்ல. கோரம் மகிழ முடியாத சலுகைகளை அழகு மிக இலகுவாக தட்டிச் செல்கிறது. அக அழகை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் புற அழகு மட்டுமே வாழ்க்கையின் பல விஷயங்களை நிர்ணயிக்கிறது. மனித மனம் புற வெள்ளையில் காணும் அழகை கருப்பில் காணத் தவறிவிடுகிறது. கருப்பை புறக்கணித்து வெள்ளையை ஏற்க்கிறது. கருப்பு மௌணமாக புறக்கணிப்பு என்ற துன்பத்தை தழுவுகிறது. மனித இயல்பு, அழகைப் பார்த்து கண்ணியமாகிறது, பவ்யாமாகிறது. கோரத்தை பார்த்தவுடன் பண்பாடு பறந்துவிடுகிறது. முரட்டுத்தனம் குடியேறுகிறது. பொதுவாக எண்ணங்களை வெளிப்படுத்த தயங்குபவர்களாகவோ அல்லது பிறரிடம் அதிர்ந்தோ, அதட்டியோ பேச முடியாதவர்களோ, எவ்வளவு மென்மையானவர்களாக இருந்தாலும் சரி, அழகற்றவர்களாக இருந்துவிட்டால், இரக்கமில்லாமல் தேவைக்கு மீறிய பலத்துடன் தாக்கப்படுகிறார்கள். வேலு மற்றும் சந்திரன் இருவரும் இந்த உலக கோட்பாடுகளில் சிக்கி தங்கள் அனுபவங்களை உருவாக்குகிறார்கள்.

குடும்பங்களில் பெண்களின் பங்கு என்ன என்பதை மு.வ. சந்திரனின் சின்னம்மா எனற பாத்திரத்தின் வாயிலாக வெளியிடுகிறார். பெண் விடுதலை என்பது பாவம் என்று கருதும் ஆடவர் வாழும் குடும்பங்களில், கருத்து சொல்லமுடியாத் காரணத்தினால் ஒன்றும் அறியா பெண்கள தன் குடுமபத்துடன் சேர்ந்து மீண்டு எழ முடியாத பள்ளத்தில் சரிந்து விழுந்து மாய்கிறார்கள். தாங்கள் அழிவது மட்டுமல்லாமல் தன்னை ஏற்று வரும் பெண்ணிற்கு அழிவை கொடுக்கும் உரிமையை எடுத்துக் கொள்ளும் ஆண்களின் மனப்போக்கை பார்த்து நொந்துக் கொள்கிறார். பெரும்பாண்மையான் பெண்களுக்கு அந்த நாட்களில் எவ்வளவோ ஆற்றல் இருந்தும் தாங்கள் சிந்தனைகளை நடைமுறை படுத்த முடியாதபடி முடக்கப்படுவதால் மூழ்கும் கப்பலுடன் சேர்ந்து தாங்களும் மூழ்கி விடுகிறார்கள். சபல வயப்பட்ட ஆண் பகுத்தறிவில்லதவனாக உருவாகத் தொடங்குகிறான். அவனுடைய சபலம் அவனை ஆட்கொண்டமையால் தனது செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்த முனைகிறான். பின்னர் பழகிய பழக்கத்தின் அடிமைதனத்தினால் தன் வழியில் வீட்டுப் பெண்கள் நிற்க நேரிடுமானால் மூர்க்கத்துடன் எதிக்கிறான். அந்த மூர்க்கத்தை எதிர்க்க முடியாமல் பெண்கள் பின்வாங்கி அடிமைபட்டு விடுகிறார்கள்.

