சாண்டில்யன் நூற்றாண்டு

இது சாண்டில்யனின் நூற்றாண்டாம். வாண்டு மாமாவைக் கடந்து வந்தபோது என்னைக் கவர்ந்த ஸ்டார் எழுத்தாளர் அவர். பத்து வயது வாக்கில் அவரைக் கடந்து வந்துவிட்டாலும், யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னி மாடம் போன்ற நாவல்கள்தான் நான் முதன்முதலாக விரும்பிப் படித்த பெரியவர்களுக்கான புத்தகங்கள். மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட வரலாறு பள்ளிகளில் கற்றுக் கொண்டதை விட நன்றாக நினைவிருக்கிறது. இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலைவாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.

ஆனால் சீக்கிரத்திலேயே அலுத்துவிட்டார். ஒரே ஃபார்முலா வைத்து எழுதுவார். என் கருத்தில் அவர் நாவல்களை இன்னும் ஒன்றிரண்டு ஜெனரேஷன்களில் மறந்துவிடுவார்கள்.

அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள். அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு ஆக்ஷன் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.

சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு சாப்டரிலும் போன சாப்டரில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, ஹீரோயின் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.

சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் ஹீரோ. ஹீரோ தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான். 🙂

சாண்டில்யனின் புத்தகங்களில் யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜலதீபம் (இரண்டாம் பாகம் சுத்த வேஸ்ட் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவபூமி, அவனிசுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜலமோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, நாகதீபம் ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி போன்றவை எல்லாம் வேஸ்ட்.

அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthanஇலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.

ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.

சாண்டில்யன் கிளுகிளு எழுத்தாளரும் கூட. சமயத்தில் போர்னோ மாதிரி எழுதுவார். ஆனால் அவர் எழுதுவது porno அல்ல, boreனோ. சும்மா சும்மா கவர்ச்சி பிரதேசம், விம்மி நின்றது, உராய்ந்தார்கள் என்று எழுதினால் யார் படிப்பது? கிடுகிடுவென்று பக்கங்களை புரட்டிவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வாரப் பத்திரிகைகளில் இப்படி ஒருவர் பச்சை பச்சையாக எழுத முடிந்தது என்பது ஆச்சரியமே. ஒரு முறை குமுதத்தில் இது ஆழம், உள்ளே சுலபமாகப் போகும் இல்லை போகாது என்றெல்லாம் காதலனும் காதலியும் பேசுவதாக எழுதி இருந்தார். காதலன் கப்பலையும் கடலையும் பற்றி பேசுகிறான் என்று தாமதமாக உணர்ந்த காதலி வெட்கப்பட்டாள் என்று முடிப்பார். டீனேஜ் காலத்தில் இதைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன். (கதை பெயர் நினைவில்லை, கடைசி நாயக்கர் ராணி மீனாட்சியின் மகன் விஜயகுமாரன் கதாநாயகன், சந்தாசாஹிபை பழி வாங்குவதாக சபதம் செய்திருப்பான்.)

அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். மிக அற்புதமான memoirs. அதில் அவர் என் வீடு திரைப்படத்தை பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். ராண்டார்கை இதை பற்றி எழுதி இருப்பது இங்கே. ராண்டார்கை சித்தூர் நாகையாவை பற்றி எழுதிய இந்த கட்டுரையில் சாண்டில்யனும் அவரது நெருங்கிய நண்பர் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களை historical romances-இன் முதல் பட்டியலிலும் ஜலதீபம், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜமுத்திரை ஆகிய நாவல்களை historical romances-இன் இரண்டாம் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் என்பவர் சில சாண்டில்யன் நாவல்களுக்கு விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். கடல் புறா, மன்னன் மகள், ராஜயோகம் ஆகியவற்றுக்கான விமர்சனங்கள் கிடைக்கின்றன.

என் கண்ணில் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. இலக்கியத் தரம் இல்லை. தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் தமிழர் பிரக்ஞையில் சரித்திர நாவல் ஆசிரியர் என்றால் சாண்டில்யன்தான். அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் அளவுக்குக் கூட அகிலன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் எழுதவில்லை. அவரது புத்தகங்கள் இன்னும் விற்கின்றன. அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்க தமிழக அரசு முன்வந்தபோது அவரது வாரிசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

24 thoughts on “சாண்டில்யன் நூற்றாண்டு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.