நித்யகன்னிக்கான பில்டப்பை நான் ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷமாக கேட்டு வந்திருக்கிறேன். என் அம்மாவுக்குப் பிடித்த புத்தகம். இப்போது யோசித்துப் பார்த்தால் ஒரு ஒன்பது பத்து வயதுப் பையனிடம் கன்னித்தன்மை அது இது என்று என் அம்மா பேசி இருப்பது வியக்க வைக்கிறது. அது சரி ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாதிரி, தன் குழந்தைகளிடம் என்ன பேசலாம் என்ன பேசக்கூடாது என்பது ஒரு அம்மாவுக்கு தெரியாமலா போய்விடும்?
ஆனால் புத்தகம் கிடைக்கவே இல்லை. நான் இருந்த கிராம நூலகங்களில் கிடைக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் இல்லை. சேலம் நகர நூலகத்தில் இல்லை. காசு கொடுத்து புத்தகம் வாங்கும் நிலைக்கு நான் வந்த பின்னர் சுப்ரபாரதிமணியன் ஹைதராபாத்தில் நடத்திய புத்தகக் கண்காட்சிகளில் கிடைக்கவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை ஆஃபீசுக்கு லீவ் போட்டுவிட்டு வந்து தேடி இருக்கிறேன், கிடைக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் அப்போது எனக்குத் தெரிந்த ஹிக்கின்பாதம்ஸ், லாண்ட்மார்க் கடைகளில் தேடி இருக்கிறேன், கிடைக்கவில்லை. திலீப்குமார் பழக்கம் ஆன பிறகு அவரைக் கேட்டிருக்கிறேன், அவுட் ஆஃப் பிரின்ட் என்று வருத்தத்தோடு சொல்வார். ஊருக்குப் போகிறவர்கள் யாராவது தெரியாத்தனமாக உனக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்டால் அனேகமாக இந்த புத்தகத்தை சொல்வேன். யாரும் வாங்கி வந்ததில்லை – கடைசியாக போன வருஷம் நண்பன் பக்சை நச்சரித்து வாங்கி வர வைத்தேன்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நூறு ரூபாய். இங்கே வாங்கலாம்.
எக்கச்சக்க பில்டப் இருந்தால் அனேகமாக ஏமாற்றம்தான். இதுவும் அப்படித்தான் ஆயிற்று. ஆணாதிக்க சமுதாயம், பெண்ணை ஒரு பொருளாக கருதுவது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன, ஆனாலும் மனதில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. புதிதாக ஒரு insight கிடைக்கவில்லை. ஆனாலும் இது ஒரு கிளாசிக்தான். தமிழின் சிறந்த புத்தகங்களில் ஒன்று. மொழிபெயர்க்க வேண்டிய புத்தகம்.
நித்யகன்னியின் கதைக்கரு மிகவும் powerful ஆன ஒன்று. (அம்மாவின் பில்டப்பிலிருந்து கதை ஓரளவு தெரியும்.) ஏழை காலவனுக்கு குருதட்சிணை தர வேண்டும் – 800 அபூர்வ குதிரைகளை. ஒரு ராஜாவிடம் போகிறான். என்னிடம் அந்த அபூர்வ குதிரைகள் இல்லை, ஆனால் என் பெண் மாதவியைத் தருகிறேன் என்று கொடுக்கிறார். அவளுக்கு ஒரு அபூர்வ “சக்தி”. குழந்தை பிறந்த பிறகு அவள் மீண்டும் கன்னியாகிவிடுவாள். காலவனும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் குருதட்சிணைக்காக அவன் அவளை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று ராஜாக்களுக்கு “மணம்” செய்து வைக்கிறான்.பதிலுக்கு ஒவ்வொரு ராஜாவும் காலவனுக்கு 200 அபூர்வ குதிரைகளைத் தருகிறார்கள். ராஜா ஹர்யசுவனுக்கு அவள் போகப்பொருள் மட்டுமே. திவோதாசனுக்கு அவள் பிள்ளை பெறும் எந்திரம். உசீனரனுக்கு மட்டுமே அவள் மனைவி. காலவன் மீது உள்ள காதல் அழியவும் இல்லை. மிச்ச 200 குதிரைகளுக்கு பதிலாக குருநாதரே அவளை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி…
ஜெயமோகன் இதை “பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்” பட்டியலில் சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக கருதுகிறார்.
கரு மிகவும் பலமானது. எம்.வி.வி. அதை கெடுக்கவில்லை. ஆனால் இந்தக் கருவை இன்னும் நன்றாக develop செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்க வேண்டிய புத்தகம், கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: எம்விவி பக்கம், தமிழ் நாவல்கள், தொன்மங்கள்