கதையின் ஒரு பாகத்தில், குடியானவர்களின் பொழுது போக்கு பற்றி சொல்கிறார். அன்றாட கூலிவேலை செய்யும் ஒரு மனிதனுக்கு ஏற்ப்படும் சோர்வை போக்கும் எளிய உத்தி தான் ஊர் திருவிழாக்கள் என்ற கோணத்தை அடையாளம் காட்டுகிறார். இந்த திருவிழாக்கள் வசதிபடைத்தவர்களுக்காக இல்லாத பொழுதிலும், அவர்களும் இன்பமடைய ஒரு வாய்ப்பு. வசதி படைத்தவர்கள் பல இடங்களுக்கு செல்லலாம். இன்பத்தை தேடி அடைய முடியும். ஆனால் வசதியற்றவர்கள் அன்றாடம் வயலையும் வரப்பையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு மாறுதலை பார்கக விரும்பியதால் திருவிழாக்கள் பெரிதும் ஆதரிக்கப்பட்டன. அதே தருணத்தில் அவர்கள் எல்லை மீறி செல்லாமல் இருப்பதற்க்காக கடவுள் பெயரிலே கொண்டாடப்படுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

மு.வ. வாழ்க்கை நியாமற்றது என்பதை பல இடங்களில் கூறுகிறார். வேலை ஒருவர் செய்ய அதன் புகழ் மற்றவர்களுக்கு போய்ச் சேரலாம். இது தவிர்க்க முடியாதது. மேலும் ஒரே மாதிரியான வேலையை வெவ்வேறு இடங்களில் செய்வதினால் அதன் மதிப்பு உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கிறது. ஊதியமும் அதிகமாகவும் குறைவாகவும் நிர்ணயிக்கப்படுகிறது. மு.வ. மலர்கள் பூக்கும் செடியையும், அதன் மற்ற உருப்புகளையும் உவமைகளாக வைத்து இதைச் சொல்கிறார். பூச்செடியும், பூக்கள் இல்லாத மனம் நிறைந்த துளசிசெடியும் இன்னொரு கோணத்தில் இந்த நியாயமின்மைக்கு உவமையாகிறது. இதைச் சார்ந்த உவமை நம்மை சிந்திக்க வைக்கிறது. “எனக்கு தகுதிக்கு வரவேண்டிய வருமானமும், மரியாதையும் வரவில்லை” என்று சோர்ந்து எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு போவது, “நான் படகு வைத்திருக்கிறேன், நல்ல துடுப்பு வைத்திருக்கிறேன், அலைகள் என் மீது அடிக்கக்கூடாது, எனனை ஒன்றும் செய்யக்கூடாது” என்று எதிர்ப்பர்ப்பது போலவும், ”அப்படி அலைகள் என்னைத் தாக்கினால் நான் துடுப்பையும், படகையும் தூக்கி போட்டுவிடுவேன்” என்ற எண்ணத்திற்கு நிகரானது என்கிறார்.

மேலும் பாக்கியம் என்ற பாத்திரத்தின் வாயிலாக எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையும், ஞானமும் நம்மை நல்வழியில் கொண்டுசெல்லும் என்று கூறுகிறார். ஒவ்வொரு பாத்திரமும் வாழ்க்கையின் நன்மையும், தீமையையும் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அறநெறிகள் (Morals) நிறைந்த புத்தகம். கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

மு.வரதராசனார் – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 19

மு.வ.வின் கரித்துண்டு

எனக்குப் பிடித்த சில தமிழ் சிறுகதைகள் பகுதி 1

எத்தனை நாள்தான் அடுத்தவர்கள் லிஸ்டை பற்றியே எழுதுவது? இந்த முறை என் லிஸ்ட். இது முழுமையானது இல்லை. எனக்கு சிறுகதைகள் தலைப்பு நினைவிருப்பதில்லை. ஞாபகம் வரும் சிறுகதைகளை பற்றி இப்போது. இதுதான் என் சிறுகதை anthology-யின் முதல் draft என்று வைத்துக் கொள்வோமே!

அனேகமாக பெரிய போஸ்டாக இருக்கும். நாலைந்து பதிவுகளாக போட்டாலும் போடுவேன்.

எழுத்தாளர் பேரை க்ளிக்க முடிந்தால் அவரது தளத்துக்குப் போகலாம். கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் கதைக்குப் போகும். அப்படி இல்லாத கதைகளையும் கூடிய சீக்கிரம் அழியாச்சுடர்கள் ராம் பதிப்பார் என்று நப்பாசையோடு…

 1. அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
 2. அசோகமித்திரன் – பிரயாணம், புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
 3. பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள்
 4. தமயந்தி – அனல் மின் மனங்கள்
 5. திலீப் குமார் – கடவு, கடிதம்
 6. ஜெயகாந்தன் – அக்னிப் பிரவேசம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
 7. ஜெயமோகன் – பல்லக்கு, படுகை, திசைகளின் நடுவே, பித்தம், அவதாரம், மாடன் மோட்சம், ஊமைச் செந்நாய்
 8. கி. ராஜநாராயணன் – கோமதி, கன்னிமை, தாச்சண்யம், மாயமான், கொத்தைப்பருத்தி, ஜெயில், கதவு
 9. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு, காணாமல் போன அந்தோணி, எக்சென்ட்ரிக், தங்க ஒரு
 10. கு. அழகிரிசாமி – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு
 11. கு.ப.ரா. – திரை, கனகாம்பரம், ஆற்றாமை, வீரம்மாளின் காளை
 12. லா.ச.ரா. – பூரணி, பாற்கடல், இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.
 13. எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை, பெட்கி
 14. பா. ராகவன்108 வடைகள்
 15. பட்டுக்கோட்டை பிரபாகர் – ஏரிக்கரை ராஜாத்தி
 16. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாப விமோசனம், பொன்னகரம், புதிய கூண்டு, துன்பக்கேணி, செல்லம்மாள், கல்யாணி, ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், பிரம்ம ராக்ஷஸ், ஞானக்குகை, பால்வண்ணம் பிள்ளை
 17. சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
 18. சுப்ரபாரதிமணியன்ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
 19. சுஜாதாபேப்பரில் பேர், நிஜத்தை தேடி, ஒரு லட்சம் புத்தகங்கள்
 20. சுந்தர ராமசாமிவிகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம், கோவில் காளையும் உழவு மாடும்
 21. தங்கர் பச்சான் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
 22. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம், தாத்தாவும் பேரனும், பசி ஆறிற்று
 23. வண்ணதாசன்தனுமை
 24. வண்ணநிலவன் – எஸ்தர்
 25. யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்
 26. சில சமயம் தனிப்பட்ட கதைகளை விட தொகுப்பு ஒரு அருமையான ambience-ஐ உருவாக்குகிறது. உதாரணமாக தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள், கல்கியின் தேரழுந்தூர் சிவக்கொழுந்து, தப்பிலி கப், மயிலைக் காளை போன்ற கதைகள், சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் ஸ்ரீரங்கம் கதைகள், பிரபஞ்சனின் பதவி என்று சிறுகதைத் தொகுதி, பெங்களூர் ரவிச்சந்திரன் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதைத் தொகுதி போன்றவற்றை சொல்லலாம்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

  தொடர்புடைய சுட்டிகள்:
  துப்பறியும் சாம்பு
  கிருஷ்ணன் நம்பி
  பட்டுக்கோட்டை பிரபாகர்
  ஜெயமோகன் சிபாரிசு செய்யும் புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  சுப்ரபாரதிமணியன் சிறுகதைத் தொகுப்பு – அப்பா
  தி.ஜா. சிறுகதைத் தொகுப்பு – கொட்டுமேளம்
  வண்ணதாசன் தளம்

  சிறுகதை பற்றிய பதிவுகள்
  பைத்தியக்காரப் பிள்ளை
  108 வடைகள்
  பேப்பரில் பேர்
  பாயசம்
  எஸ்தர்